பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-7

ஆர்.வி.சரவணன்


தன்,  மூர்த்தி, விக்கி, ராஜவேலு  என்று அங்கிருந்த எல்லோருமே அந்த பெண்மணியை கவனித்தார்கள்.

ஏழ்மையான நிலையிலிருக்கும் தாய்க்கு இப்படி ஒரு பகட்டான பிள்ளையா..?

முத்துவின் அம்மா “என் பிள்ளையோட வாழ்க்கைய அழிக்கிறதுக்கு இப்படி எல்லாரும் ஒண்ணு  கூடிருக்கீங்களே..?” என்று அரற்றவும், ‘கத்தாதே’ என்று ஒரு பெண் கான்ஸ்டபிள் அதட்ட, ராஜவேலு சொன்னார்.

“உன் பிள்ளையக் காப்பாத்தறதுக்குத்தான் தலையைப் பிச்சுகிட்டிருக்கோம். உன் பிள்ளை தப்புக்கு மேல தப்பு பண்ணது மட்டுமில்லாம அதைத் தப்புன்னே தெரியாத  மாதிரி இருக்கான்.”

“காதல் பண்றது தப்பாய்யா..?”

” ஓ இப்படிச் சொல்லித்தான் இவங்களை கூட்டிட்டு வந்தீங்களாடா. உள்ள போட்டு லாடம் கட்டிருவேன்”

அந்தப் பெண்மணியின் பின்னால் நின்றிருந்த நண்பர்களை பார்த்து கத்தினார்.
அவர்கள் தலை குனிய “இவனுங்க பேச்சை நம்பி வந்திருக்கியேம்மா நீ” என்றவர் நடநத விசயங்களை அவளிடம் விளக்கமாக சொல்லவே, கோபம் குறைந்தவளான அவள் மூர்த்தியைப் பார்த்து, “நீங்க தான் பொண்ணோட அப்பாவா. என் பிள்ளை உங்க பொண்ணை சுத்துனதாவே இருக்கட்டும் . என் கிட்ட சொன்னா நான் கண்டிக்கிறேன். இத போய் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுக்கணுமா..?” என்றாள்.

மூர்த்தி ” ஒரு பொண்ணை பெத்திருந்தா என் கஷ்டம் தெரியும்”  என்று ஆரம்பிக்க , இடை மறித்த  மதன், “பிரச்சனை அது இல்லம்மா. என் கார் கண்ணாடிய உங்க பிள்ளை உடைச்சிட்டான்.அதுக்கு நான் கொடுத்த கேஸ் தான் இது. கூப்பிட்டு விசாரிக்கிறப்ப தான் காதல் அது இது னு ஏதேதோ சொல்றான்”.

நிஜம் தானா எனபதை உறுதிப்படுத்தி கொள்ள அவள் கூட வந்திருந்த நண்பர்களை திரும்பி பார்த்தாள்.

அவர்கள் தலையாட்ட அவளது குரல்.மேலும் அடங்கியது.

“போலீஸ் ஸ்டேசனுக்கு உங்க நண்பனை கொண்டு வந்துட்டோம்னு உடனே அந்த அம்மாவை போய் அழைச்சிட்டு வந்தீங்க சரி. இது போல் அவன் தப்பு பண்றப்பவும் இதே மாதிரி அவங்க அம்மா கிட்ட போய் சொல்லி ஏன் எச்சரிக்கை பண்ணல?”

நண்பர்கள் குனிந்த தலை நிமிராமல் நின்றனர்.

.”திருட்டு கேஸ் எல்லாம்  வேணாம் சார். என் பிள்ளை பேரே கெட்டு போயிடும்”

“பொண்ணு கேஸ்னு எழுதினா அவன் வாழ்க்கையே வீணாகிடும்மா.”

அந்த பெண்மணி  கெஞ்சினாள். “என் பிள்ளைய விட்டுடுங்க. அவன் இனிமே உங்க கிட்ட குறுக்கிடாம நான் பார்த்துக்கிறேன்.”

“இங்க பாரும்மா. கேஸ் எழுத வேணாம் விட்டுடுங்கனு நான் சொல்லிட்டேன் . ஆனா இனிமே அவன் அந்த பொண்ணு பின்னாடி சுத்த கூடாது.  அந்த கன்டிசனுக்கு அவன் ஒத்துக்க மாட்டேங்கிறான்”

“நான் சொல்றேன்யா”

“உன் பேரு என்னம்மா..?”

