பகுதி – 9
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1 : பகுதி-2 : பகுதி-3 : பகுதி-4
பகுதி-5 : பகுதி-6 : பகுதி-7 : பகுதி-8
*********
அந்தி வானத்தின் ஆரஞ்சு வண்ணம் சிவக்க ஆரம்பித்தது. மதி தனது அறைக்குள் செல்லாமல் பிளாண்டின் முன் வராண்டாவிலேயே ஆசுவாசமாக அமர்ந்தார். சட்டையின் முதல் இரண்டு பட்டன்களைக் கழட்டிவிட்டபடி தனது இரு கரங்களையும் பின்னால் துடுப்புகள் போல நட்டுக்கொண்டார்.
தன் மீது மோதி வீசிக் கொண்டிருந்த அந்த இளம் குளிர்க்காற்றின் தழுவலை ஆத்மார்த்தமாக அவர் அனுபவித்து ரசிப்பது போல் உணர்ந்தேன். அந்த இளைப்பாறலில் முதலாளி என்ற கனமெல்லாம் தளர்ந்து புத்துயிர் பெற்றது போல் ஆனந்தப் புன்னகை அவர் முகத்தில் நிறைந்து குடிக்கொண்டிருந்தது.
அவர் எதிரில் யாரோ இன்னொருவர் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருப்பது போல பாவனைகளைத் தன் விழியசைவிலும் உதட்டுச் சிரிப்பிலும் காட்டினார். அக்கணம் ஒருவித குழப்பத்தோடு அவரை விநோதமாகப் பார்க்க ஆரம்பித்தேன்.
பெரியவர் ஆஞ்சநேயலு பிளான்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களையடுத்து, பூஜைக்கான ஏற்பாடுகளை எப்போதும் போல சிறப்பாகச் செய்து முடித்திருப்பதாகக் கூற ஆரம்பித்தார். கழுத்தில் போட்டிருந்த கருங்காலி மாலையை மெல்லப் பற்றியவராக மதி ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
அனைவருக்கும் டீ கொண்டுவரப்பட்டது.
மதி தனது நினைவுலகத்திலிருந்து நிகழ்காலத்திற்கு அப்போதுதான் திரும்பியது போல் தெரிந்தது. என்னிடம் எல்லாம் வசதியாக உள்ளனவா என்று ஒவ்வொன்றையும் கேட்டறிந்துக் கொண்டார். எதுவும் குறைகள் அல்லது பிரச்சனைகள் உள்ளதென்றால் தெரிவிக்கவுமென்றார்.
ஒரே நாளில் என்னத்தை நான் சொல்வது. இதுவரை எல்லாம் சரியாகவே உள்ளது என்றேன். சந்தோசம் என்றார். பெரியவர் ஆஞ்சநேயலு ‘மதி மிகவும் நல்ல மனுசன், நீ விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்!’ என என்னை அறிவுறுத்துவது போல் பேசவும், எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று நினைத்தவனாக ஒரு கலவையான ஒப்புதலோடு புன்னகைத்தேன்.
இரவு சாப்பாடு என்று அன்று மதி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. எட்டு மணிவாக்கில் பழங்கள் தட்டு தட்டாக அவர் அறை பக்கம் கொண்டு சென்றனர். இரண்டு மூன்று செவ்வந்தி மாலைகளும் அந்த நேரத்தில் தருவிக்கப்பட்டன.
பூஜை நடக்கும் நேரத்தில் அங்கே எல்லோருக்கும் அனுமதியில்லை என்று கேள்விப்பட்டிருந்ததால் நானாகச் செல்லும் முயற்சிகளில் இறங்கவில்லை. அவரும் என்னை அழைக்கவில்லை; எனக்கும் தோன்றவில்லை.
மிர்ச்சி பண்பலையில் ‘தொட்டு தொட்டு என்னை வெற்றுக்களி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ…’வில் ஆழ்ந்து, திளைத்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அப்படியொரு காதல் மலர்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. பக்கத்து அறையிலிருந்து பூஜை செய்யும் சத்தங்கள் இன்னொரு அலைவரிசை எஃப் எம் போல ஒலித்துக் கொண்டிருந்தது.
மணி பத்து.
மெல்லக் கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.
ஜில்லெனக் குளிர்ந்தது.
வானமெங்கும் நட்சத்திரங்கள் வேறு தேச வீடுகளின் விளக்குகள் போல ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த பரந்த இடத்தைச் சுற்றி வேலியோடு வேலியாக நின்று கொண்டிருந்த மரங்கள் இரவின் நிழலில் போர்வையைப் போர்த்தி உறங்குவது போல் காட்சியளித்தன.
