பகுதி – 5
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
‘புதுமைப்பித்தனை தெரியுமா?’ என்ற கதிர் அண்ணனின் கேள்விக்குப் பின் மேற்கொண்டு அவரிடம் எப்படி நடந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. மோட்டார் போட்டவுடன் ஹோஸில் தண்ணீர் பாய்ந்து செல்வது போல் உடலைச் சற்று அசைத்து கொடுத்தேன்.
கேள்விக்குப் பதில் தெரியாத அல்லது பதில் சொல்லத் திராணி இல்லாத பள்ளி
மாணவனைப் போல ஒரு கணம் விழித்தேன். டிரைவராக வேலை பார்ப்பவர் புதுமைப்பித்தனைப் பற்றியெல்லாம் கூடப் பேச்செடுப்பாரா என்ற வியப்பு என்னுள் மேலோங்கியது.
“நீங்க என்னண்ணே படிச்சிருக்கீங்க?” என்னுள் எழுந்த அசௌகரியம் அந்த சூழ்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு இயல்பாகவே இப்படி ஒரு கேள்வியைக் கேட்க வைத்துவிட்டது.
என்னைப் புரிந்து கொண்டவர் போல ஒரு சிரிப்புச் சிரித்தார். அவரது தோள் இன்னொரு முறை என்னை இடித்தது.
“ஏன் கேக்குற?” என்றபோது இருபது வயது இளைஞனுக்குரிய குறும்புகள் அவர் முகத்தில் கொப்பளித்தது. அடுத்த கணமே அதைத் தாண்டிய ஒரு தீட்சண்யம் அவரது கண்களில் வெளிப்பட்டது. மேகத்திலிருந்து எம்பிச் செல்லும் இளம் மஞ்சள் நிலாவைப் போல ஏதோ ஒன்று அவரிடம் எழுந்து அடங்குவது போலிருந்தது.
“சும்மாதான் கேட்டேன். புதுமைப்பித்தன் ஒரு புரட்சி எழுத்தாளர்னு கேள்விப்பட்டிருக்கிறேன்”.
ஏதோ ஒரு சிறப்புப் பட்டி மன்றத்தில் எங்கேயோ யாரோ அது போல குறிப்பிட்டு கேட்ட ஞாபகங்கள் மனத்திரையில் ஒரு பத்து நொடி விளம்பரம் போல ஓடி மறைந்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்காலங்களில் ஓரிரு தமிழய்யாக்கள் அந்த பெயரை உச்சரித்துக் கேட்டிருந்ததும் நினைவைத் தட்டிச் சென்றது.
“ம்” என்று குதிரை போல தலையை மேலிருந்து சற்று கீழே தாழ்த்தியவராய் ஆமோதித்தார். ஆனாலும் ஒரு டிரைவர் வேலைப் பார்ப்பவர் எப்படி இதெல்லாம் கேட்கிறார், பேசுகிறார் என்று அவரைப் பார்க்கப் பார்க்க எனக்குள் ஆச்சர்ய மின்னல் அடித்துக் கொண்டேயிருந்தது.
“நீங்க கதைகள் எல்லாம் படிப்பீங்களா?” என்ற கேள்வியை அவரை நோக்கிக் கேட்டேன்.
அதற்கும் அவரிடத்தில் “ம்” என்ற அதே குதிரை முகபாவனை.
நானும் கூட வாசிப்பேன் என்று கூறுவதற்குப் பதில் கதைகள் எழுதுவேன் என்று சொல்லிவிட்டேன். அதீத ஆர்வக்கோளாறில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் வரிசையில் என்னையும் நுழைத்துக் கொள்வது போல அப்படி உளறியது எல்லாம் சொன்ன எனக்கே அநியாயம்.
