பகுதி – 8
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
பகுதி-6
பகுதி-7
காரம் சற்று அதிகமென்றாலும் சாப்பிட்ட சாப்பாட்டில் நன்றாக உறக்கம் வந்தது. அதற்கேற்ப மதிய நேரத்தில் இரண்டு மணி நேரம் வரை ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என பெரியவர் கூற, அறையை நோக்கி நடந்தேன். கதிரறுக்கப்பட்ட தரையில் காய்ந்த சருகுகள் டூத் ப்ரெஷ் கற்றைகளைப் போல வழி நெடுக நட்டிக் கொண்டு நின்றிருந்தன.
ஓனர் அறைக்கதவை அப்போதுதான் கவனித்தேன் மஞ்சள் கும்பத்தில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருந்தது. ஒன்றிரெண்டு வேப்பிலைகள் படி ஓரங்களில் சிந்திக் கிடந்தன. எஸ்.ராவின் கதை விலாசத்தைப் படிக்க நினைத்தவன் அசதியாக இருந்ததால் படுத்ததும் தூங்கிவிட்டேன். எழுந்தபோது மணி ஐந்தாகியிருந்ததால் முகத்தைக் கழுவிக்கொண்டு பேக்டரி பக்கம் அரக்கப் பறக்க ஓடினேன்.
பெரியவரைக் காணவில்லை ஆனால் வேறொருவர் இருந்தார். அவர்தான் மேனேஜர் சீதாராம் என்று விளங்கிக் கொண்டேன். அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டு வரவேற்பது போல் நமஸ்காரம் சொன்னார். நானும் கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தேன்.
அங்கே அந்த பெரியவரும் மற்றவர்களும் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் போல காணப்பட்டாலும், சீதாராம் மட்டும் அச்சு அசல் ஆந்திரக்காரர் போல இருந்தார். அவரது பேச்சிலும் நிறையத் தெலுங்கு வாடையடித்தது. சாதுவாகத் தெரிந்தார். தன் வயதிற்கு என்னைச் சார் என்று அழைத்தார்.
கொஞ்ச நேரத்தில் 407 வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து நிறைய பாத்திர பண்டங்களை ஒன்று ஒன்றாக தரையில் இறக்கி வைத்தார்கள். பிறகு எல்லாவற்றையும் சமையற்கட்டு பக்கம் கொண்டு சென்றனர். நான் ஒன்றும் புரியாமல் மேனேஜரைப் பார்த்தேன்.
“நம்ம ஓனரு பெத்த குக்கூ!” ஓனர் பெரிய சமையற்கலை வல்லுநர் என்று சொல்ல வருகிறார் எனப் புரிந்து கொண்டேன். மேலும் விசாரித்ததில் ஓனர் விசேஷங்களுக்குப் பண்டாரி வேலை பார்ப்பவர் என்றும். மிச்சப்பட்ட உணவுகளும் மற்ற பொருட்களும் இங்கே திரும்பி வருவது வழக்கமென்றும் கூறினார்.
அவருடைய தெலுங்கு கலந்த தமிழ் சில வேளைகளில் கேட்கக் குதூகலமாகவும் சில நேரங்களில் நாராசமாகவும் எனக்குப்பட்டது. அதனால் அவர் பேசும் எல்லாவற்றிற்கும் ‘ம்ம்’ என்றே எதிர் வினையாற்றி உரையாடலைக் கடத்தினேன். அங்கு பொழுதுபோக்கு என்று ஒன்றுமே இல்லை. பேச்சு ஒன்றே துணை என்று அந்த புதிய சூழலுக்கு என்னைப் பழகிக் கொள்ள முயற்சி செய்தேன்.