மதியின் அறை தாழிடப்பட்டிருந்தாலும் கதவிடுகளிருந்து விளக்கு மற்றும் தீபங்களின் வெளிச்சமும் கற்பூரத்தின் வாசமும் கசிந்து கொண்டிருந்தன. எனக்கு எதிரிலிருந்த பிளாண்டில் எந்தச் சத்தங்களும் கேட்கவில்லை. அன்றிரவு வேலை நிறுத்தப்பட்டிருந்தது.
திரும்பவும் என் கவனம் பூஜை நடந்து கொண்டிருக்கும் அறையின் கதவுகளின் பக்கமாய் முட்டிக் கொண்டு நின்றன. ஸ்வஸ்திக் சின்னம் ஒரு கணம் காத்தாடி போல சுழன்றது உண்மையா பொய்யா என தெளிவுகொள்ளா வண்ணம் என் மண்டையை ஏதோ கவ்விக் கொண்டது போல உணர்ந்தேன்.
அந்த வேதனையோடே அங்கே என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது என்று பார்க்க யாரோ என்னைப் பிடித்து அழைத்துச் செல்வது போல் கதவருகே மெல்லச் சென்றேன். யாராவது கதவைத் திறப்பார்களா? சட்டென திறந்து விட்டால் என்ன செய்வது என்ற பதற்றங்களும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன. பனிக்காற்றிக்கு தலைபாரம் கூடிக்கொண்டே போவதே உணர்ந்தேன்.
உள்ளே மதியின் ஓங்காரங்களே அதிகம் கேட்டன. என்னுள் மர்மமாக, திகிலாக ஏதோ நிகழ்ந்துக் கொண்டிருந்தது. முற்றிலும் புதிய உலகினில் பிரவேசிப்பது போல, என் உடல் மேலே பறப்பது போல ஏதேதோ மாயைகள் தானாகவே தோன்றின.
இதைப்பற்றிதான் டீக்கடை குமார் அன்று ஏதும் சொல்ல வந்திருப்பாரோ என்ற சிந்தனைகள், மெதுவாக ஓடும் பேருந்தில் விலகிச் செல்லும் மழைக்கால விளக்குகள் போல தெளிவற்று பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன
மதியைத் தவிர அங்கே ஆஞ்சநேயலு மற்றும் சுப்பாராவ் இருந்தாலும் வெளியிலிருந்தும் ஆட்கள் சிலர் வந்திருந்தனர். மொத்தம் ஐந்து பேர். அதில் ஒருவர் பார்க்க கோயில் பூசாரி போல தெரிந்தார். அந்த அறைக்குள் வேறொரு உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்.
எனக்கு மயக்கம் வருவது போல் ஒரு வாசனை சொருகியது.
உடலைச் சிலுப்பிக் கொண்டு திரும்பவும் சுற்றும் முற்றும் பார்த்தேன். வெப்பத்திற்காக சற்று வயல் பக்கமாக ஓடி வர நினைத்தவன் ஒரே இருட்டாக இருந்ததால் அந்த முயற்சிகளைக் கைவிட்டேன். அந்த வாடையோ துரத்திக் கொண்டேயிருந்தது. நல்ல அடர்ந்த மணம்!
பிரக்ஞைகள் முற்றிலுமாக சூனியமாகுமுன் யாரையாவது அழைக்க வேண்டும் அல்லது எனது அறைக்குள் சென்றுவிட வேண்டும் போலிருந்தது. என்னைத் திசை திருப்பிக் கொள்ள இதற்கு நேரான டிரைவர் கதிரைப் பற்றிய சிந்தனைகளை வலியத் தட்டி எழுப்பலானேன்.
இந்நேரம் அவர் என் பக்கத்திலிருந்தால் ஏதாவது உளறிக் கொண்டிருந்திருப்பார். கதிரைப் போலவே மதியும் தனது சிந்தனைகளிலும் செயல்களிலும் நேரெதிராக இருந்துவிட்டால் என்ன செய்வது? அவரை நம்புபவரெல்லாம் பாவமல்லவா?
இங்கே மதியை அருள்வாக்கு சொல்லும் ஒரு அவதாரம் போல பேசிக்கொள்கிறார்கள். இங்கே எங்கேயும் தண்ணீருக்காகப் போர் போட வேண்டுமென்றால் இங்குள்ள மக்கள் இவரைத்தான் அணுகுவார்களாம். அதுவும் இந்த நிலத்தில் இவர் வாட்டர் கம்பெனி ஆரம்பித்த உடன் இவர் வாக்கு பலிதத்திற்குப் பக்தர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்றே சொல்லலாம்.
