அத்தியாயம்-6
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
“என்ன சார் . மோதற மாதிரி வந்தது நீங்க. ஆனா என்னை முறைக்கறீங்க. நான் என்ன திருடனா..?”
முத்துவுக்கு உள்ளூர உதறல் இருந்தது. அதை வெளிக் காட்டி கொள்ளாமலே பேசினான்.
“ம்ஹூம். நீ திருடனில்லே. கார் கண்ணாடிய உடைச்சவன் ” சொல்லிய படி பைக்கிலிருந்து இறங்கினார் ராஜ வேலு.
ஆஹா. கண்டுபிடிச்சிட்டாங்க போலிருக்கே. வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு எஸ்கேப் ஆகி விடலாமா..? இப்படித்தான் முத்து ஒரு கணம் நினைத்தான். பின் நாம ஏன் போகணும். எதிர்த்து நிற்போம் என்னதான் ஆகுதுனு பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு அவன் வந்த பொழுது, ஜீப் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய கான்ஸ்டபிள்கள் முத்துவை சூழ்ந்தனர். ஒருவர் அவனது பைக்கிலிருந்து சாவியை எடுத்து கொண்டார். இன்னொருவர் “ஜீப்ல ஏறு” என்றார் அதட்டலாக.
“எங்கே ஸ்டேசனுக்குத்தானே. நான் ஒண்ணும் அக்யூஸ்டு இல்ல. நான் என் பைக்கிலேயே வரேன் சாவியக் கொடுங்க”
“டேய் வாடா ” அதட்டலாக அவன் கழுத்தில் கை வைத்துத் தள்ளிய கான்ஸ்டபிள் ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏற்றினார்.
ஜீப் கிளம்பியது. பைக் சாவி வைத்திருந்த கான்ஸ்டபிளிடம் ராஜவேலு சொன்னார்.
“மதனுக்கு போன் பண்ணி தகவலை சொல்லி ஸ்டேஷன் வர சொல்லிட்டு பைக்கை எடுத்திட்டு ஸ்டேஷனுக்கு வந்துடுங்க”
கான்ஸ்டபிள் தலையாட்ட, சப் இன்ஸ்பெக்டர் ராஜ வேலு கிளம்பினார்.
*******
“இங்க பாரேன். உன்னோட அடுத்த படத்துக்கு நீ வாங்க போற சம்பளம் 10 கோடியாம். எனக்கு தெரியாம அக்ரிமெண்ட் எதுனா போட்டுட்டியா”
விக்கி செல்போனிலிருந்து நிமிராமலே சிரித்தபடி கேட்டான். மதன் லேப்டாப்பில் டைப் செய்வதை நிறுத்தினான்.
“அத சொல்றது யாரு”
“வேற யாரு. நம்ம யூ டியூபர்ஸ் தான்.”
“நாம ஒரு சினிமாவுக்கு கதை எழுதி முடிக்கிறதுக்குள்ள இவங்களா ஒரு கதை வசனம் எழுதி முடிச்சிடுவாங்க போலிருக்கே”
“அதை விட இன்னொரு ஸ்கூப் நியூஸ் ட்ரெண்ட் ஆகிட்டிருக்கு. பிரதீப்போட ரசிகர்கள் உன்னை வார்த்தைகளால குத்தி குதறிகிட்டிருக்காங்க”
“படத்துல சாதாரணமா வச்ச ஒரு டயலாக் அது. இத இவங்களே தன்னோட ஆளுக்கு தான் எழுதியிருக்கிறதா எப்படி எடுத்துகிறாங்க”
” ரசிகர்களே இத கண்டுக்காம கடந்து போக நினைச்சாலும் விட மாட்றாங்களே.
‘இந்த டயலாக் பிரதீப்பை தான் குறிக்கிறதா? ‘
‘மதனுக்கு அப்படி என்ன வன்மம் பிரதீப் மீது ‘ இப்படி தலைப்புகள்ல வீடியோக்கள் வந்திருக்கு”
மதன் சே என்று தலையில் அடித்து கொண்ட போது போன் ஒலித்தது. எடுத்து பேசிய விக்கி “இதோ வரோம் சார் “என்றவன் மதனிடம் சொன்னான்.
“கார் கண்ணாடிய உடைச்சவனை பிடிச்சிட்டாங்களாம். நம்மை வர சொல்றாங்க “
****
ஸ்டேஷனில் முத்து தரையில் உட்கார்ந்திருந்தான்.
கடுப்பாக இருந்தது. ‘இதே ஒரு செலிபிரிட்டி வீட்டு பையனா இருந்தா இப்படித்தான் உட்கார வச்சிருப்பாங்களா..?’ தன் ஏழ்மை மீது கோபப்பட்டான்.
