தமிழாக்கம்: வீ விஜயராகவன்
‘பிற மொழிக் கதைகள்: ஓர் பார்வை’ – பாலமுருகன். லோ
தடைப்பட்ட வழி
மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து வழங்கியிருப்பவர் திரு. வீ. விஜயராகவன் அவர்கள். இக்கதையானது ‘வேலி மேல் ஓசனிச்சி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இக்கதையை மலையாளத்தில் இயற்றியது கே. சரஸ்வதி அம்மா அவர்கள். இந்தக் கதையின் வாயிலாக கே. சரஸ்வதி அம்மா எல்லோருக்கும் கூற விரும்பும் செய்தி என்னவென்றால், பெண்கள் ஓரிடத்தில் முடங்குவது தவறு. ஏதோ ஒரு காரணத்தால் அவர்களது படிப்போ அல்லது அவர்களது வளர்ச்சியோ தடைப்பட்டால், அதையே நினைத்து நினைத்து, அவர்கள் செல்லவிருந்த பாதையில் செல்லாமல் இருப்பது தவறு. அவர்கள் தங்களது மனோதைரியத்தை வளர்த்துக்கொண்டு இந்த வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வரவேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர் கே. சரஸ்வதி அம்மா அவர்கள்.
விசாலாட்சி என்ற மருத்துவர் ஒரு பழைய வீட்டின் முன் வந்து நின்றார். வராந்தாவில் பிள்ளைகள் ஸ்ரீராமனைத் துதித்துக் கொண்டிருந்தனர். மருத்துவர், அவர் வந்த வாகனத்தைத் திரும்பிப் போகச்சொன்னார். ஆனால் அந்த ஓட்டுநரோ, “இல்லை, உங்களை இங்கிருந்து கூட்டிக்கொண்டு வர எனக்கு உத்தரவு,” என்று கூறினான். அதற்கு விசாலாட்சி அந்த ஓட்டுநரைச் சமாதானம் செய்து, “நான் திரும்பும்போது இங்கிருந்து யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன்,” என்று கூறி ஓட்டுநரை அனுப்பிவைத்தார்.

பிறகு வெளியே இருந்து, “வீட்டினுள் யாராவது இருக்கிறீர்களா?” என்று குரல் கொடுத்தார். வீட்டினுள்ளிருந்து ஒரு ஆடவர் தன் மகளிடம், “சுலோச்சனா, வாசலில் யாரோ வந்திருக்கிறார்கள், போய்ப் பார்,” என்று கூற, அவள் வாசல் வந்து பார்த்தாள். சுலோச்சனா, மருத்துவரைப் பார்த்து, “யார் வேண்டும்? யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?” என்றாள். அதற்கு விசாலாட்சி, “உங்கள் அம்மாவின் உடம்பு எப்படி இருக்கிறது?” என்றார். விசாலாட்சி எதற்காக அவர்களுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று சுலோச்சனாவுக்கு இப்போது புரிந்தது.
மேலும், விசாலாட்சி வீட்டினுள் வந்த பிறகு, சுலோச்சனாவின் தந்தை கோவிந்தன் நாயர், “சுலோ, யார் வந்திருக்கிறார்? எதற்காக வந்திருக்கிறார்?” என்று கேட்டபோது, விசாலாட்சி அவர் முன் வந்து, “என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்றார். அவரால் விசாலாட்சியைச் சட்டென்று நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டதன் காரணமாகக் கோவிந்தன் நாயர் தற்போது ஒருவழியாக மருத்துவரை அடையாளம் கண்டுகொண்டார். மருத்துவரிடம், “நீ விசாலம்-மா?” என்றார். அதற்கு அந்த மருத்துவர், “ஆம், அப்போது சற்று ஒல்லியாக இருந்தேன், இப்போது சிறிது பருமனாகக் காணப்படுகிறேன்,” என்றார். கோவிந்தன் நாயரோ விசாலாட்சியைப் பார்த்து, “ஏன் இங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்?” என்று கேள்விக் கணைகளை எழுப்பினார். “எனக்கு உங்கள் பிள்ளைகள் மூலம் உங்கள் மனைவி பிரசவ வேதனையில் இருப்பது தெரியவந்தது, அதான் பார்த்துப் போகலாம் என்று வந்தேன்,” என்றார்.
