அத்தியாயம்-13
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
அத்தியாயம்-9
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
மதன் ‘யாருக்குக் கிப்ட் கொடுக்கிறதுக்காக வச்சிருந்த கைக்குட்டை இதுனு தெரியலியே’ என்று நினைப்புடனே முகத்தை துடைத்துக் கொள்ள ஆரம்பித்தான். மேடையில் கலை நிகழ்ச்சிகள் முடிந்து விருந்தினர்கள் அமர்வதற்கான இருக்கைகள் கொண்டு வந்து போட்டு கொண்டிருந்தார்கள்.
மதன் சுற்று முற்றும் பார்த்தான்.மாணவ மாணவியர்கள் சீருடைகளில் ஒரு பக்கமும் பெற்றோர்கள் ஒரு பக்கமுமாக ஆடிட்டோரியமே நிறைந்திருந்தது. ஆங்காங்கே ஆசிரியர்களும் ஆசிரியைகளுமாக மேற்பார்வையிட்டபடி நின்றிருந்தார்கள்.
பிரியாவும் சக ஆசிரியைகளுமாக மதன் அருகே வந்து விழா மேடைக்கு அழைத்தார்கள். மேடையில் நடுவில் இருந்த இருக்கையில் மதன் அமர வைக்கப்பட்டான். மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் முகங்களில் தென்பட்ட மலர்ச்சியும் மகிழ்ச்சியும் அவனை ஆச்சரியப்பட வைத்தது.
பிரியா கையில் பேப்பர்களுடன் மேடையின் ஓரம் நின்றிருந்தாள். அவளுக்கும் முகமெங்கும் வியர்த்திருந்தது . தன் கைக்குட்டை கொண்டு அவள் அவற்றை ஒற்றியெடுத்த நளினத்தை ஓரக்கண்ணால் ரசித்தான். என்னவோ தெரியவில்லை. அவளது ஒவ்வொரு அசைவையும் பார்க்க மதனுக்கு ஆர்வம் வந்தது.
மைக்கில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க பிரியாவை ஒரு ஆசிரியை அழைக்கவே, பிரியா மைக் நோக்கி நகர்ந்தாள். பிரியா வணக்கம் தெரிவித்து ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிப் பேச அழைக்க எல்லோரும் பேசினார்கள். முன்னாள் தலைமையாசிரியை ஒருவர் பேசி கொண்டிருந்த போது பிரியா மதனையே பார்த்தாள். மதன் ஏன் தன்னையே பார்க்கிறாள் என்று குழப்பமாய் அவளை பார்க்க, கன்னத்தில் கை வைத்து சைகை செய்தாள். மதன் என்ன சொல்கிறாள் இவள் என்று புரியாமல் கண்களாலேயே என்ன என்றான். மீண்டும் சைகை காட்டினாள். மதன் கன்னத்தில் தன் விரல்களை வைத்து பார்த்தான். கைகளில் சிகப்புக் கறை. உடனே கர்ச்சீப் கொண்டு அழுத்தமாக கன்னத்தைத் துடைத்தான். பிரியாவை பார்த்தான். சிரித்தபடி விரல்களால் வெற்றிக்குறி காண்பித்தாள். மதனுக்கு ஜிவ்வென்றிருந்தது.
பிரியா மதனை அழைக்கும் முறை வந்தது.
“இந்த வருடத்தின் ஆண்டு விழாவிற்கு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது அனைவரின் ஒட்டு மொத்த சாய்ஸ் இயக்குனர் மதன். அப்படி என்ன சாதித்து விட்டார்..? ஒரு படம் தானே பண்ணியிருக்கிறார்…? ஆம் ஒரே படம் தான். தன் திறமையை மட்டுமே நம்பிப் புதுமுகங்களை கொண்டு இயக்கியிருக்கிறார். 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையில் வெற்றி பெற்றிருக்கிறார். எங்கும் அவருக்கு பாராட்டு மயம் தான். சரி சினிமா சம்பந்தமான ஒருவரை நாம் இங்கே எதற்காக அழைத்துள்ளோம் . அவரால் நம் மாணவ மாணவிகளுக்கு எந்த விதத்தில் பயனுள்ள விதமாய் பேச முடியும் என்ற கேள்வி எழலாம். எதிர்ப்புகளை மீறி தன் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் வாருங்கள் மிஸ்டர் மதன். உங்கள் கனவை நனவாக்கியதை லட்சியத்தில் அடைந்த வெற்றியை எங்கள் மாணவ மணிகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ” என்று சொல்லி முடித்த போது கை தட்டல் எழுந்தது.
மதனுக்கு விசிலடிக்கலாம் என்று தோன்றியது. அந்த நொடியில் ஓர் முடிவெடுத்தான். கல்யாணம் பண்ணா ப்ரியாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்.
மதன் எழுந்து மைக் இருக்கும் இடத்திற்கு வர, பிரியா மைக்கிலிருந்து விலகி எதிரே வர, இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தார்கள். அவளைக் கடக்கையில் ,”தேங்க்ஸ் பிரியா” என்றபடி நடந்து மைக் அருகே வந்தான். கை தட்டல்கள் அடங்கும் வரை காத்திருந்து பின் பேச ஆரம்பித்தான்.
“அனைவருக்கும் வணக்கம். இங்க இந்த மேடைக்கு வர்ற வரைக்கும் எது பத்திப் பேச போறோம்ங்கிறதுல எனக்கு குழப்பம் இருந்துச்சு. நல்ல வேளை பிரியா நான் எதை பத்திப் பேசணும்னு அவங்களே லீட் எடுத்து கொடுத்தது எனக்கு ரொம்ப ஈசியாகிடுச்சு. தேங்க்ஸ் பிரியா” ப்ரியாவை பார்த்து கையசைத்து சொன்னான். பிரியா புன்னகைத்தாள்.
“அப்பா அம்மா பேச்சை கேட்டு அவங்களோட ஆசைப்படி பிள்ளைகள் முன்னுக்கு வர்றது ஒரு வகை… அப்பா அம்மா சொல் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக தன் மனசுக்கு பிடிச்ச மாதிரி முயன்று முன்னுக்கு வருவது இன்னொரு வகை… இதில ரிஸ்க் இருக்கு. நான் இந்த இரண்டாவது வகை”
பிரியா இதற்கு முறைப்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் . அதை மதன் கவனித்துப் பருகத் தவரவில்லை.
“எங்கப்பா சினிமால இருக்கறதுனால சினிமாவுக்குள்ள வரணும்ங்கிற ஆசை எல்லாம் இல்ல. நான் எழுதற கதைகளைக் கேட்டு நண்பர்கள் ஊக்குவிச்சதினால நான் அதுக்குள்ள வரணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா பாருங்க. வீட்ல அப்பாவுக்கு இது சுத்தமா பிடிக்கல. அம்மாவுக்கும் இஷ்டமில்லே. நான் வெளிநாடு போய் நல்ல வேலைல செட்டில் ஆகணும்னு ஆசைப்பட்டாங்க . எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். கேட்கல. அதனால அவங்க விருப்பப்படி வெளிநாடு போயிட்டேன். என்ன தான் அங்க என் வேலைக்கு அதிகமாகவே சம்பளம் , புரமோசன் கிடைச்சாலும் சினிமா மேல தான் என் கவனம் முழுக்க இருந்துச்சு.”
கூட்டம் சப்தமில்லாமல் மதனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது.
