பகுதி – 1
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டாதாரி ஆவார். இரண்டாண்டுகள் இந்தியாவில் பணி செய்தவர், அதன்பின் கடந்த பதினைந்து வருடங்களாக அமீரகத்தில் பணி செய்து வருகிறார். ஓவியம் தீட்டுவதிலும் இசையிலும், கவிதை,கதைகள் எழுதுவதிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இவரது முதல் குறுநாவலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ இன்னும் சில தினங்களில் கோதை பதிப்பகம் மூலம் வெளிவரயிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு சிறுகதை தொகுப்பும் ‘சீதம்மா கூத்துரு’ என்ற குறுநாவலையும் இந்த வருடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறார். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
****
எனக்கு மட்டும் சீக்கிரம் முழிப்புத் தட்டிவிட்டிருந்தது.
சுற்றிப் படுத்திருந்த அத்தனை பேரில் விடியலின் கதிர்கள் என் தோலுக்கு மட்டும் உரைத்தது கொஞ்சம் அநியாயம்தான். மண்டைக்குள் இன்னும் ‘மன்மத ராசா.. என் மன்மத ராசா..’ தான் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்களோடு நேற்றிரவு அடித்த கூத்தில் தலை சற்று பாரமாக இருந்தது.
எழ முடியவில்லை.
சனிக்கிழமையானால் எவன் இந்த குடியைக் கொண்டுவந்தான் போன்ற எரிச்சலும் தர்க்கவாதமும் அடுத்த நாள் எழும்போதுதான் எப்போதும் பிறக்கிறது.
இப்போது எழுந்தும் என்ன செய்வது என்ற அலுப்பு மறுபடியும் பாய்க்கே தள்ளினாலும், இனி படுத்தால் கதைக்கு ஆகாது; முயன்றாலும் தூக்கமும் வராது. கடிகாரத்தைப் பார்த்தேன்… மணி எட்டாகிவிட்டிருந்தது. இனி தூங்க நினைப்பதும் கூட என்னளவில் குற்றச்செயல் போல.
இருக்கும் தலை பாரத்திற்கு ஒரு டீ குடித்தால்தான் சரியாகும் போலிருந்தது. சரியானால் தேவலை என்று நினைத்தவாறு ஆத்ம பலம் அனைத்தையும் திரட்டி எழ முயற்சித்து அதில் வெற்றியும் கண்டேன். இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமென்றால், மூத்திரச் சகதியிலிருந்து மாடொன்று பின்னங்கால்களை மெல்லக் கிளப்பி, ஊன்றி ஜம்மென எழுந்தது போலிருந்தது.
கைலியை சரிசெய்து கொண்டு ரெஸ்ட் ரூம் செல்ல ஆயத்தமானேன்.
என்னைச் சுற்றி எட்டு பேர் ஃபேன் காற்றில் சுவரோரம் உருண்டு , சுருண்டு ஒதுங்கிய திரைத்துணிகளைப் போல எந்த சந்தடிகளும் கேட்காது ஆழ்ந்துத் தூங்கிக்கொண்டிருந்தனர். பொறாமையாகயிருந்தது.
ஜன்னலுக்கு நேரெதிரில் படுத்திருந்த ஜீவக்குமாரின் சட்டையில்லா முதுகில் சுள்ளெனப் பட்டுக்கொண்டிருந்த வெளிச்சம் அவனுடைய தோளில் தலை சாய்த்து தானும் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.
‘என்னை மட்டும் நீ இப்படி எழுப்பிவிட்டது நியாயமா..?’ என்றேன்.
என் குரல் எட்டாதது மாதிரி கண்ணனிடம் கிறங்கிய கோதையைப் போல கள்ளச்சிரிப்போடு நடித்துக் கொண்டிருந்தது அது.
திருச்சி-சென்னை விரைவுப் பேருந்தைப் போல சிறுநீர்ச் சத்தம் தண்ணீரோடுச் சேர்ந்து சீராகக் கேட்டாலும் பஸ் இன்னும் உளுந்தூர்பேட்டையே எட்டாதது போல, நினைத்த நிமிடம் காலியாகாத கிடங்கு என் பொறுமையை சோதித்தது.
‘ம்ம்’ என்று அடிவயிற்றிலிருந்து பொறுமையில்லாமல் ‘சீக்கிரம்! சீக்கிரம்!’ என்று ஒரு காலை லேசாக உந்தி தரையை எத்தியபோது, கதவிடுக்கு வழியே தெரிந்த பியர் பாட்டில்கள் எனைப் பார்த்துச் சிரித்தன.
