பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-10

ஆர்.வி.சரவணன்

மூர்த்தி, பிரியா டீச்சராக இருக்கும் பள்ளியின் தாளாளரை பார்த்ததும் ஒரு கணம் தயங்கி நின்றவர் பின் அருகில் நெருங்கி “வாங்கம்மா வாங்க ” என்றார்.

தலையாட்டிய அந்த பெண்மணி, ” டைரக்டர் மதன் சாரை பார்க்கிறதுக்காக வந்திருக்கோம்.பிரியா ஸ்கூல் கிளம்பிடுச்சா..? ” என்றார்.

“கிளம்பிகிட்டிருக்கும்மா. வர சொல்றேன் நீங்க உட்காருங்க” என்றவர் செக்யூரிட்டியிடம் தன் வீட்டிற்கு சென்று பிரியாவை அழைத்து வர சொன்னார். இன்டர்காமில் மதனை அழைத்து விசயத்தை சொன்னார்.

மதன் சலித்து கொண்டான் .

பிரியா அவசர நடையில் படிக்கட்டுகள் ஏறி ஹாலுக்குள் வந்தாள். அந்த பெண்மணியை பார்த்து ,”வாங்க மேடம் ” என்றாள்.

“என்ன பிரியா . நாம பேசினத மதன் சார் கிட்ட சொல்லி வச்சியா..?”

“இல்ல மேடம். நேத்து அவங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க. சார் பிசியா இருந்தாங்க பேச முடியல.”

“சரி பரவாயில்ல. நாங்க தான் வந்திட்டோமே” என்றார்.

தன்னுடன் வந்திருந்த தலைமை ஆசிரியையிடம் பேச ஆரம்பித்தார்.

சில நிமிடங்களில் கௌரி காபி தட்டுடன் வந்து அவர்களிடம் நீட்டினாள்.

பிரியாவிடம் மூர்த்தி ‘என்ன விசயமா வந்திருக்காங்க’ என்று சைகையில் கேட்டார். பிரியா அருகில் நெருங்கி பதில் சொல்லும் முன், மதன் உள்ளே நுழைந்தான்.

அவர்கள் எழுந்திருக்க “உட்காருங்க ” என்று சொல்லி விட்டு அமர்ந்தான்.

” சார். நான் அபிராமி …………. பள்ளியோட ஸ்கூல் கரெஸ்பாண்டென்ட். பிரியா எங்க ஸ்கூல்ல தான் ஒர்க் பண்ணுது. எங்க ஸ்கூல் ஆண்டு விழா வருது.” என்று ஆரம்பிக்க மதன் இடைமறித்தான்.

“எதுனா டொனேசன் தரணுமா..?”

“நோ சார். ஆண்டு விழால நீங்க சீப் கெஸ்டா கலந்துக்கணும்.”

பட்டென்று சிரித்து விட்டான். அவர்கள் இருவரும் அதிர்ச்சியாய் பார்க்க, “சொல்றேனேனு தவறா நினைக்க வேண்டாம். நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் கிடையாது.”

“என்ன சார். இன்னிக்கு தமிழ்நாடே உங்களை பத்தி பேசிகிட்டிருக்கு.”

“அடுத்த படம் ஜெயிச்சா தான் அது தொடரும்”

“கண்டிப்பா ஜெயிப்பீங்க. நீங்க அவசியம் கலந்துக்கணும்.”

” நான் ஒரே ஒருபடம் இயக்கின டைரக்டர். நான் வந்து மாணவ மாணவிகள் கிட்ட என்னத்த ஸ்பீச் கொடுத்திட போறேன். எதுனா ஐஏஎஸ் ஆபிசர் அறிஞர்கள்னு கூப்பி்டீங்கன்னா அவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்”

“ஸ்டூடன்ட்ஸ் சினிமா செலிபிரிட்டிய தானே விரும்பறாங்க.” உள்ளே வந்த விக்கி சொன்னான்.

எப்படி தவிர்ப்பது என்று மதன் யோசிக்க ஆரம்பிக்க, மேடம் சொன்னார்.” பிரியா நீ சொன்னது கரெக்ட் தான்.”

“என்ன சொன்னாங்க?” விக்கி இடைமறித்தான்.

” சார் இதெல்லாம் ஒத்துக்க மாட்டார்னு சொன்னுச்சு. நீ கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணு . உனக்கு ஸ்பெசல் இன்க்ரிமெண்ட் தரேன்னு கூட நாங்க கமெண்ட் பண்ணிட்டிருந்தோம். பிரியா. நோ நோ. அப்படிலாம் எனக்கு இன்கிரிமெண்ட் வேணாம்னு உறுதியா சொல்லிட்டாப்ல.”

பிரியாவை ஆச்சரியமாய் பார்த்தான் மதன். எங்க காசு கிடைக்கும்?. எந்தெந்த விசயத்தில பணம் சம்பாரிக்கலாம்னு அலையிற இந்த உலகத்திலே வறுமையில் இருந்தும் இப்படி சின்சியரா இருக்குதே இந்த பொண்ணு வியந்தான்.

“சரி நான் வரேங்க. எவ்வளவு மணி நேரம் நான் அங்க இருக்கணும்”

” தேங்க்ஸ். என்று மகிழ்ச்சியானவர் ” ஜஸ்ட். டூ அவர்ஸ் தான்.” என்றார். கூடவே வந்திருந்த தலைமை ஆசிரியை சொன்னார்.

“சார் உங்ககிட்டே தனியா பேசணும் “

” நோ நோ. இங்க இருக்கிறவங்க எல்லாருமே சின்னவயசிலேருந்து என் கூடவே இருக்கிறவங்க. பரவாயில்ல சொல்லுங்க.”

” நீங்க கலந்துக்கிறதுக்கு … ஃபீஸ் எவ்வளவு? “

தயக்கமாய் தான் கேட்டார்.

மதனுக்கு கோபம் வந்து விட்டது. சிரமப்பட்டு அதை மறைத்து கொண்டு சிரித்தான்.

” மேடம். மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கிற பிரியாவே நீங்க கொடுக்கறேன்னு சொல்ற இன்க்ரிமெண்ட்ட வேணாம்ங்கிற போது நான் கேட்கறது நியாயமா இருக்குமா. நான் செலவு பண்ற இரண்டு மணி நேரம் ஸ்டூடென்ட்ஸ்க்கு பயனுள்ளதா இருந்ததுனா அதுவே எனக்கு பெரிய கிப்ட்.” என்றபடி எழுந்தான்.

“சூப்பர் சார்” அவர்களும் எழுந்தனர்.

அவர்கள் காரில் ஏறி கிளம்பியவுடன் பிரியா சொன்னாள்.

“நேத்து நீங்க பிசியா இருந்தீங்க. அதான் இவங்க வர போறத சொல்ல முடியல.”

“ஐ நோ. பிரியா” என்ற மதன் மூர்த்தியிடம் சொன்னான்.

“பொண்ணை நல்ல படியா வளர்த்திருக்கீங்க. குட்”

மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டவராய் பெருமிதமாக தன் மனைவியையும் மகளையும் பார்த்தார்.

*******

ன்று மாலை மதன் வீட்டில் போரடிக்கிறதென்று வெளியில் லாங் டிரைவ் செல்ல விக்கியுடன் கிளம்பினான். காரை நிறுத்தி விட்டு மலைகளை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். எதிரே அரட்டையடித்த படி வந்த இளைஞர் பட்டாளம் மதனை பார்த்ததும் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஓடி வர ஆரம்பித்தனர். மதன் திடுக்கிட்டான்.

” சார் மதன் தானே நீங்க ” என்று மொய்த்து கொண்டனர்.

இதன் பெயர் காதல் படம் பற்றி ஒருவருக்கொருவர் மாற்ற மாற்றி புகழ்ந்தார்கள்.

“சதீஷ் கேரக்டரை அப்படி முடிச்சிருக்க கூடாது” என்று ஒருவன் சொன்னான்.

அவர்களில் கொஞ்சம் அழகாக இருந்தவனை சுட்டி காட்டி ” சினிமால நடிக்கணும்னு சுத்திகிட்டிருக்கான். ஒரு சான்ஸ் கொடுங்க சார்” என்றனர்.

எல்லோருக்கும் பொறுமையாக பதிலளித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டு அவர்கள் சென்ற பின் காரில் ஏறி கிளம்பினார்கள்.

” ஆரம்பத்துல ரசிகர்கள் நம்மளை சுத்திக்கிறது ஹேப்பியா இருந்துச்சு. இப்ப அன்வான்டடா ஃபீல் பண்ண தோணுது”

” ஏண்டா. பேஸ்புக் டிவிட்டர்ல கஷ்டப்பட்டு எழுதறேன். யாரும் லைக்கும் போடறதில்லே. கண்டுக்கிறதும் இல்லேனு சொல்லிட்டிருந்தே. இப்ப வணக்கம் பொள்ளாச்சினு போட்டாகூட 400 லைக்ஸ் போகுது. எங்க போனாலும் அடையாளம் கண்டுகிட்டு சூழ்ந்துடறாங்க. இது நீ ஆசைப்பட்டது தானே.”

