அத்தியாயம் – 21
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17 அத்தியாயம்-18
அத்தியாயம்-19 அத்தியாயம்-20
20-ஆம் அத்தியாயத்திலிருந்து…
மௌனத்தில் கரைந்த சில நொடிகளுக்குப் பிறகு –
“என்கூட ஒரு கப் காபி சாப்பிட வர முடியுமா அஷோக்?”
மறுமுனையில் அஷோக்கின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது.
கசிந்த கண்களை துடைத்துக் கொண்டான்.
“ஷ்யூர் சுப்ரியா. எப்ப மீட் பண்ணலாம்?”
“இப்பவே.”
“எங்கே?”
“பீச்?”
“இதோ கிளம்பிட்டேன்.”
வீசிக்கொண்டிருந்த கடற்கரைக் காற்றில் ஈரம் சற்று அதிகமாகவே இருந்தது.
அஷோக், சுப்ரியா இருவரிடமும் மௌனம்.
அத்தியாயம்-21 தொடர்கிறது…
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
ஆனால் பேசித்தானே ஆக வேண்டும்?
விஷயங்கள் புரிபட, புரியவைக்க… பேச்சு அவசியம்.
“ஸாரி சுப்ரியா” மௌனத்தை அஷோக்தான் முதலில் உடைத்தான்.
“எதுக்கு..?”
“எல்லாத்துக்கும்தான்” மெதுவாக சொன்னான். அவனின் குரல் கம்மியிருந்தது.
“நான் உன்னை ரொம்பக் காயப்படுத்திட்டேன் சுப்ரியா. என்னை மன்னிச்சிடு…”
“ஆனாலும் எப்டி நீங்க என்னைச் சந்தேகப்படலாம்? இப்ப நினைச்சாலும் நீங்க பேசின வார்த்தைகள் மனசை முள்ளாக் குத்துது தெரியுமா?”
“தப்புதான்… உன் மேல இருக்கிற தீவிரமான காதல்… நமக்கு நடுவில் இன்னொருத்தனாங்கிற பொறாமை… என எல்லாம் சேர்ந்து என் புத்தியை மழுங்கடிச்சிடுச்சி…”
“இப்பவாவது உண்மையைப் புரிஞ்ச்சிக்கிட்டீங்களே?..”
“ஏதோ ஆத்திரத்துல அப்டிப் பேசிட்டேன். உன் மாமா வேற உசுப்பிவிட்டதுல… தப்பு தப்பா யோசிச்சு… தப்பு தப்பாப் பேசிட்டேன்… ஆனா உன்னை தப்பானவன்னு நான் என் மனசார என்னைக்குமே நினைச்சதில்லை… நினைக்கவும் மாட்டேன்.”
“நிஜமாவா?”
“ஆமாம் சுப்ரியா. பொறாமை.. என் ஈகோ… எல்லாம்தான் என்னை அப்டி நடந்துக்க வச்சிடுச்சு. ஆனா இப்ப என் தப்பை நான் உணந்துட்டேன்.”
“தாங்க் யூ.”
“ஆனா ஒரு விஷயம். உன் மாமா நல்லவரில்லை. நீ அவரை நம்பாதே.”
“நீங்க சொல்றது சரிதான் அஷோக். மனுஷர் என்னல்லாம் பேசுறார்? வாயைத் திறந்தாலே கெட்ட பேச்சு. அதுல அந்த கேசவன்… அவன் இளிப்பு. ச்சே.. நான் அவங்களோட உறவுக்கு எப்பவோ முற்றுப்புள்ளி வச்சிட்டேன்.”
“நீ ரொம்ப அப்பாவியா இருக்கே சுப்ரியா. எல்லாரையும் சுலபத்தில் நம்பிடுறே.”
“இல்லை அஷோக். இந்த அனுபவத்தில் நானும் நிறைய கத்துக்கிட்டேன். அந்தக் கேசவன்? பாக்க லூஸு மாதிரி இருந்துகிட்டு எவ்ளோ மோசமா நடந்துகிட்டான்? இந்த மாதிரி ஆளுங்ககிட்ட சகவாசமே வச்சிக்ககூடாதுன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.”
“நல்ல முடிவு. இன்னொரு நல்ல முடிவையும் நீ சீக்கிரம் எடுக்கணும்.”
“என்னது?”
“சீக்கிரமே நீ திரும்பவும் என் வீட்டுக்கு வரணும்.”
“நானும் என் அப்பாவும் சேர்ந்து உன்னை, உன் அம்மாவைப் பேசின பேச்சுக்கு அப்புறமும் உன்னை மறுபடி வீட்டுக்கு கூப்பிடவே எனக்கு வெக்கமாதான் இருக்கு. ஆனா, நீ எல்லாத்தையும் மறந்துடு…மன்னிச்சிடு.. ப்ளீஸ்..”
“உங்கப்பா என்னைக் கேவலாமாப் பேசும்போது நீங்க ஏன் எனக்கு ஆதரவாப் பேசலை?”
“பெத்த அப்பா. வயசிலப் பெரியவர். அவரைப் போய் எப்டி எதிர்த்துப் பேசறது..?”
“தப்பு பண்றீங்க அஷோக். நான் உங்களை நம்பி வந்தவ. நீங்களே எனக்கு அனுசரணையாப் பேசலைன்னா…வேற யாரு பேசுவா..?”
“உங்கப்பா என்னைத் தப்பா பேசும்போது நீங்க அவரைத் தட்டிக் கேட்ருக்கணும். என் முன்னாடி இல்லேன்னாலும் அவர்கிட்ட தனியாவாவதுப் பேசி அவருக்குப் புரியவச்சிருக்கணும்.”
“ம்… புரியுது சுப்ரியா. இனிமே அந்த தப்பு நடக்காது.”
“நடக்காதுன்னுதான் நானும் நம்பறேன். என் நம்பிக்கைக்கு ஒரு காரணம் இருக்கு.”
“என்ன காரணம்?”
“உங்ககிட்ட பிடிவாதமா சண்டை போட்ட நான் திடீர்னு சமாதானமானது எப்டின்னு யோசிச்சீங்களா?”
“அதானே? எப்டி இந்த அதிசயம் நடந்துது?”
“இந்த அதிசயத்தை நடத்தியவர் ஒரு முக்கியமான நபர். உங்களுக்கு ரொம்ப நெருங்கின உறவுக்காரர்.”
“அப்டியா? எனக்குத் தெரியாம யாரது?”
“உங்க அப்பா.”
சட்டென்று ஒரு ஆச்சரியம் அஷோக்குக்கு.
“நிஜமாவா? எங்கப்பாவா?” பரவசப்பட்டான்.
“ஆமாம்… உங்கப்பா எங்க வீட்டுக்க வந்திருந்தார். உங்களைப் பத்தின ஒரு முக்கியமான விஷயமும் சொன்னார்.”
“அப்டியா? அதென்ன விஷயம்?”
“அதை நீங்களாவே என்கிட்ட சொன்னாதான் நல்லாருக்கும்.”
“புரியலையே?”
“வேணுன்னா நான் ஒரு தடவை சொல்லிக் காட்டுறேன். அப்புறம் நீங்க சொல்லுங்க.”
“சரி. சொல்லு.”
“ஐ லவ் யூ”
சட்டென்று ஒரு ஆனந்தம். பரவசம்.
மனம் முழுக்கப் பொங்கியது அந்தக் கடலளவு சந்தோஷம்.
அவளின் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டான் அஷோக்.
“ஐ லவ் யூ டூ..”
கரையோடு ஊடுவதும் கூடுவதுமாக காதலை வீசிக்கொண்டிருந்தன அலைகள் – காலமெல்லாம்…!!!
ஆமாம் காலமெல்லாம் அவர்கள் வாழ்வில் இனி திருவிழாதான்… காதல் திருவிழா.
நன்றி : படம் இணையத்திலிருந்து
‘காதல் திருவிழா’ மகிழ்வுடன் நிறைவுற்றது.
இதுவரை இந்தக் கதையை வாசித்த, வாசித்துக் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் ஒரு கதையுடன் தங்களைச் சந்திக்கிறேன். நன்றி.
– கல்பனா சன்னாசி
One comment on “தொடர்கதை: காதல் திருவிழா”
rajaram
அருமை, சிறப்பு!