கோவிந்தன் நாயர் மனைவிக்கு இது ஒன்பதாவது பிரசவம். விசாலாட்சி, சுலோச்சனாவிடம் சென்று அவளது அம்மாவிடம் மருத்துவர் வந்திருப்பதாகச் சொல்லச் சொன்னார். அதுவரை சுலோச்சனா, விசாலாட்சியை அங்கிருந்த நாற்காலியில் அமரச்சொன்னாள். விசாலாட்சி அவரே நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தார். கோவிந்தன் நாயருக்குப் பழைய நினைவுகள் எல்லாம் அவர் கண்முன் நிழலாடின. மருத்துவர் வேறு யாருமில்லை, கோவிந்தன் நாயர் திருமணத்திற்குப் பெண் பார்த்தபோது விசாலாட்சியைத்தான் இரு வீட்டாரும் மணமுடிக்கலாம் என்று நாள் எல்லாம் குறித்தனர். ஆனால் திடீரென்று விசாலாட்சியின் அப்பா இறந்துவிடவே, கோவிந்தன் நாயர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பெண்ணின் ஜாதகம் சரியில்லை என்பதால்தான் அவள் தன் தந்தையைப் பறிகொடுத்தாள் என்று கூறினர். மேலும் கோவிந்தன் நாயர் அவர் செய்து கொடுத்த சத்தியத்தையும் மறந்துபோய் அந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
இவ்வளவு வருடங்கள் கழித்து விசாலாட்சி தன் வீடு தேடி வந்திருப்பது கோவிந்தன் நாயருக்கு ஆச்சரியம்தான். விசாலாட்சி அந்தத் தருணத்தில் மனம் தளராமல், தன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி இன்று ஒரு மருத்துவராக இருக்கிறார். ஆனால் கோவிந்தன் நாயரின் நிலைமைதான் தலைகீழாக மாறிவிட்டது. திருமணம் தடைப்பட்ட பிறகு அவரது வேலையும் பறிபோனது. வேறு வேலை கிடைப்பதற்காக வேறு ஒரு பெண்ணை அவர் மணந்துகொண்டார். அந்தப் பெண்ணின் தகப்பனார் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அந்த வேலையிலும் கோவிந்தன் நாயரால் நிலையாக இருக்க முடியவில்லை. அந்த அலுவலகத்தில் பணம் கையாடல் செய்த விஷயத்திற்காக அவரைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டனர். இந்த அனைத்து விஷயங்களையும் அவர் தற்போது விசாலாட்சியிடம் மறைக்காமல் கூறிவிட்டார்.
விசாலாட்சி, கோவிந்தன் நாயரிடம், “சுலோ படித்து முடித்து வேலைக்குப் போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார். அதற்குக் கோவிந்தன் நாயர் குரலில் ஏமாற்றம் இழையோடியது. “அதைப் பற்றிப் பேசி என்ன பயன், அவளைப் படிக்க வைக்க வசதியே இல்லாதபோது? அவள் அவ்வாறு போக முடிந்திருந்தால் எனது சுமையும் குறைந்திருக்கும். அவளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாது என்ற முடிவு எடுத்தபோது அழுது தீர்த்துவிட்டாள். பட்டினி கிடந்தாள். ஆண் பிள்ளைகளையே அனுப்பத் தவிக்கும்போது, பெண்களைப் பற்றிக் கவலைப்பட்டால் நடக்குமா?” என்றார்.
“ஏன் நடக்காது?” டாக்டரின் குரலில் நம்பிக்கை கூடியது. “சுலோவின் அம்மா கூட நான் சொல்வது தடை செய்யப்பட்ட வழி என்று நினைக்கிறாளா?” அதற்குக் கோவிந்தன் நாயர், “எங்களுக்கு இப்போது எந்தப் போலிக் கௌரவப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருக்கிறவர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை,” என்றார். டாக்டர் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. “அப்படியானால் ஒரு காரியம் செய்யுங்கள். ஒரு பெண் வேலை தேடிப் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. கணவனையே எல்லாவற்றுக்கும் நம்பி இருப்பதை விட அது மேல். சுலோவை என்னுடன் அனுப்புங்கள். நான் சொன்ன வழியிலேயே நிச்சயம் கொண்டு போவேன், உறுதியாகச் சொல்ல முடியும். உங்களுடைய ஒப்புதல் மட்டும் வேண்டும்,” என்றார்.