“உண்மை தான்”

” ஒரு வேளை முதல் படத்திலேயே வெற்றியை பார்த்ததும் திகட்டிடுச்சோ. அடுத்த படம் ஓடலைனா திரும்ப ஏங்க ஆரம்பிச்சிடுவே மேன்”

” மனசாட்சி சொல்ற மாதிரியே சொல்றே ” மதன் அவன் முதுகில் அடித்தான்.

“அடுத்த படம் இத விட சக்சஸா கொடுக்கணும். விட கூடாதுடா”

” அப்ப ரசிகர்களும் உன்னை விட மாட்டாங்க” இப்படியாக அவர்கள் பேசி கொண்டே வருகையில் டிராபபிக்கில் பிரியா முன்னே நடந்து சென்று கொண்டிருப்பதை மதன் பார்த்தான்.

“எட்டு மணியாகிடுச்சு. இந்த நேரத்துல இந்த பொண்ணு எங்க போய்கிட்டிருக்கு?”

வண்டியோட்டி கொண்டிருந்த விக்கி, ஹாரன் அடித்தான்.திரும்பினாள்.

கண்ணாடியை கீழே இறக்கிய மதன் கேட்டான்.

“இந்த நேரத்துல எங்கம்மா போயிட்டு வர.?”

அவனை அந்த நேரத்தில் எதிர்பார்பார்க்காது திடுக்கிட்ட பிரியா ” பிரெண்டு வீட்டுக்கு போய் ட்யூசன் எடுத்திட்டு வரேன் சார் “என்றாள்.

“சரி .வாங்க வண்டியில போகலாம்.”

,”வேணாம் சார்.” உடனடியாக மறுத்தாள்.

” நைட் நேரமாகிடுச்சு. நாங்க எப்படி விட்டுட்டு போறது . வந்து கார்ல ஏறு”

தயங்கினாள்.

” அவ்வளவு சொல்றான்ல . உங்களுக்கு என்ன தயக்கம் ” விக்கி கேட்டான்.

பிரியா காரில் பின் சீட் திறந்து ஏறி அமர்ந்தாள்.

கார் கிளம்பியது. மதன் சொன்னான்.

,” வீட்ல தானே ட்யூசன் எடுத்திட்டிருந்தே. ஏன் ப்ரெண்ட்ஸ் வீட்ல….” இழுத்தான்.

இனிமே இங்க வீட்ல ட்யூசன் எடுக்க வேணாம்னு தோணுச்சு. அப்பா அம்மாவுக்கும் அது தான் சரினு பட்டுச்சு. அதான் என் பிரண்டு வீட்டுக்கு ஸ்டூடெண்ட்ஸ வர சொல்லி அங்க எடுத்திட்டு வரேன்.,”

“என்னம்மா இது. எங்கப்பா சொன்னது தப்பு தான். அதுக்காக அத மனசுல வச்சிட்டு இப்படி நடந்துகிட்டா எப்படிம்மா.”

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு சார்”

மதன் அவளை திரும்பி பார்த்தான்.

” எங்க குடும்பத்துக்காக உங்கப்பா இருபத்தஞ்சு வருசமா உழைப்பை கொட்டியிருக்காரும்மா. எங்க வீட்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.”

” தேங்க்ஸ. சார். ஆனா எங்க லிமிட்ட தாண்டி நாங்களும் அதிகம் உரிமை கொண்டாடக் கூடாதுல்ல.” கண்களில் துளிர்த்த கண்ணீரை விரலால் சுண்டினாள்.

மதன் சொன்னான்.

” தினமும் ஸ்கூல் முடிஞ்சு போய் டியூசன் எடுத்திட்டு வரணுமா. ரொம்ப கஷ்டமாச்சே.”

“வாழ்க்கைனாலே கஷ்டம் தானே”

“டியூசன்ல எவ்வளவு பணம் கிடைக்கும்?”

“ஐயாயிரம் வரைக்கும் வரும்”

ஒரு மாசத்துக்கு நாம வாங்குற செண்ட்டோட விலை அது. மதன் உள்ளூர சொல்லிக் கொண்டான்.

திடீரென்று கார் சடன் பிரேக் அடித்து நிற்க, குலுங்கிய மதன் விக்கியை திரும்பி முறைத்து உடனே எதிரே பார்த்தான்.

காரை மோதுவது போல் கொண்டு வந்து பைக்கை நிறுத்தியவன் முத்து. பைக்கில் பின்னே அவனது அம்மா அமர்ந்திருந்தாள். முத்துவின் பார்வை காரில் அமர்ந்திருந்த பிரியா மற்றும் மதன் மீதே இருந்தது.

மதனுக்கு கோபம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *