அத்தியாயம்-4
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
மதன் பிரியாவின் படத்தை செல்போனில் பார்த்த அடுத்த ஷாட் அதாவது அடுத்த நொடி செல்போனுடன் பால்கனியிலிருந்து அறைக்குள் வந்திருந்தான்.
“ஏண்டா அந்த பிரியாவை செல்போன்ல போட்டோ எடுத்து வச்சிருக்கே” பதட்டமாய் விக்கியிடம் கேட்டான்.
விக்கி பதட்டப்படவில்லை. கண்ணாடி பார்த்து ஷேவ் செய்து கொண்டிருந்தவன் நிதானமாக பதில் சொன்னான்.
“நீ தானே அந்த பொண்ணை நடிக்க வைக்கலாம்னு ஆசைப்பட்டுட்டிருக்கே. போட்டோ பேஸ் எப்படி இருக்கும்னு செக் பண்ணி பார்த்தேன்”
“பர்மிசன் வாங்காம எடுக்கிறது தப்புடா. முதலில் டெலிட் பண்ணு”
” இதுக்குப் போய் ஏன் டென்சனாகிறே..?”
“மூர்த்தி என்ன தம்பி இதுனு கேட்டுச் சங்கடப்பட்டார்னா நல்லாருக்காது. எங்கப்பா அம்மாக்கிட்ட நிறைய அவமானப்பட்டவர் அவர். அவருக்கு இந்த வீட்ல பெரிய ஆறுதல் நான் மட்டும் தான். நானும் இது மாதிரி நடந்துகிட்டா நல்லாருக்காது.”
அவன் சொன்னதில் இருந்த யதார்த்தம் புரிந்ததும் விக்கி சிரித்து கொண்டே சொன்னான்.
” உங்கப்பா எடுத்த படங்கள்ல ஒரு படத்தோட பெயர். மிஸ்டர். தொழிலாளி. வேடிக்கையா இருக்குல்ல.”
“முதல்ல டெலிட் பண்ணுடா ” செல்போனை அவன் மீது எறிந்தான் மதன்.
அதை கேட்ச் செய்த விக்கி டேபிளில் வைத்து விட்டு ஷேவ் செய்வதில் மும்முரமானான்.
மதன் பாத்ரூம் சென்று வர காத்திருந்து வந்தவுடன் “என்னடா அம்மா தான் இவ்வளவு கெஞ்சறாங்களே. கல்யாணம் தான் பண்ணி தொலையேன்” எனக் கேட்டான் விக்கி.
“24 மணி நேரமும் சினிமா சினிமானு ஓடிட்டிருக்கேன். அது உனக்கே தெரியும். கல்யாணம்ங்கிறது இந்தச் சமயத்துல எனக்கு ஸ்பீடு பிரேக்கர்.”
“ஒரே பையன் நீ. கல்யாணம் பண்ணி பார்க்க அவங்களுக்கும் ஆசை இருக்காதா…?”
“நாட்ல எத்தனையோ பொண்ணுங்க கல்யாணம் பண்ணக் காசில்லாம இருக்காங்க. அவங்களுக்கு பண்ணிப் பார்க்க சொல்லு.”
“அப்ப நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டே..?”
“மாட்டேன்னு சொல்லல. இப்ப வேணாம்னு தான் சொல்றேன்.”
விக்கி டவல் கொண்டு முகத்தை அழுந்த துடைத்து கொண்டே சொன்னான்.
“இந்த ஸ்க்ரிப்ட் எழுதற வேலை முடிஞ்சு நாம சென்னை திரும்பறதுக்குள்ள நீ கல்யாணம் பண்ணிடுவேனு என் மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது”
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி உளராதே.”
“நான் சொன்னா பலிக்கும்னுலாம் பில்டப் கொடுக்க மாட்டேன். ஆனா நடக்கும். உங்கப்பா உன்னை சினமாலாம் வேணாம்ன்னு ஐடி வேலைக்கு போகச் சொல்லி அமேரிக்கா அனுப்பி வச்சார். நீயும் அப்பா சொல்றாரு என்ன பண்ணட்டும்னு போனே. ஆனா உன்னாலே இருக்க முடியாது நீ வந்துருவேனு நான் சொன்னேன். அதே மாதிரி நீ வந்துட்டே. முதல் படம் ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சவுடனே படிச்சிட்டு படம் சூப்பர்ஹிட ஆகும்னு சொன்னேன் . அது ஆச்சா இல்லியா. அது போல் இதுவும் நடக்கும்.”