நியாயமாகப் பார்த்தால் எப்போதும் காதல் காதல் என்றே துய்த்து படமெடுத்துக் கொண்டிருக்கும் யாராவது ஒரு லாலா லாலா இயக்குனரோடு என்னைத் தொடர்பு படுத்திப் பேசியிருந்தாலாவது ஓரளவு மனசாறியிருக்கும் என்பதுதான் நான் வைத்திருக்கும் சரக்கு சார்ந்த உண்மை. இந்த இருபத்தி இரண்டு வயதில் வியட்நாம் வீடு கதையா எழுத முடியும்! சொன்ன செய்திக்கு அவருடைய எதிர்வினையான ஏதேனும் ஒரு நெருடலான கேள்வியையோ பதிலையே எதிர்பார்த்தேன்.
ஆனால்..
“அடடே! அப்படியா?” என்ற அவரது ஆச்சர்யக்குறி என்னை கொஞ்சம் நிம்மதி கொள்ள வைத்திருந்தாலும் மேற்கொண்டு ஏதும் கேட்டு, நாம் தடுமாற நேரிடுமோ என்ற சிறு அச்சமும் அந்நேரம் எழாமலில்லை.
இதே போலொரு சம்பவம் முன்பொருநாள் நிகழ்ந்திருக்கிறது. அப்போது நான் எட்டாம் வகுப்போ அல்லது ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். எங்க ஊர் சிவன் கோயிலுக்கு பக்கத்திலிருக்கும் ஊரிலிருந்துதான் அய்யரொருவர் சைக்கிளில் அனுதினமும் வந்து செல்வார்.
என்னுடைய அப்பாவிற்கும் கூட நல்ல பழக்கம். அப்பாவிற்கு ஒரு நாள் அய்யரோட ஊரிலிருக்கும் பேங்க்கிலிருந்து டிடி ஒன்று எடுத்தனுப்பும் வேலையிருந்தது. ஆனால் அன்று அவரால் எங்கும் செல்ல முடியாதொரு சூழ்நிலை. அதனால் வேலையை முடித்து வர அய்யரோடு என்னை அனுப்பி வைத்தார்.
போகும் வழியில் அவர் என்னிடமும் நான் அவரிடமும் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டேச் சென்றோம். அவர் சிவன் கோயிலின் அய்யர் என்பதால், செய்யுளையொட்டிய உபரிக் கதைகளாய் எங்கள் தமிழய்யா பகிர்ந்துக் கொண்ட சில மேற்கோள்களை வைத்தும், திருவிளையாடல், கந்தன் கருணை போன்ற படங்களின் தாக்கங்களை வைத்தும் ஒரு அனுமானத்தில் எனக்கும் சிவ புராணமெல்லாம் நன்றாகத் தெரியும் என்று பெருமையாகச் சொல்லிவிட்டேன். இதைக் கேட்டதும் அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
‘உண்மையாகவா? உண்மையாகவா..!’ என்று ஆர்பரித்தவாறு கேட்டார்.
‘ஆமாம்’ என்றேன்.
‘எங்கே சொல்’ என்றார்.
நான் கதைகளாகக் கூற துவங்க அவர் சற்று ஏமாற்றமடைந்திருக்க கூடும்.
அதை சைக்கிளின் வேகம் எனக்கு காட்டிக்கொடுத்தது.
நான் ஏதும் செய்யுளாகதான் சொல்லப் போகிறேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் என்னைத் தேற்றும் விதமாக
‘நன்னா படிக்கணும் கண்ணா!’ என்ற அந்த குரலில் ஒரு வித அக்கறையை உணர்ந்தேன். அந்த அய்யர் போல பொசுக்கென்று இவரும் அப்படி ஏதாவது என்னிடம் பெரிதாக எதிர்பார்த்தோ அல்லது அறிந்துகொள்ளும் பொருட்டிலோ கேட்டு விடுவாரோ என்ற பதற்றமும் சூல் கொண்டிருந்தது.
