சிறுபிராயத்தில் கடலூரில் வசித்த நாட்களில் தென்பெண்ணையாறு தான் எங்களுக்கு தேம்ஸ், ரைய்ன், கங்கை, கோதாவரி எல்லாமே.
அந்த நாட்களில் பெண்ணையாற்று நீரும் சுத்தமாகவே இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அங்கு குளிப்பதுண்டு.
அதன் கரையிலே தான் குடும்ப மூத்தோர்கள் சரீரம் நீத்ததும், நான் அதன் நீரில் முங்கி நினைப்பொழிக்க முயன்றதுவும்..
நினைவுகளும் நதியில் முங்கிய மாத்திரத்தில் கரைந்து விடுமா என்ன?
பின்னர், பெண்ணையாற்றைக் கடந்து போவதும் வருவதுமாய் காலம் போயிற்று.
கடக்கும் தோறும் அந்த நாள் நினைவு பிரவாகமாய்ப் பொங்கி அடங்குதலும், அடித்து வந்த வண்டலாய் மென்சோகம் படர்வதும் வாடிக்கை தான்.
நீண்ட கால நாடோடி உத்யோகத்தில் கங்கை உட்பட பல நதிகளின் தீரத்தில் வாழ்ந்தாயிற்று.
ஆனாலும், முதிரா இளமை முதல் என்னுள் அந்தர்வாஹினியாகவும், ஆதர்ஸமாகவும் நுரைத்தோடுவது பம்பா நதி ஒன்றே.
அதன் கரைகளிலே தான் மணிகண்டப் பிரபு பாலனாய்ப் படுத்திருந்தார். இராஜசேகர வர்மன் கண்டெடுத்து சீராட்டக் காத்திருந்தார்.
பம்பையில் பிரசன்னனாக சுத்த பக்தருக்காக இன்றும் பகவான் காத்திருக்கிறார். விண்டுரைக்க இயலா வண்ணம் தன் இருப்பைக் காட்டி விளையாடவும் செய்கிறார்.
பம்பையின் புனிதம் சுவாமியின் பூங்காவனக் காற்றில் கலந்திருக்கிறது. மாசும், பக்தர் பாவங்களைக் கழுவிய கசடும் பம்பையின் புனிதத்தைக் கெடுப்பதில்லை.
என் இரண்டாம் மலையாத்திரையின் போது பெரியானை வட்டத் தாவளத்தில் தங்கியிருந்தோம். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பம்பை பற்றிய பல சங்கதிகளை உடன்வந்த ஐயப்பமாருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன்.
“எப்படி மயிலு உனக்கு இவ்வளவு விஷயம் தெரியும்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் கோபால் அண்ணா.
“முன்னொரு சமயம், இங்கே ஒரு ரிஷியாக பல காலம் வசித்திருந்தேன் அண்ணா. அதனாலே கொஞ்சம் தெரியும்” என்று சொல்லியபடி சிரித்தேன்.
கேட்டுக் கொண்டே வந்த குருசாமி
“ என்ன மோகா! ஆராக்கும் ரிஷி?” எனக் கேட்டார்.
“நம்ப மயிலு தான் குருசாமி!” என்று கோபால் அண்ணா நடந்ததைச் சொன்னார்.
“காலேல குடிக்க தண்ணியெடுக்க ஊத்து தோண்டப் போறப்போ மயிலையும் கூட்டிக்கிட்டுப் போ கோபால்!” என்றார் குருசாமி.
“ஏன் குருசாமி?”
“ஊத்து தோண்டும்போள் நம்மட மோகன ரிஷி, அப்ப யூஸ் பண்ண கமண்டலம் கிட்டும் கேட்டோ?!”
அடுத்த நாள் விடிகாலை ஊத்து தோண்டப் போன இந்த யூத்துக்கு ஏதும் கிடைக்கவில்லை.
கமண்டலத்தை எங்கே விட்டிருப்பேன்?!
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.