அத்தியாயம்-20
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17 அத்தியாயம்-18
அத்தியாயம்-19
அந்த மெயின் ரோட்டில் .அவ்வப்போது வண்டிகள் ஹாரனை அலற விட்ட படி சென்று கொண்டிருக்க , அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் நடந்தும் சைக்கிளிலும் சென்று கொண்டிருந்தார்கள். அங்கே தான் முத்து காத்திருந்தான். பிரியாவை கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை தான். இருந்தும் அவள் வேறொருவனை திருமணம் செய்வதை அவனால் ஏற்க முடியவில்லை. அதுவும் மதன் என்ற போது அவன் உடல் முழுக்கவே எரிந்தது. மதன் வீட்டிற்கு பக்கத்தில் தான் முத்துவின் நண்பன் வீடு இருந்தது. அவன் தான் மதன் வீட்டில் நடப்பதை எல்லாம் சொல்லி தகவல் கொண்டிருப்பான். அவனால் தான் மதன் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று வர முடிந்தது முத்துவிற்கு.
இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்தி வந்தவுடன் அந்த நண்பனிடம் விசாரித்தான். அவன் தான் பிரியா குடும்பம் வீட்டை காலி செய்து வந்து கொண்டிருப்பதாக சொன்னவுடன் இங்கே வந்து காத்திருந்தான். சிசிடிவி கேமரா இல்லாத இடமாய் பார்த்து தான் நின்றிருந்தான்.
தூரத்தில் டெம்போ வந்து கொண்டிருக்க , பின்னாலேயே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. முத்து புகைத்து கொண்டிருந்த சிகரெட்டை அணைத்து விட்டு பையில் அரிவாள் இருக்கிறதா என்று தொட்டு பார்த்து கொண்டான். ஒரே கேள்வி தான் . என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? மாட்டேன்னு சொன்னா போட்டு தள்ளிட வேண்டியது தான். டெம்போ கடந்தது. ஆட்டோ வந்தது. ரோட்டோரம் கிடந்த ட்யூப் லைட்டை எடுத்து ஆட்டோவின் முன்னே தரையில் அடித்தான். சிலுங்கென்று சத்தத்துடன் அது நொறுங்கி விழ ஆட்டோ நின்றது. டிரைவர் பதறிப் போய் ,”யோவ் என்னய்யா. ஏன் இப்படி பண்றே “எனறான்.
“நான் நில்லுன்னு சொன்னா நிப்பியா. மாட்டேல்ல. அதான்” என்றவன் டிரைவரை ஆட்டோ விட்டு இறங்குமாறு சைகை செய்தான். அவன் மறுக்கவே பையிலிருந்த அரிவாளை வெளியே எடுத்தான். ஆட்டோ டிரைவர் பீதியுடன் கீழே இறங்க கௌரியும் பிரியாவும் அவனை கோபத்துடன் பார்த்தனர். அவர்களும் இறங்க முயற்சிக்க ஆட்டோடிரைவர் சீட்டில் அமர்ந்த முத்து ” என்ன பிரியா இந்த ஏழையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டடு பணக்காரனோட கல்யாணமாமே. “
” தகுதி இருக்கிறவனை தானே கல்யாணம் பண்ணிக்க முடியும்”
” அப்ப நீ சொல்ற தகுதி வர்ற வரைக்கும் வெயிட் பண்ண சொல்லு உன் பொண்ணை”
“சீ தள்ளி போ.” பிரியா சீறினாள்.
” இங்க பார். என்னை வேணாம்ங்கிற உன்னை கொலை பண்றதுக்கு மனசே வர மாட்டேங்குது. ஆனாலும் நீ மதனை கல்யாணம் பண்ணா நான் உன்னை கொன்னுடுவேன்.”
“நீயே உன்னை சாகடிச்சிக்கோ.”
முத்து இதை கேட்டு அவள் மேல் பாய முற்பட குறுக்கே ஒரு கை வந்து தடுத்தது. நிமிர்ந்தான். மதன் ஆட்டோ அருகே நின்றிருந்தான். முத்துவின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினான்.
ஆட்டோ தொடர்ந்து வராதது கண்டு டெம்போவை திருப்பி கொண்டு வந்த மூர்த்தி நடப்பவற்றை கவனித்து இறங்கி ஓடி வந்தார்.
அப்போது மூச்சிரைக்க ஓடி வந்து முத்துவின் அருகே வந்தாள் அவனது அம்மா .
” டேய் எத்தனை தடவை சொன்னாலும் உன் மர மண்டையிலே ஏறாதா. ஒரு பொண்ணு வேணாம்னுசொல்லிட்டா விட்டுடணும்.
தொடர்ந்து போய் பிச்சை கேட்கற மாதிரி நிற்கிறியே. உன்னை பெத்தவ எனக்கே அவமானமா இருக்கு. உனக்கு இல்லியா. எழுந்தரிச்சு வீட்டுக்கு வாடா.” அதட்டினாள்.
முத்து பாய்ந்து எழுந்தான். அவள் அவனை பிடித்து தடுத்து ரோட்டின் மறு பக்கம் இழுத்து சென்றாள். முத்து அவளை உதறி விட்டு மதனை தாக்க ரோடை க்ராஸ் செய்து ஓடி வந்தான்.அப்போது தான் வேகமாக வந்த இளைஞனின் பைக்கொன்று அவனை மோதி தூக்கி அடிக்க ரோட்டோரம் இருந்த மரத்தின் மீது மோதி கீழே விழுந்தான் முத்து. அப்படியே மயங்கி விட்டான். மோதிய வேகத்தில் பைக் தடுமாறி சென்று கீழே சாய்ந்தது. அவனது அம்மா” முத்து ” என்று அழுத படியே ஓட மதனும் ஓடினான். முத்துவின் தலையிலிருந்து இரத்தம் வெளிப்பட்டு கொண்டிருந்தது.
மதன் ஆட்டோ டிரைவரை கூப்பிட்டான். மதன், மூர்த்தி ஆட்டோ டிரைவர் மூவருமாக சேர்ந்து ஆட்டோவில் ஏற்றினர் . முத்துவின் அம்மாவையும் ஏறி கொள்ள சொன்னான். ” “ஒண்ணும்பயப்படாதீங்க. என்ன செலவானாலும் அதை நான் ஏத்துக்கிறேன். என் பிரெண்டு விக்கிய ஆஸ்பிடல் அனுப்பி வைக்கிறேன். அவன் பார்த்துக்குவான்.”
முத்துவின் அம்மா அழுத படி கையெடுத்து கும்பிட்டாள்.
ஆட்டோ கிளம்பி சென்றது.
அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.
“நீங்க எப்படி இங்க.” மூர்த்தி கேட்டார்.
“என்னவோ தெரியல. உறுத்தலாவே இருந்திச்சு. அதான் வந்தேன்.”
அந்த நேரம் காரில் வந்து இறங்கிய விக்கி, ” இதெல்லாம் இல்ல. பொண்டாட்டிய பார்க்கிறதுக்காக பின்னாடியே வந்திருக்கான்.”
விக்கி கண்ணடித்தான்.
பிரியாவை பார்த்து மதன் அசடு வழிந்தான்.
“மாப்பிள்ளை வந்தது நல்லதா போயிடுச்சு”
“ஏன் என்னாச்சு.”
நடந்த விசயங்களை மூர்த்தி கௌரி இருவரும் சொல்ல. “சரி க்ளைமாக்ஸ்ல சண்டை இல்லேன்னா எப்படி. இத அப்படி எடுத்துக்குவோம்” கூலாக சொன்னான்.
விக்கி எடுத்து வந்த காரில் மதன் ஏறிக்கொண்டான். விக்கியை தான் வந்த பைக்கை எடுத்து கொண்டு ஆஸ்பிடல் சென்று பார்க்க சொன்னான். டெம்போவை பின் தொடருமாறு சொல்லி விட்டு மூர்த்தி கௌரியை காரின் பின்னே ஏறி கொள்ள சொன்னான். பிரியாவிடம் முன் சீட் இருக்கையை காண்பித்தான். பிரியா காரில் ஏறி அவனருகில் அமர்ந்தாள்.
காரை ஸ்டார்ட் செய்து கொண்டே பிரியாவை அவன் பார்த்த பார்வையில் நாம ஜெயிச்சிட்டோம் பார்த்தியா என்ற குதூகலம் இருந்தது.
மதன் பிரியாவின் திருமண செய்தி மீடியாவில் பேசு பொருள் ஆகியிருந்தது. எவ்வளவு பெரிய பணக்காரர் தன் பையனுக்கு தன் வீட்டு வேலைக்காரன் பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்க ஒப்புதல் அளித்திருக்கிறார் பார்த்தியா என்று விஜய ராகவனுக்கும் அவர் மனைவிக்கும் ஒரே பாராட்டு மழை. வலை தளங்களில் . இது விஜயராகவனை ரொம்பவே ஆச்சரியமூட்டியது. இதையும் சிலர் சும்மா டிராமா என்று கிண்டலடித்து கொண்டிருந்தனர்.
அடுத்து வந்த நாட்களில் மதனின் அம்மா அப்பா பிரியா வீட்டிற்கு சென்று பேசி தாம்பூலம் மாற்றி கொண்டார்கள். ஏற்கனவே கஷ்டபபட்டு சேர்த்த நகைகளுடன் தனக்கு வந்த செட்டில்மென்டில் நகைகளை வாங்கி பிரியாவுக்கு கொடுத்தனர். இதெல்லாம் வேண்டாம் என மதனின் அம்மா மறுத்தாலும் எங்க கடமை இது எனறார்கள்.
அடுத்து வந்த முகூர்த்த்திலேயே சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மீடியாவிலிருந்து பிரியாவை பேட்டி எடுக்க போட்டி போட்டார்கள். மதன் கல்யாணத்திற்கு பிறகு தான் என்று சொல்லி விட்டான். நடுவில் ஒரு நாள் வெளியில் எங்காவது போலாமா என்று பிரியாவிடம் கேட்டான். கல்யாணத்திற்கு அப்புறம் தான் என்று பிரியா சொல்லி விட்டாள். பௌன்சர்களை பிரியாவின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருந்தான். மதன் பெற்றோர் ஒரே மகன் என்பதால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கலயாணத்தை தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மதன் பிரியா திருமணம் சிறப்பாக நடந்தது. திரையுலகத்தினர் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நடிகர் பிரதீப் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தினான். அவன் வந்து செல்லும் வரை கூட்டம் அவனையே சுற்றி வந்தது. மூர்த்தியும் கௌரியும் அடிக்கடி கண் கலங்கினார்கள்.
திருமணம் முடிந்த அன்று முதலிரவு.
மதன் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்க உள்ளே வந்த பிரியா கண் கலங்கியிருந்தாள். மதன் அதிர்ச்சியாகி, ” என்னாச்சு ஏன் டல்லா இருக்கே. “
,”ஒண்ணுல்ல”
“சொல்லு பிரியா.”
தன் செல் போனை எடுத்து அதில் வாட்ஸ் அப்பில் வீடியோவை ஆன் செய்து கொடுத்தாள்.
மூர்த்தியும் கௌரியும் வீடியோவில் இருந்தனர்.
மூர்த்தி பேசினார்.
” பிரியா நல்ல மாப்பிள்ளை கிட்ட உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டோம். ………மனசுக்கு நிறைவா இருக்கு. ……. இனிமே உன்னை பத்தி கவலைப்பட போறதில்ல. ஏன்னா எங்களை விட சிறப்பா மாப்பிள்ளை உன்னை பார்த்துக்கிறாரு. கல்யாணத்திற்குள்ளாவே அதை நாங்க பார்த்துட்டோம். ……… நாங்க இனிமே இங்க இருக்க விரும்பல. மாப்பிள்ளை வீட்ல செட்டில் ஆகிட்டாங்கனு யாராவது சொல்லலாம். அப்படி சொல்லலைனா கூட என் மனசாட்சி சொல்லும்………….. அதனால நாங்க வெளியில் வந்துட்டோம்.நினைச்ச கோவில் போய் நினைச்ச இடத்துல தங்கிட்டு நினைச்சத சாப்பிட்டு வாழலாம்னு வந்துட்டோம். இது சந்தோசமான முடிவு தான். எங்களை தேட வேண்டாம். உங்களை பத்தி மீடியா மூலம் விசயத்தை தெரிஞ்சிக்குவோம். எப்ப எங்களுக்கு உங்களை பார்க்கணும்னு தோணுதோ அப்ப வரோம். நல்லாருங்க.”
பிரியா அழுதாள்.
,”ஒரு ஆணுக்கு தன்னோட அப்பா அம்மாவை பார்த்துக்கிற கடமை இருக்கிற மாதிரி மாமனார் மாமியாரை பார்த்துக்கிற கடமையும் இருக்கு. இத ஏன் மாமா அத்தை உணர மாட்டேங்கிறாங்க” என்றவன் விக்கிக்கு போன் போட்டான்.
” என்னடா இந்த நேரத்துல போன் பண்றே. எதுவாயிருந்தாலும் காலையுல பேசிக்கலாம். இப்ப என்ஜாய் பண்ணு.”
“டேய். நான் சொல்றத கேளுடா” என்றவன் மூர்த்தி கௌரி பற்றிய தகவல்களை சொன்னான். ” வீடியோவை அனுப்பறேன். பாரு. என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. நாளை காலை முதலிரவு ரூமை விட்டு நாங்க வெளியில் வர்றப்ப மாமா அத்தை ரெண்டு பேரும் வீட்ல இருக்கணும்” . என்று செல் போனை கட் செய்து டேபிளில் வைத்தான்.
மதன் திரும்புவதற்குள் பிரியா வேகமாக வந்து பின்னாலிருந்த படியே அவனை கட்டி கொண்டாள்.
“என்ன திடீர்னு.”
“என்னவோ தோணுச்சு. கட்டி பிடிச்சுக்கி்டேன்.”
“சரி விடு”
“மாட்டேன்.”
மதன் நினைத்தால் பிரியாவிடமிருந்து விடுபட முடியும். ஆனால் அன்பு பிடியிலிருந்து வெளி வர அவனா விரும்ப போகிறான்.எனவே தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தான்.
“எனக்கும் இது போல் உன்னை கட்டி பிடிக்க ஆசை இருக்காதா”
” நான் எப்ப விடறேனோ அப்ப கட்டிபிடிச்சிக்குங்க”
” எப்ப என்னை விடுவே”
“தெரியலியே”
–கதை நிறைவு-
————
கதையின் முடிவில் சில நிகழ்வுகளின் பின்குறிப்புகள்...
- மூர்த்தி கௌரியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள். செய்திதாளில் போட்டால் விசயம் மீடியாவுக்கு தெரிந்து விடும். எனவே பிரைவேட் டிடெக்டிவ் வைத்து தேடி வருகிறார்கள்.
- மதனின் அடுத்த படத்தின் நாயகனாக பிரதீப் ஒப்பத்தமானான். அவனே நான் நடிக்கிறேன் என்று கேட்டு கொண்டதால் மதனால் மறுக்க இயலவில்லை. பிரதீப் ரசிகர்களை இப்போது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். மதன் தான் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு வாய்ப்பை வாங்கியிருக்கிறான். என்று பிரதாப் ரசிகர்கள் முட்டு கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.
- மதனின் முதல் படத்தில் பிரதீப்பை கிண்டலடித்ததாக சொல்லப்பட்ட காட்சி இது தான். படத்தில் நாயகன் லவ் பண்ண பொண்ணை அப்பா அம்மா சொல்லிட்டாங்கனு விட்டு ஒதுங்கறவன் எல்லாம் ஆம்பளையா என்று பேசுவான். அந்த காட்சியில் நாயகனுக்கு பின்னே பிரதீப்பின் கட்அவுட் இருக்கும். நிஜ வாழ்க்கையில் பிரதீப் ஒரு நடிகையை காதலித்து அப்பா அம்மா ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே அந்த டயலாக் பிரதீப்பை மனதில் வைத்து சொன்னது தான் என்று பிரதீப்பின் ரசிகர்கள் நம்பினார்கள்.
- முத்து தலையில் இலேசாக அடிபட்டிருந்ததால் விரைவில் குணமானான். நான் இனிமே வேலைக்கு போறேன்மா. நீ போகாத. மதன் கிட்ட மருத்துவ செலவுக்கு ஆன பணத்தை கொஞ்ச கொஞ்சமா கொடுத்திடலாம் என்று சொன்னவனை அவன் அம்மா ஆச்சரியமாக பார்த்தாள். அவர் கிட்டேயே வேலை கேட்கறேன்டா… உனக்கு கொடுப்பார். என்றாள். முத்து மறுத்து விட்டான்.
- பிரியா மதன் வீட்டிலிருந்தால் அவன் கூடவே இருந்தாள். படப்பிடிப்பு முடிந்து வர தாமதாமானால் அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருந்தாள். மதனின் தாய் நீ சாப்பிட்டுட்டு படும்மா என்றால் பிரியா மறுத்து விடுவாள். மதனின் அப்பா இதற்காகவே மகனை கடிந்து கொள்ள ஆரம்பித்தார்.
- மதன் பிரியாவிற்காக புதிதாய் ஸ்கூல் ஆரம்பித்து தர முடிவெடுத்து அதற்கான வேலையை ஆரம்பித்திருந்தான்
- விக்கி மதனோடு படப்பிடிப்பில் வியர்வை சிந்தி உழைத்து கொண்டிருந்தான். அவனுக்காக பிரியாவும் மதன் அம்மாவும் பெண் தேடி கொண்டிருந்தார்கள்.
- மதன் பிரதீப்பை வைத்து இயக்கிய ‘பத்திரிகையாளன்’ என்ற திரைப்படம் மிக பெரிய விலைக்கு விற்கப்பட்டது. எங்கும் அப்படம் பற்றியே பேச்சிருந்தது. படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்கிறீர்களா? படம் பார்த்தீர்களானால் உங்களுக்கு தெரிந்து விட போகிறது
இதுவரை வாசித்து தங்கள் ஆதரவைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் ஒரு இனிய நாவலுடன் சந்திப்போம்.
– எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.