கோவிந்தன் நாயர் முகத்தில் கலக்கம் நீங்கிப் பிரகாசமடைவதைக் களிப்புடன் கண்ட விசாலாட்சி, தொடர்ந்து பேசினார். “என்னால் முடிந்தவரை சுலோவை அவளுக்குப் பிடித்த துறையில் நன்றாகப் படிக்க வைக்கிறேன். அவளால் ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.” மேலும் விசாலாட்சி, “சுலோவின் அம்மாவிடமும் ஒப்புதல் பெற வேண்டுமா?” எனக் கேட்டார். அதற்குக் கோவிந்தன், “அவளுடைய சம்மதம் எதற்கு? தேவையே இல்லை,” என்றார். கோவிந்தன் நாயரின் வெகு காலமாய்க் காணாமல் போயிருந்த இயல்பும் உற்சாகமும் மீண்டன. “அழைப்பேதும் இல்லாமல் இங்கு எங்களைத் தேடிக்கொண்டு வந்த காரணம் என்ன? நெருங்கிய உறவினரே செய்ய வேண்டிய உதவிகளின் அளவைக் கண்டு தயங்கும்போது, வலிய வந்து இந்த அளவு உதவி செய்ய முன் வருவதன் காரணத்தை அவள் கேட்டால் என்ன சொல்லப் போகிறாய்?” என்று விசாலாட்சியிடம் கேட்டார் கோவிந்தன் நாயர். “இதைத்தான் உங்கள் மனைவியிடம் கூறுவேன். என்னைப் போன்று ஒரு சிலருக்கு மட்டும் வாய்த்த மாற்று வழி மற்ற பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பதில்லை. அதை நடைமுறைப்படுத்த என் தரப்பில் நிறையப் பேர் வேண்டுமே, அதைத்தான் இந்தத் தருணத்தில் செய்துகொண்டிருக்கிறேன்.”
கோவிந்தன் நாயர் அவள் சென்ற வழியைப் பார்த்தவாறே இருந்தான். அவன் தன் மனதில் எண்ணினான், ‘அவள் தடை செய்யப்பட்ட வழியைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் இந்த அளவுக்குக் கறைபடாத மகிழ்ச்சியான வாழ்வும், இருப்பும் கிட்டியிருக்குமா என்ன?’ என்று எழுத்தாளர் அழகாகக் கதையை முடித்திருப்பார்.
பிராயச்சித்தம்
இக்கதையானது இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் திரு. பகவதி சரண் வர்மா. இதனை மொழிபெயர்த்து வழங்கியவர் திரு. வீ. விஜயராகவன் அவர்கள். இக்கதையானது ‘வேலி மேல் ஓசனிச்சி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

இந்தக் கதையானது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைக் கதை மாதிரி தெரிந்தாலும், அதனுள் மறைந்திருக்கும் மூடநம்பிக்கையை எழுத்தாளர் அழகாக ஒரு குட்டி நகைச்சுவைக் கதையாக நமக்குக் கொடுத்திருப்பார். பால்யத் திருமணம் புரிந்தவள் ராமுவின் மனைவி. அவளது திருமணத்தின்போது அவளது வயது வெறும் பதினான்குதான். இந்தச் சிறிய வயதிலேயே அவள், அவளது வீட்டை விட்டு புகுந்தகம் வந்துவிட்டாள்.
