தொகுப்பு: பாலமுருகன்.லோ
கி.வா.ஜகந்நாதன் அவர்களின் கதைகள்:
இக்கதைகள் எல்லாம் ‘அதிசயப் பெண்‘ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. என்னைக் கவர்ந்த எழுத்துலக ஜாம்பவான்களில் திரு. கி.வா.ஜகந்நாதனும் ஒருவர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மிக எளிய நடையில் அவரது கதைகள் எல்லாம் அமைந்திருக்கும். இவரது கதைகளைப் பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் படிக்கும்படியாகவே அவர் எழுதியிருப்பார். குழந்தைகளுக்கு நீதிக் கதைகளை நிறையவே எழுதியிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் மொத்தம் ஒன்பது கதைகள் அமைந்துள்ளன. இதில் குழந்தைகள் ரசிக்கும் வகையில் கீழே உள்ள ஐந்து கதைகளைப் பற்றி நான் விவரித்துள்ளேன்.
அதிசயப் பெண்
இக்கதையானது திரு கி.வா.ஜகந்நாதன் அவர்களால் எழுதப்பட்டது. இந்த தொகுப்பின் பெயர் ‘அதிசயப் பெண்’. இந்த தொகுப்பினில் பல குறுங்கதைகள் உள்ளடங்கியுள்ளன. இப்போது ‘அதிசயப் பெண்’ என்ற குறுங்கதையைப் பார்ப்போம்.

வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியாவதி என்ற அழகிய பெண் இருந்தாள். அவளைப் போல் உலகில் இரண்டு மூன்று நபர்கள் தான் உண்டு, அவ்வளவு அழகு. ஊரில் உள்ள ஆண் பிள்ளைகள் வித்தியாவதியைத் திருமணம் முடிக்கப் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவளின் தந்தையோ, ஒரு அறிவுள்ள அழகிய தேகம் கொண்ட ஆண் மகனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, தன் மகளைப் பற்றிப் பேச வருகின்ற ஆண்மகனிடம், “அவளது அழகை நம்பாதே; அவளது சுபாவத்தைச் சொல்கிறேன் கேள்,” என்று கூறினார்.
அப்படித்தான் ஒருவன் வந்து வித்தியாதரரிடம், “உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்,” என்றான். உடனே வித்தியாதரர், “இதைக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வா,” என்றார். வந்தவன், “என்ன? சொல்லுங்கள்,” என்றான். “அவள் கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிந்துவிடுவாள்,” என்றார். வந்தவன், ‘இவள் ஒரு அதிசயப்பெண், நமக்கு உபயோகப்படமாட்டாள்’ என்று எண்ணி வந்த இடம் தெரியாமல் திரும்பிவிட்டான்.
சில நாட்கள் கழித்து மற்றொருவன் வித்தியாவதியின் தந்தையிடம் அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து வந்தான். அவனிடம் மேலே கூறிய இரண்டையும் சொல்லி, மேலும் ஒன்றைக் கூறினார். அதாவது, “வேகாத இலையையும், வெட்டின காயையும், வெந்த கல்லையும் கலந்து கொண்டுவந்து வைப்பாள்,” என்றார். வந்தவன், ‘என்ன ஒரு அதிசயப் பெண்!’ என்று நினைத்து ஓடிவிட்டான்.
சில மாதங்கள் கழிந்தன. வித்தியாவதியின் தந்தையடம் ஒருவன் வந்து, “உங்கள் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்,” என்றான். உடனே அவர் மேலே கூறியவற்றையெல்லாம் கூறிவிட்டு மேலும் ஒன்றைக் கூறினார். “வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள்.” வந்தவன் கேட்டுவிட்டு மௌனமாகச் சென்றுவிட்டான்.
நல்ல ஆண் பிள்ளையைத் தேடிப் பிடித்துத் தன் பெண்ணுக்குத் திருமணம் முடிக்கவேண்டும் என்ற ஒரே நினைப்பில் அவர் செயல்பட்டார். ஒரு நாள், நல்ல அழகான வாலிபன் வித்தியாவதியின் தந்தையிடம் வந்து பேச முற்பட்டான். அவனது அணுகுமுறையைக் கவனித்த வித்தியாதரர், அவனிடம் பேச முற்பட்டார். வந்தவனும் அவனது எண்ணத்தை வெளிப்படுத்தினான், அதாவது வித்தியாவதியைத் திருமணம் செய்யத் தயார் என்று கூறினான். உடனே அவர் வழக்கம்போல் மேலே கூறிய அனைத்தையும் கூறி மற்றும் ஒன்றை அவனிடத்தில் கூறினார். “இரண்டு மாட்டின் மேல் படுத்துத் தூங்குவாள்,” என்று கூறினார்.