திரும்பவும் ஒரு டிரைவராக இருப்பவருக்கு இலக்கியத்தின் மீதெல்லாம் நாட்டமிருக்குமா என்று எனக்குள்ளேயே கேள்விகளைத் தொடுத்துக் கொண்டு கேட்டுக்கொண்டிருந்த நான் என்னதான் இருந்தாலும் அவர் ஒரு அறிவுஜீவிதான் என்று எனது அம்புகளை நானே ஒடித்துப் போட்டேன்.
எதார்த்தமாக ஸ்டியரிங்கில் பார்வையைக் குவித்தபோதுதான் நான் கவனித்தேன் அவர் இடது கையிலிருந்த பட்டையாக கோடுப் போட்டது போல் பளபளவென மின்னிக்கொண்டிருந்த அந்தத் தழும்பை.
‘என்னங்கண்ணே கையில என்னாச்சு’ என்று அக்கறையோடு விசாரித்தேன்.
சிரித்துக் கொண்டே ‘அதுவா இது என் பையனுக்காக ஒரு முறை சூடு வைத்துக் கொண்டேன்’ என்றார்.
எனக்கு ஒன்றும் விளங்காமல் எதற்கு என்பது போல் அவரைப் பார்த்தேன்.
“ஒழுங்கா படிக்க மாட்றான். படிச்சா இதெல்லாம் நான் ஏன் செய்ய போறேன். என் மேல அவனுக்கு மிகவும் பாசம் என்பதால் அவன் முன்னாடியே இனி மார்க் கம்மியா எடுத்தா அப்பா ‘இன்னொரு கையிலும் சூடு வச்சிப்பேன் என்று மிரட்டி, கத்தியால் இந்த கையில் சூடு போட்டுக் கொண்டேன்’ என்று புன்னகை வழிய ஏதோ தீரச் செயலொன்றை செய்து விட்டதைப் போல, தன்னுடையச் செயலைத் தானே ரசித்துக் கொண்டவர் போல பெருமை போங்கச் சொன்னார்.
நானோ நன்றாக இருக்கும் இவருக்குள் ஏன் இப்படியொரு சைக்கோத்தனம் என்று கடிந்துக் கொண்டேன்.
அவருக்குள் ஏன் இப்படியொரு விநோத முகம் என்று அவர் மீதிருந்த மரியாதையெல்லாம் அதிருப்தியாக உருமாறிக்கொண்டது.
‘இப்படியெல்லாம் செய்து சின்னப் பையனை பயம் காட்டாதீங்கண்ணே!’ என்று என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை.
‘இப்போதெல்லாம் நன்றாகப் படிக்கிறான் அதனால் அதற்கெல்லாம் இனி அவசியமிருக்காது’ என்று மறுபடியும் சிரித்துக் கொண்டார்.
ஏதோ இவர் சூடு வைத்துக் கொண்டதால்தான் மகன் நன்றாக படிக்கிறான் என்பது அபத்தமா, எதார்த்தமா?. தன் ஆசையை, எண்ணத்தைத் திணித்தல் எப்படி எதார்த்தமாகும்? அந்த மிரட்டலால் அந்த இளம் நாற்றின் ஏதோ ஒரு கீற்று கலையப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் நன்றாக உணர்ந்தேன்.
எனக்குப் புதுமைப்பித்தனைப் பற்றி அவ்வளவாகத் தெரியாதுதான். ஆனால் அவர் ஒரு புரட்சி மற்றும் சீர்திருத்தவாத எழுத்தாளர் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன் என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள படித்த காலங்கள் உதவிகள் செய்திருக்கின்றன. மேலும் ஓரளவு கதிர் பகிர்ந்து கொண்ட சிறு குறிப்பிலும் விளங்கிக் கொள்ள முடிந்தது. கூடவே அவர் கடவுள் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதையும்! எப்படிப் பட்டவராகவே இருக்கட்டுமே நிச்சயம் இந்த மாதிரியான முட்டாள்த்தனங்களை மட்டும் அவர் எழுத்துகள் போதித்திருக்க வாய்ப்பேயில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
கம்பெனி வந்துவிட்டிருந்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்
Leave a reply
You must be logged in to post a comment.