முதல் நிகழ்வு : காப்பியக்கோ அவர்களின் இரு காப்பியங்கள் வெளியீட்டு விழா
தொகுப்பு : பரிவை சே.குமார்
சனிக்கிழமை (21/09/2024) மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சியில் நடைபெற்ற கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திர கூட்டத்தின் முதல் நிகழ்வாக இலங்கை எழுத்தாளர், அன்பின் ஐயா காப்பியக்கோ திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் இரண்டு காவிய நூல்களின் வெளியீடு நடைபெற்றது.
அன்பான மனிதர்களால் அரங்கு நிறைந்திருந்தது. ஆம் பெரிய அரங்கத்தில் நிகழ்வு நடக்கவில்லை என்றாலும் நிகழ்விடத்தை அன்பான மனங்கள் அழகாய் நிறைத்திருந்தன.
இந்த முறை நிகழ்ச்சி தொகுப்பாளராய் புதிய அவதாரம் எடுத்தார் சகோதரர் கலைஞன் நாஷ். என்னை மேடையேற்றி அழகு பார்ப்பது எங்க பாலாஜி அண்ணன்தான். அவர் ஆரம்பித்து வைத்த என் பயணங்கள் எல்லாமே சிறப்பானவையாக இருப்பதில் மகிழ்ச்சி என்பதை நிகழ்வின் இடையில்தான் சொன்னார் என்றாலும் அதை இங்கே முதலில் சொல்லுதலே சரியான முறையாகும். விழா என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதாய் இந்நிகழ்ச்சி அமைந்தது சிறப்பு.
‘நான் புதுசாத்தான் தொகுக்கிறேன்… அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு நான் என்ன பேசினாலும் நீங்க கேட்டுத்தான் ஆகணும்’ என்று சொல்லி நிகழ்வை ஆரம்பித்தார் நாஷ்.
சென்ற முறை தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்வு ஆரம்பித்தது இந்த முறை அப்படியெல்லாம் இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அனைவரும் பாட சிறப்பான நிகழ்வொன்று அழகாய் ஆரம்பித்தது.
வரவேற்புரையை கேலக்ஸி பதிப்பக நிர்வாகி பாலாஜி பாஸ்கரன் அவர்கள் வழங்கினார். நம்ம வாழும் காலத்தில் மரபில் எழுதக் கூடிய, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு மரபு சார் எழுத்தாளர் நம்ம காப்பியக்கோ ஐயா அவர்கள்தான், அவர்கள் தனது இரண்டு காப்பியங்களை நம்ம கேலக்ஸியின் இந்தக் கூட்டத்தில் வெளியிட இசைந்திருப்பது மகிழ்ச்சி. ஏதோ எழுதினோம் அதைப் பதிப்பித்தோம் என்றில்லாமல் இன்னமும் மரபு சார்ந்து, நாமெல்லாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவது ஐயாவின் சிறப்பு. நாம் கேலக்ஸியை ஆரம்பித்தபோது ஐயாவின் ‘மைவண்ணன் ராமகாவியம்’தான் முதல் நூலாக வெளிவந்தது. அடுத்ததாய் ‘ஏசு என்னும் ஈசா நபி காவியம்’ என்னும் நூலை நாம் வெளியிட இருக்கிறோம் என்றும் சொன்னார்.
ஐயாவின் ‘கலீபா உமர் கத்தாப்’ , ‘அருட்கொடையின் அருட்கொடை அன்னை ஆயிஷா’ என்ற இரண்டு காவியங்களின் வெளியீடும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. ‘அருட்கொடையின் அருட்கொடை அன்னை ஆயிஷா’ என்னும் நூலைப் பற்றி அறிமுக உரை ஆற்றி, வெளியிட்டவர் அமீரகத்தின் தொழிலதிபரும், கேலக்ஸியின் நலம் விரும்பிகளில் ஒருவருமான திரு. அபுதாகிர் அவர்கள், இந்நூலை எழுத்தாளர் ஜெசிலா பானு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கலீபா உமர் கத்தாப் என்னும் நூலைப் பற்றி அறிமுக உரை ஆற்றி, வெளியிட்டவர் அமீரகத்தின் தொழிலதிபரும், கேலக்ஸியின் நலம் விரும்பிகளில் ஒருவருமான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த திரு. முஹைதீன் அவர்கள், இந்நூலை திரு. அப்துல் பைஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். ஐயா ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு கேலக்ஸியின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
கலைஞன் நாஷ் பேசும் போது ‘மேடை’ என்ற வார்த்தையைச் சொல்லிவிட்டு , ‘இதை மேடை என்று ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு கலைஞன் – ஒருவேளை அவரைச் சொல்லியிருப்பார் போல – எங்கே நிற்கிறானோ அதுதான் அவனுக்கு மேடை’ என்றார். அவ்வப்போது சின்னச்சின்ன நகைச்சுவையையும் உதிர்க்க அவர் தவறவில்லை. அவரே சொல்லி அவரே சிரிக்காமல் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் நகைச்சுவையாக இருந்தது சிறப்பு.
