பகுதி – 7
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
பகுதி-6
அறை நன்றாக சுத்தச் செய்யப்பட்டிருந்ததால் என்னுடைய விஷயங்களை ஒழுங்குப்படுத்துவதில் சிரமங்களேதும் இருந்திருக்கவில்லை. மொஸைக் தரை ஃப்ரீஸரில் வைத்த பாலாடைக்கட்டியைப் போல சில்லிட்டு வழுக்கிக் கொண்டிருந்தது. அப்படியே கீழே அமர்ந்து எதையாவது வாசிக்க வேண்டும் போலிருந்தது.
விகடனில் வெளிவந்து கொண்டிருந்த எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசமும் ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் பாதி பகுதி படித்து முடித்திருந்த நாஜி கட்டுரையும் என்னை எப்போது வாசிப்பாய் எனக் கேட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதற்கெல்லாம் இது நேரமில்லை என்பது போல எஃப் எம் ஐ ஆன் செய்தேன்.
‘காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…’ என்று கேகே ரேடியோ மிர்ச்சியில் அடிவயிற்றிலிருந்து உருகிக் கொண்டிருந்தார்.
‘காக்க காக்க’ படத்தின் ‘உயிரின் உயிரே…’ பாடல் ஹிட் ஆனதுதான் போதும் அந்த சமயத்தில் வைத்துக்கொண்டிருந்த புதுப் பாடல்களிலெல்லாம் கேகேவே நிறைந்திருந்தார். இதோ அடுத்து ஒலிக்க ஆரம்பித்த \ஒரு வார்த்த பேச ஒரு வருசம் காத்திருந்தேன்…’ பாடலிலும் சாதனா சர்க்கத்தோடு ஜோடி போட்டுக் கொண்டிருந்தார்.
எனது உள்ளமோ அவரின் ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ பாடலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
“சார்…” சுப்பாராவ் வாசலில் நின்று இளித்துக் கொண்டிருந்தான். உள்ளே வா என்று கூப்பிட்டேன்.
“உங்களுக்காக ஸ்பெசலா கிளீன் பண்ணினேன், எப்படி இருக்கு?” என்று உரிமையோடு கேட்டான் ஏதோ நீண்ட நாள் பழகியவன் போல. அவனுடைய அந்த வெள்ளந்தியாக பேச்சும் சிரிப்பும் எனக்குப் பிடித்திருந்தது.
“தேங்க்ஸ்” என்றேன் புன்னகையுடன்.
அவன் கன்னங்கள் சிவந்துப் போவது போல் வெட்கப்பட்டான்.
“பெரியவர் உங்களைக் கூட்டிகிட்டு வரச் சொன்னார்”
இதை ஏன் முன்னமேச் சொல்லவில்லை என்பது போல் விறுவிறுவெனக் கிளம்பிச் சென்றேன்.
உடையிலிருந்து வெளிப்பட்ட பெர்ஃப்யூம் மணத்தை இன்ஹேலரை உறிவது போல தோளருகில் வந்து “ஸ்மெல் நல்லாருக்கு சார்!” என்றான்.
‘அடேய் நான் என்ன வேலையா போயிட்டு இருக்கேன்… நீ என்ன சொல்லிட்டு இருக்க?’ என்றுதான் சிரித்தபடி கேட்க நினைத்தேன் ஆனால் மறுபடியும் தேங்க்ஸ் என்றபடி புன்னகைத்தேன்.
“அட போங்க சார் எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு…” என்று சிரித்துக் கொண்டே நட்புடன் என் கைகளைப் பற்ற வந்தான். பெரியவர் எதிர்பட்டதும் கவனங்கள் அவர் மீது குவிந்து அவரை நோக்கி நடக்கலானோம்.
“என்ன சந்துரு ரூமெல்லாம் வசதியா இருக்கா?” அக்கறையாகக் கேட்டாலும் குரலில் சற்று அதிகாரத் தோரணையும் மிகுந்திருந்தது. ஆம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டினேன்.
