இத்ரீஸ் யாக்கூப்
நண்பன் அப்துல் அஹத் வழக்கம் போல நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து கையடக்க டிஃபன் பாக்ஸ் ஒன்றை நீட்டிச் சிரித்தபடி, “இன்னைக்கு டிஃபிரென்ட், டேஸ்ட் செய்து பார்!” என்று கண்ணடித்தவாறு சென்றுவிட்டான். பாத்திரம் வழக்கத்திற்கு மீறிய கனமாக இருந்தது.
என்னவாக இருக்குமென ஆசை ஆசையாய் திறந்து பார்த்தேன்.
பாயாசம் போல இனிப்பின் வாடை அடித்தது. கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் ஏலக்காயொன்று அலைமோதி வர, அந்த இனிப்பு வஸ்து விரல் நுனியிலும் சிறிது பட்டுவிட்டது. சுவைத்துப் பார்த்தேன் ஆமாம் பாயாசமேதான் என்று தீர்மானிக்கும் வேளையில்தான் சிறியசிறிய உருளைகளோடு பாகுபோலிருந்த அந்த பால்
கொழுக்கட்டை எனைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தது.
பால் கொழுக்கட்டை..!
எனக்குப் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்று என்றாலும் எங்கள் வீட்டில் செய்து பார்த்ததில்லை. இந்த இருபத்தைந்து வயதில் மொத்தமாக இரண்டு மூன்று முறை சாப்பிட்டிருப்பேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்த உரையாடலையொட்டி அஹத்திடம் இதைப்பற்றி ஒருமுறை பகிர்ந்திருந்தேன். அதை ஞாபகம் வைத்து இன்று வந்து கொடுத்தது கொஞ்சமும் எதிர்பாராததுதான்! அதுவும் நோன்புக் கஞ்சிக்கு பதில் பால் கொழுக்கட்டை என்றால் கொஞ்சமும் யோசித்துப் பார்க்க முடிகிறதா?
அவனிடம் பால் கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தாலும் அது முதன்முதலில் எனக்கு எப்படி பரிச்சயமானது என்று அவனிடம் மட்டுமல்ல இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. பால் கொழுக்கட்டையை நினைக்கும் வேளைகளில் அந்த முதல் அனுபவம் சார்ந்த நினைவலைகளும் இயல்பாகவே என்னைச் சூழ ஆரம்பித்துவிடும்!
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அம்மா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காசாளராகவும் அப்பா கிராம நிர்வாக அலுவலராகவும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் இருவருமே பணிக்கு செல்பவர்களாக இருந்தமையாலும், நான் அவர்களுக்கு ஒரே பிள்ளை என்பதாலும் அம்மா அப்பா வீட்டிலில்லாத வேளைகளில் பெரும்பாலும் ராஜ திலகம் அக்கா வீட்டில் தஞ்சம் புகுவது எனக்கு வழக்கமானதாகயிருந்தது.
பி எஸ்சி வரை படித்திருந்த திலகா அக்கா என்னைப் போன்ற மாணவர்களுக்கு அப்போது டியூஷன் எடுத்தும் வந்தார். திலகா அக்கா என் அம்மாவிற்கு தங்கை அளவிற்கு நெருக்கம் என்பதால் அங்கேயுள்ள மாணவர்களில் எனக்கு சிறப்பு சலுகைகளும் தனிப்பட்ட அஸ்தஸ்துகளும் தரப்பட்டு வந்ததில் ஆச்சர்யங்களும் இல்லைதான். அதில் ஒன்று டியூசன் ஃபீஸ் தராமல் நின்றுகொண்ட மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வசூலித்து வந்துக் கொடுப்பது எனக்கு வேலையாக இருந்துவந்ததும் கூட. அந்த வகையில்தான் திருமாறன் எனக்கு கொஞ்சம் பரிச்சயமானான் என்பதை விட அவனது வீடு எனக்கு தெரிய வந்தது எனலாம்.
திருமாறனும் என் வகுப்பே என்றாலும் அதுவரை அதிகம் பழக்கமில்லை. ஏனென்றால் அவன் எட்டாம் வகுப்பில்தான் எங்கள் பள்ளியில் வந்துச் சேர்ந்தான். அவனது பூர்வீகம் என்ன என்று சரியாக நினைவில்லை என்றாலும், வேறொரு ஊரிலிருந்து குடவாசலுக்கு புலம் பெயர்ந்து அவனுடைய அப்பா அங்கே சலூன் கடையும் வைத்திருந்தார். சொல்லப்போனால் எங்களுடைய பூர்வீகமும் அதுவல்லதான். மதுரை பக்கம்.