வந்த இடத்தில் அவளுக்கும் அந்த வீட்டில் உள்ள ஒரு பூனைக்கும் ஒத்துப் போகவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் பூனை என்னவோ அவளிடம் அன்பாகத்தான் இருந்தது, ஆனால் அவள் பூனை மீது அன்பு ஒன்றும் வைக்கவில்லை. ஏனெனில், பூனையானது அந்த வீட்டில் உள்ள தின்பண்டங்களைத் திருடித் தின்றுவிடுகிறது. இவள் எது செய்து வைத்தாலும், பூனை ஒரு கை பார்த்துவிடுகிறது. அதனாலேயே அவள் பூனையின் மீது அன்பு பாராட்டவில்லை. அவளும் எப்படியாவது இந்தப் பூனையை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்தாள். ஆனால் பூனையானது அவளது எல்லா முயற்சிகளிலிருந்தும் தப்பிவந்தது. இதனால் ராமுவின் மனைவி அடிக்கடி அவளது மாமியாரிடம் திட்டும் வாங்குவது அரங்கேறியது. இதுவே அவளுக்குப் பெரிய மன உளைச்சலாக அமைந்தது.
ஒரு நாள் தன் கணவனுக்குப் பாயசம் செய்தாள். அதில் முந்திரி, பாதாம், பாலாடை, சர்க்கரை எல்லாம் போட்டு, அதைப் பூனை எட்டாதவாறு ஓர் உயரமான இடத்தில் பானையில் வைத்து மூடிவிட்டு, தன் மாமியாருக்கு வெற்றிலை கொடுப்பதற்காக வெளியே வந்தாள். வாசனையை நுகர்ந்துகொண்டு பூனையானது வீட்டினுள் புகுந்து, அந்தப் பாயசம் வைத்திருந்த பானையின் அடியில் நின்று அதன் உயரத்தை அளந்துகொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் பானையை உருட்டி, அதைக் கீழே தள்ளி, அதிலிருக்கும் பாயசத்தைக் குடிக்க முற்பட்டது. பானை உடைந்த சத்தம் கேட்டவுடன் ராமுவின் மனைவி வீட்டினுள் வந்து பார்த்தாள். அங்குப் பூனை அவள் பத்திரமாக வைத்திருந்த பாயசத்தைக் குடித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஆத்திரமடைந்த ராமுவின் மனைவி, அந்தப் பூனையை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்து யோசித்துக் கண் அயர்ந்துவிட்டாள். விடியற்காலை அவள் கண் விழித்துப் பார்க்கும்போது, அவளது எதிரில் பரிதாபமாய் அவளையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது அந்தப் பூனை. அவள் படுக்கையைவிட்டு எழுந்து, அடுக்களையிலிருந்து பால் எடுத்துவந்து ஒரு தட்டில் ஊற்றினாள். பிறகு அவள் சற்று வெளியே போய் அமருவதற்காக மரத்தாலான ஸ்டூலைக் கையில் கொண்டுவந்தாள்.
இவள் வருவது தெரியாமல் பூனையானது அவள் வைத்த பாலைக் குடித்துக்கொண்டிருந்தது. இதுதான் நல்ல சமயம் என்று யோசித்து, அவள் கையிலிருந்த மரத்தாலான ஸ்டூலைப் பூனையின் மீது வீசினாள். பூனை வலி தாங்காமல் அங்கேயே சுருண்டது. வேலை செய்யும் வேலைக்காரி முதல் சமையல் செய்யும் சமையல்காரி வரை அனைவரும் பூனையின் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்தனர். இவளது மாமியாரும் அந்த இடத்திற்கு வருகை புரிந்தார்.
அடுக்களையிலிருந்து வந்த சமையல்காரி ராமுவின் அம்மாவிடம், “அம்மா, உங்கள் மருமகள் பூனையைக் கொன்றுவிட்டாள்,” என்று கூறினாள். இதையே வேலை செய்யும் வேலைக்காரியும் ராமுவின் அம்மாவிடம் கூறினாள். “இது பெரிய பாவம், பூனையைக் கொல்வது என்பது மனித உயிரைக் கொல்வதற்குச் சமம். இதனால் உங்கள் மருமகள் தீராத துயரத்தில் தள்ளப்படுவாள், அவள் மீது கொலைப்பழி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்,” என்றார்கள் அவர்கள் இருவரும்.