அதீத மரியாதையை எதிர்பார்த்தாரோ என்னவோ சைகையால் தன்னைப் பின் தொடரும்படி பிளாண்ட்டிற்குள் கூட்டிச் சென்றார்.
காலணிகளை நுழைவாயிலில் விட்டுவிட்டு, அதையொட்டி சிறிய, நீள் வாக்கில் அமைக்கப்பட்டிருந்த கிருமி நாசினித் தொட்டியில் பாதங்களை முங்கியெடுத்தோம்.
அடர்ந்த வயலட் கலரில் மேங்கனீஸ் பெர்மாங்கனேட் கலக்கப்பட்ட அந்த தண்ணீர் கால்களுக்கு நீர்த்திரையிலேயே மருதாணி போட்டு விட்டிருந்தது. உள்ளே அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.
சுத்திகரிப்பதற்குத் தயார் நிலையில் க்ளோரினிட்டு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர்க் கிடங்கைக் காட்டினார். பெரிய பாதாள அறை போல காட்சியளித்தது. அதைத் தொடர்ந்து மூன்று விதமான ஃபில்டர்ஸ், மறுபடியும் நுண்ணுயிரிகளை மட்டுப்படுத்தும் ஓசோன் மற்றும் புற ஊதாக்கதிர்களின் வீச்சுப்படும் பகுதி. கடைசியாக கேனிங் என்று அங்கே நடக்கும் ஒவ்வொன்றையும் பெரியவர் சிறப்பாக விளக்கினார்.
நிச்சயம் படித்தவர் இல்லையென்றாலும் தனது அனுபவ அறிவைக் கொண்டே ஒரு அதிகாரிக்குரிய பரிணாமத்தைப் பூண்டிருந்தார். என்ன சட்டை இல்லாமல், வெறும் வேஷ்டி துண்டோடு உலவியதுதான் கொஞ்சம் பொருத்தமில்லாமல் தெரிந்தது. இன்னும் மேனேஜர் சீதாராம் வராதது குறித்து மீண்டும் சுப்பாராவிடம் கடிந்து கொண்டார். இதெல்லாம் சீதாராமுடைய வேலை என்பது போல் அவரது குரலில் சலிப்புத் தட்டியது.
க்ளீனிங் செக்சனுக்குச் சென்றோம். காலி கேன்களைச் சோப்பிட்டு நன்றாக அலசி, அலசி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். மற்ற கம்பெனிகளின் கேன்கள் கூட கணிசமாய் கலந்து குவிந்து கிடந்தன. அதைப் பற்றிக் கேட்டதற்கு அதெல்லாம் இங்கே சகஜமென்றும், அதன் மேல் நமது கம்பெனி ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் நீலி வாட்டர் ஆகிவிடும் என்றும் சொல்லிச் சிரித்தார்.
மேலும் இது போல் நமது கேன்களும் மற்ற கம்பனிகளுக்குச் சென்றியிருக்கக் கூடும் என்றும், இதெல்லாம் லைனில் காலி கேன்களை கலெக்சன் செய்யும்போது தவிர்க்க முடியாத நடைமுறைக் குழப்பங்கள் என்றும் சொல்லித் தெளிவுப் படுத்தினார். ஏன் முடியாது என எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
மற்ற கம்பெனிகளின் பெயர்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் மறைக்கும் அளவிற்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் போதும். அதே சமயம் அவர்களும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால், ஊற வைத்து சுரண்டி நீக்கிவிட்டு, பின்னர் நீலி பிராண்ட் ஸ்டிக்கரை ஒட்டி அதை மறைத்து ஒட்ட வேண்டும்.
சிரத்தைகள் என்று எதுவும் பெரிதாக இல்லாத உடனடி தீர்வுகளையே நாடிப் பின்பற்றியும் கொண்டிருந்தனர்.
நீலி என்ற பெயரில் வளைந்து வெல்ட் செய்யப்பட சூலத்தைப் பார்க்கிறேன்.