“நடக்கிறப்ப ஒத்துக்கிறேன்.”
அப்போது வேலையாள் வந்து “கீழே போலீஸ் வந்திருக்காங்க” என்றான்.
கைக்கு கிடைத்த டீ சர்ட்டை அணிந்து கொண்டு விக்கி பின் தொடர கீழே வந்தான் மதன்.
சப் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். கூட வந்திருந்த கான்ஸ்டபிள் மதனை ஆச்சரியமாய் பார்த்தார். அந்த ஆச்சரியமெல்லாம் இன்ஸ்பெக்டரிடம் இல்லை. அறிமுகங்கள் முடிந்த பின் மூர்த்தி சொன்னார்.
“உடைஞ்ச கார் கண்ணாடிய பார்த்திட்டாங்க. அவன் தப்பிச்ச ஓடின இடம் வரைக்கும் அழைச்சிட்டு போய் காண்பிச்சிட்டேன்.”
சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தியை கையமர்த்தி விட்டு பேசினார்.
“வேற யார்கூடவாவது உங்களுக்கு விரோதம் இருக்கா..?”
“அதெல்லாம் இல்ல “
“சிசிடிவி ஏன் இன்னும் போடாம வச்சிருக்கீங்க..?”
“நான் இங்க வந்து பல வருசமாச்சு. அப்பா அம்மா தான் எப்பயாவது வருவாங்க. அதனால அது பத்தி நாங்க அக்கறை எடுக்கல. இப்ப போடச் சொல்லிட்டேன்.”
“சரி. சுத்தி இருக்கிறவங்களை எல்லாம் விசாரிக்கிறேன். ரோட்ல இருக்கிற சிசிடிவி புட்டேஜ்ல எதுனா கிடைக்குதானு பார்க்கிறேன். பிடிச்சிடலாம்” என்றபடி கிளம்பினார்.
வாசலுக்கு சென்றவர் திரும்பினார். ” உங்க படம் நல்லாருக்கிறதா வீட்ல சொன்னாங்க. நான் பார்க்கல. எனிவே கங்கிராட்ஸ்” என்றார்.
“நான் ரெண்டு தடவை பார்த்துட்டேன்.அடுத்த படத்துக்கு இப்பவே வெயிட்டிங்.” என கான்ஸ்டபிள் சொன்னார்.
‘நேத்து தான்யா இவன் ஸ்கிரிப்ட் எழுதவே ஆரம்பிச்சிருக்கான்.’ என விக்கி தனக்குள் பரிதாபமாகச் சொல்லி கொண்டான்.
” சரி கம்ப்ளெயிண்ட் எடுத்துக்கிறேன். கண்டுபிடிச்சிடலாம். உங்கப்பா கிட்ட சொல்லிட்டீங்களா..?”
“இல்லை. சொல்லணும்.”
“சொல்லிடுங்க.எதுனா பிரச்னை ஆயிட்டா ஏன் சொல்லலேனு கேட்பாருல்ல”
இதற்கு விக்கி தான் தலையாட்டினான்.
“எதுக்காக ஐயா அவன் இதப் பண்ணிருக்கான் ” மூர்த்தி வெள்ளந்தியாய் கேட்டார்.
முதலாளி தன்னைத் தானே குறை சொல்வார் என்ற பயம் உள்ளூர பரவியிருந்தது .
“பிடிச்சிடுவோம்ல. அப்ப அவன் கிட்டயே கேட்போம்.”
அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில்….
அந்த அவன், அதாவது முதல் நாள் ஒரு பிச்சைக்காரன் போல் வேடமிட்டு வந்து கார் கண்ணாடியை உடைத்தவன், கடைவீதியில் பைக்கில் அமர்ந்தவாறு சிகரெட் பிடித்து கொண்டிருந்தான். அவன் கூடவே நண்பர்கள் குழு ஒன்று அரட்டை அடித்து கொண்டிருந்தது. நண்பனின் கையில் இருந்த வாட்சில் மணி பார்த்தான். டிராபிக் நிறைந்த ரோட்டையும் பார்த்தான்.
” டேய் முத்து நேத்திக்கே அந்த பொண்ணு கிட்ட போய் வம்படியா பேசி அறை வாங்கிட்டு வந்துட்டே. திரும்பவும் ஏன் அவளை பார்க்கறதுக்கு நிக்கிறே..?” ஒருவன் கேட்டான்.
“வாங்கினது பத்தலையாடா” இன்னொருத்தன் சிரித்த படி கேட்டான்.
கேள்வி கேட்டவனை திரும்பி பார்த்தான் முத்து.
“சொல்லுவீங்கடா. நோட்டம் மட்டுமே விட்டுட்டிருந்த என்னை அவ கிட்டப் போய் பேசுனு உசுப்பேத்தினதே நீங்க தானே”
“நாங்க பக்குவமாத்தான் பேசச் சொன்னோம். ஆனா நீ திடீர்னு ஒரு பொண்ணுக்கிட்டப் போய் உன்னை லவ் பண்றேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா அடிக்கத்தான் செய்வாங்க”
இதற்கு பதில் சொல்லாமல் பார்வையை ரோட்டில் திருப்பினான்.
யாருக்காக காத்திருந்தானோ அவள் வந்து கொண்டிருந்தாள்.
பிரியா தன் சைக்கிளின் பின்னே அந்த சிறுமியை உட்கார வைத்துப் பள்ளிக்கு செல்வதற்காக அவசரமாக வந்து கொண்டிருந்தாள்.
பைக்கை கிளப்பி அவள் முன்னே சென்று நிறுத்தினான் முத்து.
ஒரு கணம் தடுமாறிய பிரியா தன் பாதங்களை தரையில் ஊன்றி அவனை பார்த்தாள். உடனே கோபப்பட்டாள்.
“ஏன் நீ நேத்து எங்கிட்ட வாங்கின அறை பத்தாதா.,?”
முத்து கன்னத்தை தடவி கொண்டே, “அதுக்கு பதிலடி கொடுக்கத்தான் உன் வீட்டுக்கு மாறு வேசத்துல வந்தேன். ஆனா பாரு. உன் முதலாளி குடும்பம் வந்திருக்கிறது தெரிஞ்சுது. உன்கிட்டக் காட்ட வேண்டிய கோபத்தை கார்மேல காண்பிச்சிட்டு வர வேண்டியதாப் போச்சு” அவன் வார்த்தைகளில் எள்ளல் இருந்தது.
” அடப்பாவி. உன் கோபத்தை சம்பந்தமில்லாத ஒருத்தர்க்கிட்ட காண்பிச்சிருக்கே.”
“சம்பந்தமிருக்கு. பெரிய பணக்கார வீட்ல உங்கப்பா வேலையில இருக்கார்னு தானே திமிரா இருக்கே. இப்ப உன்னாலே அவங்களுக்கு பிரச்னைங்கிறப்ப அது உங்கப்பா வேலைக்கே உலை வச்சிடும் இல்லியா. அதான் எனக்கு வேணும்”
“மின்சாரத்துல கை வச்ச கதையாகிடுச்சு இப்ப உன் நிலமை” பிரியாவின் குரலில் எகத்தாளமிருந்தது.
“தூக்கி அடிச்சாலும் உன் கால்ல வந்து வாழ்ற வாழ்க்கை போதும் எனக்கு”
” ரோட்ல போறவன் வர்றவன் ஆசைபடுறதுக்கெல்லாமா ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்க முடியும்” ஆவேசமானாள்.
“மிஸ். ஸ்கூலுக்கு டயமாகிடுச்சு” பின்னால் அமர்ந்திருந்த அந்த சிறுமி சிணுங்கினாள்.
“இரும்மா செல்லம். நம்ம வழியில் ஒரு மிருகம் வந்திருச்சு. அதை விரட்டிட்டு வர்றேன்.” பற்களை கடித்தாள்.
” நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்றே…”
” இங்க பார் எங்கப்பா யாரை கை காட்டறாரோ அவர் தான் எனக்கு மாப்பிள்ளை.அது ஒரு கழுதையா இருந்தாலும் சரி. நகரு.” ஆணையிட்டது போல் உறுதியாக சொல்லியபடி கிளம்பினாள்.
நண்பர்கள் குழு இதற்கு முத்துவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று பார்க்க ஆவலானது.
” அவ்வளவு தானே. உங்கப்பாவை வழிக்கு கொண்டு வந்து சம்மதம் வாங்கறதுக்கு கழுதையா மாற கூட நான் தயாரா இருக்கேன்”
சொல்லி முடித்த அடுத்த விநாடி அங்கிருந்து கிளம்பி விட்டான்.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவனது இந்த வார்த்தைகள் பிரியாவுக்கு முதன் முறையாக பயத்தை தந்தது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.