அத்தியாயம் 30
சடகோபன் கதவு திறக்கப்பட்டதையும் பிரஜாபதி கோபத்துடன் உள்ளே நுழைந்ததையும் பார்த்தார். அசையவில்லை. அசைய முடியவில்லை.
“உங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுவிட்டேன். வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.. ஒரு காலத்தில் மின்வழிப்பயணத்துக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடத்தியவர்.. ஆனால் மூளை என்பது கொஞ்சம்கூட இல்லை.”
சடகோபன் எச்சில் விழுங்க முயற்சி செய்தார். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்ததால் முடியவில்லை. தொண்டை வலித்ததுதான் மிச்சம்.
“ஒரு வெடிகுண்டு நிபுணனைக் கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறீர்கள், என்ன என்னவோ பெரிய திட்டமெல்லாம் இருக்கும் என்று உங்களைப் பார்த்துக் கொஞ்சம் பயப்படக்கூட செய்தேன். அதனால்தான் நானே உங்களை நேரடியாக விசாரிக்க முடிவு செய்தேன். இத்தனைக்கும் எனக்கு நேரமே இல்லை. ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் இந்த வெட்டிவேலை வேறு.”
சடகோபன் ஒன்றும் பேசவில்லை. ‘உன்னைத் தாழ்த்துவதன் மூலம் பேசத் தூண்டுகிறான். வாயை மூடிக்கொண்டிரு.’ என்றது குரல்.
”நான் ஆயிரம் விஷயம் சொன்னேன். நீங்கள் ஒரு வார்த்தையாவது சொன்னீர்களா? குறைந்தபட்சம், ஜனவரி மாதம் அனந்தனைச் சந்தித்ததையாவது?”
சடகோபன் மனதுக்குள் கேள்வி கேட்டார். ‘இவருக்கு எப்படி இது தெரியும்? நினைவுகளை எடுத்து ஆராய்ந்துவிட்டார்களா?அப்படியும் ஏன் விஷயம் தெரியவில்லை?’
‘கவலைப்படாதே. நீ என்னை வந்து பார்த்த நினைவுகளை அழித்தால் அந்த இடம் வெற்றிடமாக இருக்கும். எனவே அதைச் சும்மா மன்னிப்பு கேட்க வந்ததுபோல மாற்றியிருக்கிறேன். மற்ற அத்தனை நினைவுகளும் அவர்களால் படிக்கமுடியாத மாதிரி என்க்ரிப்ட் செய்திருக்கிறேன்.’
சடகோபன் சத்தமாக,”திவ்யா இறந்ததற்கு நான் காரணமில்லை என்று சொல்லச் சென்றிருந்தேன்..” குரல் மிக மெலிதாக ஒலித்தது.
“அதை அவர் ஏற்றுக்கொண்டாரா?” பிரஜாபதிக்கு அனந்தனைப் பற்றித் தெரிந்துகொள்ளத்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.
“இல்லை. கோபம் குறையாமல்தான் இருந்தார். ”
உடனே உள்ளுக்குள் கேட்டார். ’கோபம் என்ற உணர்ச்சி உனக்கு இருப்பது தெரியலாமா? சந்தேகம் வராது?’ உடனே பதிலும் வந்தது. ‘கொஞ்சம் கொஞ்சம் உணர்ச்சிகள் நீண்டகாலம் பயணம் செய்யாதவர்களுக்கும், மூளை மருத்துவம் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் திரும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. அது அவனுக்கும் தெரியும். அதையும் தடுக்கத்தான் புதிய மருத்துவக்கொள்கை என்ற பெயரில் பயணம் செய்யாதவர்களுக்கும் உணர்ச்சி நீக்கம் செய்ய முயல்கிறார்கள்.’
“கோபமா? அடித்துவிட்டாரா?” பிரஜாபதிக்கு அனந்தனின் கோப அளவைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது தெரிந்தது.
“இல்லை. என்னுடன் பேச விருப்பமில்லை என்று வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிட்டார்.”
“அதற்குப்பின் தான் விலங்குப்பண்ணைக்கு வெடிகுண்டு வைக்க முனைந்தீர்களா?”
‘சொல்லிவிடு. இவனை இதற்கு மேலும் ஏமாற்ற முடியாது’
“ஆமாம். இருள் இணையத்தின் வழியாக எண்ணங்களை மாற்றக் கற்றுக்கொண்டேன். டைசன் என்னும் வெடிகுண்டு நிபுணன், கனடாவில் இருந்து ஒரு மாணவன் ஆராய்ச்சிக்கு எனக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தான். இதுவும் அதுவும் சேர்ந்து..”
