பகுதி – 6
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
வண்டியின் சத்தம் கேட்டு காம்பவுண்டின் கதவு திறக்கப்பட்டது.
ஒரு சிறிய திடல் போலிருந்த அந்த முகப்பையடுத்து வயல்காட்டில் கீற்றால் வடிவமைக்கப்பட்ட கிராமப்புறக் கல்யாண மண்டபம் மாதிரி ஷீட்டால் வேயப்பட்ட வாட்டர் பிளான்ட் ஒரு பெரிய திரையரங்கம் போலவும் காட்சியளித்தது. அதனைச் சுற்றி ‘ப’ வடிவில் சில ஏக்கரில் கருத்தறுக்கப்பட்ட வயற்காடுகளாகப் பரவிக் கிடந்தன.
கதிர் இறங்க, நானும் ஒருவித திகிலோடு ஒரு புது அனுபவத்திற்கு தயாரானவன் போல புரிபடாத கலவையான மனநிலையோடு அவரைத் தொடர்ந்தபடி லக்கேஜோடு சென்றேன். வெளியில் நின்றுக் கொண்டிருந்த ஓரிருவர் எங்களைக் கண்டதும் தகவல் சொல்லச் செல்வது போல் உள்ளே விரைந்தனர்.
சில நொடிகளில் நடுத்தர உயரத்தில் ஒரு திடகாத்திரமான ஒரு பெரியவர் வெளிப்பட்டார். நன்றாக நரைத்த முடி. அடர்த்தியான புருவங்கள், கருப்பும் பழுப்பும் கலந்த கண்கள். தலைமுடி உச்சிக் கொண்டை போடாத திருவள்ளுவரைப் போல நீண்டு கிடந்தது.
சற்று பருத்த வயிறோடு கூடிய வலுவான உடல். ஆம் அப்போது அவர் சட்டையேதும் அணிந்திருக்கவில்லை. ஒரு பழைய வெள்ளை வேஷ்டி தோளில் சற்று நிறம் மங்கிய ஒரு வெள்ளைத் துண்டு. எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளும் வெளுத்த கலரில் ஒரு கருப்பண்ண சாமி என்று சொல்லும் அளவிற்கு மிகவும் கம்பீரமான தோற்றம்!
“நீதான் அந்த புதுப்பையனா?” என்னைக் கண்ணால் ஏறிட்ட அந்தக் குரலில் பிரியம் கலந்த ஒரு உரிமையிருந்தாலும் முதல் சந்திப்பிலேயே என்னை ஒருமையில் கேட்டது ஏனோ பிடிக்கவில்லை. ஒரு நிமிடம் தடுமாறினாலும், நமது தாத்தா போல நினைத்துக் கொள்வோம் என்று
சுதாரித்தபடி, “ஆமாம்” என்றேன்.
பார்வையாலேயே எடை போட்டார் அல்லது அப்படி நான் நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன் அந்த இடத்தை அடைந்தவுடன் எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கதிர் எங்கேயோ காணாமல் போயிருந்தார்.
“சுப்பாராவ்..!” பெரியவர் உரத்துக் குரல் கொடுக்க, இடுப்பை சற்று ஆட்டி ஆட்டி நடந்தபடி மெல்லிசான உடம்போடு ஒருவன் எதிரில் வந்து நின்றான். நான் அவனை சற்று வித்தியாசமாகப் பார்ப்பதை கவனித்துவிட்டு தனது மார்பைக் குலுக்கிக் கொண்டு லேசாகச் சிரித்தான். அதுவும் எனக்கு வித்தியாசமாகவே பட்டது.
அவனது அசைவுகள் ஒவ்வொன்றும் சற்று நளினம் பிடிப்பது போலிருந்தன. கண்களிலும் புருவங்களிலும் கண்மை தீட்டியது போலொரு ஈர்ப்பு. ஒரு நட்பான புன்னகையை அவன் மீது வீசினேன். அது அவனுக்கு மகிழ்ச்சித் தந்திருக்க வேண்டும்; அவனுடைய அபிநயம் இன்னும் தூக்கலாக வெளிப்பட்டது. ஒருவேளை அவன் வெட்கப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.