“கமலா”

“அவன் கிட்ட அழைச்சிட்டு போங்கய்யா”  ராஜவேலு சொல்ல, பெண் கான்ஸ்டபிள் அவளை அழைத்து சென்றார்.

“எதுக்கும் உங்க பொண்ணு கிட்டேயும் ஒரு ஸ்டேட் மெண்ட் வாங்கிக்கலாம்னு எனக்கு தோணுது.”

” சார்.நான் தான் சொல்றேனே. என் பொண்ணு இவனை பார்த்தாலே எரிச்சலாகுதுனு”

“அது மட்டும் வச்சி பிரச்னைய போலீஸ்காரன் முடிச்சிட முடியாதுங்க”

” சார். நான் தான் திருட்டு கேஸ்னு எழுதுங்கனு சொல்லிட்டேனே. இதில் எப்படி அந்த பொண்ணை கொண்டு வர முடியும்..?”

ராஜவேலு யோசித்த படி ” அந்த பையன் ஒப்புக்கிறதுல தான் இருக்கு ” என்றார்.

அந்த கமலா வந்தாள். கூடவே முத்துவும்.

“ஒத்துக்கிட்டான்யா. விட்டுடுங்கய்யா”

“என்னடா. இனிமே அந்த பொண்ணு இருக்கிற பக்கமே நீ வர கூடாது.சரியா..?”

முத்து அமைதியாக நிற்க, “சொல்லேன்டா ” அந்த பெண்மணி  கத்தினாள்.

முத்து நிமிர்ந்தான்.

” சரி சார்.”

“நான் சொன்ன மாதிரி சொல்லு”

சொன்னான்.

“கான்ஸ்டபிள் அவன் கிட்ட கைப்பட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிடுங்க. இந்த அம்மா கிட்டேயும் எழுதி வாங்கிடுங்க”

“ரொம்ப நன்றி தம்பி.  அவங்கப்பா குடிகாரன். என் ஒருத்தி சம்பாத்தியத்துலதான் குடும்பமே ஓடுது. இவன் கொஞ்சம் சரியா இருந்தான்னா எனக்கு நல்லாருக்கும். ஆனா கஷ்டத்தை  தான் கொடுக்கிறான்” அழுதாள்.

“வளர்க்கிற விதம் தான் காரணம்”

” தினக்கூலி வேலைக்கு போறேன்யா. நான் எங்க வளர்த்தேன். அதுவா இப்படி வளர்ந்து நிக்குது”

” தினக்கூலி வேலைக்கு போறேன்றே. ஒரு லட்ச ரூபாய் பைக் வாங்கி குடுத்திருக்கே”

” நான் வாங்கி குடுக்கலைய்யா. மாச தவணைல கடன் போட்டு அவனா வாங்கிகிட்டான். இப்ப நான் கஷ்டப்பட்டு  கட்டிட்டிருக்கேன்.”

“சரிம்மா . பையனை ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க. நான் புத்திமதி சொல்றேன். உங்களுக்கும் எதுனா வேலை போட்டு கொடுக்கிறேன்.”  என்ற படி எழுந்தான் மதன்.

விக்கி, மூர்த்தியும்  எழுந்தார்கள்.

“ரொம்ப நன்றிய்யா  ” கையெடுத்து கும்பிட்டாள்.

” வரேன் சார். ரொம்ப நன்றி”  ராஜவேலுவிடம் கைகுலுக்கி விடைபெற்ற போது கவனித்தான். 

கான்ஸ்டபிள் சொல்வதை எழுதி கொண்டிருந்த முத்துவின்  கண்களிலிருந்து கண்ணீர் மேஜையில் வீழ்ந்து கொண்டிருக்க, மேஜையையும் கண்களையும் ஒரு சேர கர்ச்சீப்பால் துடைத்து கொண்டான்.

காரில் ஏறி கிளம்பினார்கள்.

சில விநாடி மௌனத்தில் கரைய மூர்த்தி தயக்கமாய் கேட்டார்.

“இனியும் பிரச்னை வராதுல்ல  தம்பி.  அவன் வார்த்தைல சொன்னத அவன் கண்ணு சொல்லல”

“வராதுன்னு தான்  நினைக்கிறேன்.. கூல்”

“என்னடா அவரைப் பயமுறுத்தறே..?”