“ஒரு நாள் சொல்லாமக் கொள்ளாம சென்னைக்கு வந்துட்டேன். என் நண்பன் விக்கியோட வீட்ல தங்கி, தயாரிப்பாளரைப் பிடிச்சு, கதை சொல்லி, ஓகே வாங்கி படத்தோட துவக்க விழாவுக்கு எங்கப்பா அம்மாவை அழைக்கிறதுக்குப் போனேன். வர மாட்டேன்னு அப்பா சொல்லிட்டார். நான் கவலைப்படல. படத்தை ஆரம்பிச்சு பல கஷ்டங்களுக்கு இடையே படத்தை நல்லபடியா முடிச்சி, அதுல ஜெயிச்சிட்டேன். இப்ப எங்கப்பா பெருமையா பார்க்க ஆரம்பிச்சிருக்கார். இதோ இப்ப உங்க முன்னாடி நின்னு நான் பேசறதுக்குக் காரணம் என்னோட வெற்றி தான். எனனோட லட்சியத்தை நோக்கி போகலாம்னு நான் முடிவெடுத்த அந்த நொடி தான் இங்க முக்கியமானது. இது போல உங்களுக்கும் எதுனா ஒண்ணு லட்சியமா இருக்கலாம்”
இப்படியாக பேசிக் கொண்டே வந்தவன் ” சினிமான்னாலும் ஆடியன்ஸ் ரசிச்சுகிட்டே இருக்கிறப்பவே படத்தை தடாலடியா முடிச்சிடணும்னு நினைக்கிறவன். அதேமாதிரி இதோ இந்த மேடைப் பேச்சையும் இப்பவே முடிச்சிடறேன். முடிக்கிறதுக்கு முன்னால மாணவ மாணவிகளுக்கு ஒரு அட்வைஸ். அப்பா அம்மாவுக்கு அடுத்த இடத்துல இருக்கிறது குரு. அதனால் முதல்ல உங்க ஆசிரியர்களை மதிக்கக் கத்துக்குங்க. நம்ம எல்லாருடைய வாழ்க்கைலயும் அவங்களுக்கும் பங்கிருக்கு. அது போல ஸ்கூல் நிர்வாகத்துக்கு ஒரு விஷயம் சொல்றேன் .வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிற சில மாணவ மாணவிகளைப் பணம் வாங்காம படிக்க வைங்க. இது எனது வேண்டுகோள். இப்படி அட்வைஸ் மட்டும் கொடுத்திட்டு போனா நல்லாருக்காது. ஆகவே என் சார்பா 10 லட்ச ரூபாயை டொனேஷனாகத் தருகிறேன் என்பதை இங்கே அறிவிக்கிறேன் என்று பேசி முடித்தபோது கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
திரைப்படத்தில் ஹீரோ என்ட்ரியாகும் போது ரசிகன் எப்படி உற்சாகமாக கை தட்டி ஆர்ப்பரிப்பானோ அப்படி மதனை பார்த்து கை தட்டினாள் பிரியா. மதன் அதை கவனித்தவாறே தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.
தாளாளர் பெண்மணி எழுந்து போய் மைக்கில் சொன்னார். “கண்டிப்பாக வரும் கல்வியாண்டில் இதை நாங்கள் செயல்படுத்துகிறோம். ஒவ்வொரு வருடமும் இதற்காகவே ஒரு கோட்டா உருவாக்குகிறோம் ” என்று அறிவித்தார்.
மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.
விழா முடிந்து குரூப் போட்டோ எடுத்து செல்பி எடுத்து மதன் கிளம்பிய போது கார் வரை வந்து வழியனுப்ப பள்ளி நிர்வாகத்தினர் வந்தார்கள். பிரியாவும் வந்தாள்.
மதன் கார் கதவை திறந்த படி, “பிரியா நீங்க எப்ப வீட்டுக்கு கிளம்ப போறீங்க..?”
“இதோ சார்… அப்பா வரேன்னு சொல்லிருக்காரு.”
“எதுக்கு அவரை சிரமப்படுத்தறீங்க. என் கூட கார்ல வத்திடுங்க.”
பிரியா தயங்கினாள்.
கூட இருந்தவர்கள் “சார் கூடவே கார்ல போயிடு” என்று வற்புறுத்தவே “சரி” என்றாள். மதன் மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது.
பிரியா காரின் கார் கதவை திறந்து பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.
மதன் காரை ஸ்டார்ட் செய்து கொண்டே கண்ணாடிகளை இறக்கினான்.
“அப்பாவுக்கு போன் பண்ணிச் சொல்லிடுங்க”
“மெசேஜ் அனுப்பிட்டேன்”
திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.
காரை எப்போதும் வேகமாக ஓட்டுபவன் தான் இன்று மெதுவாகவே ஓட்ட ஆரம்பித்தான்.
“நான் நல்லா பேசினேனோ இல்லியோ… நீங்க எனக்கு நல்லா இன்ட்ரொடக்சன் கொடுத்தீங்க.”
பதில் வராமல் போகவே திரும்பி பார்த்தான்.பிரியா புன்னகைத்தாள்.
“பிரியா… முதலாளிங்கிற எண்ணத்தோடவே என்னை அணுகாதீங்க. பிரியா ஒரு பிரெண்டு மாதிரி என்கிட்டே ஃபிரியாவே பேசலாம்”
“சரிங்க”
“ஆமாம் கைக்குட்டை உங்களுக்காக வாங்கினீங்களா..?”