“இந்த பையன்தான் இனி பிளாண்ட்க்கு சூப்பர்வைசர்” என அந்தப் பெரியவர் என்னை அவனிடம் அறிமுகம் செய்து வைக்க, சற்றும் மதிக்காமல் “அதுதான் எனக்கு தெரியுமே!” என்று விரிந்த தாமரை போல முகம் மலரச் சொன்னான்.
“உனக்கு எப்படி தெரியும்?”
“சாமிதான் சொன்னாரே”
“மதி உன்னிடம் மறைக்காத விசயம்னு ஒண்ணு இருக்குமா? பொண்டாட்டிகிட்ட எல்லாம் சொல்றாரோ இல்லையோ உனக்கு எல்லாம் விசயமும் தெரிஞ்சிடுது” அவர் பேச்சில் சலிப்புத் தெரிந்தது. அதை ரசிப்பது போல் சுப்பாராவ் மறுபடியும் சிரித்தான்.
“மேனேஜர் எங்கே? காலைலேர்ந்து பாக்கலையே?” பெரியவரின் குரலில் கோபம் சீறிக்கொண்டிருந்தது.
“தெரியல. இன்னும் வரக்காணோம். ஒரு வேளை சத்தியவேடு போயிருக்கலாம்..!” என்றான் சற்று குரலைத் தாழ்த்தியபடி.
“ம்ம் இதுல வர்ற வருமானம் துரைக்கு பத்தாதுன்னு ஊர் ஊரா நெய் விக்க போய்ட்டானா? இவனெல்லாம் திருந்தவே மாட்டான்! காசு வாங்குறோமே நேரத்துக்கு வேலைக்கு வரணும்ங்கிற பொறுப்பும் இல்ல நெனப்பும் இல்ல!” புதியவனென்று ஒருவன் நான் அங்கே நின்று கொண்டிருக்கிறேனே.. என்றெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கண்டமேனிக்கு மேனேஜரைத் தெலுங்கில் திட்டிக் கொண்டிருந்தார்.
மேனேஜர் பெயர் சீதாராம் என்று ஓனர் கூறியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. இந்த பெரியவர் பெயர் ஆஞ்சநேயலு.
“சரி சரி அந்த தம்பிக்கு ரூமைக் காட்டு!” என்று தோளிலிருந்த துண்டை ஆவேசமாக உதறியவாறு பிளாண்ட்டை நோக்கிச் சென்றுவிட்டார்.
அவர் “தம்பி” என்று குறிப்பிட்டதில் முன் என்னை மரியாதைக் குறைவாக நடத்திவிட்டரே என்ற வருத்தங்கள் மறைந்துவிட்டன. அதன் வெளிப்பாடாய் ஒரு பலத்த முன்முறுவல் என்னிலிருந்து வெளிப்பட்டது.
“எந்த ஊரு சார் நீங்க?” சுப்பாராவ் கேட்டதற்கு பதில் சொன்னேன்.
அவன் என்னுடைய லக்கேஜை சுமந்துச் செல்வது சங்கடமாக இருந்தாலும் அவன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். அவன் நடையிலும், பேச்சிலும், பாவனைகளிலும் ஒரு பெண்மைத்தனம் குடி கொண்டிருந்தது. ஆனால் அது அதீதமாகவெல்லாம் வெளிப்பட்டது எனக் கூற மாட்டேன். பார்த்தால் கிட்டத்தட்ட அவனுக்கும் எனது வயதுதான் இருக்கும் என நம்பினேன்.
எனக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அறை அந்த அத்துவான வயற்காட்டிற்கு மத்தியில் ஒதுக்கப்பட்டிருந்தது. காய்ந்து வெடிப்புற்ற வயலை காலடிகளால் பொடித்துக் கொண்டுச் சென்றோம். சுப்பாராவ் ஏதாவது கேட்டுக் கொண்டே வந்தான். வயல் வெளிகளுக்கு மத்தியில் போர் செட் கொட்டகை இருக்குமே அது போன்ற அறையை நினைவூட்டியது நான் தங்கவிருக்கும் இடம்.