போர் நின்றவுடன் விரலிடுக்குகளை, உள்ளங்கைகளைப் பார்த்தேன், வேர்க்குரு போல வரும் சிறு சிறு கொப்பளங்கள் ஏதும் பொரிந்திருக்கவில்லை; முக்கியமாச் சொறியச் சொல்லும் நமைச்சலில்லை. அதைத் தொடர்ந்து இனி சாண்ட் பைப்பர் தவிர வேறெதுவும் அருந்துவதில்லை எனத் தீர்மானமும் போட்டுக்கொண்டேன்.
முகம் கழுவி, பேன்ட்டுக்கு மாறி வெளியே வந்தபோது வேளச்சேரியின் மிதமான வெயில் என்னை அப்படியே தாங்கிக்கொண்டு எப்போதும் செல்லும் டீக்கடையில் போய் விட்டது.
சாதாரண ஆட்களைக் காட்டிலும் பத்து மடங்கு சுறுசுறுப்புடன் குமார் அண்ணன், ‘கற்பூர நாயகியே கனக வல்லி..’ யைக் கூர்ந்து கேட்டபடி பாய்லர் சுடுத்தண்ணியை ஸ்ட்ராங், மீடியம், வொய்ட் என்று கேட்ட பல சுவை, நிறம், திடங்களுக்கு தான் கற்ற வித்தைகளால் மாற்றிக்கொண்டிருந்தார்.
“பிளாக் டீண்ணே!” என்றுக் குரல் கொடுத்து ஒரு ஆச்சர்யப் பார்வையை அவரிடமிருந்து எதிர்பார்த்தேன். கேட்டும் கேட்காதது போல் எதுவும் பேசாமல், அதே நேரம் என்னை கவனித்தது போல சில நொடிகளில் டீயை நீட்டினார். அது ஆரஞ்சு கலரிலிருந்து. நமக்குத்தான் காண்பது எல்லாமே இந்த கலரில் தெரிகிறதா என்று ஒரு முறை உற்றுப் பார்த்தேன்.
“லெமன் டீ! குடி, நல்லது!” ஒன்றும் புரியாத பாவனையோடு நெற்றியையும் வாயையும் சுருக்கி, குவித்துச் சுவைத்தேன்.
தேன் எதுவும் கலந்தாரோ? சுவையில் வித்தியாசத்தை உணர்ந்தேன். அருந்த நன்றாகவே இருந்தது.
சற்று முன்பு காதில் விழுந்துக்கொண்டிருந்த கற்பூர நாயகிக்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல் பக்தி சினிமா பாட்டுக்கு டிராக் மாறியிருந்தது.
‘எட்டு சாணு ஒசரம்மா
எழுந்து நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போல என்ன
கட்டுறியே எதுக்கும்மா? எதுக்கும்மா? ‘
எல்.ஆர். ஈஸ்வரியும் உதித் நாராயணனும் மிக்ஸாகி பிரேக் டான்ஸ் ஆடுவது மாதிரி கால்களை மடக்கி மடக்கி ஆனந்த் பாபு ஸ்டெப் போடுவது போல போல கற்பனை செய்துப் பார்த்தேன். லாஜிக்கே இல்லாமல் மனசு எததையோ யோசித்த வண்ணம் அது போக்கிற்கு திளைத்துக் கொண்டிருந்தது.
குமார் அண்ணன் கடமையே கண்ணெனக் கிளாசுகளை கழுவுவதும், கரண்டி மோதும் மெல்லிய சத்தத்துடன், கால் கிளாஸ் ஊற்றிய பாலில் கஸ்டமரின் அளவைப் பொறுத்து டிகாஷன் ஏற்றுவதும், சுடு தண்ணீர் சேர்ப்பதும், ஆற்றுவதும், கொடுப்பதுமென நின்ற இடத்திலேயே சும்மா சுழன்றுக் கொண்டிருந்தார்.
நான் காசு கொடுக்க அவரையே கவனித்தவனாக அவர் பார்வை என் பக்கம் திரும்புவதற்கு காத்துக்கொண்டிருந்தேன்.
