பகுதி – 3
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
******
எவ்வளவு வளர்ந்துவிட்டாலும், வயதாகிவிட்டாலும் நண்பர்களின் அரவணைப்பைப் பெறும்போது போதும் ஒரு பச்சிளம் குழந்தையாகி விடுகிறோம். நமக்கானதை அறிந்து, புரிந்து, தெரிந்து கேட்காமலே செய்து தந்துவிடுவதில் நண்பர்கள் இன்னொரு தாய் தந்தைக்கு ஒப்பானவர்கள்.
நாம் எப்படி அவர்களைப் பார்க்கிறோமோ அப்படி அவர்களும் நம்மைப் பார்ப்பது இயற்கையின் சூட்சமம். அந்த ரகசியத்தை அறிந்தும் அறியாமலும் ஒரு வழிப்போக்கன் போல பயணிக்கும் வரை இயற்கை மாசு படாமல் வாழ்கிறது, வாழ வைக்கிறது.
இங்கேயுள்ள என் நண்பர்களும் அப்படிதான். தங்கும் இந்த இடம், உண்ணும் உணவு, ஏன் இப்போது கிடைத்திருக்கும் வேலை என்று அவர்களால் வாய்க்கப்பெற்ற தொடர் நலவுகளின் நெகிழ்சியில் அந்த ஞாயிறு வழக்கத்திற்கு மீறிய உற்சாகத்தோடும் கொண்டாட்டத்தோடும் கழிந்தது.
இளங்காலை எல்லா ஊர்களிலும் அழகுதான் என்றாலும் சென்னைவாசிகளுக்கு வரம் போல. காற்றில்லை என்றால் கூட அந்த சிலுசிலுப்பை அனுபவனிப்பதே தனி சுகம்தான். அழகிய கனவொன்று போல இதோ வேலையில் சேரும் அந்த நாளும் வந்துவிட்டது.
அந்த பரவசம் இந்தக் காலை நேரத்தை இன்னும் மகிழ்வாக்கிக் கொண்டிருந்தது. அணிந்திருக்கும் ஆடைகள் உபயோகத்திலிருந்தவை என்றாலும் புத்தாடைகளின் பிரகாசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்நேரம் ‘ஸ்ஸ்ஸ்…’ என்று அழுத்திய ஃபாக்ஸ் ஸ்ப்ரே இங்கிருக்கும் பாரீஸ் மட்டுமல்லாது ஐரோப்பிய பாரிஸ் வரை கூட பரவியிருக்கக் கூடும்.
நண்பர்களின் வாழ்த்துகளோடு விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தபோதுதான் சிம்லாக்காரன் குளிரைப் பற்றி பேசுவது போல்தான் எல்லாற்றவையும் இங்கே விவரித்துக் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் ஒரு சிறிய டிபன் சென்டரில் ஒரு ரூபாய் இட்லி ஐந்திற்கு, எட்டு இட்டலிக்கான சட்னியும் சாம்பாரும் நிறைத்துக் கொடுத்தார்கள்.
நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்தும் சட்னியின் காரம் எச்சிலை ஊற வைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பும்போது வயிற்றைக் கலக்குமோ என்ற பதற்றங்களை திசைமாற்ற வேலையைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கினேன்.
ஷேர் ஆட்டோவில் சூரியன் எஃப். எம்மில் ஒலித்துக்கொண்டிருந்த ‘கனா காணும் காலங்கள் கரைந்தோடும் மேகங்கள்…’ கேட்டுக்கொண்டே கம்பெனி ஸ்டாப்பில் இறங்கிய போது மணி சரியாக ஒன்பதைத் தொட்டுவிட்டிருந்தது.
நான் ஒரு சினிமா காதலன் என்பதால், அதுவும் இயக்குனராகும் ஆர்வங்களில் அல்லும் பகலும் அதன் சிந்தனைகளிலேயே திளைத்து வந்தவன் என்பதால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை அல்லது எழுதப்பட்டிருக்கும் சினிமாச் சார்ந்த விளம்பரங்களைக் காண்பதே ஏதோ ஆர்கஸம் அடைவது போலிருக்கும் என்றால் மிகையாகாது. என்னளவில் அதுதான் உண்மை.