திரு அபுதாகிர் அவர்கள் தனது சிறப்புரையில், ‘காப்பியக்கோ அவர்களை எனக்கு ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். அவர் ஒரு மிகப்பெரிய வல்லமை படைத்த, காவிய மேதை, காப்பிய மேதை ஆவார். 2010-ல் அவரின் திப்பு சுல்தான் பற்றிய நூல் வெளியீட்டை மிகச் சிறப்பாக நாங்கள் செய்தோம். திருவள்ளுவனையோ, கம்பனையோ, இளங்கோவையோ, உமறுப்புலவரையோ, ஔவையையோ நாம் பார்த்ததில்லை, அவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு உருவமாய்த்தான் ஐயா நம்முடன் இருக்கிறார். இப்படிப்பட்ட மாமேதை வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே சிறப்புத்தானே.
காப்பு, வெண்பாக்களை வைத்து எழுதும் ஒரே ஒரு மேதை இப்போது உலகத்தில் இவர் மட்டுமே. இவருக்கு முன்னால் கா.மு.ஷெரிப் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவரின் பிள்ளைத் தமிழ் மிகச் சிறப்பான காவியம், அதைவிட ஐயாவின் அன்னை கதீஷாவும் அண்ணலார் குடும்பம் மிகச் சிறப்பான நூல். இவரின் நூல்களில் யாப்பு இலக்கணம் மிகவும் எளிமையாக இருக்கிறது. அலியின் வீரத்தைக் குறிப்பிடும் போது அந்த வாளின் கூர்மையையும் ஒரே வரியில் சொல்லி விடுகிறார் ஐயா. தமிழ் சிறப்பான மொழி அல்லவா…? அது இலக்கிய மொழி, இசை மொழி என்றவர் ஐயா எழுதிய நூல்களின் பெயர்கள், அவர் பெற்ற விருதுகள் எல்லாவற்றையும் சொல்லி மகிழ்ந்தார்.
திரு. முகைதீன் அவர்கள் தனது சிறப்புரையில், ‘இந்த இரண்டு காவியத்திலும் இஸ்லாத்தில் அனைவரும் அறிந்த ஒன்றைத்தான் அற்புத காவியமாக ஐயா அவர்கள் தந்திருக்கிறார்கள். எங்கெல்லாம் நபிகள் நாயகம் அவர்கள் பற்றிப் பேசுகிறோமோ அங்கெல்லாம் அபுபெக்கர், உமர் கத்தாப், அன்னை ஆயீஷா ஆகிய மூவரும் இருப்பார்கள்.
நான் வெளியிட்ட இந்த கலீபா உமர் கத்தாப் அவர்கள் மெக்காவில்தான் பிறந்தார்கள் மதீனாவில்தான் இறந்தார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறியாமையின் இருளை அகற்றி ஒளியை ஏற்றியவர் நம் நபிகள் அவர்கள் என்று கூறி வரலாறு பற்றி விரிவாகப் பேசினார்.