அவரைப் பார்க்க மவுண்ட் ரோடு பக்கமிருக்கும் பாடி காட் முனீஸ்வரர் கோயில் சிலை ஞாபகத்திற்கு வந்துச் சென்றது. அதே திரண்ட புருவம், காத்திரமான கண்கள், கூரிய மூக்கு, நெப்போலியன் மீசை, தலையில் ஒரு பாகையைக் கட்டிவிட்டு டீ கிளாசுக்கு பதிலாக ஒரு அருவாளைக் கொடுத்துவிட்டால் அச்சு அசல் அந்த சிலை மாதிரியே இருக்கக் கூடும். என்னைப் போல யாரும் அவரை கவனிக்கவில்லை போலும், இல்லையென்றால் இந்நேரம் இவரும் ஒரு ஆசிரமம் கட்டியிருக்கக் கூடும்.
ஏன் இப்படி எண்ணங்கள் தோன்றி மறைகின்றன எனத் தெரியவில்லை. கடை வந்தபோது கற்பூரவல்லி பாட்டு.. இப்போது முனீஸ்வரர் கோயில் சிலைப் பற்றிய நினைவுகள் என்னவாயிற்று? இதெல்லாம் உனக்கு சம்பந்தமே இல்லையே! என்று ஆழ்மனதிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
“நைட்டு ஜீவா இங்க வந்திருந்தாப்ள.. உங்க ரூம்ல பார்ட்டி போல.. ம்ம் நம்ம கடையிலதான் மிக்சிங்க்கு எல்லாம் வங்கினாப்ள” குமார் அண்ணன் என் சிந்தனைகளை கலைத்தார்.
“ஓ..!“ என்றபடி காசை எடுத்துக் கொடுத்தேன்.
“மத்தவங்கல்லாம் இன்னும் எந்திரிக்கலயா?” சிரித்துக் கொண்டேக் கேட்டார்.
“இல்லேண்ணே” எனக்கும் சிரிப்புத் தொற்றிக்கொண்டது. அது ஏதேனும் தவறு செய்துவிட்டு வரும் சிரிப்பு.
“வேலை எதுவும் கிடைச்சதா?” அந்த கேள்வி இம்முறை என்னை சங்கடப்படுத்தவில்லை.
“ஆமாங்கண்ணே.” இப்போது அவர் முகத்திலும் பிரகாசம் பரவியிருந்தது.
“ஓ..! சந்தோசம்ப்பா, எங்க? எந்த ஏரியா?” இயல்பாகக் கேட்டாலும், அவருடைய நெற்றிக் குங்குமம் சட்டெனப் பார்க்க என் கண்ணில் அடிப்பது போலத் தோன்றியது. அவரது முகத்தை முழுமையாக நோக்கினேன் எதுவும் வித்தியாசமாய் தெரியவில்லை. எப்போதும் போலத்தான் இருந்தார்.
“இங்க இல்லண்ணே, கும்மிடிபூண்டி பக்கம்!”
“அங்க என்னப்பா வேலை?” இனி இந்த பக்கம் வர மாட்டாயா என்பது போல் முகபாவனைகள் வெளிப்பட்டன.
“நீலி வாட்டர்னு ஒரு வாட்டர் கம்பெனிண்ணே, சூப்பர்வைசர் வேலை!”
“ஓஹ்! எப்ப சேரப்போற?”
“வர்ற வாரம்ண்ணே, நாளைக்கு அதாவது இந்த திங்கள் கிழமை போரூர்ல இருக்க அவங்க ஆபிஸ்ல ஜாயின் பண்ணனும். அடுத்த திங்கள் கிழமை கும்மிடிப்பூண்டிக்குப் போயிருவேன்.”
“அப்ப இந்த வாரம் வரை இங்கதான் இருப்பேன்னு சொல்லு!”
“ஆமா.. ஆனா அங்க போனாலும் சண்டேஸ்ல கண்டிப்பா இங்க வந்துருவேன்” என்று புன்னகைத்தேன்.
“ம்ம் நல்லதுப்பா” என்றவர், சற்று யோசித்துவிட்டு, “ஆமா என்ன வாட்டர் கம்பெனினு சொன்னே? எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..!”
“நீலி… நீலி வாட்டர் கம்பெனிங்கண்ணே”
அவர் கண்கள் விரிந்து, சட்டென தோள்களை சிலுப்பிக் கொண்டார்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்
One comment on “குறுந்தொடர் : நீலி”
rajaram
சிறப்பான தொடக்கம், தண்ணிக் கேன் கம்பெனி பேர் சொன்னதும். முகத்துல தண்ணி தெளிச்ச மாதிரி ஆகிட்டார் டீக் கடைக்காரர். பார்ப்போம்.