இராஜாராம்
வாசிப்பின் மூலம் பல விடயங்களை தெரிந்துகொள்கிறோம். ஆனால் வாசிக்கும்போது இருக்கும் கோபமும், வெறியும் தற்போதைய சூழலின் நடைமுறை அரசியல், அரசியல்வாதிகள், வீராப்பு வசனங்கள் கேட்கும்போது எதைப் பேசவேண்டுமோ, அதைப்பற்றி பேசவே இல்லையே, நாமும் பள்ளியில் எதைப் படிக்கனுமோ அதைப் படிக்கவில்லையே என்ற ஆதங்கமும் படிக்காமல் போனதன் காரணம் திட்டமிட்ட அரசியல்தான். இன்று திருவள்ளுவருக்கு பாடப்புத்தகங்களில் முப்பரிநூல் போடும் அரசியல், 1947, 1957 காலகட்டத்தில் ஒரு சில ஆரம்ப பாடசாலை நூலை பார்க்கும்போது அங்கேயே நூலும், குடுமியும் நுழைந்து அரசியல் செய்வது தெளிவாக தெரிகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
சரி நம்ம பேச வேண்டிய விசயத்துக்கு வருவோம்…!
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’, ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ இந்த வாக்கியங்களை படித்தோ கேட்டோ இருக்கிறோம். அதைத்தாண்டி உப்பைப்பற்றி நமக்கு தெரிந்தது எல்லா மளிகைக் கடையிலும் அதன் வெளிப்பக்கமாய் ஒரு மூட்டையில பிளாஸ்டிக் கப்போ, தகரக் டப்பாவோ(அளவைக்காக) போட்டு இருக்கும் இரண்டு மூட்டைகளில் – ஒன்று உப்பு, மற்றது கோலப்பொடி – ஒன்றென்பதுதான். இரவு கடையை அடைத்தாலும் உப்பைக் கடைக்குள் வைத்து பூட்ட மாட்டோம் வெளியில்தான் இருக்கும்.
காரணம் உப்பைக் கொண்டுபோயி என்னையா பண்ணப்போறானுக, உப்பைக் களவாண்டுகிட்டு போனாலும் பெரிய நட்டமும் இல்லை என்ற மனநிலைதான். அதைக் கடந்து உப்பைப் பற்றிய சிந்தை… உப்புச் சத்தியாகிரகம், காந்தியடிகள் தண்டி யாத்திரை (1930) போயி உப்பைக் காய்ச்சுனாங்க. இதுதான் உப்பின் வரலாறு நமக்கு தெரிஞ்சது. இப்போ உப்பு மூட்டையை வெளியில் வைப்பதும் இல்லை.
ஆனால், உப்பின் சுவடே தெரியாமல் போகுமளவுக்கு ஒரு நீண்ட அடையாளம் மறைந்தும், மறந்தும் போன சோகம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. குறிப்பாக தென்னகம் தெரிந்திருக்க முடியாது.
காரணம் உப்புக்காக வரி வசூல் செய்ய இமாலயாவிலிருந்து ஒரிசா வரைக்கும் அமைக்கப்பட்ட மிக நீளமான புதர்வேலி(சுங்க வேலி) அது. ஆமாம்..! கிட்டத்தட்ட 1500 மைல் நீளம்,12 முதல் 14 அடி உயரம், 4 முதல் 5 அடி அகலம், 12,000 பேர் இதற்காகவே பணி செய்தனர்.இன்னும் சொல்லப்போனால் பராமரிப்பிலும், தூர அளவிலும் சீனப் பெருஞ்சுவருக்கு இணையென்றால் மிகையல்லவே. நம்பத்தான் வேண்டும் இதனை நிரூபிக்க அல்ல, இதைக் காண ஒரு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் இந்தியாவில் சுற்றித் திரிந்து கண்டடைந்து அதன் எச்சங்களை கண்டுபிடித்து உறுதிபடுத்தி அதை இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.
இதற்கு அடித்தளம் இவருக்கு பழைய புத்தகங்கள் விற்கும் ஒரு புத்தகக் கடையிலிருந்து, மேஜர் ஜெனரல் W.H. ஸ்லீமன் (W.H.Sleeman KBC)அவர்கள் எழுதிய ‘ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் நியாபகங்களும்'(1893) என்ற நூலிலிருந்து தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து அதில் உள்ள மேற்கோள்கள் அதற்கு ஆதாரமான நூலென வரிசையாக தேடிப்பிடிக்கிறார். அதன்பின்பு இந்தியாவின் பல இடங்களில் தேடி அலைகிறார். இதற்காக திசை மற்றும் இடம் காட்டும் நவீன கருவிகள் மூலம் துலாவுகிறார். இதன் தேடலாக வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வருகிறார். இதில் இரண்டு மூன்று பயணத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.