“பகை, நெருப்பு இத வந்து மிச்சம் வைக்கவே கூடாதும்பாங்க. இந்த காதல்ங்கிற வஸ்துவும் அந்த மாதிரி தான்.அதனால தான் அந்த பிள்ளைய அழைச்சிட்டு வாங்க புத்திமதி சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.”

” நீ ஒரு டைரக்டர். கதை டிஸ்கசன் பண்ண வந்திருக்கே. ஞாபகம் இருக்கட்டும்”

” டேய் மூர்த்திக்கு ஒரு பிரச்னை வர்றப்ப எப்படிடா விட முடியும்?”

“தம்பி.  பொண்ணு காதலிக்கலைனா இந்த பசங்க கத்தியால குத்தி கொன்னுடறாங்க. இல்ல ஆசிட் அடிச்சிடறாங்க. தினம் நியூஸ்ல பார்க்கிறேன். அதான் கவலையா இருக்கு”

மதன் காரை நிறுத்தினான்.

” எங்களுக்கு  சொத்துனு எதுவும் கிடையாது தம்பி. என் பொண்ணுதான் எங்க சொத்து. ஒரே பொண்ணு தம்பி . அது கல்யாணம் பண்ணி நல்லாயிருக்கறத பார்க்கணும்னு பெத்தவங்களுக்கு ஆசை  இருக்காதா. இப்படி   படுத்தி எடுக்கிறான்களே”   அழுதார்.

மதன் அவர் முதுகில் கை வைத்து ஆதரவாய் தடவினான்.

“நான் இருக்கேன். என்னை மீறி  உங்க பொண்ணு கிட்ட அவன் எப்படி நெருங்கறான்னு பார்க்கிறேன்” 

“24 மணி நேரம் அந்த பொண்ணு  கூட நாம இருக்க முடியுமா..? அதத்தான் அவர் சொல்றார்.”

மதன் விக்கி  சொல்வதில் இருந்த நியாயத்தை உணர்ந்து அமைதி காத்தான்.

ரோட்டில் மாலை நேரமாதலால் ஸ்கூல் விட்டு அலுவலகம் விட்டு மக்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

“சரி. நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. பிரச்னை தீர்ந்திடும்”

“ஆமாம்  தம்பி. நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணத்தை பண்ணி கொடுத்திட வேண்டியது தான்.”

விக்கி காலரை தூக்கி விட்டு கொண்டே சொன்னான்.

“அவசரம் காட்டாதீங்க. கிளியை வளர்த்து பூனை கையில் குடுத்திடற மாதிரி ஆகிட கூடாது.”

” ஏற்கனவே  ஒரு ஜாதகம் வந்திருந்துச்சு. மாப்பிள்ளை துபாய்ல வேலை பார்க்கிறாரு. நல்ல குடும்பம். நல்ல சம்பளம். பொண்ணு நல்லாருக்குதுனு அவங்களே கேட்டாங்க. பொண்ணை அவ்வளவு தூரத்துல கொண்டு போய் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமான்னு யோசிச்சு வேணாம்னு விட்டுட்டேன் . இப்ப அந்த  ஜாதகத்தை எடுக்கலாம்னு தோணுது. பிரியா கல்யாணம் பண்ணிப் பாரின் போய் செட்டில் ஆகிடுச்சுன்னா இவனுங்க தொல்லை இருக்காதுல்ல. அதான் சரி.”

“மாப்பிள்ளைய பத்தி நல்லா விசாரிச்சிக்குங்க.” விக்கி தவிப்பாய் சொன்னான்.

“நல்ல பையன் தான் தம்பி”

இப்போது அவர் சுறுசுறுப்பாகி விட்டார் என்பது அவர் வார்த்தைகளிலே தெரிந்தது.  குழப்பத்திலருந்து மீண்டு வந்தவரை போலிருந்தார்.

மதன் மீண்டும் காரை கிளப்ப,  மூர்த்தியின் செல்  போன் அடித்தது.

“அப்படியா ..!? இதோ … வரேன்…”   பரபரப்பாய் பேசினார்.

“என்னாச்சு..?”

