பகுதி – 11
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1 : பகுதி-2 : பகுதி-3 : பகுதி-4
பகுதி-5 : பகுதி-6 : பகுதி-7 : பகுதி-8
பகுதி-9 : பகுதி-10
*********
எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை, கண்விழித்த போது மணி பத்து! அதுவரை யாரும் வந்து கதவைத் தட்டாதிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இரவில் நடந்தவை ஒரு கனவு போல் தோன்றினாலும் அதன் தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது மாதிரியும், மற்றவை ஓரளவு நீர்த்துப் போய்விட்டது போலவும் ஒரு இடைப்பட்ட நிலையிலிருந்தேன்.
இங்கிருந்து செல்ல வேண்டும்தான் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த முடிவை எடுக்க வேண்டுமா எனவும் யோசிக்கலானேன். வேலை விசயத்தில் அவ்வளவு கெடுபிடிகள் ஏதுமில்லாத இங்கே கொஞ்ச நாள் இருந்து பார்த்தால்தான் என்ன எனவும் தோன்றியது. கூடவே நேற்றிரவு நடந்த சம்பவங்களின் பின்னணிகளையும் அறிந்துகொள்ள ஆர்வமானேன்.
பிரச்சனைகள் வரும்போது சிலர் எல்லாவற்றையும் காலையில் பார்த்துக் கொள்ளலாம்… அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம்… என்பார்களே அதன் அர்த்தம் அன்று விளங்கியது.
முகம் கழுவி ரெடியாகி வெளியே வந்தபோது முந்தைய தினம் பிளாண்டிலுள்ள ஓனர் அறை வாசலில் தொங்க விடப்பட்டிருந்த நிஷாகந்தி பூக்களை ஒத்த மலர்கள் சிதறிக் கிடந்தன. காலையிலேயே இப்படி மணக்கிறது என்றால் இரவில் எனக்கு அப்படித் தலை சுற்றியதில் ஆச்சர்யமேயில்லை என நினைத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த சீசன் வர இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளதாக ஆஞ்சநேயலு சொன்னாரே..! என்றும் யோசனைகள் பிறந்தன.
கடைப் பக்கமாக நடந்து சென்றேன்.
போகும்போது பெரியவரும் மதியும் என்னை கவனித்தாலும் எதைப் பற்றியும் விசாரிக்கவில்லை. ஆனால் எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் மதி அப்போது மீசையோடுக் காணப்பட்டார். அப்போதுதான் விளங்கியது அது ஒட்டு மீசையென்று.
நான் தவிர்க்க நினைத்தாலும் அங்கே எதிர்ப்படும் ஒவ்வொரு விநோதமும் மர்மங்களும் என்னை விடுவதாயில்லை. இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள சுப்பாராவே எனக்கு உகந்தவனாய் தெரிந்தான்.
ஆனால் அவனே அந்த முடிச்சுகளுக்குள் ஒரு இழை போல பின்னிப் பிணைத்திருப்பது எனக்கு இன்னொரு அதிர்ச்சி. ஒருவேளை அவன் பகிர்ந்து கொள்ள சம்மதித்தாலும் அதில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இருக்குமென்பதும் கேள்விக்குறிதான்.
சிரித்த முகத்தோடு அந்த பாட்டி என்னை வரவேற்றார். “என்ன டீ வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே என் பதிலுக்கு காத்திருக்காமல் ஃபிளாஸ்கிலிருந்து ஒரு குவளையில் ஊற்றிக் கொடுத்தார்.
“இட்லி இருக்குது சாப்பிடுறீங்களா?” மறுக்காமல் சரி என்று கொடுக்கச் சொன்னேன்.
“இருப்பா உனக்காக வீட்டிலிருந்து சுடச்சுட கொண்டு வாரேன்” என்று வீட்டிற்குள் நுழைந்து தனது மருமகளுக்கு குரல் கொடுத்தார்.
தேங்காய் சட்னியில் நிலக்கடலை கலக்கப்பட்டிருந்தாலும் ருசியாகவே இருந்தது. மதியைப் பற்றி பேச்சுக் கொடுத்தேன். அவருடைய அருள்வாக்கு எப்போதுமெல்லாம் பலிப்பதில்லை ஆனாலும் குறி கேட்க ஆட்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டாள். ஆனால் தனிப்பட்ட முறையில் மதி மிகவும் நல்லவன். கேட்கும் எல்லோருக்கும் உதவிகள் செய்கிறான் என்றார். ஆனால் மதியைப் பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மதியுடைய சொந்த ஊரைக் கூட சரியாக சொல்லவில்லை.
சாப்பிட்டுவிட்டு அறைப்பக்கம் திரும்பிக் கொண்டிருந்தபோது, பெரியவர் ‘சந்துரு..!’ என கூப்பிட்டார்.