அப்படி சாலையைக் கடந்து, கம்பெனியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது கவனித்தேன். ஒரு பக்கவாட்டு சுவரொன்றில் தனுஷின் ட்ரீம்ஸ் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. கில்லிக்கு பிறகு விஜய், எஸ் ஏ சியின் படமொன்றில் நடித்தால் எப்படி இருக்கும், அப்படியிருந்தது. துள்ளுவதோ இளமை பாதிப்பில் எடுத்துவிட்டிருந்தால் என்னாவது என்ற கவலையும்தான்.
நான் நுழைவதை கவனித்ததும் பாக்யா என்னை கைகாட்டி என் இருக்கை பக்கம் கூப்பிட்டார். பாக்யராஜ்தான் அந்த கம்பெனியின் எம்.டி. முதன்முதலாகக் கண்ட வேளையில் அப்படிதான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னை இன்டர்வீவ் செய்ததும் அவரே. பார்க்கத் தூள் படத்தில் வரும் அந்த மாலைப்போட்ட போலீஸ்காரர்… மனோஜ் கே விஜயன் போலிருப்பார்.
தண்ணீர் கேனும் பாட்டில்களும் சூழ்ந்த அந்த பெரிய குடோனில், அவரது ஆபிஸ் என்பது ஒரு மில் முதலாளியின் மேசையைதான் நினைவுப்படுத்தும். ஊரிலுள்ள தண்ணீரையெல்லாம் இவர்களே உறிஞ்சி வைத்திருக்கிறார்களோ என்ற ஐயம் கூட வந்தது சுற்றிக் கூடங்களில் தரையெங்கும் வெவ்வேறு அளவுகளில் நிறைக்கப்பட்டிருந்த கேன்களைக் கண்டபோது.
‘குட் மார்னிங் சார்!’ என்றேன்.
லேசாகத் தலையை அசைத்துப் புன்னகைத்தபடி, எதிரிலிருந்த சேரில் அமருமாறு கையைக் காட்டினார்.
“அப்புறம் சந்துரு, இந்த இண்டஸ்ட்ரி எப்படின்னு ஒரு புரிதலுக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். ரெடிதானே? வேலையை ஸ்டார்ட் பண்ணலாமா?” நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.
கவனங்கள் முழுக்க அவர் மீதேப் படித்திருந்தாலும், எனது பார்வைகள் மட்டும் அவ்வப்போது கேன்களில் அச்சிடப்பட்டிருந்த நீலி என்ற பெயரையேச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன. கூடவே குமார் அண்ணனுடைய முகமும்.
என்னுடைய பணி கும்மிடிப்பூண்டியிலிருக்கும் பிளாண்ட்டில் என்றாலும் மரியாதை நிமித்தமாக அங்குள்ள பணியாளர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட அனைவருமே லுங்கியில் இருந்தனர்.
ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் கடமைக்கு ஒரு பார்வையை செலுத்துவது போல் என்னை நோக்கிவிட்டு கடமையே கண்ணெனத் தங்களது பணிகளைத் தொடர ஆரம்பித்தனர்.
பிளாண்டிலிருந்து வரும் ஸ்டாக்குகளை எப்படிக் கொண்டுவருகிறார்கள், டெலிவரி எப்படிச் செய்கிறார்கள், எங்கெல்லாம் செல்கிறது, விநியோகிக்கப்படுகிறது போன்ற அடிப்படையான விபரங்களை பாக்யா என்னோடுப் பகிர்ந்து கொண்டிருந்தபோதுதான் ஓனரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
ரிலையன்ஸ் செல்லை எடுத்து, ‘சொல்லுங்க தலைவரே!’ என்று மிகவும் சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அந்த உரையாடலின் மூலம் பாக்யாதான் அவருக்கு இங்கே எல்லாம் என்று என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
“மதி, உங்களைப் பார்க்கணும் சொல்றார். போய் மீட் பண்ணுங்க சந்துரு!” ஓனரைப் பெயர் சொல்லிதான் அழைப்பார் என்றும் விளங்கிக் கொண்டேன். கிட்டத்தட்ட இருவரும் நண்பர்கள் என்பது போல ஒரு பிம்பத்தை அவர்களுக்கிடையேயான அந்த சிறிய உரையாடல் மனதில் பதிய வைத்தது.