காலையோ மாலையோ ஏன் இடைப்பட்ட வேளைகளில் கூட கிடைக்கும் சந்தர்பங்களில் டீ அருந்துவது எனக்கு வழக்கம் என்பதை விட பிடிக்கும். அங்குள்ள கிச்சனில் ஓனர் வரும் நேரங்களில் மட்டும் டீ, காபி விநியோகங்கள் அவருக்கு மட்டும் இருக்கும். மற்ற நேரங்களில் போட்டால் பெரியவர் கடிந்து கொள்வாராம். ஒரு திசையைக் காட்டி, அங்கு ஒரு பெட்டிக்கடையொன்று இருக்கிறது, அங்கே டீயும் கிடைக்கும் என்றார்கள், சென்றேன்.
அந்த டீ கடை என்னுடைய அறைக்கு சற்று பின்புறமாக இருந்தாலும் நடுவில் வேலியிருந்ததால் ரோட்டு வழியாகத்தான் செல்ல வேண்டியிருந்தது. ரோட்டு வழியில் போக வேண்டுமென்றால் பிரதான கேட்டைத் தாண்டியே செல்ல வேண்டும்.
சுற்றி வயல்காடுகளும், ரோட்டோரத்தில் அங்கங்கே மரங்களும் நின்றன. பாலைவனச் சோலை போல அந்த பெட்டிக்கடை! ஐந்து நிமிட நடையில் அங்கே அடைந்து விட்டேன்.
அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி இருந்தார். என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து புதிதாக இருக்கிறீர்களே யார் என்னவென்று என்னைப் பற்றிய விபரங்களைச் சேகரித்தார். அவரது கனிவான பேச்சு ஒரு இனம்புரியாத பிணைப்பை அவரிடம் ஏற்படுத்தியது. கூடவே வெகு நாள் கழித்து பெண்ணென இவரோடுதான் முதன்முறையாகப் பேசுகிறேன்.
கடையில் சோப்பு சீப்பு முதல் தின்பண்டங்கள், மளிகை சாமான்கள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களுமிருந்தன. அந்த பகுதிக்கே அந்த கடை ஒன்றுதான் ஆத்திர அவசத்திற்கு இருப்பது போலத் தோன்றிற்று.
இப்போது எனது கண்கள் டீ பாய்லரைத் தேடியது. அதற்கான முகாந்திரம் அந்த கடையில் தென்படவேயில்லை. ஆனால் அந்தக் கடையையொட்டியே அவரது வீடும் இருந்ததால். ஒரு வேளை அங்கிருந்து போட்டுக் கொண்டு வருவார்களோ என நினைத்துக் கொண்டிருந்தேன்.
“என்ன தம்பி வேணும்?” பேச்சில் கொஞ்சம் கூடத் தெலுங்கு கலக்காதிருந்தது நன்றாகவும் இருந்தது அதே சமயத்தில் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது.
“டீ இங்கே கிடைக்கும்னு சொன்னாங்களே…” என்று இழுத்தேன். அவர் சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்றார்.
பக்கவாட்டில் இருந்த நீண்ட மரக்கட்டிலிருந்து குனிந்து ஒரு ஃப்பிளாஸ்க்கை எடுத்தார். ஒரு சிறிய எவர்சில்வர் கப்பில் தொட்டால் விரல் படும் அளவிற்கு நிரப்பிக் கொடுத்தார். நீண்ட தவத்திற்கு கிட்டிய தேவாமிர்தம் போல பருகினேன். போட்டு நேரம் ஆகியிருக்க வேண்டும்; சுவை மாறியிருந்தது ஆனாலும் மோசமில்லை.
எவ்வளவு என்று கேட்டதற்கு ஒரு ரூபாய் என்றார்.
கொடுத்தேன்.
“இன்னைக்கு செவ்வாய் கிழமையாச்சே… உங்க முதலாளி வந்து விட்டாரா..?” அவரது பேச்சில் ஏதோ பூடகம் இருப்பது போல் தோன்றியது.
“இல்ல… இல்லயே..!” என்றேன் ஒன்றும் புரியாமல்.
“ம்…”
“…”
“சுப்பாராவ்ட்ட கேட்டா தெரியும்!”
“ம்ம்”
“வேறெதுவும் வேணுமா..?”