திருமாறன் எங்கள் வகுப்பில் சேர்ந்த புதிதில் எனக்கு ஏற்கனவே குறிப்பிடும்படி நண்பர்கள் வட்டம் இருந்ததால் பெரும்பாலும் நான் அவனைக் கண்டுகொண்டதில்லை. இத்தனைக்கும் அவனும் திலகா அக்கா டியூஷனில் சேர்ந்திருந்தான். என்னுடைய பெற்றோரின் பணி சார்ந்த பின்புலம் என் மண்டையில் கூடுதல் கனத்தைக் கொடுத்திருந்ததால் டியூசன் வந்த போதிலும் அவனிடம் பேசியது கிடையாது. அவனும் இருக்கும் இடம் தெரியாமல் வந்து செல்வான். அதிலும் அதிகபட்சமாக ஒரு மாதம்தான் வந்திருப்பான். காசு கொடுக்க முடியவில்லை போல அதனால் திலகா அக்காவை எதிர்கொள்ள முடியாமல் அடுத்த மாதமே டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டிருந்தான். ஆனால் திலகா அக்கா விடணுமே! ஒரு மாதத்திற்கான டியூசன் ஃபீஸ் நூறு ரூபாயை வசூலித்து வரும்படி அவனுடைய தெருவைச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
அவர்கள் வீடு காலணித் தெரு பக்கம் இருந்தது. வாடகை வீடுதான். அந்த பக்கம் போவதில் எனக்கு தயக்கங்கள் இருந்தாலும் திலகா அக்காவின் வற்புறுத்தலால் ஒரு வழியாகச் செல்ல நேர்ந்தது. கூடவே சாயங்கால நேரங்களில் இரண்டு மூன்று கிலோ மீட்டராவது சைக்கிள் ஓட்ட வேண்டுமென்பது அப்பாவின் கட்டளையும் கூட. அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று கிடைக்கும் நேரங்களில் அவர்கள் வீட்டை நோக்கி அவ்வப்போது சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.
போகும் நேரங்களில் பெரும்பாலும் அவனுடைய அப்பா இருக்க மாட்டார். ஆரம்பத்தில் அமைதியாக பதில் சொல்லி வந்த அவனது அம்மாவும் போகப்போக சற்று கோபமாக பேச ஆரம்பித்தார். அதில் ஒருநாள் திருமாறனின் அப்பாவின் சைக்கிள் வாசலிலேயே நின்றது; ஆனாலும் இல்லை என்று வழக்கம் போல சொல்ல, நானும் சூடாகி ஏன் உங்க புருஷனை ஒளிச்சு வச்சிக்கிட்டே இல்லைன்னு பொய் சொல்றீங்கன்னு கேட்டுவிட்டேன். அப்படியே திகைத்து, வாயடைத்துப் போனார். ஏற்கனவே கவலைகளில் இருப்பது போன்றிருந்த அவரது முகம் மேலும் வாடிப்போயிற்று. ஆனாலும் நான் அதையெல்லாம் அப்போது பொருட்படுத்தவேயில்லை. அங்கிருந்து திரும்பிவிட்டேன்.
திலகா அக்காவிடம் வந்து இனி நான் திருமாறன் வீட்டுக்கு போக மாட்டேன் என்று நடந்த சம்பவங்களை கோபத்தோடுச் சொல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் மௌனமாக இருந்துவிட்டு, “சரி அருணு, இனி நீ அங்க போக வேண்டாம்!” என அந்த பேச்சை அத்தோடு அவரும் முடித்துக் கொண்டார். ஒன்பதாம் வகுப்பு ஆரம்பித்துவிட்டது. தாலுகா அளவிலான ஒரு தடகளப் போட்டியில் நான் முதல் பரிசை வென்றதையடுத்து, எனது பெயர் பள்ளி முழுக்க பிரபலமடைந்திருந்த தருணம்.
அப்போதுதான் திருமாறனின் நீளம் தாண்டுதல் திறனும் எனக்கு தெரிய வந்தது. சொல்லப்போனால் பயிற்சி நேரங்களில் என்னை விட புள்ளிகள் அதிகம் வாங்க ஆரம்பித்தான். உயரம் தாண்டுதலில் நானே முன்னிலை வகித்ததால் எங்களுக்கிடையே இருந்த அந்த ஏற்ற இறக்க புள்ளிகள் சரிசமன் ஆனது போல் இயல்பாக அவனிடம் பழக ஆரம்பித்தேன்.
சில நாட்களிலேயே நெருங்கிய நண்பர்களானோம். வீட்டிற்கு அழைத்தான். அங்கு செல்ல எனக்கு கூச்சமாக இருந்தது. முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் கண்முன்னே வந்து போயின. வருந்தினேன். ஆனால் அவனிடம் என் மனவோட்டத்தை அப்போது பகிர்ந்து கொள்ளவில்லை. வற்புறுத்தல்கள் அதிகமாகவே ஒரு நாள் செல்ல வேண்டிய நிர்பந்தம்.
சென்றேன்.