அதில் ஒருத்தி, “நான் வேண்டுமானால் ஒரு பூசாரியை அழைத்து வரவா?” என்றாள். ராமுவின் மனைவியின் மாமியாரும், “சரி, கூட்டிக்கொண்டு வா, ஏதாவது பரிகாரம், பிராயச்சித்தம் இருக்கிறதா என்று கேட்போம்,” என்றாள். அவள் போய் ஒரு பூசாரியை அழைத்து வந்தாள். பூசாரி நடந்தவற்றைக் கேட்டுவிட்டு, “பூனையைக் கொன்றது தவறு, பெரிய பாவம். ஆனால் இதற்குப் பரிகாரம், பிராயச்சித்தம் எல்லாம் உள்ளது. நான் கூறலாமா?” என்றார். மாமியார் உடனே பூசாரியிடம், “தயவுகூர்ந்து கூறுங்கள்,” என்றாள். “பூனையின் எடைக்கு ஏற்ப தங்கத்தினால் ஆன பூனையைச் செய்து தானம் செய்தால், உங்கள் மருமகள் செய்த பாவமெல்லாம் தீர்ந்துவிடும்,” என்றார்.
மாமியார் பதில் கூறினாள், “எடைக்கு எடை என்றால் எவ்வளவு தங்கம் கொடுக்க வேண்டும்? அதெல்லாம் சாத்தியமில்லை.” பூசாரி இதைக் கேட்டு, “நீங்கள் அவ்வளவு எல்லாம் இந்தக் காலத்தில் செய்ய வேண்டாம், ஏதோ உங்களால் முடிந்த அளவு தங்கத்தினால் ஆன பூனையைச் செய்து தானம் செய்யுங்கள். அதன் பிறகு இருபத்தொரு நாட்கள் பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்ய வேண்டும்,” என்றார். மாமியாரும், “என்னென்ன பொருள்கள் எல்லாம் தேவை என்று கூறுங்கள்,” என்றார். பூசாரியும் ஒரு பெரிய பட்டியலாகத் தயார் செய்து மாமியாரிடம் ஒப்படைத்தார். அதைப் பார்த்த மாமியார், “இதை அனைத்தையும் வாங்குவதென்றால் குறைந்தது நூறு ரூபாய் செலவாகும்,” என்றாள்.
மாமியார் அனைத்துக்கும் சரி என்று கூறி, பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாள். இவர்கள் இங்குப் பேசிக்கொண்டிருக்கையில், வேலைக்காரி வீட்டினுள்ளிருந்து பதற்றத்துடன் ஓடிவந்தாள். அனைவரும் பதறிப்போய் அவளை, “என்னடி ஆயிற்று?” என்றனர். அவள் அனைவரிடத்திலும், “அந்தப் பூனை எழுந்து ஓடிவிட்டது,” என்று கூறினாள் என்று ஆசிரியர் கதையை முடித்திருப்பார்.
சத்யகாம் ஜாபாலி
இக்கதையின் மூலக் கதை மராத்தி மொழி. இதனை எழுதியவர் திரு. அமிதாப் அவர்கள். மராத்திய மொழியிலிருந்து தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் திரு. வீ. விஜயராகவன் அவர்கள். இக்கதை “வேலி மேல் ஓசனிச்சி” என்கின்ற பிற மொழிக் கதைகள் அடங்கிய தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு தளம் வெளியீடு.

மராத்திய மாநிலத்தில் பீமபுரி என்ற கிராமத்தைப் பற்றியும், கிராமத்தில் வசிக்கும் மக்களைப் பற்றியும், அவர்களது வாழ்வாதாரம் மற்றும் கிராமத்தின் கட்டமைப்பைப் பற்றியும், அதிலும் குறிப்பாக ஜாபாலி என்கின்ற ஒரு இளம் விதவைப் பெண்ணின் வாழ்வில் நடந்த கோரச் சம்பவங்களைப் பற்றி அலசி ஆராயும் கதையாகவே நான் இதைப் பார்க்கிறேன்.