மேலும் நான் உள்ளே வரும் போது ரெண்டு புத்தகத்தையும் பார்த்ததும் சில குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். எனக்கு அனுப்பியது டவுன்லோட் ஆகாததை அண்ணனிடம் சொன்னேன் என்றாலும் இங்கே வந்ததும் என்னால் குறிப்பு எடுத்துக் கொள்ளா முடிந்தது. அம்மா நல்லா இருக்கணும். அவர் நல்லா இருந்தாத்தான் ஐயா அவர்கள் இன்னும் நிறைய எழுதுவார்கள். நானும் ஒருநாள் ஐயா வீட்டுக்குப் போவேன், அம்மாவின் கைப்பக்குவத்தைச் சுவைக்க என்று சொல்லிவிட்டு உமர் கத்தாப் அவர்களைப் பற்றி இன்னும் விரிவான செய்திகளை மிகச் சிறப்பாகப் பேசினார்.
அடுத்து சிறப்புரை ஆற்றிய தொழிலதிபர், எழுத்தாளர் ஜெசிலா பானு அவர்கள் ஆரம்பிக்கும் போதே நிறைவான விழா என்றுதான் ஆரம்பித்தார். காப்பியக்கோ ஐயாவின் பேத்திகள் வந்திருப்பதைக் குறித்துச் சொல்லி, அவர்களுக்கு நாங்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் – தமிழ் அவர்களுக்குத் தெரியவில்லை – தங்களின் தாத்தாவுக்கு ஏதோ சிறப்பு செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார். எங்களுக்கு யாப்பு இலக்கணம் கற்றுக் கொடுத்தவர் ஐயா அவர்கள் என்றும் சொன்னார். வாளால் இஸ்லாம் வந்தது என்பது சொல்வார்கள் அப்படியில்லை அவர்கள் வாழ்ந்த விதத்தால்தான் நிறையப் பேர் இஸ்லாத்துக்கு வந்தார்கள் என்றும் சொன்னார்.
அண்ணாத்துரை அவர்கள் ஒருமுறை மேடையில் பேசுவதற்கு முன் என்ன தலைப்பு எனக் கேட்க, ஒண்ணுமில்லை என்று ஒருவர் எழுதிக் கொடுக்க, அதை வைத்து ஒரு மணி நேரம் பேசினாராம். அப்படித்தான் டீச்சர் அவர்களைப் பேச அழைக்கும் போது நான் என்ன பேச எனக் கேட்டு விட்டு இங்கே அருமையாகப் பேசினார்கள். ஐயாவைப் பற்றி என்ன பேசுவது என இன்று காலையில்தான் அவசர அவரமாக சிலவற்றைப் படித்து அறிந்து கொண்டேன். இங்கே அவரைப் பற்றி நிறைய விஷயங்களைப் பெற்றுக் கொண்டேன். ஐயாவைப் பற்றி இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்று சொன்னார் தொகுப்பாளர் நாஷ்.
ஐயா தனது ஏற்புரையில், ‘எனக்கு மிகவும் மகிழ்வான நாள். நான் நிறைய நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன், அதுவும் துபையில் எனது நூல்கள் நிறைய வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நான் ஒருவரை நினைவு கூறாவிட்டால் நன்றி கெட்டவனாகிவிடுவேன் என்று சொல்லி, என்னைத் துபைக்கு அறிமுகம் செய்தவர் கலையன்பன் ரபீக் அவர்கள். எனது பல நூல்களை இங்கே மிகப் பிரமாதமாக வெளியீட்டவர் அவர் என்றவர், நான் ஒரு இலங்கையன் என்றாலும் என்னை ஒரு இந்தியனாகவே ஆக்கிவிட்டீர்கள் நீங்கள்.
நான் ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருந்தன அப்போது நான் காவியம் எல்லாம் எழுதுபவனில்லை, காவியம் எழுதுவது என்பது சாதாரண விஷயமா… அது பெரிய விஷயமில்லையா…? அப்படியிருந்தும் என்னை எழுத வைத்தவர் ஒரு இந்தியர். எம்.ஆர்.அப்துல் ரஹீமை உங்களுக்கெல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன். எனது ஒரு கவிதைத் தொகுப்புக்கு அவர் ஒரு சாற்றுகவி எழுதிக் கொடுத்திருந்தார். அன்று முதல் அவர் என் மீது மிகுந்த நேசம் கொண்டவராக இருந்தார். நான் அடிக்கடி இந்தியா போகும் போது அவரையும் பெரும் புலவர் கா.மு.ஷெரிப் அவர்களையும் சந்திக்காமல் வருவதில்லை என்று சொன்னார்.