எதிரே நாற்காலியில் வந்தமர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜவேலு “எழுந்திரிடா” என்று அதட்டவும் எழுந்தான்.
“கான்ஸ்டபிள் இவனைப் பத்தி விசாரிக்கச் சொன்னேனே. ரிப்போர்ட் எங்க..?”
“இதோ சார்” அவர் ரிப்போர்ட் நீட்ட, “படிய்யா” என்றார்.
“அப்பா குடிகாரர்… அம்மா தான் தினக்கூலிக்கு வேலைக்கு போய் சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்தறாங்க. இவன் காலேஜ்ல பெயிலாகி படிக்கறதை விட்டுட்டு வேலைக்குப் போறேன்னு சுத்திட்டிருக்கான். இன்ஸ்டாகிராம்ல ஆளு ரொம்ப பிசி.. நடிச்சு ரீல்ஸ் நிறையப் போட்டிட்டிருக்கான்.”
“எதுக்காகடா கார் கண்ணாடிய உடைச்சே..?”
“நான் தான் உடைச்சேனு எப்படி சொல்றீங்க.”
பிரம்பால் சுளீரென்று அடி விழுந்தது.
‘அம்மா’ என்று அலறினான்.
“சிசிடிவி சொல்லுது”
“நான் நம்ப முடியாது” என்றவுடன் அவர் கான்ஸ்டபிளைப் பார்க்க அவர் மீண்டும் அடித்தார். ஓரளவுக்கு மேல் அவனால் அடி தாங்க முடியவில்லை.
“ஆமாம். உடைச்சேன். என் காதலியைச் சினிமாவுல நடிக்க வைக்க வைக்கிறேன்னு அந்த மதன் சொன்னாரு. எனக்கு அது பிடிக்கல. அந்த கோபத்துல உடைச்சேன்.”
“உன் காதலி யாரு..?”
“அந்த வீட்டு வாட்ச்மேனோட பொண்ணு “
“அவளும் உன்னை காதலிக்கிறாளா..?”
“இல்லே. ஆனா கூடிய சீக்கிரம் காதலிப்பா”
இன்னொரு அடி விழுந்தது.
“ஒரு பொண்ணை அவ இஷ்டமில்லாம வற்புறுத்தறது பாலியல் சீண்டல் கேஸ் ஆகிடும். தண்டனை பற்றி தெரியுமா… தெரியாதா..?”
அவன் பதில் சொல்லாமல் நிற்க, அப்போது மதன் , விக்கி, மூர்த்தி மூவரும் உள்ளே வந்தார்கள்.
மூர்த்தி ‘சண்டாளா’ என்பது போல் அவனை பார்த்தார். அவரது பார்வையில் அனல் இருந்தது.
அவர்களை அமரச் சொன்ன ராஜவேலு டேபிள் ட்ராயரைத் திறந்து ஒரு பேப்பரை எடுத்து அவர்கள் முன்னே போட்டார். பிச்சைக்காரன் வேசத்தில் இருந்த முத்து, வேசம் கலைக்கும் முத்து , பைக்கில் கிளம்பும் முத்து என்று அதில் போட்டோக்கள் இருந்தது.
அவர்கள் அதை பார்த்து கொண்டிருக்க, ராஜவேலு “யாருக்கும் தெரியாமல் வேசம் போடுவானாம். சிசிடிவி முன்னாடி அந்த வேசத்தை கலைப்பானாம். முட்டாள்” என்று சிரித்தார். எல்லோரும் சிரித்தார்கள். முத்து கலங்கிய கண்களுடன் தலை குனிந்தான்.
அவனை இதுவரை விசாரித்ததை அவன் சொன்ன பதில்களை அவர்களிடம் ஒப்புவித்தார்.
“ஓ… உன்னை கேட்டுட்டு தான் நடிக்க வைக்கணுமோ. உனக்கு என்னப்பா அப்படி ஒரு உரிமை” விக்கி கேட்டான்.
“அவளோட காதலன் நான்.”
“வந்தேன். அடிக்கிற அடியில வாய் உடைஞ்சிடும்” மூர்த்தி அவன் வார்த்தைகளுக்குப் பதறி கத்தினார்.
“ம்” என்று ராஜவேலு அதட்டவே அமைதியான மூர்த்தி “என் பொண்ணு பிரியா ரொம்ப நல்ல பொண்ணு சார். கூசாம பொய் சொல்றான். இவனை பத்தி பேசறது கூட தனக்கு வெறுப்பா இருக்குனு சொல்லிட்டிருக்கு சார்.” என்றார் பரிதாபமாக.
“ரெண்டு நாள் என் கூட பழகச் சொல்லுங்க. வெறுப்பெல்லாம் விருப்பமாகிரும்.” முத்து சொன்ன அடுத்த நொடி அடுத்த அடி சுளீரென்று விழுந்தது. பற்களைக் கடித்து வலியை பொறுத்து கொள்ள முயற்சித்தான்.