குறிப்பாக இந்தியாவில் அது யாருக்கும் தெரியவும் இல்லை. ஒரு இடம் இருந்து இல்லாமல் போவது ஒன்று, அதைப்பற்றி யாருக்குமே ஒரு சுவடும் தெரியாமல் போவதென்பது எழுத்தாளருக்கு மேலும் சோர்வை கொடுக்கிறது. அதைவிட இது விடயமாக அவரது நண்பர் வட்டாரத்தில் நடக்கும் கலந்துரையாடலின்போது இல்லாத ஒன்றை தேடி அலைகிறாய், அதுமட்டுமல்லாது அவ்வளவு நீளமான புதர்வேலினா கொஞ்சம் அதிகப்படியா தெரிகிறது என்று ஏளனமும் செய்கின்றனர்.அந்த ‘ஏளனத்து(நகைப்பு)க்குரிய வெறி’தான் இந்த ஆய்வின் வெற்றியாகவே பார்க்கிறார் எழுத்தாளர் ராய் மாக்ஸம்.
இதற்காக இவர் எடுத்துக்கொண்ட ஆய்வுகள், அதற்கான தரவுகள் கிடைத்த நூல்களையும் இதில் பரிந்துரை செய்திருக்கிறார்.
உதாரணமாக எதற்காக உப்பை தேர்வுசெய்து அதற்கு வரி விதித்து,சுங்க வேலி அமைத்து இத்தனை செலவு செய்யவேண்டும். இந்த உப்பு அரசியல் இந்தியாவில் மட்டும்தான் நடந்ததா? வேறு எங்கு நடந்தது. எதற்காக நடந்தது. அதனால் என்னென்ன விளைவுகளை மக்கள் எதிர்கொண்டனர் என்று தெளிவான ஆய்வாக விரிகிறது.
அந்த புதர் வேலியில் என்னென்ன செடி, மரங்கள் இருந்தது. அது இப்போதும் இருக்க சாத்தியமுண்டா? அதன் ஆயுள்காலம் எத்தனை ஆண்டு? என்று பல தேடல்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். யாரும் புகாதபடி முள்செடிகளையும், மரங்களையும் வைத்து உருவாக்கிய வேலியில் புளியமரம் எப்படி உருவானது, எதற்காக வைக்கப்பட்டது.
இதை வைத்துதான் உப்பு சத்தியாகிரகம் நடந்ததா..?
இப்போராட்டத்தின்போது உப்பு வரியின் நிலை என்ன..?
அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா..?
அதோடு வரிவிலக்கு செய்யப்பட்டதா..?
எப்போதுதான் அந்த வரி விலக்கு செய்யப்பட்டது..? என்ற பல ஆச்சரியங்களை நம் கண்முன் ஆதாரங்களோடு வைக்கிறார் ராய் மாக்ஸம்.
மொழி தெரியாத தேசத்தில் இடங்களைத் தேட மொழியையும் கற்றுக்கொண்டு, மொழியைக் கற்றுக் கொள்வதென்பது சுலபமல்ல என்றாலும் அது பயணத்தை இலகுவாக்குமல்லவா…? உதாரணமாக, காலைக்கடன் தீர்க்கப்போகும் திறந்தவெளி(யமுனைக்கரை) கழிவறையில் ஒரு முதலை வருகிறது. முதலைக்கு இந்தியில அர்த்தம் தெரிந்திருந்ததால் அதைச்சொல்லி கத்த(மகர்மச்-முதலை)உடனே அபாயச் சூழலை அறிந்த நண்பர்கள் வந்து காப்பாற்றுகிறார்கள். தேடலின் ஆர்வம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வைக்கிறது, அந்த அனுபவத்தையும் எழுதுகிறார். அங்கே முதலை வரக் காரணம் அதற்கு அந்த மக்கள் கொடுக்கும் விளக்கம் அது அதைவிட அவலம், வாசிக்க…வாசிக்க கோபமும், ஒரு வரலாற்று மீதத்தின் பின்னணியும் தெளிவாக புரிகிறது.
இந்த சுங்க வேலியில் யார்… யாரெல்லாம் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதற்கான நிபந்தனைகள் என்னென்ன… என்ற ஆழமான பார்வையுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது.
போகிறபோக்கில் அடிச்சு விடுகிற கதையல்ல, இது ஆதாரங்கள் நிறைந்த ஆவணம்.
கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டும். ஏனென்றால் இதைப்பற்றி எந்த ஒரு இந்திய எழுத்தாளரும் குறிப்பிடாததுதான் இதன் சோகம்.
அந்த வேலியை அவர் கண்டடைந்ததும் நாமே கண்டதுபோன்று உள்ளுணர்வு தோன்றுகிறது. அதைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லும் ஒரு துறவி முன்னாள் கொள்ளைக்காரர் என்பது மேலும் நம் எழுத்தாளரை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. கொள்ளைக்காரராக இருந்ததால்தான் அதன் அடையாளம் தெரிந்தது என்று விளக்கம் தருகிறார் அந்தச் சாமியார்.
வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு நூலுக்கான சுவடே இல்லை உப்புவேலிபோல்.
———————–
உப்புவேலி
ராய் மாக்ஸம்
சிறில் அலெக்ஸ்
எழுத்து பிரசுரம்
———————–
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து