-பரிவை சே.குமார்.
சனிக்கிழமை மாலை கேலக்ஸி பதிப்பகம் இரு நிகழ்வுகளை ஒருங்கே நடத்தியது. அதில் முதல் நிகழ்வாக எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களின் நாவலான ‘மூக்குக் கண்ணாடி’யின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
புத்தகம் சார்பான கூட்டம் என்பது எப்போதுமே மனசுக்கு நிறைவாக இருக்கும். அதற்காக அபுதாபியில் இருந்து நாங்கள் துபைக்குப் பயணிக்கும் போது நிறைய விஷயங்களைப் பேசியபடி பயணிப்பது ஒரு சுகம் என்றால் நிகழ்வில் நண்பர்களைச் சந்திப்பதும் அளவளாவுவதும் அதைவிடச் சுகமான அனுபவமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக இலக்கியக் கூடுகை என்பது இல்லாமல் இருந்தது. அதை நேற்றைய கேலக்ஸியின் நிகவுகள் இரண்டும் தீர்த்து வைத்திருக்கிறது. எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களின் புத்தக வெளியீடும், எனது வாத்தியார் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக் கூட்டமும் ஒருங்கே நடைபெற்றது.
எப்பவும் போல் ஜெசிலா மேடத்தின் Proactive Excel Safety Consultancy அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதிகமான கூட்டம் இல்லை என்றாலும் அந்த நிகழ்வு சிறக்கும் வகையில் அரங்கு நிறைந்திருந்தது. விழா ஆரம்பிக்கும் முன்னரே புதிதாக வந்திருந்த நண்பர்களுடன் ஒரு அறிமுக நிகழ்வை நிகழ்த்திக் கொண்டோம். அது கூட பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்ந்து முதல் நாள் வகுப்புக்குப் போகும் போது அறிமுகப்படுத்திக் கொள்வோமே அப்படி வித்தியாசமாய், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
முதல் நிகழ்வாக எழுத்தாளர் திப்பு ரஹிம் எழுதிய ‘மூக்குக் கண்ணாடி’ என்னும் நாவல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்புரை நான்தான். வரவேற்புரை மற்றும் புத்தக அறிமுகத்தைப் பாலாஜி அண்ணன் செய்தார். கதை பேசும் களம், தனக்கு எழுத்தாளர் முதன் முதலில் அறிமுகம் ஆகும் போது ஓட்டுநர் என்று சொன்னதால் தனக்கு எதனால் அவர் மீது ஒட்டுதல் ஏற்பட்டது என்பதைச் சொல்லி, அவரிடம் இருந்து கதையைப் பெற்றதையும் அதைப் புத்தகமாக்க எடுத்த முயற்சிகள் மற்றும் இன்னும் சில விஷயங்களையும் விரிவாகப் பேசினார். பாலாஜி அண்ணனுக்குப் பேச்சு சரமாரி வரும் என்பதால் நிகழ்வை அசத்தலாக ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின் நான் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளரின் மாமனார் பெற்றுக் கொண்டார். நாம சிறிய உரை ஆற்றுவதென்றாலே யோசிப்பதுண்டு இதில் சிறப்புரை வேறு. அது போக மூக்குக் கண்ணாடி என்ன பேசுதுன்னு பேசலாம்ன்னு பார்த்தா பாலாஜி அண்ணன் அறிமுகத்திலேயே விரிவாகச் சொல்லி முடித்துவிட்டார். சில எழுத்தாளர்கள் எழுத்துப் பற்றிச் சொல்லியிருந்தவற்றைக் குறிப்பாக செல்போனில் சேமித்துக் கொண்டு போயிருந்தேன். ஆனா அதையெல்லாம் எடுத்துக் கூடப் பார்க்கலை. பேச நினைத்தது ஒன்றாக இருந்தாலும் அந்த இடத்தில் தோன்றியதைப் பேசினேன். இது நம்ம பேச்சுக்கு மூன்றாவது மேடை – மூணுமே கேலக்ஸி மேடைதான் – என்பதால் இந்த முறை கொஞ்சம் பதட்டமில்லாமல் பேச முடிந்தது.
நான் பேசும் போது எதைச் சொல்லணும்ன்னு நினைச்சோமோ அதைச் சொல்லாமல் விட்டதை ஜெசிலா மேடம் பேசும் போது உணர முடிந்தது. இன்னைக்கு கதை எழுதுவதற்கு வகுப்பெடுப்பதைப் பற்றி அன்றே இப்படிக் கற்றுக் கொள்வதால் கதை எழுதலாமே ஒழிய, உணர்ச்சிகளையும் உணர்வு லயத்தையும் அதில் கொண்டு வரமுடியாது என எழுத்தாளர் தி.ஜா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். அதையெல்லாம் எடுத்துப் பேசி எல்லாரும் எழுதலாம், என்ன அந்தக் கதை வாசிப்பவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் கதையாக, ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாசிப்பவன் தன்னை இறுத்திப் பார்க்கும் கதையாக இருக்க வேண்டும், அப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்றெல்லாம் பேசினேன்.
இருந்தாலும் பாருங்க ‘வாழ்வியலைப் பதிவு செய்யுங்க, ஆனா அதுக்காக நிறைய வாசிக்கங்க’ என எனக்கு எங்கய்யா சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் எனக்குப் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும். இந்த முறை ஊருக்குப் போனபோது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் புத்தகங்களை அள்ளிக் கொடுத்து இந்தக் கதைகளையும் நீங்க வாசிக்க வேண்டும். இது வித்தியாசமாகத்தான் இருக்கும் – காரணம் நம்ம எழுத்து கிராமத்துக்குள்ள சுத்துறதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும் – என்றாலும் எல்லாவற்றையும் வாசிக்கத்தானே வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தார். அதில் தீராநதி முடித்து கமழ்ச்சியில் முக்கால்வாசி முடித்திருக்கிறேன். மேடையில் கூட எல்லாரும் எழுதலாம் ஆனா நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் படிக்க வேண்டும், நம்மைச் சுற்றி நிகழ்பவற்றைக் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னவன் நிறைய வாசிக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டிருக்கிறேன் – பதட்டத்துல மறப்பது சகஜம்தானே – அதை ஜெசிலா மேடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி.
அடுத்ததாக எழுத்தாளரின் சார்பாக அவரின் நண்பர், அறைத் தோழர் ஒருவர் பேசினார். இவர் ஆரம்பத்தில் எழுதும் போதெல்லாம் நான் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அப்புறம் இவர் சிலவற்றை எனக்கு விளக்கிச் சொன்னபோதுதான் இவரிடம் சரக்கு இருக்கு என்பதைப் புரிந்து கொண்டேன். வரலாற்றுத் தொடராக மெக்கா முதல் மைசூர் வரை – கேலக்ஸியில் எழுதும் தொடர் – எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் திப்பு சுல்தான் பற்றி எழுதியிருப்பார், அவரிடம் உடையார் என்னும் ராஜா தனது ராஜ்ஜியத்தைக் கொடுத்ததைப் பற்றியெல்லாம் எனக்கு விளக்கிச் சொன்னார் என்று நிறையப் பேசினார். மேலும் இப்ப அவரின் எழுத்துக்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை வந்திருக்கிறது அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் சொன்னார். நண்பரைப் பற்றி நன்றாகவே பேசினார்.
எழுத்தாளரின் ஏற்புரைக்கு முன் அவருக்கு எழுத்தாளர் தெரிசை. சிவா அவர்கள் கேலக்ஸியின் சார்பாக பொன்னாடை போர்த்தினார்.
எழுத்தாளர் டிரைவராக இருந்து தற்போது சொந்தமாக வாகனம் வைத்துத் தொழில் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசும்போது சின்ன வயதில் ராணி இதழ் வாங்கி அதில் படங்களைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து அதன் பின் காமிக்ஸ் புத்தகங்கள், சுபா, பாலகுமாரன் எனப் பயணித்து, தற்போது பெரும்பாலான நேரங்களைத் தனது வாகனத்தில் செலவிடுவதால் எஸ்.ரா, பவா போன்றோரின் உரைகளைக் கேட்டு தனக்குள் இருக்கும் எழுத்து ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகச் சொன்னார்.
மேலும் தனது நாவல் குறித்துச் சொல்லும் போது தனது ஊரில், தனது பக்கத்து வீடுகளில், உறவுகளில் நடந்தவற்றைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால் அதை எல்லாம் கதையாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் தனக்குள் எழுந்தபோது நான் பார்த்து அனுபவித்த ஒரு கதையைத்தான் கற்பனையைக் கலந்து மூக்குக் கண்ணாடி என்னும் நாவலாக எழுதியதாகச் சொன்னார். இதற்கு முன் படைப்பு பதிப்பகம் மூலமாகத் தனது முதல் புத்தகத்தை வெளியிட்ட தகவலையும் சொன்னார்.
மூக்குக் கண்ணாடி சிறப்பாக வந்திருப்பதாகவும், அட்டைப்படம் ரொம்ப அழகாக இருப்பதாகவும் மகிழ்வுடன் சொன்னார். தொடர்ந்து கேலக்ஸியுடன் பயணிப்பேன் என்று சொல்லி எல்லோருக்கும் நன்றி சொன்னார். தனது புத்தகத்தை மாமனார் பெற்றுக் கொண்டதும், நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தியதும் கொடுத்த மகிழ்வு அவரது முகத்தில் தெரிந்தது.
இந்த மூக்குக் கண்ணாடி நாவலுக்கு அணிந்துரை எழுதியவனும் நான்தான், வெளியிட்டுச் சிறப்புரையும் நான்தான் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்வு.
புத்தக வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.
புகைப்படங்களுக்கு நன்றி : ஸ்ரீ ஹரீஸ், பால்கரசு.