கமலா முரளி
மலையடிவாரத்தில் அமைந்திருந்தது மாத்தூர் கிராமம். தோப்புகளும் நெல்வயல்களும் அழகுக்கு அழகு சேர்க்கும் .அது அறுவடைக் காலம். மக்கள் சுறுசுறுப்புடன் நெற்பயிரைக் களத்தில் சேர்த்துக் கொண்டு இருந்தனர்.
பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால், வீடுகளும் புதுக்கோலம் பெறத் துவங்கி இருந்தது.
மன்னர் வீரகேசரிக்கு இதே தைப் பண்டிகை நாளில் தான் பட்டாபிஷேகம் நடந்தது.
அதனையும் சிறப்பாக கொண்டாடுவர் மக்கள்.
ஆட்டனத்தி, வீட்டில் எல்லா இடங்களையும் தூய்மைப் படுத்தி இருந்தாள். தேவையற்ற, கிழிந்த பொருட்களைப் பிரித்து வைத்தாள். அவள் மகள் திலகவதியும் அம்மாவுடன் தூய்மைப் பணியில் உதவி செய்தாள்.
கடந்த வருடம் தான் புது கூரை வேய்ந்திருந்ததால், புதிய கூரை எதுவும் போடவில்லை.
தென்னங்குருத்துத் தோரணங்களைத் திலகா எடுத்துத் தர, வாசலிலும் முற்றத்திலும் கட்டினாள் ஆட்டனத்தி.
”நான் மாக்கோலம் போடட்டுமா ? ”
“திலகா, சிந்தாமணி அத்தை வீட்டுக்குப் போய் மருதாணி இலைகள் எடுத்து வா !
எல்லோருக்கும் வேண்டும். அதனால், இக்கூடை நிறைய பறித்து வா ! நாளை கோலம்
போடலாம் “
மருதாணி இலைகளுடன் திரும்பி வந்த திலகா கூடவே, சிந்தாமணி மாமி உடல்நலம் இன்றி இருப்பதைத் தெரிவித்தாள்.
“அடடா, பண்டிகையும் அதுவுமா சிந்தாமணிக்கு நோவா ?” என்று ஆட்டனத்தி
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் போதே, குட்டிப்பெண் கனகவல்லி அங்கே வந்தாள்.|
“வாம்மா, கனகம், அம்மாவுக்கு சொகமில்லயா ?”
“ஆமா அத்தை, அம்மா சோத்துக் கஞ்சி இருந்தாக் கேட்டாங்க..” கனகம்.
“அம்மாவுக்காடி ?”
“ஆமா அத்தை ! வைத்தியர் அய்யா மருந்து குடுத்து இருக்காரு. இதமா சோத்துக்கஞ்சி குடிக்கச் சொன்னாரு.”
“கொஞ்சம் இரு, கனகம், இப்பத்தான் கஞ்சி வடிக்கப்போறேன். திலகாக்குட்டி, கனகத்துக்கு எதனா சாப்பிடக் குடு”
தின்பண்டம் வைத்திருக்கும் தூக்கில் இருந்து முறுக்கும் கடலை உருண்டையும் எடுத்துக் கனகத்தின் கையில் தந்தாள் திலகா.
திலகாவின் சிற்றன்னை, மருதாணி அரைக்கத் தலைப்பட்டாள். திலகா ஒரு குச்சியால், மருதாணி விழுதைத் தள்ளி விட விட, சிற்றன்னை ஆட்டுரலை சுற்ற, இடையே கேள்விகள் வேறு…
“சித்தி, மருதாணி இலையோட கொஞ்சம் புளி வச்சுருக்கீங்களே ஏன் ?”
“நல்ல சிவப்பா பத்தும் அதுக்குத்தான். சில பேரு சுண்ணாம்பு பாக்கு கூட வைக்கிறாங்க. நான் புளி , கிராம்பு வச்சு அரைக்கிறன்” என்றாள் சித்தி.
ஆட்டனத்தி கஞ்சிக் கலையத்துடன் வந்தாள்.
”கனகம்…” என்றபடியே வந்தவள், “பண்டிகை வருது. எல்லாக் குட்டிப் பொண்ணுங்களும்குளிச்சு, தலை சீவி வனப்பா இருக்கையில… இதப்பாரு இவள…”
“திலகா, நீ போய் இந்தக் கஞ்சிய சிந்தாமணி கிட்டக் குடு. கூட இருந்து, பக்குவமா, பதமா எடுத்துக் குடு”.
திலகா கஞ்சி எடுத்துப் போக, கனகத்தைக் குளிக்க வைத்து, வேறு புது உடுப்புகள் கொடுத்து, தலையைச் சீவிப் பொட்டு வைத்து அழகு படுத்தினாள் ஆட்டனத்தி.
சித்தி அரைத்துக் கொண்டிருந்த மருதாணியைக் குச்சி வைத்து தள்ளிக் கொடுக்க ஆரம்பித்தாள் கனகம்.
திலகாவும் திரும்பி விட குட்டிப் பெண்கள் இருவருக்கும் சாப்பாடு போட்டுக் கொடுத்தாள் ஆட்டனத்தி.
“அம்மா, கனகத்தோட அம்மா, கஞ்சி சாப்பிட்டு, மருந்தும் சாப்பிட்டு உறங்க
ஆரம்பிச்சுட்டாங்க”
குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
ஆட்டனத்தி, தானே சிந்தாமணி வீட்டுக்குப் போய் , அவர்கள் வீட்டையும் ஒழுங்கு
படுத்தினாள்.
“பண்டிகை அன்னிக்கும் நா வரேன். இல்ல திலகா சித்தியை அனுப்பறேன். நல்லா சாப்பிட்டு, தெம்பா இரு ! “
“பண்டிகை அன்னிக்கி நடமாடினாப் போதும் .. அறுவடைத் திருவிழா, பட்டபிஷேக நாள் …அப்போ சிரிச்சி நாலு பேரு கிட்ட பேசுற மாதிரி இருக்கணும். “
“நிச்சயமா, நல்லா ஆயிடும் சிந்தா… சிந்தனையே வேண்டாம்”
“அக்கம் பக்கத்தில உன்ன மாதிரி உறவு இருக்கும் போது என்ன கவலை…”
“சரி, நல்லா படுத்துத் தூங்கு ! உன் மகன் வந்ததும் அனுப்பு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து விடரேன்”
“கனகம் அங்க தான் இருக்காளா … ?”
“ஆமா, திலகாவோட பாண்டி ஆடிகிட்டு இருக்கா”
இரவு சாப்பாட்டுடன், அரைத்த மருதாணியும் போயிற்று… அவர்கள் வீட்டு ஆண்கள்
வைத்துக் கொள்ள… கனகத்துக்கும், திலகாவுக்கும் ஆட்டனத்தி மருதாணி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்லோரும் மகிழ்வுற இருக்கத் தானே பண்டிகைகள் !
தோரணமும், மாக்கோலமும் மட்டுமல்ல… பாசமும் ,பரிவும்… பண்டிகையின் பெருமை!
Leave a reply
You must be logged in to post a comment.