அதுபோல் இரண்டு அறைகள் ஒன்றையொன்று தொட்டுத் தொடுத்தபடி எழுப்பட்டிருந்தன. அதில் ஒன்றைத் திறந்து உள்ளே வாங்க சார் என்றான். சென்றேன். சிறிய அறையாக காணப்பட்டாலும் எல்லா வசதிகளுமிருந்தன.
எனது யோசனைகளை அவன் படித்திருக்க வேண்டும், “ஓனர் வந்தா இங்கேதான் தங்குவார்” என்றான்.
“ஓ!” என்றேன். அந்த ‘ஓ’வில் இனியும் இங்கேதான் தாங்குவாரா என்ற கேள்வியும் தோய்ந்திருந்தது.
“இப்போ அந்த ரூமை ரெடி பண்ணிட்டோம்! முன்னாடி பாக்யா சார் ஆரம்பத்தில் அங்கே தங்கிட்டு இருந்தார். இப்போ அவரு மெட்றாஸ்க்கே ஷிப்ட் ஆயிட்டதால அந்த ரூம் ஃப்ரீயாதான் கிடந்தது. இனி ஓனர் யூஸ் பண்ணிப்பார்” என்றான். அப்போதுதான் எனக்கு ஆசுவாசமாக இருந்தது. எனக்கு நண்பர்கள் எவ்வளவு பிடிக்குமோ தனிமையும் அவ்வளவு பிடிக்கும்.
இப்படி ஒரு அறையில் நானே நானாக தனியாக இருக்கத்தான் ரொம்ப நாள் ஆசைப்பட்டேன். அது அங்கே நிகழ்ந்திருந்ததைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். அந்த பூரிப்பில் அவனது கைகளை இழுத்து இறுகப்பற்றி “தேங்க்ஸ்!” என்றேன். அவன் உடல் கூசியவன் போல நாணத்தோடு சிரித்தபடி நெளிந்தான்.
“ஓனர் எப்ப வருவார்?”
“இன்னைக்கே வந்தாலும் வருவார்!” என்றவன் சற்று மூளையில் மின்னலடித்தவன் போல, “சார் இன்னைக்கு அவருக்கு ஆர்டர் இருக்கு! வர்றது கஷ்டம்தான். வெள்ளிக்கிழமை வந்திருவார்!” என்றான்.
“என்ன ஆர்டர்?”
“சார்.. அவரு சமையல்காரர் சார். நிறைய வி ஐ பி வீட்டு விசேசத்துக்கு எல்லாம் அவரைத்தான் புக் பண்ணுவாங்க!” அவனுடைய பேச்சில் ஒரு பெருமிதம் மிதந்தது.
“அப்படியா! அவர் சமையல்காரரா?” கேட்ட எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
“ஆமாம். இது கூட தெரியாம இருக்கீங்களே.. உங்களை யாரு செலெக்ட் பண்ணினது?” அது என்ன மாதிரியான கேள்வியென்று சட்டென்று அவன்மீது கோபம் வந்தாலும், அவன் செய்து வரும் சகாயங்கள் என்னைத் தணிய வைத்தன.
அவனை ஏறெடுத்து அமைதியாகப் பார்த்தேன்.
இதழ்களிலும் கண்களிலும் ஒரு ரகசிய புன்னகையை கசியவிட்டேன்.
அவன் கன்ன மேடுகளில் ஒளி குவிந்திருந்தது.
“என்ன சார் இப்புடி பாக்குறீங்க..?” என்றபடி நெளிந்தான்.
ஒன்றுமில்லை என்பது போல் மறுபடியும் புன்னகைத்து தலையாட்டினேன்.
ஆஞ்சநேயலு அவனைக் கூப்பிடும் சத்தம் கேட்டது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்