ஓனருக்கென்று ஒரு தனி அந்த பெரிய குடோனுக்கு சற்று பின்புறம் இருந்தது. பாக்யா செல்லும் வழியைக் காட்டினார். நான் சரியாகப் புரிபடாமல் விழித்தபோது, வேலையாள் ஒருவனை அழைத்து சாருக்குக் ஓனரோட ஆபிஸைக் காட்டு என்று ஆணையிட்டார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பவ்யமாய் தலையாட்டிக் கொண்டு என்னை அங்கேக் கூட்டிச் சென்றவன் காலைச் சுற்றும் பூனையைப் போல முன்னும் பின்னும் பின்னி பின்னி நடந்து நடந்து என் பொறுமையைச் சோதித்தான். அவனுடைய நடைமொழியும் வித்தியாசமாகயிருந்தது. மரியாதை என்றாலும் இவ்வளவு பவ்யம் கூடாது தம்பி என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் என்னை விட அவனுக்கு சற்று வயது கூடவே இருக்கக் கூடும். அதனால் என்ன அண்ணேன்னு சொல்லிட்டாபோச்சு!
வெளியிருந்துப் பார்த்தபோது ஏதோ பெரிய ஐஸ்பெட்டியைப் போல அந்த அந்த அறையின் முகப்பு வழுவழுவென வெளிர் சந்தன-மஞ்சள் கலரில் பெயிண்ட் அடிக்கபட்டிருந்தது. அரசு அலுவகம் போலவும் தோன்றியது.
கூட்டி வந்தவனுக்கு ஒரு நன்றியை சைகையால் சொல்லிவிட்டு கதவை மெல்லத் திறந்தேன். ஏற்கனவே ஒரு முறை தற்செயலாக பரிச்சயம் என்பதால், நலம் விசாரித்துவிட்டு முன் இருக்கையில் அமரச் சொன்னார்.
அவர் பின்னாடி பெரிய அம்மன் படம் இருந்தது. வைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் தனது கண்ணாடி நெற்றியில் ஏந்திக் கொண்டு வியாழனும் செவ்வாயும் சேர்ந்தது போல் காட்சியளித்தது. அப்போதுதான் அணிவித்தது மாதிரி மாலையும் சற்றே அகன்ற செவ்வந்தித் தொட்டில் வடிவில் முடிந்து சாத்தப்பட்டிருந்தது.
அறை முழுக்க பக்தியின் மணமா அல்லது அகர் பத்தியின் மணமா என்று பிரித்தறிய முடியாத படி இரண்டும் இரண்டறக் கலந்து என்னையும் ஒரு விதப் பரவச நிலைக்கு இழுத்துச் செல்வது போலத் தோன்றியது. எதிரில் அவர் வெள்ளைச் ட்டையணிந்திருந்த இளமையான பங்காரு அடிகளார் போலவே ஓனர் காட்சியளித்தார். அவர் புன்னகை நீர் மேல் பட்ட ஒளியாய் என் முகத்தில் அடித்து கண்களைக் கூசியது.
அவர் என்னை பார்வையால் படிக்கிறாரோவென என் கவனங்களைச் சில நொடிகள் அறைதனில் சுழலவிட்டேன். அது அவரைக் கவுரவிப்பது போலத் தோன்றியிருக்க வேண்டும். மௌனமான அதே மந்தகாசப் புன்னகையோடு என்னோடு அவரும் சேர்ந்து அங்குள்ளதைப் புதுசாகப் பார்ப்பது போல் தானும் பார்த்தார்.
சுற்றி சுவர்களில் தெய்வப் படங்களே வெவ்வேறு அவதாரங்களில் ஆக்கிரமித்திருக்க, இடையில் ஒரே ஒரு ஃபிரேம் மட்டும் தனித்து என் கண்ணில் தனித்து ஆடியது. அது கைத்தறியின் படம்! பட்டின் இழைகள் வாடாமல்லிக்கலரில் ஒரு அகலமான படியிலிருந்து மிதமான வேகத்தில் வழிந்தோடும் அருவிப் போல் காட்சியளிக்க, அதில் ஆங்காங்கே பூக்கள் தெளித்தது போல் அதனோடு சேரக் காத்திருக்கும் அழகான தங்க ஜரிகைகள்! அது புகைப்படமா அல்லது ஓவியமா என்று பிரித்தறிய முடியாத வண்ணத்தில் பிரிண்ட் செய்து மாட்டப்பட்டிருந்தது அல்லது தூரிகையால் தீட்டப்பட்டிருந்தது.
“என்ன சந்துரு எப்டி இருக்கீங்க?” என் கவனத்தைக் கோரி, கனைப்பது போல் தனது குரலை சற்று சரி செய்துகொண்டார்.
“நல்லாருக்கேன் சார்”
“பாக்யாவை பாத்தீங்களா? விபரங்கள் எல்லாம் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்” முதல் முறைப் பார்த்ததை விட அவர் பேச்சில் ஒரு நெருக்கமும் உரிமையும் கூடியிருந்தது.
“சொன்னாருங்க சார். சொல்லிக்கிட்டு இருக்கும்போதுதான் நீங்க போன் பண்ணுனீங்க”
“ம்ம்.. சரி சந்துரு, இப்ப பிளான்ல கொஞ்சம் சேஞ்ச் நாளைக்கே பிளாண்டுக்கு கிளம்புற மாதிரி இருக்கும். உங்களுக்கு ஓகேதானே?” உடனே அப்படிக் கேட்டது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். நண்பர்களை இவ்வளவு சீக்கிரம் பிரியப் போகிறோமா என்ற யோசனைகள் எழுந்தாலும் முடியாது என்றா சொல்ல முடியும்? இந்த வாரம் என்றாலும் அடுத்த வாரம் என்றாலும் அங்கே போய்தானே ஆக வேண்டும்!
“பிரச்சனை இல்ல சார்!” என்றேன்
“சரி சந்துரு, அப்ப நீங்க அங்க போறதுக்குண்டான ஏற்பாடுகளை நான் ஆட்களைச் செய்யச் சொல்றேன்!”
சரி என்பது போல் தலையாட்டினேன்.
“பாக்யா சொன்னாரா இல்லையான்னு தெரியல. தங்க, சாப்பிட எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிறோம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்” என்றது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இதைப்பற்றி முன்பு பேசியிருக்கவில்லை. அங்கே சென்று இவையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று நானே நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது இன்னொரு முறை என்னைப் படிப்பது போல் ஒரு பார்வையை செலுத்தத் தொடங்கினார்.
அவரிடம் மேற்கொண்டு என்ன கேட்பது பேசுவது எனத் தெரியாமல் தலையை சற்றுத் தாழ்த்திக் கொண்டேன். பிறகு, அதற்கு மேல் பேச ஒன்றுமில்லாதது போல் அவரும் என்னைப் பார்ப்பது போலிருந்தது.
அவர் எதுவும் பேசாமலே இருந்ததால் ‘சரிங்க சார்… சரிங்க சார்…’ என்று நான் எழ
பாவனைகள் செய்தேன்.
சற்று இருக்கும்படி சைகைக் காட்டி, “நானும் பாக்யாவும் அப்பப்ப அங்க வருவோம். அவரே மற்ற எல்லா விபரங்களும் சொல்வார். அங்க ஒரு மேனேஜர் இருக்கார். பேரு சீதாராம், தெலுங்கு பேசுபவர். அங்க போனா உங்களுக்கேத் தெரியும். ஆங்.. சொல்ல மறந்துட்டேன் ஒரு பெரியவரும் இருக்கார் அவர் பேரு ஆஞ்சநேயலு. அவரும் உங்களுக்குச் சப்போர்ட் பண்ணுவார். இருந்தாலும் நீங்கதான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணனும்”
மறுபடியும் ‘சரிங்க சார்’ என்றேன்.
புன்னகைத்து கைக்கூப்பினார்.
எழுந்து வெளியில் வரும்போது மீண்டும் அந்த தறி ஃபோட்டோ கண்ணில் பட்டுச் சென்றது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்