விக்கி ” இங்க பாரு. நீ என்ன படிச்சிக்கே. பிரியா என்ன படிச்சிருக்கு. நீ அந்த பொண்ணு மேல ஆசைப்படலாமா..?”
“காதலுக்கு தான் படிப்பு , அந்தஸ்து, ஜாதி , மதம் எதுவுமே தடையில்லியே சார். உங்க சினிமால சொல்றத தான் சொல்றேன்.” முத்து கிண்டலாய் சொன்னான்.
அடுத்த அடி விழுந்தது.
“சினிமா ஏற்படுத்தியிருக்கும் சீரழிவு இது ” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் உடனே நாக்கை கடித்து கொண்டு மதனை பார்த்தார்.
“உண்மைய தான் சொல்றீங்க” சோகையாக சிரித்தான் மதன்.
“சரி கேஸ் எப்படி பைல் பண்ணலாம்”
“நாளைக்கு கல்யாணம் ஆக போற பொண்ணு. அதனால் பொண்ணு விசயத்தை இதுல உள்ள கொண்டு வர வேணாம்னு மூர்த்தி சொல்றாரு”
“அப்புறம் எப்படி இவனை டிமாண்ட் பண்றது?”
“திருட வந்திருக்கான். ஒண்ணும் கிடைக்காத்தால கார் கண்ணாடிய உடைச்சிட்டான்னு கேஸ் எழுதிக்கங்க”
“குற்றவாளி நானே உண்மைய சொல்றேன். நீங்க பொய் கேஸ் எழுதறீங்களா.. எப்படியும் என் பெயர் வெளியில வந்துடும். நான் பத்தரிகைகாரங்களை பார்க்கிறப்ப பொண்ணு விசயம் தான் இது. மூடி மறைக்கிறாங்க எங்க காதலை பிரிக்க பார்க்கிறாங்கனு சொல்வேன்.”
விடாப்பிடியாய் முத்து சொல்லவும் கான்ஸ்டபிள் அடிக்கக் கை ஓங்கினார்.
மதன் வேண்டாம் என்று சைகை செய்தான்.
எல்லோரும் முத்துவைத் திகைப்பாய் பார்க்க, அவர்களை லாக் செய்து விட்டோம் என்ற இறுமாப்பில் மிதப்பாக அவர்களைப் பார்த்தான்.
மதன் முத்துவை பார்த்து சிரித்து கொண்டே சொன்னான்.
“இங்க பாருப்பா. பிரதீப்போட ரசிகன் தானே நீ. என்மேல இருக்கிற ஆத்திரத்தில் என்னை தாக்க வந்து அது முடியாததால கார் கண்ணாடிய உடைச்சிட்டதா கேஸ் எழுத சொல்லிடறேன்.”
ராஜவேலுவிடம் திரும்பி சொன்னான்.
“விசயம் வெளியில் தெரிஞ்சதால் காதல் அது இதுனு இவன் திசை திருப்பி ஒரு பொண்ணு வாழ்க்கையச் சீரழிக்க பார்க்கிறான்னு எழுதிக்குங்க”
முத்து அதிர்ச்சியாய் மதனை பார்த்தான்.
“உள்ள வச்சி லாடம் கட்ட வேண்டிய கேஸ் இவன்,” ராஜவேலு சொன்னார்.
” நீங்க என்னவேண்ணா அடிங்க. என் காதலிய ஆசை தீர பார்க்கிறதுக்கு கண்களை மட்டும் விட்டுடுங்க”
” சீ” என்று அதட்டிய ராஜவேலு “அவனை அழைச்சிட்டு போங்க” என்றவர் மதனிடம் கேட்டார்.
“இப்படியே கேஸ் எழுதிடலாமா..?”
முத்து அந்த அறையிலிருந்து செல்லும் வரை காத்திருந்தவன்,
“சின்ன பையன். லைப் வீணாகிட வேண்டாம். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பாருங்க. அவன் ஒத்து வரலைனா இதான் கேஸ்” என்றபடி எழுந்தான் மதன்.
“என் பையன் தப்பு பண்ற ஆளு இல்லியே” முத்துவின் அம்மா கத்தி அழுத படி முத்துவின் நண்பர்களுடன் உள்ளே புயலாய் வந்து கொண்டிருந்தாள்.
அதே நேரம், எஸ்டேட் பங்களாவின் போர்ட்டிகோவில் அந்த விலை உயர்ந்த கார் வந்து நின்றது.
மதனின் அப்பா விஜயராகவன் தன் மனைவி விமலாவுடன் காரிலிருந்து இறங்கினார்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.