மிகவும் பின்தங்கிய கிராமமாகத் திகழ்ந்தது பீமாபுரி. இக்கிராமம் பண்டரிபுரி என்ற பிரசித்தி பெற்ற மற்றுமொரு கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்தது. பலர் பண்டரிபுரிக்கு நடைப்பயணமாக யாத்திரை செல்வது வழக்கம். பீமாபுரி எப்படிப் பின்தங்கியிருந்தது என்று பார்த்தோமேயானால், படிப்பறிவு இல்லாத கிராமமாகக் காணப்பட்டது, சரியான கழிப்பறை வசதி கூட இல்லாத கிராமமாகத்தான் காணப்பட்டது. மக்கள் மற்றும் சிறு குழந்தைகள் காலைக் கடனை வெட்டவெளியில்தான் கழிப்பது வழக்கம். மலத்தை உண்ண ஆங்காங்கே பன்றிக் கூட்டம் இங்கும் அங்கும் திரியும். சுத்தம் செய்யாத வீதிகள், எங்கு பார்த்தாலும் அழுக்கு, குப்பைக்கூளங்கள் காணப்படும். தெருவில் நடந்தால் இதையெல்லாம் கண்டிப்பாகப் பார்க்க முடியும்.
இப்படிப்பட்ட கிராமத்தில்தான் கதையின் நாயகி ஜாபாலி வசித்துவந்தாள். ஏற்கெனவே கூறியபடி அவள் ஒரு இளம் விதவை. திருமணம் முடிந்து இரண்டே ஆண்டுகளில் அவளது கணவன் இறந்து போய்விட்டான். பன்றியைக் கொல்லச் சென்றவன் அதே பன்றியால் கொலையுண்டான். அன்று முதல் அவள் அவளது மாமனார் மற்றும் வயதான மாமியாருடன் வசித்துவந்தாள். கிடைத்த வேலை செய்து வந்த அவளுக்கு அங்கிருந்த நூற்பு ஆலையில் ஒரு வேலை கிடைத்தது. அவளது மாமனாரும் மாமியாரும் மிகுந்த மகிழ்ச்சியிலிருந்தனர். இருந்திருந்து அவளுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கிறது, இனி நாம் ஓரளவுக்கு நல்லபடியாக வாழலாம் இந்தக் கிராமத்தில் என்று எண்ணினார்கள். இவளைத் தங்கள் மகனாகப் பாவித்தார்கள்.
நூற்பு ஆலையின் மணி ஓசை மொத்தம் மூன்று முறை கேட்கும். முதல் மணி ஓசை கேட்டவுடன் ஜாபாலி போல் பீமாபுரியைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் உள்ள மகளிர் எழுந்துவிடுவர். இதே போல் மூன்றாவது மணி ஓசை கேட்கும் முன்னர் வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் அனைவரும் நூற்பு ஆலையினுள் இருப்பது வழக்கம். அடித்துப் பிடித்துக்கொண்டு அனைவரும் நூற்பு ஆலையை நோக்கி ஓடுவார்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள. ஜாபாலியும் அப்படித்தான், மூன்றாம் மணி ஓசை கேட்கும் முன்னர் ஓடோடிப் போய் நூற்பு ஆலையினுள் இருப்பாள்.
நூற்பு ஆலைக்குச் செல்லும் வழி அவ்வளவாகப் பெண்களுக்கு உகந்ததாக இல்லை. நூற்பு ஆலைக்குச் செல்ல வேண்டுமானால் ஆற்றங்கரையைக் கடக்க வேண்டும். அங்கு மனித நடமாட்டமே சற்று குறைந்து காணப்படும். இதனால் அந்த இடத்தில் பொல்லாதவர்கள், முரடர்கள், பெண்களைக் கேலி செய்பவர்கள் எனக் காவாலிப் பயல்கள் கூடியிருப்பர். நூற்பு ஆலைக்குச் சென்று வரும் பெண்களைக் கிண்டல் செய்வது, வம்பிழுப்பது, ஆபாசமாகப் பேசுவது என்பது அவர்களின் வழக்கம். பெண்களுடன் ஆண்கள் இருந்தால் இந்த முரட்டுக் கும்பல் எந்த இடையூறும் பெண்களுக்குக் கொடுக்காது. ஆனால் ஆண்கள் இல்லை, பெண்கள் மட்டும் காணப்பட்டால் அவர்களது செய்கை அத்துமீறலாக மாறிவிடும். இவை அனைத்தையும் ஒவ்வொரு நாளும் தாண்டித்தான் ஜாபாலி நூற்பு ஆலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தாள்.