டீக்கடை குமார், மதி ஞாபகங்கள் வந்து நிறைகின்றன. பெரியவர் ஆபீஸ் என்று ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். கிட்டத்தட்ட போரூரில் கண்ட அதே செட்டப். அங்கே பாக்யா என்றால் இங்கே சீதாராம். மேனேஜருக்குரிய இருக்கை என்று ஒரு டேபிளை வெளியிலேயே போட்டு வைத்திருந்தார்கள்.
ஓனரின் அறைக்குள் சென்றோம். வாயிலில் மிகவும் காய்ந்த பூமாலையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதன் துகள்கள் எறும்பு ஊர்வது போல் வாசலில் வெவ்வேறு அளவில், வடிவத்தில் உதிர்ந்து கிடந்தன.
“க்ளீன் செய்யவில்லையா?” என்றேன்
“இந்த பூவுக்கு சீசன் முடிஞ்சு நாளாச்சு. அடுத்த பூப்பு வர இன்னும் ஆறேழு மாசமிருக்கு!”
நான் ஒன்றும் புரியாமல் அவரோடு அறைக்குள் நுழைந்தேன். கடவுள் படங்கள் அந்த ஆபிஸ் அளவிற்கு இல்லையென்றாலும் அதில் பாதியிருந்தன. பூச்சரங்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தாலும் வாடியும், காய்ந்தும் கிடந்தன. லைசென்ஸ், உணவு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் என அவைகளும் பிரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தன.
“கூச்சோ!” தெலுங்கில் என்னை அமரச் சொன்னது போல் அவர் உடல்மொழியை விளங்கி, பக்க வாட்டில் இடப்பட்டிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தோம்.
என்னைப் பற்றி, படிப்பை பற்றி பெரியவர் விசாரித்தார்.
ஓனரை ‘ரொம்ப நல்ல மனுசன்!’ என்று உள்ளம் இளகிய குரலில் மிகச் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தாலும், அதில் அவரது விசுவாசத்தின் அடர்த்தி கணிசமாய் செறிந்திருந்தது.
“எதுவும் சாப்பிடுகிறாயா?” என்றார். ஆனால் சுற்றி தண்ணீர் கேன்கள்தான் விரவிக் கிடந்தன.
அர்த்தம் புரிந்து ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.
“சரி வா சமையற்கட்டு வரை போய் பார்த்துவிட்டு வருவோம். மாதவன் என்ன செய்கிறான் என்று” என்றபடி எழுந்தார்.
மாதவன்தான் அங்கே சமைப்பவன் என்று விளங்கிக்கொண்டேன். தாகமாய் இருந்தாலும், தனியாக ஒரு பாட்டிலை உடைத்துக் குடிக்க மனம்
வரவில்லை. சமையற்கட்டிலேயே குடித்துக் கொள்ளலாமென அவரைத் தொடர்ந்தபடி சென்றேன். அறை வாசலில் காய்ந்து உதிர்ந்து கொண்டிருந்த அந்த பூவின் பொடிகள் பாதங்களை இம்முறையும் உறுத்தின.
“ஆமாம்.. இது என்ன பூ?”
“நிஷாகந்தி!” என்றார். முதன்முறையாக அந்த பூவின் பெயரை அங்கேதான் கேட்டேன்.
“உங்க தமிழல்ல ஆனந்த சயனப் பூ என்றும் சொல்வார்கள். பார் இதை வைத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் வாசம் அடிக்கிது பார்”
மோப்பம் பிடிப்பவன் போல காற்றை ரகசியமாய் உள்ளே இழுத்து இழுத்து முயற்சி செய்ததில் லேசான வாசனை உடலுக்குள் சென்றது அல்லது அப்படி உணர்ந்தேன்.
“ஆமா லேசா வாசனை வருது..!”
“ஆனா இது பூக்கும் ராத்திரில காடே மணப்பது போல இருக்குமாம்!”
“பேரு என்ன சொன்னீங்க?”
“நிஷாகந்தி!”
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்