“தம்பி . அப்பா அம்மா வந்திருக்காங்ககலாம். செக்யூரிட்டி  போன் பண்ணாரு.”

“எதுக்கு இப்ப திடீர்னு இவ்ங்க வந்திருக்காங்க. கார் கண்ணாடி உடைஞ்சதுக்கா இருக்குமோ..?”

“இருக்காது. இங்க கோயம்புத்தூர்ல ஒரு சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம். அதுக்காக வந்திருப்பாங்க.”

“தம்பி கொஞ்சம் சீக்கிரமா போங்க.”

“அப்பா திட்டுவார்னு பயப்படறீங்களா. என் கூட தானே வந்திருக்கீங்க.”

சரி என்று தலையாட்டினாலும்  அவர் படபடப்பாகவே இருந்தார்.

சிக்னல் வந்த போது கூட அவஸ்தையாய் நெளிந்தார்.

“கீழே குதிச்சிட போறீங்க” அவரது அவஸ்தையை பார்த்து விக்கி சிரித்தான்.

கார் வந்து போர்டிகோவில் நிற்க, அதே பதட்டத்துடன்  கார் கதவை திறந்து கொண்டு உடனே இறங்கி உள்ளே ஓடினார்.

மதன் இறங்கி செக்யூரிட்டியிடம் சாவியை கொடுத்தான்.  விக்கி கேட்டான்.

“என்னடா இப்படி உதறலெடுக்குது ?”

“எங்கப்பா அப்படி வச்சிருக்கார் எல்லாரையும்” படிக்கட்டுகள் ஏறி உள்ளே வந்தார்கள்.

உள்ளே சோபாவில் அப்பா விஜய ராகவன் பனியனுடன் சிகரெட் பிடித்தவாறு ,ஸ்டூல் மீது கால்களை வைத்த படி அமர்ந்திருக்க,  அம்மா விமலா பக்கத்தில் அமர்ந்தபடி செல்போன் பார்த்து கொண்டிருந்தார்.

“ஹாய் மம்மி ஹாய்  டாடி”  என்ற படி பக்கத்தில் இருந்த சோபாவில்  சென்று மதன் அமர்ந்தான் .

விமலா நிமிர்ந்து பார்த்து ,”வாடா “என்றாள்.

“உட்காருடா” என்று விக்கியை மதன்  கை காட்ட அவன்   அமர்ந்தான்.

கௌரியும் பிரியாவும் ஓரமாய்  நின்றிருந்தார்கள்.

பிரியா அங்கே நிற்க இஷ்டமில்லாதது போல் நின்றிருந்தாள்.

மூர்த்தி விஜயராகவன் அருகே கை கட்டி நின்றிருக்க, அவர் சைகை காட்டினார். கால் பிடித்து விடு  என்பது  போல்.

மூர்த்தி உடனே அவர் காலடியில் அமர்ந்து கால்களை பிடித்து விட ஆரம்பித்தார்.

தன் மனைவி ,மகள் பக்கம் அவர் திரும்பவேயில்லை.

பிரியா கோபத்துடன்  முகத்தை திருப்பி கொண்டாள்.

கௌரி வேதனையோடு தன் கணவனை பார்த்தாள்.

மதன் அனைத்தையும் பார்த்து உள்ளுக்குள் சூடாகி கொண்டிருந்தான்.

விமலாவை பார்த்து கொண்டே  செல்போனை வைத்த விஜயராகவன், “இவங்களை ஏன் இங்க நிக்க வச்சிருக்கே..?” என்றார்.

“ஸ்கூல் பசங்க ஏன் காம்பவுண்டுக்குள்ள வந்திட்டு போறாங்கனு கேட்டீங்களே . பிரியா டீச்சரா வேலை பார்த்திட்டிருக்கு. வீட்ல டியூசனும் எடுக்குதாம். அதான் பசங்க வர்றாங்க”

விஜயராகவன் மூர்த்தியை பார்த்து கேலியாக சொன்னார்.

” என்னடா. நீ என்கிட்ட சம்பாதிக்கிறது பத்தாதுன்னு பொண்ணையும் வேலைக்கு அனுப்பி வச்சிட்டியா . பணம் சம்பாதிக்க ஏன்  இப்படி அலையிறே..?”

மதன் கோபமாக தடாலடியாய் எழுந்தான்.

0 Comments

  1. thileep

    அருமை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *