திப்பு ரஹிம்
தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிகம் நாவல்கள் தான் மக்களை வியாபித்து இருந்தது. ஆரம்பத்தில் குடும்பக் கதைகளாகவும், பிறகு சமூக, காதல் கதைகளாகவும் இருந்துள்ளது. பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட நூல்கள் என்றால் அது டிடெக்டிவ் நாவல்கள் தான். அதிலும் குறிப்பாக நான் அதிகம் வாசித்தது சுபாவினுடைய நாவல்கள்.
தொலைக்காட்சியின் வரவாலும் நாடகத் தொடர்களாலும் மெல்ல மெல்ல புத்தகங்களின் ஆதிக்கம் குறைய தொடங்கியது. கொஞ்ச காலம் கழித்து மீண்டும் புத்தகங்கள் வர துவங்கியிருந்தாலும் டிடெக்டிவ் நாவல்கள் அத்தி பூத்தார் போல் எப்போதாவது வருவதுண்டு.
அப்படி ஒரு புத்தகமாய் சமீபத்தில் வெளியான ‘ஆரச்சாலை’யைச் சொல்லலாம். கேலக்ஸியில் தொடராக வந்து, பலரால் பாராட்டப்பட்டு, அதன்பின் புத்தகமாய் வெளிவந்து பெருமளவில் விற்பனையான இந்தப் புத்தகத்தை மருத்துவர் சென்பாலன் அவர்கள் எழுதியிருக்கிறார். சுபாவினுடைய நாவல்களைப் படிக்கும் போது ஏற்பட்ட அதே அனுபவத்தையும் விறுவிறுப்பையும் இந்த புத்தகம் தந்து விடுகிறது.
சென்பாலன் அவர்கள் எழுத்தில் நாமும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்டாக மாறி விடுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாகன விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. அது பேய் சாலையாக மாறி அந்த சாலையை நினைத்தாலே மக்கள் பயப்படும் நிலைக்கு தள்ளி விடுகிறது.
என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க, அதற்காக சென்பாலன் அவர்கள் நிறைய திருப்பங்கள் நிறைந்த, நவீன கால உபகரணங்கள் என்று எழுதி திக்கு முக்காட வைத்து விட்டார். கூடவே பல புதிய அறியப்படாத செய்திகளையும் சொல்லியுள்ளார். ஒருவேளை இந்த நாவல் 25 ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்தால் மிகப்பெரியதாக கொண்டாடி இருப்பார்கள்.
உலகம் முழுவதும் நாவல்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் நமது நாட்டில் நாவல்களின் வரவு மிகக் குறைவாகவே இருக்கிறது. அதிலும் இதுபோன்ற நாவல்கள் வருவதே இல்லை. அதை போக்கி ஆரச்சாலை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது. இனி அதிகம் இது போன்ற நாவல்கள் வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
புத்தகம்: ஆரச்சாலை
ஆசிரியர்: சென்பாலன்
வெளியீடு: கேலக்ஸி பதிப்பகம்
விலை : ரூ.180 /