ஒரு நாள் அவள் ஆலைக்குச் செல்லும் போது ஒரு மனித மிருகம் அவளை அணுகியது. மேலும் அவளை ஆபாசமாகப் பேசி அத்துமீறல் நடந்தது. அவள் கூச்சலிடவே, தூரத்திலிருந்து மற்ற நபர்கள் வந்தவுடன் அந்த மனித மிருகம் அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த நிகழ்வு நடந்து மூன்று தினங்கள் ஆகிவிட்டன. ஆனால் நான்காம் நாள், அவள் நூற்பு ஆலைக்கு வந்து செல்லும் போது அதே மனித மிருகமும், மேலும் இரண்டு மனித வெறி பிடித்த நாய்களும் இணைந்து அவளை அப்படியே குண்டுகட்டாகத் தூக்கிக்கொண்டு பக்கத்திலிருக்கும் மாருதி கோவிலில் வைத்து அவளைச் சின்னாபின்னப்படுத்துகின்றனர், கற்பழித்து விடுகின்றனர். இப்போதும் ஊர் இவளைப் பற்றித் தவறாகப் பேசியது. இந்த நிகழ்விற்குப் பிறகு சில நாட்களிலேயே அவளது மாமனாரும் மாமியாரும் இறந்துவிடுகின்றனர். ஜாபாலி தனிமையாகத் தன் காலத்தைக் கடத்துகிறாள். இப்போது அவள் கர்ப்பம் தரிக்கிறாள், ஒரு பிள்ளையும் பிறக்கிறது. அவனது பெயர்தான் சத்யகாம். ஊரில் சில நல்லவர்கள் அவளுக்கு உதவினார்கள், பிள்ளை வளர்ந்தான். துவக்கப்பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்து ஜாபாலி தன் மகன் சத்யகாமுடன் அங்கிருக்கும் துவக்கப் பள்ளிக்கு மற்ற தாய்மார்களைப் போல் தன் குழந்தையுடன் வருகை புரிந்தாள். அங்குப் பள்ளி முதன்மை ஆசிரியர் ஒவ்வொரு பெற்றோரைக் கூப்பிட்டு சில பல கேள்விகளைக் கேட்டு பிள்ளைகளின் பெயர்களைப் பதிவேட்டில் எழுதிவந்தார்.
ஜாபாலி முதன்மை ஆசிரியரைப் பார்த்தாள், அவளுக்குப் பழைய நினைவுகள் தோன்றின. அப்போது இதே முதன்மை ஆசிரியர் அவரது தோட்டத்தில் வைத்து இவளிடம் அத்துமீறல் செய்த சம்பவம் ஞாபகம் வந்தது. ஆனால் இப்போது அவர் முதன்மை ஆசிரியர். தன் குழந்தைக்கு ஏற்கெனவே அவள் தகப்பன் பெயரைச் சொல்லி வைத்திருந்தாள். இப்போது குழந்தையிடம் கேட்டாள், “உன் அப்பா பெயர் என்ன?” என்று. குழந்தை மிரள மிரளப் பார்த்துக்கொண்டிருந்தது. இவள் தனக்குள் எண்ணினாள், “யாரை நான் உனக்கு அப்பா என்று சொல்ல? எத்தனை நபர்கள்!” என்று தன் மனதில் எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், குழந்தை அவளிடம், “அம்மா, ஞாபகம் வந்துவிட்டது. அப்பா பெயர் ஜாபாலி, அம்மா பெயர் ஜாபாலி,” என்று கூறியது. அவளும் மகிழ்ச்சி தாங்க முடியாமல் குழந்தையை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். குழந்தையிடம், “நீ ஏன் படிக்கிறாய்?” என்றதற்கு, குழந்தை பதில் கூறியது, “என்னைப் பார்த்து அனைவரும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். எப்படி பாபா சாஹேப் படத்திற்குப் பண்ணுகிறார்களோ, அந்த மாதிரி எனக்கும் மற்றவர்கள் பண்ண வேண்டும்,” என்றான் சத்யகாம். இதைக் கேட்டவுடன் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தாள் என்று கதையை அருமையாக முடித்திருப்பார்.