தயக்கத்தோடு அன்றுதான் முதன்முதலில் அவர்கள் வீட்டின் உள்ளே நுழைகிறேன். வீட்டின் முக்கால் பகுதியை தறியே நிறைத்திருந்தது. ஆம் அவர்கள் நெசவாளர்கள் கூட. அவனது அம்மா என்னை “உள்ளே வாப்பா!” என்று அழைத்தார். எனக்குதான் அவரை எதிர்கொள்ள ரொம்பவே கூச்சமாக இருந்தது. அவனுடைய அக்காக்கள்தான் என் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டு சகஜமாக சிரித்து பேசி, உரையாடலைத் துவங்கி வைத்தார்கள். அப்புறமென்ன அடிக்கடி அங்கே சென்று அனைவரோடும் ஒரு கட்டத்தில் பரஸ்பரம் ஆகிவிட்டேன்.
அவனுடைய அம்மாவும் அக்காக்களும் மேலும் நெருங்கிப் பழகத் தொடங்கிவிட்டனர். கூடவே தனது மாமா வீட்டிற்கும் அவ்வப்போது அழைத்துச் செல்வான். பப்பாளி, மாங்காய், மாம்பழம் என்று எனக்கு அங்கே விளைந்து கிடப்பதில் சீசனுக்கு ஏற்றவாறு ஏதாவது சாப்பிடக் கிடைத்துவிடும். அதிகாலைகளில் பள்ளியின் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் வழக்கத்தையும் ஆரம்பித்திருந்ததால் உடற்கல்வி ஆசிரியருக்கும் மட்டுமல்ல என் அப்பாவிற்கும் கூட அவன் செல்லப்பிள்ளையானான்.
இப்படி சென்றுக்கொண்டிருந்த நாட்களில்தான் அவன் வீட்டில் அவனது அம்மாவின் வற்புறுத்தலின் பெயரில் சில சமயம் நான் சாப்பிடவும் தொடங்கினேன். அது போன்ற தருணத்தில்தான் ஒரு நீண்ட குவளை முழுக்க பாயசம் போன்ற ஒன்றை தந்து அவனது மூத்த அக்காவான ரேணுகா என்னை சாப்பிடும்படி சொன்னார். உட்கொள்ளும்போது சின்ன சின்ன நீள் உருண்டைகள் மதுரப்படகுகள் போல வாயில் மூழ்கவே, இது என்ன என்று கேட்டேன், பால் கொழுக்கட்டை என்றார்கள். அது பால் கொழுக்கட்டையே என்றாலும் எனக்கு பாயாசத்தின் இன்னொரு வடிவமாகவே தெரிந்தது. அனைவரின் பாசப்பிணைப்பிலும் நான் கரைய ஆரம்பித்திருந்தேன்.
அன்றைய தினம் அந்த அக்கா ஊதி ஊதிக்கொடுத்த இளஞ்சூட்டுக் குவளை இன்னும் என் நெஞ்சில் மேல் செங்குத்தாக நிற்கிறது. டியூசன் ஃபீஸ் வெறும் நூறு ரூபாய் தர முடியாதவர்களால் எப்படி உணவு, தின்பண்டம் என்று அவ்வளவும் எனக்கு கொடுக்க முடிந்தது? நினைத்துப் பார்க்க நேரிடும் சந்தர்ப்பங்களில் அந்த பால்கொழுக்கட்டையின் சுவையை விட அந்த குவளையின் அடிச் சூடு என்னைச் சுடுகிறது!
இன்று எனது அலுவலக நண்பனான அஹதிடமிருந்தும் வழக்கமான நோன்புக் கஞ்சியைத்தான் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் அவன் எதிர்பாராத நினைவொன்றைக் கிளறிவிட்டுவிட்டான். ஆமாம் இந்த வாழ்க்கையில் சில நேரங்களில் எல்லாமே எதிர்பாராமல் நிகழ்பவைதானோ?!
அப்பாவிற்கு எங்க ஊர் பக்கமே மாற்றல் ஆகிவிட்ட பின்னர், அம்மாவும் தனது ஜாகை மாற்றும் முயற்சியில் வெற்றிப் பெற்றார். பிறகு இன்று நிகழ்ந்தது போல குடவாசல் என்பது என்றாவது ஏங்கி மீட்டிப் பார்க்கும் நினைவலைகளில் ஒன்றாக மாறிப்போனது. அதில் திருமாறனும் அவனுடைய குடும்பமும் வந்துப்போவது அன்றைய தினம் வரை எதிர்பாராததுதான்.
அவர்களை அதற்கு பிறகு தொடர்புக் கொள்ளாததும் எதிர்பாராததுதான். இன்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க நேர்ந்ததும் எதிர்பாராததுதான். நாளை அவனை எங்கோ சந்திக்க நேர்ந்தாலும் அதுவும் எதிர்பாராததாகவே இருக்கும்.
** கதையில் வந்த பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே!
நன்றி : படம் இணையத்திலிருந்து