ஒரு பக்கம் சமையல் வல்லுனர் மறுபக்கம் இந்த சாமியார் வேடம் இடைப்பட்ட நேரங்களில் வெள்ளையும் சொள்ளையுமாக நடைபோடும் பண்புமிகு வாட்டர் கம்பெனி முதலாளி. எல்லாவற்றையும் இணைக்கும் அந்த புள்ளிகளில் ரகசியங்கள் அல்லது சுவாரசியமான சம்பவங்கள் ஏதும் ஒளிந்திருக்க கூடும் என நம்பினேன். யார் கண்டா எல்லாம் பொய்யும் புரட்டாகவும் கூட இருக்கலாம்.
மணிச்சத்தம் மற்றும் மதியின் ஓங்காரங்கள் எல்லாம் ஓய்ந்து ஐந்து பத்து நிமிடங்கள் உள்ளே என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியாத வண்ணம் ஒரு நீண்ட அமைதி நிலவத் தொடங்கியது. ஒரு ஆர்வத்தோடு அவர்களின் வாசற்கதவுகளேயே முன்புபோல் கவனிக்க ஆரம்பித்தேன். காலில் ஏதோ ஊறிச் செல்வது போல உணர, சட்டென உதறிக் கொண்டு ஆவெனக் கத்தினேன். ஆமாம் அது பாம்பு!
என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடன் கதவுகள் வேகமாய் திறக்கப்பட்டன. ஏற்கனவே அதிர்ச்சியில் உறைந்திருந்த நான் மதியை புடவைக்கட்டிய கோலத்தில் காண நேர்ந்ததில் மேலும் அதிர்ச்சிக்குள்ளானேன். அவர் செல்லும் முன்பு சரியாக கவனித்தேனா இல்லையா என தெரியவில்லை. இப்போது கண்டபோது அவரது மீசை கூட மழிக்கப்பட்டிருந்தது.
மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். அவரது வழக்கமான கனிவு மருந்திற்கும் கூட முகத்தில் தென்படவில்லை. தலையில் ராஜாகளின் தலைப்பாகை போல ஒன்றை சூடிக்கொண்டிருந்தார். அதிலிருந்து எப்போதும் வழித்து சீவப்பட்டிருக்கும் அடர்ந்த முடி பாப் கட் போல தொங்கிக் கொண்டிருந்தது. இதில் மாலைகளும் சேர்ந்து மதியை மாடர்ன் அம்மனை போல உருமாற்றிவிட்டிருந்தது.
ஏற்கனவே பயந்தும் ஒதுங்கியும் போயிருந்த நான் அந்த நேரத்தில் மதியும் அந்த பூசாரியும் என்னைப் பார்த்த உக்கிரத்தில் திகிலடைந்து உள்ளாடைகள் நனையும் அளவிற்கு உடல் முற்றிலும் வேர்த்துவிட்டது. சுப்பாராவ் என்னருகில் வந்து ‘சார் சார்’ என்று விளிப்பது போல் கேட்கிறது ஆனால் என் உடல் சோர்ந்து அங்கேயே விழுந்து விட்டேன்.
பெரியவர் என்னை கைத்தாங்கலாக அமர வைத்ததை அவரின் திரண்ட உள்ளங்கைகள் பற்றியதில் உணர்ந்தேன். அருந்த தண்ணீர் கொடுத்தார்கள். ஜவ்வாது மற்றும் பூக்களின் வாசம் என்னை மேலும் மயக்கமுறச் செய்வது போல், பெண் கோலத்தில் என்னருகே மதி அமர்ந்திருந்தார்.
அந்த பூசாரியின் முகத்தில் ஏதோ ஓரு ஏமாற்றம் குடி கொண்டிருந்தது. என்னால் எதுவும் இடையூறுகள் ஏற்பட்டு விட்டனவோ என அரைகுறை நிதானத்தோடிருந்த அந்த நிலையிலும் பயப்பட்டேன்.
என்னைச் சுற்றி அவர்களெல்லாம் அமர்ந்திருந்தது, ஏதோ நாடக ஒப்பனை கொட்டகைக்குள் நான் நுழைந்து விட்டது போலிருந்தது.
“என்னாச்சு?”
மதியின் குரல் இவ்வளவு மூர்க்கமாக கூட இருக்குமா என அதிர்ச்சியடைந்தேன். நிலை குழைந்தேன்.
நா வறண்டு வார்த்தைகள் ஏதும் வரவில்லை.
“என்னாச்சுப்பா?” பெரியவர் கனிவோடுக் கேட்டார். நடந்ததைச் சொன்னேன்.
அவ்வளவுதானா என்று மதி எழுந்து நின்றார்.
ஏதோ என் முன் திடீர் சிலையொன்று முளைத்தது போல் திடுக்கிட்டு உடலை பின்வாங்கினேன்.
மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்