வெங்கட் நாகராஜ்
ஜோன்ஹா அருவி –
ராஞ்சி நகரிலிருந்து புருலியா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 45 கிலோமீட்டர் பயணித்தால் இந்த ஜோன்ஹா அருவியை அடைந்து விடலாம்! கிராமியப் பாதையில், இரண்டு புறமும் மரங்கள் அமைந்திருக்க பயணிப்பது ஒரு சுகானுபவம். ஜார்க்கண்டில் நிறையவே இப்படி பயணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கிராமத்து வீடுகள், பள்ளிக்குச் செல்லும்/வீடு திரும்பும் குழந்தைகளைப் பார்த்தபடியே பயணித்தோம். சில படங்களும் எடுத்துக் கொண்டேன். அருவி இருக்கும் பகுதிக்கு வரும்போதே வழியில் வாகன சோதனையும் நுழைவுக் கட்டணமும் வாங்கி விடுகிறார்கள் – அதிகமில்லை ஒரு வாகனத்திற்கு ஐம்பது ரூபாய் தான்! சாலையோரங்களில் மலைப்பகுதியில் விளைந்த பெரிய பெரிய பப்பாளி பழங்களை விலைக்கு விற்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்த்தபடியே வாகனத்தில் பயணிக்கிறோம். முடிந்த அளவிற்கு வாகனத்தில் பயணம். அதற்குப் பிறகு நடை தான்!
இந்த அருவியும் மேலிருந்து பார்க்கையில் உங்களுக்குத் தெரியாது. படிகள் [மொத்தம் 722!] மூலம் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்! இறங்கிச் செல்வது பெரிய விஷயம் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அருவிகள் பலவும் இப்படி கீழே சென்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது. படிகள் மூலம் இறங்கிச் செல்வது கூட பெரிய விஷயமில்லை. சுகமான இயற்கைச் சூழலை அனுபவித்து மீண்டும் படிகள் வழியே ஏறி வருவது தான் கொஞ்சம் கடினமான விஷயம். ஆனாலும் இந்த அனுபவம் கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் இல்லையா. படிகளில் செல்லும் போது வழியெங்கும் அப்பகுதி மக்கள் கீழே விழுந்த மரங்களிலிருந்து சின்னச் சின்னதாய் பொருட்களை செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்தபடியே கீழே இறங்கினால் அருவிக்கு அருகில் வந்து விடலாம்!
கூங்கா மற்றும் ராரூ எனும் நதிகளின் பாதையில் அமைந்திருக்கிறது இந்த அருவி. சுமார் 141 அடி உயரத்திலிருந்து பாறைகள் வழி கீழே வருகிறது. பிறகு கொஞ்சம் சமவெளியில் பயணித்து மீண்டும் கீழே [எட்டு அடி!] விழுந்து அங்கிருந்து கீழே பயணிக்கிறது. இந்த இடத்தில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். பாறைப் பகுதி என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சுற்றுலாவாக வரும் பெரும்பாலான இளைஞர்கள் அங்கே ரொம்பவே அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் கீழே வழுக்கி விழுவதைப் பார்க்க முடிந்தது. ஒரு இளைஞர் தன்னுடன் வந்தவரை குண்டுக்கட்டாகத் தூக்கி தண்ணீரில் போட அவர் மூச்சுத் திணறி கடும் அவதிப்பட்டார்! எல்லாம் ஒரு ஜாலி தான் இவர்களுக்கு! பார்க்கும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது என்றாலும் ஒன்றும் சொல்ல இயலாது!
இந்த ஜோன்ஹா அருவிக்கு கௌதம் dhதாரா என்ற பெயரும் உண்டு. இங்கே இருக்கும் ஒரு மலையுச்சியில் ராஜா பல்தேவ்தாஸ் பிர்லா அவர்களின் மகன் கௌதம புத்தருக்கு ஒரு கோவில் அமைத்திருப்பதால் இந்த பெயர்! ஆனால் நாங்கள் சென்ற போது அருவிக்கு மட்டும் தான் சென்றோம். கோவிலுக்குச் செல்லவில்லை. இந்த மலைப்பகுதியில் அருவி, சுற்றிலும் மரங்கள், மலை, இயற்கை எழில் என பார்த்துக் கொண்டே இருந்ததில் வேறு எங்கும் போக வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. ரம்மியமான சூழலில் நீண்ட நேரம் இருந்து அங்கிருந்து புறப்பட மனமே இல்லாமல் தான் புறப்பட்டோம். கூடவே 722 படிகள் வழி மேலே ஏற வேண்டுமே என்ற எண்ணமும் மனதுக்குள் வந்து இம்சிக்கவும் செய்ததே!
இந்த அருவியில் பெரும்பாலும் தண்ணீர் வரத்து இருக்கும் என்றாலும், மழை நாட்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை இங்கே செல்வது நல்லது. நாங்கள் சென்றது நவம்பர் மாதத்தில் என்றாலும் அவ்வளவு தண்ணீர் வரத்து இல்லை. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தப் பகுதியில் விழா நடத்துகிறார்கள். வாரத்தில் இந்த இரண்டு நாட்களில் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். நாங்கள் சென்ற போது சில பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகள் வந்திருந்தார்கள். ஒரே ஆட்டம் தான். ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்கள். வாழ்க்கையில் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
இந்த அருவி இருக்கும் பகுதியில் ஒன்றிரண்டு கடைகள் உண்டு. சுடச்சுட உணவு தயாரித்துக் கொடுக்கிறார்கள். கூடவே தேநீர், எலுமிச்சை ஜூஸ், பகோடா என சிற்றுண்டிகளும் உண்டு.
நன்றி : படங்களும் பகிர்வும் திரு. வெங்கட் நாகராஜ், புதுதில்லி
Leave a reply
You must be logged in to post a comment.