மதியுடனான உரையாடல் முடிந்திருக்கவில்லை; செல்ல யோசனையாக இருந்தாலும் சென்றேன்.
“பூஜை அன்னிக்கு மட்டும் போட்டுக்கிட்டா பத்தாதா..? அந்த நவரத்தின மோதிரத்தை முதல்ல கழட்டு..! குடும்பம் கண்ணின்னு செட்டில் ஆவுற ஐடியாவே இல்லையா உனக்கு..? அந்த ஆசை உள்ளவன் இதை எப்போதும் போட்டுக்கிட்டு திரிவானா..?” பெரியவர்தான் மதியை அப்படி கடிந்துக் கொண்டிருந்தார்.
நான் நெருங்கியதும் குரலைத் தாழ்த்திக் கொண்டனர்.
மதி இயல்பாகச் சிரிக்க முயற்சித்தார். புதிய மனிதனைப் பார்ப்பது போன்று இருந்தது.
“நன்றாகத் தூங்குனியா?” பெரியவர்தான் கேட்டார்
“ம்” என்று தலையாட்டினாலும் என்னுடைய குழப்பங்கள் முகத்தில் அப்படியே வெளிப்பட்டிருக்க வேண்டும்.
“நைட்டு நல்லா பயந்துட்ட அதான் சரியா தூங்க முடியல போல” அவரே பதில் சொல்லி சூழ்நிலையை நேர் செய்தார். மதி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“போகப்போக எல்லாம் பழகிடும்!” என்று பெரியவர் சமாதானப்படுத்த முயல, சட்டென “எனக்கு இங்கிருக்க பிடிக்கல. நான் கிளம்புறேன்” எனச் சொல்லிவிட்டேன். என்னுடைய முடிவு ஆச்சர்யத்தை தராவிட்டாலும் சற்று ஏமாற்றத்தை தந்திருக்க வேண்டும்.
கொஞ்ச நேரம் அங்கே மௌனம்.
“சாப்பிடுறியா?” பெரியவர் பேச்சை மாற்ற கேட்கிறாரோ என்று கடையிலேயே சாப்பிட்டு வந்துவிட்டதைச் சொன்னேன். அவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மதியும் எதுவும் பேச முயற்சிக்கவில்லை.
சுப்பாராவும் மேனேஜர் சீதாராமும் அந்த பக்கம் வந்தார்கள்.
‘நல்லா இருக்கீங்களா..?’ என்று தெலுங்கு வாடை கலந்த தமிழில் மேனேஜர் விசாரித்தார்.
‘ம்’ என்று புன்னகைத்தேன்.
சுப்பாராவைப் பார்ப்பதை தவிர்த்தேன். அது அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.
“அடடே உன் தோஸ்த்து வந்துவிட்டானே..! சுப்பாராவ் ஸாரு ரூமை க்ளீன் பண்ணுனியா?” என்று பெரியவர் சுப்பாராவை பக்கம் திரும்பிக் கேட்டார். அவர் குரலில் அனாவசியமான முயற்சிகள் என்னை அங்கேயே இருக்க வைக்க வெளிப்பட்டன.
“சார் உங்க ரூம் பக்கம் கொஞ்சம் போயிட்டு வரலாமா..?” சுப்பாராவ் அழைத்தான்.
“சுப்பு..!” மதி அவனிடம் ஏதோ எச்சரிப்பது போல ஏதோ சொல்ல வந்தான்.
“நான் இங்கிருந்து கிளம்புகிறேன் சார்” என்று முடிவை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆனால் அவர்களின் கனிவான பேச்சுகளில் இருக்கும் எண்ணங்களும் பின்னிக்கொண்டிருந்தன.
என் முகத்தைப் படித்தவர் போல மதி, “சந்துரு நீங்க இங்க புதுசுல்ல அதான் ஒரு மாதிரியா உங்களுக்கு இருக்கு. பெரியவர் எல்லாத்தையும் சொன்னார். இனிமே அந்த மாதிரி எதுவும் நடக்காம பாத்துக்கலாம். நீங்களும் கேர் ஃபுல்லா இருங்க இது வயக்காட்டு பகுதி இல்லையா!”
இரவு பார்த்த மதிக்கும் தற்போது பேசும் மதிக்கும் சுமார் ஆயிரம் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம். அவரிடம் எதுவும் பேசாமல் ஒரு குழப்பமான மனநிலையோடு ரூம் பக்கம் நடக்க ஆரம்பித்தேன்.
அந்த பெட்டிக்கடை பாட்டியும் மதியை பற்றி நல்லவிதமாக சொன்னது நினைவிற்கு வரவே கொஞ்சம் பொறுத்து முடிவெடுப்போம் என்று ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தேன். பயப்படும்படி இதுவரை ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்தால் அவரே சொல்லியிருப்பாரே!
சுப்பாராவ் ‘சார்…’ ‘சார்…’ என்றபடி என் பின்னாலேயே ஓடி வந்தான்.
ரூமை அடைந்ததும்,
‘நேற்றிரவு என்ன நடந்து கொண்டிருந்தது?’
‘அந்த பூஜையின் பின்னணி என்ன?’
‘ஏன் மதி மீசையை மழித்து புடவையெல்லாம் கட்டியிருந்தார்?’
‘மதி ஏன் உன்னிடம் அப்படிப் பேசிக்கொண்டிருந்தார்?’
‘யார் அந்த பிரபா?’
‘உன்னை ஏன் அந்த பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார்..?’ என மனதிலெழுந்த அத்தனை கேள்விகளையும் கேட்டேன்.
அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் எதையோ என்னிடம் பகிர்ந்து கொள்ளவும் விருப்பப்பட்டது போன்றும் தெரிந்தது.
“அவரோட முழு கதை என்னன்னு எனக்கும் கூட சரியா தெரியாது. அவரோட பேசும்போதும் பழகும்போதும் நானா அங்கங்கே புரிஞ்சிக்கிட்டதுதான். பூஜை நாள்ல மட்டும் கண்டிப்பா நானும் பக்கத்துல இருக்கணும்னு சொல்லுவாரு. ஆனா போதையில இருக்கும்போதுதான் நிறைய தன்னை மறந்து உளறுவாரு. பெரியவருக்கு அந்த பழக்கங்கள் எதுவும் இல்லாததுனால என்னை அவருக்கு உதவி செய்ய பக்கத்துல உட்டுட்டு கிளம்பிப் போயிருவாரு. அப்பதான் அவர் உளறுற எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா இணைச்சிப் பாத்து இதுதான் கதையா இருக்கும்னு நானா எடுத்துக்கிட்டேன். நல்ல மனுஷன்!” அவன் ‘நல்ல மனுசன்’ என்று சொன்னபோது தன்னையுமறியாமல் சிரித்துக் கொண்டான்.
“சரி, உன்னை ஏன் பிரபான்னு கூப்பிட்டார்?”
“என்னைப் பார்த்த நாள்ல இருந்தே அப்பப்ப அப்படித்தான் கூப்பிடுவாரு சார். நான் அவரோட ஃபிரெண்டு போல இருக்கேன்னு சொல்லுவார். அதக் கேட்டபோது எனக்கும் சந்தோசமா இருந்திச்சி அதனால நானும் விட்டுட்டேன்” என்று புன்னகைத்தபடி தொடர்ந்தான்.
“நான் வேலைக்காக போகும் இடங்கள்ல என் நளினத்தைச் சுட்டிக்காட்டி என்னை நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, சீண்டிப்பாப்பாங்க. எங்கேயுமே தொடர்ந்து வேல பாக்க முடியாது; பிடிக்காது. இவரு இங்க பிளாண்ட்டு போட்ட அப்புறம்தான் அதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்திச்சி! ” பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
“என்னைப் பாத்த முதல் நாள்லயே அவருக்கு ரொம்ப்ப் பிடிச்சிப் போச்சி. இங்கேதான் இனி நீ வேல பாக்கணும்னு கேட்டுக்கிட்டபோது, எனக்கும் அப்போ ஒண்ணும் வெளங்கல. அவரு என்னைய பாத்துக்கிட்ட விதத்தைப் பார்த்து எங்க வீட்லயும் அவர் பொறுப்பிலேயே முழுசா விட்டுட்டாங்க. அவரு வர்ற போற நேரங்கள்ல பெரியவருக்கு அடுத்து நான்தான் அவரை கவனிச்சிப்பேன். பூஜை பண்ணும்போது கட்டாயம் நான் அவர் பக்கத்துலேயே இருக்கணும்னு சொல்லுவாரு. அப்படிதான் நேத்தைக்கும் இருந்தேன்”
“ஆனா ஏதோ அழுத மாதிரில்லாம் கேட்டதே..!” என்றேன்
ஆமாம் என்பது போல் தலையாட்டினான். ஆனால் மௌனித்தான்.
எனக்கு முழுக்கதையும் கேட்க வேண்டும் போலிருந்தது.
“அது என்னவோ தெரியல சார். உங்களப் பாக்கும்போதும் மதி சார் போலவே தெரியுறீங்க. அதுனால சொல்றேன். ஆனா எதையும் யார்ட்டையும் காட்டிக்காதீங்க!” என்று குழைந்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தான்…
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்
Leave a reply
You must be logged in to post a comment.