by இத்ரீஸ் யாக்கூப்

தன்னைக் கிஞ்சித்தும் மதிப்பதில்லை. தன் முன் குரலுயர்த்துகிறான். ஒரு பிரஞையுமில்லாமல் அலுவகத்தில் அதுவும் தான் இருக்கும் நேரங்களில் கூட சிரிப்பும், விளையாட்டுமாய் யாருடனாவது எதையாவது எப்போதும் சத்தமாகப் பேசிக் கொண்டேயிருக்கிறான். ஒரு இடத்தில் பணி புரிகிறோம் என்ற தன்னுணர்வே அவனுக்கு துளியுமில்லை!
குறைந்தபட்சம் தான் அவனைக் கடந்து செல்லும் வேளைகளில் கூட அவன் தன் குரலைத் தாழ்த்திக் கொள்வது கிடையாது போன்ற பல வருத்தங்களிலும், மனக்குமுறல்களிலும் தனக்கு கீழ் வேலைப் பார்த்து வந்த ஜுனியர் அக்கௌடென்ட் ஹரீஷை, துணை மேலாளரான சம்பத்திற்கு ஆரம்பத்திலிருந்தேப் பிடிக்காமலேப் போனது. இத்தனைக்கும் இன்டெர்வியூவில் அவனையேத் தேர்ந்தெடுக்கும்படி எச் ஆருக்குப் பரிந்துரைத்ததும் இதே சம்பத்துதான்! அந்த ஞாபகமும் வேறு வந்து அவனை அவ்வப்போது அலைக்கழிக்கும்! இப்படியா தவறு செய்வோம் என்று!
ஆனால் யாருடனும் கலகலப்பாகவும், வெளிப்படையாகவும் நடந்து கொள்ளும் ஹரீஷிற்கும் சம்பத்தின் ரிசெர்வ்ட் குணமும், கடுகடுப்பான முக பாவனைகளும் துரும்பளவில் கூட எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்!
பார்க்க என்னதான் ஹரீஷ் கவனமில்லாதவன் போல சம்பத்திற்கு தோன்றினாலும் பணிக்கும் வேலைகளை கொடுத்திருந்த கால வரையறைக்குள் பொறுப்புடனே செய்து முடித்திருப்பான். ஆனாலும் சம்பத்திடமிருந்து தனிப்பட்ட முறையில் எந்தவொரு பாராட்டோ, குறைந்தபட்ச புன்னகை முகமோ வெளிப்பட்டிருக்காது. ஏனென்றால் ஓரிரு வார்த்தைகள் என்றாலும் கூட அவனுடையப் பேச்சு சத்தம் சம்பத்திற்கு அறவே ஆகாது! அப்படி சம்பிரதாயத்திற்காவது ஊக்குவித்து ஓரிரு வார்த்தைகளைப் பேசினாலும் நன்றி சார்! என்று அவன் வாயிலிருந்து ஒரு சொல் வெளிப்பட்டுவிடுமே! குறைந்தபட்சம் அதைக் கூட காதுகொடுத்து கேட்கும் பொறுமையோ, சகிப்போ சம்பத்திடம் இருந்ததேயில்லை!
அட புன்னகைக்க ஒரு முகம் வேண்டாமா? அது கூட சம்பத்திற்கு கைவராத சவால்தான்! ஆனாலும் சம்பத், ஹரீஷிடம் மட்டும்தான் அப்படி நடந்து வந்தான். ஹரீஷிற்கும், சம்பத்துடைய கனிவான குணமும், சிரித்துப் பேசும் இன்னொரு முகமும் தெரியும். அவைகள்தானே இவனையேத் தேர்ந்தெடுக்கும்படி நேர்முகத் தேர்வு முடிந்தப்பின் பரிந்துரைத்தது!
சென்ற மாதம், சில நாட்கள் சம்பத் கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டு வந்தான். மருத்துவமனைக்கு செல்வதும், உடலில் பகுதிகளில் தடவும் வலி நிவாரணியின் பிசுபிசுப்பும், மணமும் அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்பதால் கையிலிருந்த மாத்திரைகளைத் தவிர வேறெதையும் நாடவில்லை. மாத்திரைகளும் கைகொடுக்காமல் போகவே, அவ்வலியோடையே சகித்த முகமாய் அலுவலகம் வந்துச் சென்றான்.
இதை கவனித்து, அக்கறையோடு பிரசச்னையைக் கேட்டறிந்த ஹரீஷ், அடுத்த நாள் ஒரு வலி நிவாரணி ஆயின்மென்ட் ஒன்றை சம்பத் இல்லாத நேரத்தில், அவனுடைய அறைக்கு வந்து மேசைமீது வைத்துச் சென்றிருந்தான் கூடவே – ” டியர் சார், ப்ளீஸ் யூஸ் திஸ் ஆயின்மென்ட் ஃபார் யுவர் நெக் பெயின் – ஹரீஷ்” என்ற குறிப்புச் சீட்டோடு! இதைக் கண்ட சம்பத்திற்கு ஏக ஆச்சர்யம்!
கொஞ்சம் நெகிழ்ச்சி! ஆனால் அதை சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஹரீஷை கண்ட வேளையில் ‘நன்றி’ என்ற சொல்லும் அவன் நாவிலிருந்து பிறக்கவில்லை! இருப்பினும் சம்பத்திற்கு அது வருத்தத்தைத் தந்தது. தன்னுடைய இயல்பை கடிந்து கொண்டான்.
ஹரீஷ் இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் தனக்கு வேறொரு நிறுவனத்தில் நல்லதொரு வேலைக் கிடைத்திருப்பதாக ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்திருந்தான்.
சம்பத்திற்கு அந்த ஈமெயில் எந்தவொரு இழப்பையும், ஏற்படுத்தியிருக்கவில்லை! ஆனால் மகிழ்ச்சி கொண்டான். இனி அலுவலகத்தில் தேவையில்லாத பேச்சு சத்தங்கள் கேட்காது என்ற நினைப்பு அவனை ஆசுவாசப்படுத்தியது. ஹரீஷைத் தவிர்த்து, சம்பத்திற்கு கீழ் பணி புரியும் சரவணன், வருண், ரித்வி என மற்ற சிலரும் கூட அங்கே உண்டு. ஆனால் யாரும் ஹரீஷை போல நடந்து கொண்டதில்லை; பேச்சிலும் சரி, செயலிலும் சரி அனைவருமே சம்பத்திடம் அதிகம் பவ்யம் காட்டுபவர்கள். அவனுடைய குணநலன்களுக்கு ஏற்ப ஒத்திசையோடு நடந்து கொள்பவர்கள். அதை பயம் என்றும் சொல்லலாம், மரியாதை என்றும் சொல்லலாம் அல்லது புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம்.
சம்பத், ஹரீஷின் கடைசி நாளில் தான் அலுவலகத்தில் இல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டான். அது ஹரீஷிற்கும் எந்தவித இழப்பையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் அலுவலகத்திலிருந்து மற்ற நண்பர்களோடு வழக்கத்தை வோட இரு மடங்கு ஆரவாரங்களோடும், உற்சாகத்துடனுமே அந்த நாளினையும் கழித்தான். மின்னஞ்சலில் அனைவருக்கும் தனது மானசீகமான அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டான். பெறுவோரின் பட்டியலில் சம்பத்தின் பெயரே முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றவர்கள் வரி வரியாய் ஹரிஷுடனான தங்களின் மகிழ்ச்சியான நாட்களைக் குறிப்பிட்டு, அடுத்தடுத்த வெற்றி நகர்வுகளுக்கான வாழ்த்து மழைப் பொழிந்திருந்தாலும். சம்பத் மட்டும் கடமைக்கு ‘குட் லக் ஹரீஷ்!’ என்ற மிகவும் சுருக்கமான சம்பிரதாய வாழ்த்தோடு(?) முடித்துக் கொண்டான். நல்வரவு, நன்றி என அச்சிடப்பட்ட வாசல் மிதியடி கூட காண்போருக்கு சிறு முறுவலைத் தரத்தானே செய்கிறது! சிப்பிப் பிடித்துக் கொள்ளும் ஒற்றை மழைத் துளியாய் ஹரீஷும் மனக்கரம் கூப்பி அந்த நொடியையும் அழகாக்கி ஒரு நிறைவானச் சிரிப்பை வெளிப்படுத்தினான்.
அத்தோடு நின்றுவிடாமல் அலைப்பேசியில் சம்பத்தை தானேத் தொடர்பு கொண்டும் பேசினான் ஹரீஷ். அப்போதுதான் ‘வீ வில் பி இன் டச் ஹரீஷ்!’ தன்னையுமறியாமல் ஒரு செயற்கையான நெருக்கத்தைக் காட்ட முயன்றான் சம்பத்.
ஹரீஷ் சென்றபின் அந்த அலுவலகமே சம்பத் நினைத்தது போல் அமைதிப் பூங்காவானது. அடுத்து வந்த சில நாட்கள் மட்டும், ஹரிஷோடு நெருங்கிப் பழையவர்கள் எதார்த்தமாக சம்பத்தைக் காணும் வேளைகளில் ‘அவனை ரொம்ப மிஸ் பண்றோம்ல?’ என்ற உச்சுக் கொட்டி நகர்வார்கள். சம்பத், அவர்களைப் பார்த்து ஒரு குளிர்ந்தப் புன்னகையை பதிலாக வீசிச் செல்வான்.
இதில் வினோதம் என்னவென்றால் அன்று ஹரீஷ் தன் மேசையில் வைத்துச் சென்ற அந்த ஆயின்மென்ட்டையும், அந்த மஞ்சள் நிற குறிப்புச் சீட்டையும் ஒரு ஞாபகச் சின்னம் போல் வைத்திருக்கிறான். எப்பவாது அதை எடுத்துப் பார்ப்பான். நெகிழ்ச்சியாய் உணர்வான்.
ஒரு நாள், சில நாட்கள் தாமாகவே நின்றிருந்த கழுத்து வலி மீண்டும் ஆரம்பித்தது போல் சம்பத் உணரவே, அவனது பார்வை அந்த சீட்டின் மீதும், மருந்தின் மீதும் ஒரு பரிசுப் பொருளைப் பார்ப்பது போல் படிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் முதன் முறையாக குப்பியைத் திறந்து, வண்ணத்துப் பூச்சியின் வாலைத் தொடுவது போல் அந்த மருந்தை மெல்லப் பிதுக்கி, வலியுள்ள இடத்தில் தடவிக் கொள்ள ஆரம்பித்தான்.
மருந்தின் நறுமணமில்லாத இனிய வாசமும், குளுமைக் கலந்த வெப்பமும் புத்துணர்வூட்டியது. அன்று அவனுக்கு ஹரீஷைத் தொடர்பு கொண்டுப் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் செய்யவில்லை.
***