“வேண்டுமென்றால் வருகிறேன்” என்றேன் புன்னகைத்தவாறு.
“காலையில இங்கே டிபன் கூட கிடைக்கும் தம்பி!”
அப்படிச் சொன்னபோதே பசிப்பது போலிருந்தது. ‘சரிங்க பாட்டி’ என்று சொல்லிக் கொண்டே பாட்டிலிருந்த ப்ளம் கேக்கை காட்டி, எடுத்து தருமாறு சொன்னேன். மீண்டும் ஒரு டீ தேவைப்பட்டது. அருந்தினேன்.
அந்த ஏரியாவைப் பற்றி அவரிடமே விசாரித்தேன். பக்கத்தில் சத்தியவேட்டில் எல்லாம் கிடைக்குமெனச் சொன்னார். சைக்கிளில் கூட இங்கிருந்து சென்று வரலாம் என்று அதற்கான வழியையும் கைகாட்டினார். சரி என்றபடி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பிளான்ட் பக்கம் வந்தேன்.
சொல்லி வைத்தார் போல ஓனர் கார் நின்று கொண்டிருந்தது. வெளியாட்கள் ஒரு சிலர் பயபக்தியோடு கைகளை பவ்யமாகக் கட்டியபடி அவர் சொல்வதையெல்லாம் ‘சரி, செய்கிறோம்’ என்பது போல ஆமோதித்துக் கொண்டிருந்தனர். பெரியவரும் அங்கே தெரிந்தார். நான் அவர்களை நோக்கி நடக்கலானேன். என்னை கவனித்துவிட்டு ஓனரும் கை காட்டினார். நடையின் வேகம் கூடியது.
அருகே செல்லச் செல்ல வந்தவர்கள் தண்ணீருக்காகப் போர் போடுவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
“வழி காட்ட நீலியம்மா இருக்கிறாள்! அவள் எந்த இடத்தைக் காட்டுகிறாளோ அங்கேயே போர் போட்டுவிடலாம்! உங்க பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும்!” ஓனரின் குரல் இப்போது தெளிவாகக் கேட்டது. நான் அவர்களை நெருங்கவும் வந்தவர்கள் விடை பெற்றுக் கொள்ளவும் சரியாகயிருந்தது. அதனால் ‘வணக்கம் வணக்கம்’ என்று கைக்கூப்பியவர்களின் வணக்கத்தில் ஒன்று எனக்கும் கிடைத்தது.
“சந்துரு எப்டி இருக்கீங்க? வேலையெல்லாம் எப்டி போகுது?”
“நல்லாருக்கேன் சார், எல்லாம் ஓகே!” என்னுடைய பதிலில் பெரியவர் புன்னகைத்தார்.
“இவரைக் கைக்குள்ள போட்டுக்குங்க!” மதி பெரியவரைத்தான் அப்படி குறிப்பிட்டார். அவர் பெருமை பொங்குவது போலச் சிரித்தார். நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் நடுநிலையாகத் தலையாட்டி வைத்தேன்.
ஏதோ பூஜையைப் பற்றி பெரியவரிடம் பேச ஆரம்பித்தார். வழக்கம் போல எல்லாம் ரெடியாக உள்ளன என்று அவருக்கு பதில் சொன்னார். நான் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “ஒன்றுமில்லை சந்துரு, ஒரு சின்ன பூஜை.. செவ்வாய் கிழமையில வழக்கமா பண்றது. ஆமா சுப்பு எங்கே..?”
“சுப்பாராவ்..!” பெரியவரின் குரலுக்கு எங்கிருந்தோ ‘வருகிறேன்!’ என்று குரல் கொடுத்தான்.
அடுத்த ஒரு நிமிடத்தில் அவனும் அங்கே ஆஜர்.
ஓனரைக் கண்டதும் அவன் நளினம் கூடியிருந்தது. என்னை சுத்தமாக கண்டு கொள்ளாதது போல நடந்துகொண்டதும் எனக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்