மேலும் அப்துல் ரஹீம் அவர்களும் அவருடைய தம்பியும் இருக்கும் போது என்னிடம் நீங்க ஒரு காவியம் பாட வேண்டும் என்று சொன்னார்கள். என்னால் எழுத முடியுமா என்ற பயத்துடன் அவர்களிடம் கேட்டேன். அவர்களோ உங்களால் எழுத முடியும் என அழுத்திச் சொல்ல, அவர்கள் சொல்லி விட்டார்களே என்பதால் கதைகளைத் தேடினேன். என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தி தமிழ் அறிஞர் சிவநாயகம் அவர்கள் பிரபலமாக இருக்கும் ஒரு நாவலை எடுத்து நீங்கள் காப்பியமாக எழுதுங்கள் என்றார்.
தன் மனைவி பற்றிப் பேசும் போது நான் இவள் இல்லாமல் எங்கும் போவதில்லை, எனக்குப் பயம். அப்போது என்றில்லை இப்போதும் அப்படித்தான் எனச் சொல்லிச் சிரித்துவிட்டு, இவள் இரவெல்லாம் வாசிப்பாள். தமிழைப் படித்தவள் என்றாலும் ஆங்கில மொழியில் வந்த அத்தனை புத்தகங்களையும் வாசிப்பாள். இப்போதும் அப்படித்தான் இரவு பனிரெண்டு மணிக்கு மேல்தான் கண்ணாடியைக் கழட்டுவாள். நான் ஒரு நல்ல நாவலை எடுத்து எழுத வேண்டுமே என இவளிடம் ஒருநாள் பேசும் போது நீங்க ஏன் நாவலைத் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் இதையே எழுதுங்களேன் என அவள் வாசித்துக் கொண்டிருந்த நூலைச் சொல்ல, அது இருநூறு பக்கங்கள் கொண்டது.
நான் எப்போதும் காலைத் தொழுகைக்குப்பின்தான் எழுத ஆரம்பிப்பேன். அப்படித்தான் அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். இருநூறு பக்கத்துக்கும் அறநூறு கவிதைகள் வருமாறு ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன். அதை ஹசனுக்கு அனுப்பினேன். எந்தப் பதிலும் இல்லை. ஒரு மாதத்துக்குப் பின் அவர் மகள் திருமண அழைப்பிதழுடன் ஒரு சிறு கடிதம் இருந்தது. அதில் நீங்கள் இன்னேரம் எழுதி முடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என எழுதியிருந்தார். அதன் பின்னே எழுதி முடித்தேன்.
அதற்குச் சிலம்பொலி செல்லப்பன் அண்ணன்தான் அணிந்துரை எழுதியிருந்தார், அதில் இந்த நூலின் தொடர்ச்சியாய் தொடர்ச்சியான மற்ற நாவல்களையும் எழுதித் தமிழிலக்கிய உலகுக்கு இரண்டு காப்பியங்களாய்த் தர வேண்டும் என்று எழுதியிருந்தார். அதற்காகவே ஆயிரம் கவிதைகள் கொண்ட நூலை எழுதி முடித்தேன். அதைத் தமிழகத்தில் இருவர் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்கள், இலங்கையில் மூவர் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றார்.
கா.மு.ஷெரிப்பைப் பார்க்கப் போன போது இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நானோ ஒன்றும் பண்ணலை என்று சொன்னதும் தன் கண்ணாடியை சற்றே கீழே இறக்கி விட்டுக் கொண்டு மேல் பார்வையாக ஒன்றும் பண்ணாமல் ஏன் சும்மாயிருக்கே என்றார். நான் உரிமையுடன் என்னத்தைச் செய்யச் சொல்றீங்க என்றதும் காவியம் பாடு என்றவர், நூஹ் நபியைப் பற்றிப் பாடு என்றார். குரானில் அவரைப் பற்றிக் கொஞ்சம்தானே இருக்கு என்று நான் சொல்ல, கொஞ்சத்தை வைத்து விரித்து எழுதுபவனே கவிஞன் என்று அவர் சொல்ல, நான் அவரைப் பற்றி எழுதி முடித்தேன்.
எனது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது காவியம் என எல்லாமே இந்தியர்களால்தான் வந்தது. ஒருமுறை என் தந்தையாரின் நூல் வெளியீட்டு விழா இங்கே -துபையில் – நடந்தது. அதுக்குப் பிரதம விருந்தினராக வந்திருந்தவர் இந்த நூலிலே நான் சமர்ப்பணம் செய்திருக்கும் டாக்டர் இக்பால் அவர்கள். அப்போது நான் பத்துக் காவியங்கள் எழுதியிருந்தேன். அதற்கு மேல் இனி எழுதுவதில்லை என்றிருந்த என்னிடம் பதினோராவது காவியமாக கதீஷா நாயகியைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னார். முதலாவது நோன்பு நாள் இரவில் அவர் சொன்னபோது சபையில் இருந்த எல்லோரும் ஆமீன் எனச் சொன்னதால் இதை எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்பவும் போல் காலைத் தொழுகைக்குப் பின் எழுத ஆரம்பித்தேன். நூறு நூறு கவிதைகளாக எழுதி அவருக்கும் தம்பி பாட்ஷாவுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தேன். பெருநாளுக்கு முந்தையா நாளில் ஆயிரத்து நானூறு கவிதைகளையும் எழுதி முடித்து விட்டேன்.
டாக்டர் இக்பால் அவர்கள் அந்தப் புத்தகத்தை அவரின் சொந்தச் செலவில் கொண்டு வந்ததுடன் இந்தியா, இலங்கை, துபையில் மிகப் பெரிய அளவில் விழா எடுத்தார். என்னுடைய புத்தகங்களை எல்லாம் நான் சொந்தச் செலவில் பதிப்பித்து இலங்கையில் என் செலவில் விழா எடுத்தவன்தான் என்றாலும் எந்தச் செலவும் நீங்கள் பண்ணக் கூடாது, இதற்கான எல்லாச் செலவையும் நான்தான் செய்வேன் எனச் சொல்லி மிகப்பெரிய இடங்களில் விழாவினை நடத்திய பெருந்தகை அவர் என்றார் மகிழ்வாய்.
நான் ஒவ்வொன்றையும் எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கதான்… அதனால் சந்தோசப்பட வேண்டியவர்கள் நீங்கள். இது உங்களின் சொத்து. உமர் கத்தாப் பற்றி என்னுடைய மக்கள் எழுதச் சொன்னார்கள். என் மனைவி பெயர் ஆயிஷா, எனக்குப் பக்க பலமாக இருக்கும் ஆயிஷாவைப் பற்றி எழுத வேண்டாமா…? அதற்காக எழுதினேன் என்று நினைக்க வேண்டாம் என் மனைவியைப் பற்றி இல்லை ரசூல்லல்லாஹ் அவர்களின் மனைவியைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்லிச் சிரித்தார். எதிர் வரிசையில் அமர்ந்திருந்த அவரின் மனைவியும் சிரித்தார்.
என்னை எழுதத் தூண்டியவர்கள் நீங்கள்தான்… நான் சந்தோசப்படுகிறேன். இதுவரை பதினான்கு காப்பியங்கள் எழுதியிருக்கிறேன். எனக்குச் சும்மா இருக்கப் பிடிப்பதில்லை… எதையாவது எழுத வேண்டும். அப்படி எழுத நினைத்ததுதான் ஈசா நபியைப் பற்றி. ஏற்கனவே கண்ணதாசனின் ஏசு காவியம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் நானும் ஏசு என்னும் ஈசா நபி பற்றி எழுதியிருக்கிறேன். என்னுடைய பணி எழுதுவதுதான்… நான் இலங்கையில் பிறந்தவன் என்றாலும் முழுக்க முழுக்க உங்களுக்குச் சொந்தமானவே, என்னை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்… உங்களாலேயே வளர்ந்தும் நடந்தும் கொண்டிருக்கிறேன் என்றார்.
நான் இதுவரை இருபதினாயிரம் செய்யுள்கள் எழுதியிருப்பேன். காவியங்களில் மட்டுமே பதினாயிரம் செய்யுள்களுக்கு அதிகமாக எழுதியிருக்கிறேன். அத்தனையும் மரபுக் கவிதைகளே… ஆரம்ப காலத்தில் இளம் வயதுத் திமிரில் என்னுடைய எழுத்துக்களில் கடுமையான சொற்களைப் புகுத்தி எழுதியிருப்பேன். இப்போது எல்லாருக்கும் புரியும்படி எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதையெல்லாம் நான் இங்கே சொல்லக் காரணம் இந்த விழாவையும் இந்தியர்களாகிய நீங்களே நடத்துகிறீர்கள்… எல்லாவற்றையும் நீங்களே செய்யுங்க, எங்களுக்கு எந்தப் பெருமையையும் தந்து விடாதீர்கள் என்று மகிழ்வோடு பேசினார்.
என்னைப் பார்த்து எல்லோரும் வாப்பா என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். எனக்குக் கிட்டத்தட்ட நூறு புள்ளைகளாவது இருப்பார்கள். நான் எல்லாருக்கும் வாப்பாவாக இருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நான் பிறந்தது இலங்கையில் என்றாலும் எனது இலக்கிய வாழ்வைக் கொடுத்தது இந்தியா, எனது புத்தகங்களை வெளியிட்டது துபை என்று சொன்னதுடன் ஒரு நல்ல மனைவி கிடைக்கவில்லை என்றால் ஒருவருக்கு வளர்ச்சி இல்லை, என்னுடைய வளர்ச்சி என் மனைவியால்தான் என்று சொல்லித் தன் குடும்பத்தைப் பற்றிப் பேசி, என் பிள்ளைகள் நல்ல நிலமைக்கு இருப்பதற்குக் காரணம் என் மனைவிதான், குடும்பப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளவே இல்லை அதையெல்லாம் எடுத்துக் கொண்டவள் அவளே.
என் மனைவி ஆங்கில மொழிதான் அவள் கற்றாள் என்றாலும் அவளுக்குச் சிங்களும் தமிழும் நன்றாக வரும். தமிழ் மொழியைப் பேராசிரியர் சிவதம்பியிடம் அவள் கற்றுக் கொண்டாள். இப்போதும் எனக்கு லகர, ளகரப் பேதங்கள் வரும். அப்போதெல்லாம் அவளிடம் போய் நிற்பேன், அவளே திருத்துவாள். ஒரு மனிதனுக்கு முதலில் இறைவன் அருள் கிடைக்க வேண்டும், நல்ல தொழில் கிடைக்க வேண்டும், நிறைந்த செல்வம் கிடைக்க வேண்டும், நல்ல மக்கள் கிடைக்க வேண்டும், மகளுக்கு நல்ல மருமகன் கிடைக்க வேண்டும் என்று எனது ஆசிரியர் சொல்வார். இப்போது என் மருமகள் என்னை நல்லாக் கவனித்துக் கொள்கிறாள். புதுமணத் தம்பதிகள் என்னிடம் ஆசி கேட்டால் ‘என்னைப் போல் வாழுங்கள்’ என்று வாழ்த்துவேன். அதற்குக் காரணம் நான் அழகாக வாழ்ந்து விட்டேன்… மகிழ்வாகவும் வாழ்ந்து விட்டேன் என்றார்.
காப்பியக்கோ அவர்கள் நான் அதிகம் பேசுகிறேனா என அடிக்கடி கேட்டுக் கொண்டே பேசினாலும் மிகச் சிறப்பான பேச்சு. அருமையாக, அழகாகப் பேசினார். அவரின் பேச்சைக் கேட்க நாங்கள் கொடுத்து வைத்திருந்தோம்.
திரு. அபுதாகிர் அவர்கள் ஐயா காப்பியக்கோ அவர்களுக்கும் அண்ணன் பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெசிலா பானு அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ, இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
விழா முடிந்தும் அடுத்த நிகழ்வையும் பார்த்து விட்டுச் செல்கிறோம் என ஐயாவும் அவரின் குடும்பமும் இருந்ததில் முதல் முறை மேடையேறி, அழகான மழலைத் தமிழில் கதை சொன்ன அமீரகத் திராவிடப் போர்வாள் பிலால் அவர்களின் இரண்டு செல்லங்களுக்கும் ஐயாவின் ஆசி கிடைத்தது. மிகவும் மகிழ்வான நிகழ்வு இது.
படங்கள் : பால்கரசு சசிகுமார்.