கமலா முரளி
முகநூல் தனது முகப்பொலிவை சற்றே இழந்து, ஊடக அழகிப் போட்டிகளில் தன் இடத்தை கீச்சும் ஒற்றெழுத்து தளத்துக்கும், இன்ஸ்டாகிராக்கும் இன்னும் காணொளி/லி களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதோ என்ற ஐயம் உள்ளது. முதல் காதலை மறக்காத எண்ணற்ற 40+கள் தயவில் டாப்டென் வரிசையில் எப்படியோ தத்தளிக்கும் முகநூலில் தான் எத்தனை பஞ்சாயத்துகள், முக்காபலாக்கள் !
தாங்கள் விரும்பும் அல்லது சார்ந்திருக்கும் கருத்தியலுக்குச் சாதகமாக ஒருவர் பதிவிட, அந்த பதிவுக்கு ‘விருப்பம்’ இட, கமெண்ட் போட என களம் பரபரக்கும். அதிலும் அரசியல் பதிவு என்றால், கமெண்ட்களுக்கு லைக்குகள், கமெண்டுக்கு கமெண்ட்டு என சீரியலாகப் போகிறது.
ஒரு பதிவர் தனது பதிவுகளுக்கு வரும் லைக்குகளின் எண்ணிக்கையை விட, அதைத் தொடர்ந்து வரும் கமெண்ட்டுகளுக்கான லைக்குகள் அதிகமாக உள்ளது எனச் சிலாகித்து அதையும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில சமயங்களில்… ஏன் அடிக்கடி எனக் கூடச் சொல்லலாம்… தலையும் புரியாமல், காலும் புரியாமல் ஒரு பதிவு வரும் . எதைப் பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ கழுவி ஊற்றி அதையும் பூடகமாகப் போட்டிருப்பார்கள். ’புரியவில்லயே’ என்று நம் மனதுக்குள் மட்டும்தான் கேட்டுக் கொள்ளவேண்டும்.
‘எதைப் பற்றி ? என்ன விஷயம் ?’ என்று கேட்டு விட்டால், நம்மையே கழுவி ஊற்றுவார்கள். ‘அப்டேட் ஆகணும் தம்பி’, ‘ஸ்… அரிச்சுவடி’, ‘லிங் பாருங்க’ எனக் கமெண்ட்டுவார்கள்.
ஒரு சில கமெண்ட்டுகளைப் படித்து, அல்லது நேராக செய்தி அப்டேட் பார்த்து தெரிந்து கொள்வது நலம்.
எந்தக் கருத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து கமெண்ட் போடுகிறோம் என்றால், சில கும்மாங்குத்துகள், நக்கல் மொழிகளைக் கேட்க தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், பவ்யமாக ஒரு லைக்கைப் போட்டுவிட்டு நடையைக் கட்டவேண்டும்.
நண்பர்களின் பண்டிகைக் கொண்டாட்டப் பதிவுகள்/படங்கள், ஸ்மூயுலில் பாடியது, ரீல்ஸ், ஷாப்பிங் அல்லது பயணங்கள் போன அனுபவங்களின் பதிவுகள் / படங்கள், முக்கியமாக திரைப்படங்கள் பார்த்த ஸ்டேட்டஸ் பதிவுகள்/ படங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பாக லைக்கிட வேண்டும். கருத்துகள் இடும் போது கவனம் தேவை. ஏனென்றால், மற்றொரு நட்பு அல்லது உறவு ”நான் இது போல போட்ட போது எனக்கு ஏன் நீ கருத்து போடவில்லை ?” எனப் பஞ்சாயத்துக்கு வந்த அனுபவங்களால், நான் லைக் மட்டும் இடுவது என்ற ப்ரொட்டகோல் வைத்து இருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் முகநூல் நட்புகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து போட்டுவந்தேன். ஒரு சமயம் ஒரு நெருங்கிய நட்பின் பிறந்த நாள். ஆனால், பணிச்சூழல் காரணமாக, இரண்டு நாட்கள் முகநூல் பக்கம் போகவில்லை. அவ்வளவு தான்…. உள்பெட்டியில் ஏகப்பட்ட வசைப்பாட்டு ! இந்த உறவு என்னிடம் நேரிடையாகத் தன் கோபத்தைக் காட்டியது. எத்தனை பேர் என்னை உள்குத்தாக குத்திக் கொண்டு இருக்கிறார்களோ ?
மார்க்கு வந்து முன்னால் குதித்துக் கொண்டு நிற்பார் ; இன்னாருக்குப் பிறந்த நாள்… நீ இட்லி சாப்பிட்ட நாள் இன்று … நாப்பது வருஷமாக தெரியும் மாமாவின் படத்துடன் ‘ஏழு வருஷ நட்பு’ எனத் தொல்லை தருவார். அதையெல்லாம் புறந்தள்ளி, ஏதோ சில தகவல்களைப் பார்த்தோமா , மீனம்மாவோ தேனம்மாவோ என்ன சொல்லுகிறார் இன்று… மீம்ஸ் எது ரீச் ஆகி இருக்கிறது எனப் பார்த்துவிட்டு ,சத்தமில்லாமல் சில பல லைக்குகளை இட்டு விட்டு போய்கிட்டே இருக்கலாம் அல்லது முட்டுக் கொடுத்து வெட்டுப்பட்டு முக்காபலா பண்ணலாம்.
உங்க முகநூல்… உங்க உரிமை… !
அப்படியே மார்க்கு அய்யா அப்ஜக்ஷன்ஸ் மற்றும் மாற்றுக் கருத்துகாரர்களின் பின்னூட்டங்களையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் !
நன்றி : படம் இணையத்திலிருந்து.
Leave a reply
You must be logged in to post a comment.