“இல்ல… என் பிரெண்டு ஒருத்திக்கு கிப்ட் கொடுக்கிறதுக்காக வாங்கி எம்பராய்டரி ஒர்க் பண்ணினேன்”
“ஓ… நான் எனக்காகன்னு நினைச்சிட்டேன்.”
“நான் ஏன் உங்களுக்குக் கொடுக்க போறேன்” அவசரமாய் கேட்டாள்.
“ஆமால்ல…” என்ற மதன் குரலில் உற்சாகம் குறைந்திருந்தது.
“அதுவும் உங்களுக்கு போய் இந்த சாதாரண கர்ச்சீப்லாம் கொடுக்க முடியுமா..?”
“சாதாரணம்ங்கிறது கொடுக்கிறவங்களை பொறுத்து கொடுக்கிற சூழ்நிலைய பொறுத்து சம்திங் ஸ்பெசலா கூட மாறிடும்”
“புரியல”
“இப்ப நல்ல பசில ஹோட்டல் தேடிப் போறீங்க… எங்குமே இல்ல. ஒரு இடத்தில கையேந்தி பவன் இருக்கு. விலை கம்மி தான். அங்க சாப்பிடறீங்க. அங்க கிடைக்கிற டேஸ்டை இது வரைக்கும் எங்கயுமே நீங்க ருசிச்சதே இல்லே. அதுக்கப்புறம் பல வருசம் கழிச்சா அங்க சாப்பிட்டது ஞாபகம் வர்றப்ப டேஸ்ட் ஞாபகத்துக்கு வருமா..? கொடுத்த பணம் ஞாபகம் வருமா..?”
“நல்லா பேசறீங்க.”
“ஹா ஹா தேங்க்ஸ்”
“நீங்க ரொம்ப ஹேப்பியா இருக்கிறது போல் தெரியுது. இத நான் பார்த்தில்ல.”
” எஸ் ஒரு புதையல் கிடைச்சிருச்சு. அதான் காரணம்.சரி. உங்கக்கிட்ட ஒரு விசயம் கேட்கணும் கேட்கவா..?”
“ம் .சொல்லுங்க”
,”இல்ல. உங்க அப்பா கிட்டயே கேட்டுக்கறேன்.”
“சொல்றேன்னு சொல்லிட்டு அப்பாக்கிட்ட பேசிக்கிறேன்னா என்ன அர்த்தம்.”
“நான் இப்ப உங்கக்கிட்ட சொன்னாலும் நீங்க உங்க அப்பாக்கிட்ட தான் கேட்க சொல்வீங்க.”
கண்ணாடியில் அவளை பார்த்தான்.
புரிந்தும் புரியாதது போல் யோசித்தபடி செல்போனை கையில் எடுத்தாள்.
சில நொடிகள் மௌனமாக நகர , பிரியா செல்போன் பார்த்தபடி சொன்னாள்.
“நீங்க சாயந்தரம் கொடுத்த இன்டர்வியூ பத்தி விதவிதமாகத் தலைப்பு வச்சு நியூஸ் வந்திட்டிருக்கு”
“தெரிஞ்ச விசயம் தானே… தலைப்புகளை படிங்க.”
பிரியா செல்போன் பார்த்துப் படிக்க ஆரம்பித்தாள்.
“நடிகர் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன். மதன் பிடிவாதம்.”
“மீடியா மீது மதன் பாய்ச்சல்.”
“மதனின் அடுத்த படத்தின் கதாபாத்திரம் ஒரு பத்திரிகையாளராமே”
தலைப்புகளைப் படித்தபின் பிரியா சொன்னாள்.
“போற போக்கை பார்த்தா நான் இப்ப உங்க கூட கார்ல வர்றதைக் கூட நியூசா போடுவாங்க போல.”
பிரியா குரலில் கவலை இருந்தது.
“எக்சாட்லி”
“சிவ சிவா. நீங்க சீக்கிரம் போங்க” பதட்டப்பட்டாள்.
“டோண்ட் ஒர்ரி” என்று மதன் சொல்லி கொண்டிருக்கும் போது சிக்னல் வரவே காரை நிறுத்தினான்.
சாலையோர டீ கடையில் தன் நணபர்களுடன் அமர்ந்திருந்த முத்து இருவரையும் பார்த்தான்.
முறைத்தபடி எழுந்தான்.
காரை நோக்கி வந்தான்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.