வந்தவன், ‘என்ன இது? பெற்ற பிள்ளையைப் பற்றி அவளது தந்தையே இப்படி யாராவது கூறுவார்களா? இங்கு ஏதோ ஒரு மர்மம் புதைந்திருக்கிறது, என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்’ என்று நினைத்து அவரிடம், “அவள் எப்படி இருந்தாலும் சரி, அவளை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று பதிலளித்தான். உடனே பெண்ணின் தந்தை, அவனது பொறுமையையும் மற்றும் அவனது உடல் அமைப்பையும் பார்த்த பிறகு, அவன் வித்தியாவதிக்குத் தகுதியானவன் என்று முடிவெடுத்துத் திருமணம் செய்து வைத்தார்.
வித்தியாவதி தன் கணவனுடன் தனது திருமண வாழ்வைத் தொடங்கினாள். ஒரு நாள் தன் கணவனிடம், “என் தந்தை என்னைப் பற்றிக் கூறிய பிறகு எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?” என்றாள். “‘கல்லைப் போட்டுச் சமைப்பேன்’ என்றார் அல்லவா!” என்றாள். உடனே அவளது கணவன், “ஆம், நீ உப்புக் கல்லைப் போட்டுத் தான் சமைப்பாய் அல்லவா?” என்றான். “ஆதார வஸ்துவை வெளியில் எறிந்துவிடுவது சரியா?” எனக் கேட்டாள். அவன், “ஆம், சமைத்த உணவுப் பண்டத்தை வாழை இலையில் வைத்துச் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்ட பின் அதனை எடுத்து வெளியில் எறிந்துவிடுவது வழக்கம் அல்லவா! இதில் ஆதார வஸ்து வாழை இலைதான்,” என்றான்.
அவள் உடனே தன் கணவனிடம், “‘வேகாத இலையையும், வெட்டின காயையும், வெந்த கல்லையும் கலந்து கொண்டுவந்து வைப்பாள்’ என்றாரே? இதற்கு என்ன பொருள்?” என்றாள். “வேகாத இலை (வெற்றிலை), வெட்டின காய் (பாக்கு), வெந்த கல் (சுண்ணாம்பு),” என்றான்.
“கடைசியாக, ‘இரண்டு மாட்டின் மீது தூங்குவேன்’ என்று சொன்னாரே, அதற்கு என்ன பதில்?” என்றாள். “நானே தலைமாட்டிலும் கால்மாட்டிலும் தூங்குகிறேன். நீ ஏன் தூங்கக் கூடாது?” என்றான்.
அதற்கு அவள், “எனது தந்தை எல்லாரையும் ஏமாற்றிவிட்டார், ஆனால் உங்களை ஏமாற்ற முடியவில்லை,” என்று சொல்லிச் சிரித்தாள். என்று கதையை முடித்திருப்பார் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.
டபீர் ஸ்வாமி
எழுத்தாளர் திரு கி.வா.ஜகந்நாதன், இக்கதையை ஆரம்பம் செய்யும் முன்னரே, இக்கதையானது தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் சொன்ன ஊறுகாய்க் கதைகளில் இதுவும் ஒன்று என்று கூறியிருப்பார். திரு கி.வா.ஜ இக்கதையை மீள்வாசிப்பாக நமக்குக் கொடுத்திருப்பார்.

கும்பகோணம் கல்லூரியில் ஐயர் அவர்கள் பணிபுரிந்த சமயம், அங்கு ஆங்கிலப் பேராசிரியர்களோடு அவர் உரையாடுவது வழக்கம். குறிப்பாகப் பேராசிரியர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் இல்லாத நேரங்களிலும், உணவு உண்ணும் வேளையிலும் அவர்கள் அனைவரும் கூடிப் பேசிக் கொள்வது வழக்கம்.
அப்படி ஒரு நாள் அவர்கள் அங்குக் கூடிப் பேசிக் கொண்டிருக்கையில், கூட்டத்திலிருந்து ஒருவர், “யாராவது இந்தத் தெருவிற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்று கூற முடியுமா?” என்றார். மற்றவர்கள், “தெருவின் பெயர் என்ன?” என்று கேட்டனர். கேள்வி எழுப்பியவர், “டபீர் தெரு,” என்றார். “டபீர் தெருவா! ஏன், அங்கு ஏதாவது டபீரென்று வெடித்ததின் காரணத்தால் அந்தப் பெயர் வந்ததா?” என்றார்கள். கூட்டத்தில் ஶ்ரீநிவாசையர் சிறிது கனைத்துக்கொண்டு, “நான் சொல்லலாமா?” என்றார்.
அனைவரும் ஒருமனதாகச், “சரி, சொல்லுங்கள்,” என்று கூறினர். உடனே அவர், “தஞ்சையை மகாராஷ்டிர அரசர்கள் ராஜ்யபாரம் நடத்திய சமயம், அவர்களது உறவினர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து ஊதியம் கிடைத்துவந்தது. அவர்கள் அனைவரும் இயல்பாகவே பொருள் உடையவர்களாகத் திகழ்ந்தனர். இவ்வாறு மகாராஷ்டிர கனவான்களில் ஒருவர் சுறுசுறுப்புடையவராக இருந்தார். அவரது வாழ்வில் அவருக்குப் போதிய அளவிற்குப் பொருள் இருந்தும், அவரது சுறுசுறுப்பிற்கு ஏற்ற வேலை இல்லாததால் அவர் சோர்வுற்றுக் காணப்பட்டார். பலர் அவரை, ‘ஏன் அரண்மனையில் வேலை செய்ய வேண்டியதுதானே?’ என்று கூறினர். ஆனால் அரண்மனை வேலைக்கு ஏற்றத் தகுதி அவரிடம் இல்லை என்பதால் அவர் அந்த வேலையை எடுத்துச் செய்யவில்லை.
அவர் பல நாட்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். ‘நாம் ஏன் ஒரு சுயதொழில் தொடங்கக் கூடாது? அந்தத் தொழிலானது இருபத்தி நான்கு மணி நேரம் இருந்தாலும் சரி, நாம் அதைச் சிரத்தையுடன் செய்யலாமே’ என்று எண்ணி, அரண்மனை செல்லும் வழியில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் கட்டிடம் எழுப்பி, அங்கு அவருக்கு ஒரு சிறிய உத்தியோகசாலையாக மாற்றிக்கொண்டார்.
அவர் காலை எட்டு மணிக்கெல்லாம் உத்தியோகசாலைக்கு வந்துவிடுவார். பிறகு, மத்திய உணவு சாப்பிடும்போது வீடு செல்வது வழக்கம். சில நேரங்களில் மத்திய உணவை உத்தியோகசாலையிலேயே வரவழைத்து அங்குச் சாப்பிடும் பழக்கத்தையும் கடைப்பிடித்தார். இரவு எட்டு மணி அல்லது ஒன்பது மணி வரை அங்கு அவர் தனது உத்தியோகசாலையில் இருந்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி என்ன வேலை அவர் பார்த்தார் என்றால், நாள் முழுதும் அந்தத் தெரு வழியாக யார் யாரெல்லாம் வருகிறார்கள், போகிறார்கள், என்ன உடை அணிந்திருந்தார்கள், கையில் என்ன வைத்திருந்தார்கள் என்ற குறிப்புகளைத் தேதி வாரியாகக் குறித்து வைத்துக்கொள்வார். அதில் அவருக்கு ஒரு ஆத்மதிருப்தி. அவர் பார்க்கும் வேலை பிடித்துப் போகவே, அவர் அதில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார்.
இப்படியிருக்க, ஒரு நாள் அரண்மனையில் தங்கப் பாத்திரம் காணாமல் போயிற்று. அரசரின் ஆணையின்படி, அந்தத் தங்கப் பாத்திரத்தை ஊரில் அனைத்து இடத்திலும் தேடிப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் அந்தத் தங்கப் பாத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அரண்மனையில் உள்ள ஒருவர், “இங்கு ஒருவர் இருக்கிறார். அவர் பார்க்கும் வேலை என்னவென்றால், அவர் உத்தியோகசாலை இருக்கும் வழியாக யார் வந்தார்கள், போனார்கள், அவர்கள் எப்படி இருந்தார்கள், என்ன உடை அணிந்திருந்தார்கள் என்பதையெல்லாம் தனது நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்வது வழக்கம். நாம் ஏன் அங்குச் சென்று அவரது நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கக் கூடாது? அதில் நமக்கு ஏதாவது துப்பு கிடைக்குமல்லவா!” என்றார். உடனே அனைவரும் அவரது கருத்தை ஆமோதித்து அந்த நபரின் உத்தியோகசாலைக்குச் சென்றனர்.
தங்கப் பாத்திரம் காணாமல் போன தேதி அன்று, இவரது உத்தியோகசாலை ஓரமாக யார் யாரெல்லாம் சென்றனர் என்று பார்த்தார்கள். அப்படி அவர்கள் பார்க்கும்போது, தங்கப் பாத்திரம் காணாமல் போன அன்று மாலை, குள்ளமாக ஒருவன் தனது உடையில் ஏதோ மறைத்து வைத்துச் சென்றான். ‘தன் உத்தியோகசாலை எதிர்ப்புறம் சாக்கடை ஓரமாகச் சிறிது நேரம் அமர்ந்தான். திடீரென டபீரென்று ஒரு ஓசை வந்தது’ என்று அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தது.
அரண்மனை ஊழியர்கள் அனைவரும் நோட்டுப் புத்தகத்தில் இருந்த குறிப்பைப் பார்த்துச் சாக்கடையை நோக்கிச் சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதனை செய்ததில், அந்தத் தங்கப் பாத்திரம் சாக்கடையில்தான் இருந்தது. அதை அவர்கள் எடுத்துக்கொண்டு, அந்தக் குறிப்பு எழுதிய நபரை அரசரிடம் கூட்டிப்போய், “இவர் இப்படிக் குறிப்பு எழுதவில்லை என்றால், நாம் இந்தத் தங்கப் பாத்திரத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாது,” என்று கூறி அவரது உத்தியோகசாலையைப் பற்றிக் கூறினார். அரசர் உடனே, “‘டபீர்’ என்ற ஓசையின் குறிப்பைத் தாங்கள் நோட்டுப் புத்தகத்தில் குறிப்பாக எழுதியதால், உங்களுக்கு இன்று முதல் ‘டபீர் ஸ்வாமி’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது,” என்று கூறினார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், வேலை சிறியதோ பெரியதோ, நாம் செய்யும் வேலையில் முழு முயற்சியுடன் செய்தால் பலன் நிச்சயம் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.”
இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்
இக்கதையானது, நாம் காலம் காலமாக நமது பாட்டி சொல்லிய கதையைப் போலவே இருக்கும். நாம் அனைவரும் அறிந்ததே ‘பாட்டி வடை சுட்ட கதை’. அதையே இங்கு எழுத்தாளர் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள், சற்றே வித்தியாசமாகச் சிந்தித்து, அவரது கற்பனையில் உதித்த எண்ணத்தைக் கதையாக நமக்குக் கொடுத்திருக்கிறார். ஏறத்தாழ பாட்டி வடை சுட்ட கதையும் இந்த ‘இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்’ என்ற கதையும் ஒன்று போலத் தோன்றினாலும், முடிவில் ஒரு சிறிய திருப்பத்தைக் கொடுத்திருப்பார் எழுத்தாளர்.

ஒரு வயதான பாட்டி இட்டிலி சுட்டுக்கொண்டிருந்தாள். பாத்திரத்தின் உள்ளே சில பல இட்டிலிகள் இருந்தன. பாத்திரத்தின் மேற்பகுதியில் உள்ள தட்டில் மூன்று இட்டிலிகள் இருந்தன. வருபவர்கள் சாப்பிட வசதியாக இருக்க, இட்டிலியின் பக்கத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் மிளகாய்ப் பொடியும் அந்தப் பாட்டி வைத்திருந்தாள்.
வீதி வழியாக ஒரு காகம் பறந்து சென்றது. அப்படி காக்கைப் பறக்கையில், பாட்டி இட்டிலி சுட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தது. பார்த்தவுடன் அதன் நாவில் நீர் சுரந்ததும் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எப்படியாவது பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து இந்த இட்டிலியை நாம் கவ்விக்கொண்டு செல்லவேண்டும் என்பதுதான். காக்கை யோசித்த மாதிரியே, பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து, காக்கையானது ஒரு இட்டிலியை வாயினில் கவ்விக்கொண்டு பறந்து சென்று ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது.
அந்தத் தறுவாயில் அவ்வழியே ஒரு நரி வந்தது. வந்த நரி காக்கையைப் பார்த்தது. காக்கை தன் வாயில் இட்டிலியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததைப் பார்த்தவுடன், இட்டிலியின் மேல் உள்ள மோகம் இரண்டு மடங்காகி, எப்படியாவது காக்கையை ஏமாற்றி அந்த இட்டிலியை நாம் உண்ண வேண்டும் என்று தன் மனதில் ஒரு ஓரத்தில் யோசித்தது. பிறகு, நரித் தந்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தது. “தம்பி, உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்! எப்படி இந்த இட்டிலியை எடுத்து வந்தாய்?” என்றது. காக்கை பதில் ஏதும் கூறாமல் மரத்தின் மேல் அமர்ந்திருந்தது.
இனியும் காக்கையிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் இட்டிலியைப் பெற முடியும் என்று நினைத்து, மறுபடியும் காக்கையுடன் பேசியது. “தம்பி, நீ தனியாகச் சாப்பிட மாட்டாய். அதனால்தான் உன் உறவுகளுக்காகக் காத்திருக்கிறாய். என்னையும் உன் சொந்தக்காரனாகப் பாவித்து எனக்கும் கொஞ்சம் இட்டிலியைக் கொடுக்கலாம் அல்லவா?” என்றது. மேலும், “எனக்கு தினம் தினம் நண்டு, தவளையெல்லாம் தின்று தின்று சலித்துவிட்டது,” என்று கூறியது நரி காக்கையிடம். “எனக்கு உன்னைப் போல் மனிதர் உண்ணும் உணவைச் சாப்பிட ஆசையாக உள்ளது,” என்று கூறியது.
உடனே காக்கை மனமிறங்கி மரத்திலிருந்து பாறைக்கு மேல் அமர்ந்தது. ‘இதுதான் நல்ல சமயம்’ என்று நினைத்த நரி, மீண்டும் தன் தந்திரத்தைப் பயன்படுத்தியது. காக்கையிடம், “மனிதர்கள் இட்டிலியுடன் மிளகாய்ப்பொடி, சட்னி, சாம்பார் போன்ற பதார்த்தமெல்லாம் சேர்த்துக்கொள்வர். எப்படி இட்டிலி எடுத்து வந்தாயோ, அப்படியே போய் மிளகாய்ப்பொடியையும் எடுத்து வா. நான் அதுவரையில் இட்டிலியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன்,” என்றது. அதை நம்பி காக்கை, இட்டிலியை நரியிடம் கொடுத்துவிட்டு மிளகாய்ப்பொடியை எடுக்கச் சென்றது.
சிறிது நேரம் நரி தின்னாமல் இருந்தது. ஆனால், அதனுடைய ஆவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பொறுமையை இழந்த நரி இட்டிலியைத் தின்ன ஆரம்பித்தது. அந்த சமயம் பார்த்து, காக்கை தன் வாயில் ஒரு சிறிய பாத்திரத்தில் மிளகாய்ப்பொடியைக் கவ்விக்கொண்டு வந்தது. வரும் பொழுதே நரி பாதி இட்டிலியைச் சாப்பிட்டுவிட்டது. ‘மீதம் உள்ள இட்டிலியாவது அதனிடமிருந்து பிடுங்கி நாம் உண்ண வேண்டும்’ என்று நினைத்து, நரியிடம், “நரி அண்ணே, நீயே இட்டிலியைச் சாப்பிடு, எனக்கு வேண்டாம். நான் மிளகாய்ப்பொடி எடுத்து வந்துள்ளேன். தொட்டுக்கொண்டு இட்டிலியைச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்,” என்றது.
நரிக்கு ஒரே ஆச்சரியம். “இட்டிலியை நானே சாப்பிடவா?” என்று அந்த இட்டிலியைக் கீழே வைத்தது. அந்தச் சமயம் பார்த்து, மிளகாய்ப்பொடியைக் காக்கை நரியின் கண்ணில் ஊற்றியது. நரியால் கண்களைத் திறக்க முடியவில்லை, ஒரே எரிச்சல். ‘இதுதான் நல்ல சமயம்’ என்று எண்ணி, காக்கை இட்டிலியை நரியிடமிருந்து வாயில் கவ்விக்கொண்டு மரத்தின் மேல் போய் அமர்ந்தது. மனதில் எண்ணியது, ‘இவ்வளவு நேரம் இட்டிலியை விழுங்காமல் இருந்தாயே, உனக்கு வந்தனம்’ என்று மனதில் கூறிக்கொண்டு இட்டிலியைத் தின்றது காக்கை.
கத்திரிக்காய் ஜுரம்
வெகு எளிமையான முறையில் எல்லோரும் ஏற்கும் விதத்தில் ஒருவர் கருத்தைத் தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணர்கின்றார் என்றால், அவர் எந்த விதத்தில் சிந்தித்திருக்க வேண்டும்! அப்படியாக இந்தக் கதையை நமக்குக் கொடுத்திருக்கிறார் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள். ஆழமான கருத்து, எளிய நடை, அனைவரும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர் குறுங்கதைகளைக் கையாண்ட விதம் அருமை.

வேறு பெரிய விஷயமெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு குடியானவன் இருந்தான். அவன் தன் குடும்பம், தன் வேலை என்று இருக்கக்கூடியவன். அவனது பெயர் மட்டியப்பன். அவன் அவ்வளவு சர்வ சாதாரணமாக யாரிடமும் எந்தப் பொருட்களையும் கொடுக்க மாட்டான். இப்படி இருக்க, அவனது புறக்கடையில் நிறையக் கத்திரிச் செடிகளைப் பயிர் பண்ணியிருந்தான். அந்தக் கத்திரிச் செடிகளை நன்றாகக் கவனிப்பதன் மூலம், மட்டியப்பன் நல்ல பலனைக் கண்டான். கத்திரிச் செடிகளும் நன்றாகக் காய் காய்த்திருந்தது. அவன் அதிலிருந்து யாருக்கும் இலவசமாகக் கொடுக்கமாட்டான். எல்லாக் கத்திரிக்காயையும் பறித்துச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்றுவிடுவது வழக்கம்.
அதே ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். நல்ல அனுபவசாலி, கைதேர்ந்த மருத்துவர். அவருக்கு ஒரே மகள் இருந்தாள். அவளும் இப்போதுதான் புகுந்த வீட்டிலிருந்து தனது பிறந்த வீட்டிற்கு வருகை புரிந்திருக்கிறாள். ஏனென்றால் அவள் மசக்கையாக இருக்கிறாள். இதனாலேயே வைத்தியரின் மனைவி தன் மகளுக்கு அவளது விருப்பத்திற்கு உணவு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள், மகள் ஆசைப்படுகிறாள் என்று தன் கணவரிடம் கத்திரிக்காய் வாங்கி வரச்சொன்னாள். வைத்தியரும் தன் மனைவியிடம், “நம் ஊரில் இப்போது மட்டியப்பன் தன் வீட்டில் கத்திரிச் செடிகளைப் பயிர் பண்ணியிருக்கிறான். நான் அவனிடம் போய்ச் சிறிது கத்திரிக்காயைக் கேட்டு வாங்கி வருகிறேன்,” என்று கூறி, அவர் மட்டியப்பனிடம் போய்க் கேட்டார்.
மட்டியப்பனோ, அவரிடம், “நேற்றுதான் அனைத்துக் கத்திரிக்காயையும் பறித்துச் சந்தையில் விற்று வந்தேன்,” என்று ஒரு பொய்யைக் கூறி அவரை அனுப்பிவிட்டான். வைத்தியரும், “பரவாயில்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம்,” என்று சொல்லி அங்கிருந்து வந்துவிட்டார். இந்தத் தறுவாயில், மட்டியப்பன் மற்றும் ஒன்றை யோசித்தான். ‘இந்த வாரம் எப்படியோ வைத்தியரைச் சமாளித்து விட்டோம். அடுத்த வாரம் வைத்தியர் வந்தால் என்ன செய்வது?’ அவன் எண்ணிய மாதிரி அடுத்த வாரம் அதே வைத்தியர் மட்டியப்பனிடம் வந்து கத்திரிக்காய் வேண்டுமென்று கேட்டார்.
மட்டியப்பன் முன்னரே யோசித்து வைத்திருந்தான். உடனே அவன் வைத்தியரிடம், “நீங்க ஒன்றும் தப்பாக நினைக்க வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா, எங்களது பாட்டி இறக்கும் தறுவாயில் அவள் ஆசைப்பட்டு என் அப்பாவிடம் கத்திரிக்காய்க் குழம்பு சாப்பிட வேண்டுமென்று கூறவே, என் தந்தையும் அப்போது ஊரில் யார் யாரெல்லாம் கத்திரிச் செடி பயிர் பண்ணியிருந்தார்களோ, அவர்களிடம் போய்க் கேட்டுப் பார்த்தார், யாரும் கொடுக்கவில்லை. இந்த வருத்தத்தில் எங்களது பாட்டியும் இறந்துவிட்டாள். இறக்கும் முன்னர் பாட்டி, தந்தையிடம் ஒரு சத்தியத்தை வாங்கிக்கொண்டு இறந்துவிட்டார். ‘இனி வரும் காலங்களில் நீ நமது வீட்டில் கத்திரிச் செடி பயிர் செய்ய வேண்டும், அதை இந்த ஊரில் உள்ள எவருக்கும் கொடுக்கக்கூடாது’ என்று. என் தந்தை அதே சத்தியத்தை என்னிடம் வாங்கிக்கொண்டார்,” என்று கூறினான்.
வைத்தியருக்குத் தெரியும், இவன் பொய் சொல்கிறான் என்று. ‘சரி, அவனுக்கு ஒரு காலம் வந்தால் நமக்கு ஒரு காலம் வராமலா போய்விடும்’ என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
சில மாதங்கள் கழிந்தன. மட்டியப்பன் வைத்தியரிடம் ஓடிவந்தான். வைத்தியர் அவனிடம், “ஏன், என்னவாயிற்று?” என்றார். உடனே மட்டியப்பன், “என் மகளுக்குக் கடும் ஜுரம். கை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. ஜுரம் குறைந்தபாடில்லை. தாங்கள் வந்து பார்த்து எப்படியாவது என் மகளைக் காப்பாற்ற வேண்டும்,” என்று முறையிட்டான். வைத்தியர் அவனிடம், “நான் உடனே உன் மகளை வந்து பார்த்து என்னவென்று சொல்கிறேன்,” என்று கூறி மட்டியப்பன் வீட்டிற்குச் சென்று, மட்டியப்பனின் மகளைப் பரிசோதனை செய்து மாத்திரைக் கொடுத்தார். மட்டியப்பனிடம், “உன் மகளுக்கு வந்திருக்கும் ஜுரம் கடுமையானது. இதற்கு மருந்து செய்ய வேண்டுமென்றால், நாம் பல கத்திரி வேர்களை எடுத்து அதிலிருந்து கஷாயம் செய்ய வேண்டும்,” என்றார்.
மட்டியப்பனும் உடனே, “கத்திரி வேர்தானே! நான் உங்களுக்கு எடுத்து வந்து தருகிறேன்,” என்றான். வைத்தியரும் தன் வீடு வந்து சேர்ந்தார். மட்டியப்பன் கொஞ்சம் கத்திரி வேர்களை எடுத்து வந்தான். அதைப் பார்த்த வைத்தியர், “இது பற்றாது, அதிகம் தேவைப்படும்,” என்றார். மட்டியப்பன் உடனே அவரிடம், “என் வீட்டில் உள்ள அனைத்துக் கத்திரி வேர்களையும் நான் எடுத்து வருகிறேன்,” என்று சொல்லி, அவனது வீட்டிலிருந்த அனைத்துக் கத்திரி வேர்களையும் வெட்டி வைத்தியரிடம் கொண்டுவந்தான்.
அதைப் பார்த்த வைத்தியர், “இது போதும், எப்படியும் உன் மகளை இன்னும் ஒரு வாரத்தில் காப்பாற்றிவிடலாம், கவலை கொள்ளாதே,” என்று கூறி அவனை அவனது வீட்டிற்கு அனுப்பினார். மட்டியப்பன் தன் வீடு வந்து சேர்ந்ததும், அவனது மனைவி சொன்னாள், “வைத்தியர் அன்று கொஞ்சம் கத்திரிக்காய் கேட்டார். உன்னால் அவர் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை. இன்று உன்னிடம் உள்ள அனைத்துக் கத்திரி வேர்களையும் நீயே வெட்டிவிட்டாய்.” அப்போது புத்தியில்லை என்று வருத்தப்பட்டான் மட்டியப்பன் என்று கதையை முடித்திருப்பார் எழுத்தாளர் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், முடிந்தவரை நம்மிடம் ஒரு பொருள் அதிகமாக இருந்தால் சிறிது தானம் செய்வதில் தவறில்லை. மற்றும் ஒன்று, யாரிடமும் எந்தக் காலத்திலும் பொய் சொல்லக் கூடாது. அப்படிச் செய்வதின் மூலம் அதே பொய் வேறு ரூபத்தில் நம்மை ஏமாற்றிவிடும்.
அரசகுமாரன் சோதனை
இக்கதையானது திரு கி.வா.ஜகந்நாதன் அவர்களால் இயற்றப்பட்டது. இதில் அவர் பல புதிர்களைக் கையாண்டிருப்பார். ஒரு கேள்வி கேட்டால், பதில் புதிராக இருக்கும். நாம் அந்தப் புதிரிலிருந்து பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு ராஜகுமாரன் இருக்கிறான். அவன் தன் மனைவியாக வரப்போகின்றவளைத் தானே தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்து, வருங்கால மனைவியைத் தேடும் படலத்தைத் தொடர்ந்தான். கிராமம், கிராமாகச் சென்று தனக்கு உரியவள் இருக்கிறாளா என்று பார்த்து வந்தான்.
அப்படியிருக்க, ஒரு கிராமத்தில் அவன் போய்க் கொண்டிருக்கையில், அங்கு இருக்கும் வயல் வெளியில் ஒரு அழகிய பதுமை, மெல்லிய தேகம் உடையவள், தன் தலையில் கஞ்சிக் கலயத்தை வைத்துக்கொண்டு நடந்து சென்றாள். யாருக்கு அவள் கஞ்சி சுமந்துகொண்டு செல்கிறாள் என்றால், அவளது தகப்பனுக்குத்தான். அவளது தகப்பன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தான். ராஜகுமாரன் அவளைப் பார்த்ததும், அவளிடம் அவளது பெயர் என்ன என்று கேட்டான்.
அதற்கு அவள் அவனிடம் பதிலாக, “வெண்ணெய்,” என்றாள். உடனே ராஜகுமாரன், “நவநீதமா?” என்று கேட்டான். அவள் அதற்கு உடனே, “இல்லை,” என்று பதிலைக் கூறி, “இது சாதாரண வெண்ணெய் அல்ல. மண்ணால் பண்ணாத சட்டியிலே, மரத்தால் பண்ணாத மத்தாலே, மட்டையால் பண்ணாத கயிற்றாலே கடைந்து எடுத்தது. அந்த வெண்ணெய் இங்கே முன்பும் இல்லை; இன்றும் இல்லை; நாளைக்கும் இராது,” என்றாள்.
அதிலிருந்து ராஜகுமாரன் புரிந்துகொண்டான், ‘தேவலோகத்தில் பாற்கடலில் மேரு மலையை மத்தாகக்கொண்டு, வாசுகியைக் கயிறாகக் கொண்டு கடைந்த அமுதத்தை அவள் இங்குக் கூறுகிறாள்’ என்று ஊகித்து, “உன் பெயர் என்ன, அமுதவல்லியா?” என்றான். அவளும், “ஆம், அமுதவல்லி,” என்று கூறினாள்.
ராஜகுமாரன் அவளிடம், “யாருக்குக் கஞ்சி சுமந்துகொண்டு போகிறாய்?” என்றான். அவளோ, “என் தெய்வத்திற்கு,” என்று பதிலளித்தாள். அவன் உடனே, “உன் தகப்பனுக்கா?” என்றான். அவள், “ஆம்,” என்று பதிலளித்தாள். அவன் உடனே, “என்ன செய்கிறார்?” என்றான். அவள் உடனே, “ஒன்றை இரண்டாக ஆக்குகிறார்,” என்றாள். அவன், “மண் கட்டியை உடைத்து உழுகிறாரோ?” என்றான். அவள், “ஆம்,” என்று கூறினாள்.
இவ்வளவு உரையாடல் சென்ற பிறகு, அவள் ராஜகுமாரனைப் பார்த்துக், “கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிறீர்களா?” என்றாள். அவனும், “சரி, கொஞ்சம் சாப்பிடுகிறேன்,” என்றான். அவள் தன் தலையில் இருக்கும் கஞ்சிக் கலயத்தை எடுத்துத் திறந்து, சட்டியில் இருக்கும் கஞ்சியை ஊற்றுவாள் என்று நினைத்தான். ஆனால் அவள், கலயத்துக்கு மேலே இருந்த தட்டை எடுத்து முதலில் தண்ணீரால் சுத்தம் செய்த பின்னரே கஞ்சியை அதில் ஊற்றினாள். இதைக் கண்ட ராஜகுமாரன் மகிழ்ச்சியடைந்தான். ‘திருமணம் செய்தால் இவளைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று மனதில் முடிவெடுத்தான்.
பிறகு அவளது வீட்டு முகவரியை ராஜகுமாரன் கேட்டான். அதற்கும் அவள் புதிராகத்தான் தன் பதிலைக் கூறினாள். அவன் அதிலிருந்து பதிலைக் கண்டுபிடித்து, அவளது வீட்டிற்குச் சென்று அவளது அன்னையைப் பார்த்து, “நான் பெரிய பணம் படைத்தவரின் பிள்ளை. உங்கள் மகளை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்,” என்று கூறினான். அவர்களின் சம்மதமும் கிடைத்தவுடன் திருமணத்தை முடித்தான். திருமணம் முடிந்த பின்னர், அவளை அவளது தாய் வீட்டிலேயே விட்டு விட்டு நாடு திரும்பினான்.
சில மாதங்கள் கழிந்த உடன், சேவகர்கள் அவளது வீட்டிற்கு வந்து அவளிடம், “இந்த நாட்டு ராஜகுமாரன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்,” என்றார்கள். அவளோ அவர்களிடம், “நான் வேறு ஒருவருடைய மனைவி. எனக்குத் திருமணம் முடிந்துவிட்டது,” என்றாள். வந்தவர்களோ, “பரவாயில்லை, ராஜகுமாரன் பொன்னும் பொருளும் அள்ளித்தருவார். உன் சம்மதத்தைப் பெற்றுவரச் சொன்னார்,” என்று கூறினார். உடனே அவள் கோபம் கொண்டு கத்தினாள். அவர்கள் அவளைக் கட்டி, ராஜகுமாரன் இருக்கும் ராஜ சபையில் அவளை அழைத்து வந்தனர்.
அவள் குனிந்து தலை நிமிராமல் அந்தச் சபையில் நின்றிருந்தாள். அவள் ராஜகுமாரனை ஒரு கணம் பார்த்திருந்தால், அவளுக்குப் புரிந்திருக்கும் தன் கணவன்தான் ராஜகுமாரன் என்று. ஆனால் அவள் பார்க்கவில்லை. மாறாகக் கண்ணீருடனும், பிறகு சிரிப்புடனும் காணப்பட்டாள். இதைக் கண்ட ராஜகுமாரன், தன் குரலை மாற்றிக்கொண்டு, “பெண்ணே, ஏன் நீ அழுதுகொண்டும் மறுகணம் சிரித்துக்கொண்டும் காணப்படுகிறாய்? வெய்யிலும் மழையுமாகத் தொடர்ந்தாற்போல் வருகிறதே,” என்றான்.
அவள் உடனே, “ஆம், உன் ராஜ வைபோகத்தைக் கண்டு, முற்பிறவியில் நீ செய்த புண்ணியத்தின் பயனால் இப்படி என்று எண்ணிச் சிறிது நகைத்தேன். ஆனால் இப்போது நீ மாற்றான் மனைவியின் மீது ஆசை கொண்டதனால், உன்னை நினைத்து அச்சம் கொண்டு அழுகிறேன். அடுத்த பிறவியில் என்ன ஆவீரோ!” என்று கூறினாள்.
ராஜகுமாரன் அவனது சொந்தக் குரலில் கயிற்றை அவிழ்த்துவிடுமாறு கூறினான். அவள் அப்போதுதான் ராஜகுமாரனைக் காண்கிறாள். கண்டவுடன் ஒரே மகிழ்ச்சி. “என்ன பார்க்கிறாய்? உன்னைப் பலவகையிலும் சோதித்த உன் கணவன் நான்,” என்றான்.
அவள் ஆசையோடு அவனது திருவடிகளை வணங்கினாள் என்று கதையை முடித்திருப்பார்.