“இவ்வளவுதான் உங்களிடம் இருந்த விஷயமேவா?” பிரஜாபதி ஏமாற்றத்தோடு கேட்டார். ”அப்படியென்றால் உங்கள் விசாரணை முடிந்தது”
“என்னை சென்னைக்கு அனுப்பப் போகிறீர்களா?” சடகோபன் பதில் தெரிந்தே கேட்டார்.
“சென்னைக்கா? எதற்கு? எங்கே உடல் தேவை இருக்கிறதோ அங்கேதான் அனுப்ப முடியும்? இந்தக்காலத்தில் ஒவ்வொரு உடலும் பணம். யாரையும் கொன்று எரிக்கவெல்லாம் செய்வதில்லை. விலங்குப்பண்ணைக்கு அனுப்பிவிட்டால் அங்கே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். நினைவுகளைப் பிரிக்காமல் அனுப்பினால் உங்களுக்குக் கொடூரமான ஒரு தண்டனையும் ஆயிற்று” குரூரமாகச் சிரித்தார் பிரஜாபதி.
’டைசனையும் அப்படித்தான் அனுப்பினார்கள். அவன் தப்பித்துவிட்டான். உன்னை எங்கே அனுப்புகிறார்கள் என்று பார்க்கலாம்.’ என்றார் அனந்தன் உள்ளிருந்து.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சென்னையில் அஷோக்கின் அருகில் இருந்த டெலிபோர்ட் ஆரவாரம் இல்லாமல் இருந்தது. கடமையாக நர்ஸ் அவருக்கு ரத்த அழுத்தம் பார்த்தாள்.
”அஷோக் பாண்டே.” கணினியைத் தடவிப் பார்த்து அதிகாரி கேட்டார்,”ஆகஸ்ட் மூன்றுதானே உங்களுக்கு விருது வழங்கும் விழா? ஐந்து நாட்கள் முன்னதாகச் செல்லவேண்டிய அவசியம் என்ன?”
”டெல்லியைச் சுற்றிப் பார்க்க விருப்பம். இதுவரை பார்த்ததில்லை” அஷோக் கொஞ்சம் பயத்துடன் தான் இருந்தார். அனந்தன் எவ்வளவோ தைரியமாகத்தான் சொல்லியிருந்தார். இருந்தாலும் பரீட்சித்துப் பார்க்கப்படாத முறை.
“நீங்கள் இதுவரை மூன்றுமுறை டெல்லிக்குச் சென்றிருக்கிறீர்கள்.” அதிகாரி திரையைத் திருப்பிக் காட்டினார். எட்டு வருடங்கள் முன்னால் தேதியைக் காட்டியது திரை.
“அப்போது பணி நிமித்தமாகச் சென்றதால் நேரமில்லை. இப்போது அரசாங்க கௌரவ விருந்தினராகச் செல்கிறேன்.”
“இந்தப் பயணம் உங்களுக்கு இலவசம். நீங்கள் அரசாங்க விடுதியில் எல்லா நேரமும் தங்க வேண்டும். விருது வாங்குவதற்கான நெறிமுறைகளை எல்லா நேரமும் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் தேசத் துரோகக் குற்றத்துக்கு ஆளாவீர்கள்.” நிபந்தனைகள் நீண்டுகொண்டே சென்றன. அஷோக் கேள்வி ஒவ்வொன்றும் முடிந்ததும் ஆமோதிக்கவே பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன. இலவசப் பயணம் என்றால் இவ்வளவா இழுப்பார்கள்?
அவர்மீது ஒரு ஒளிவட்டம் பாய்ந்தது. ஒரு நொடிக்கும் குறைவான நேரம்தான். ஒளி அணைந்தது.
”புதுடெல்லி ராயல் ஹோட்டல் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களுக்கான அறைக்குச் செல்ல லிஃப்ட் காத்திருக்கிறது.” தானியங்கிக்குரல் கேட்க வெளியே நடந்தார். ’அஷோக், நலமாகச் சென்று சேர்ந்தீர்களா?’ அனந்தனின் குரல் அவருக்குள்ளே கேட்டது.
’கவனம். என்னை அழைத்துச் செல்லும் ஆள் உடனிருக்கிறார்.’
”கூப்பிட்டீர்களா?” என்றான் சீருடை. இல்லை எனத் தலையசைத்த அஷோக்கின் மனத்துக்குள் ஒரு பள்ளம் உண்டானது. மகள் நினைவு வந்ததில் சோகமாக உணர்ந்தார்.
அனந்தன் உள்ளிருந்து ’இந்த ட்ரிக்கருக்காகத்தான் பேசினேன். சத்தம் வெளியே கேட்காது.’
’முதல் ஆளாக என்னை அனுப்பிவிட்டீர்கள் அல்லவா?’ அஷோக் மனதுக்குள் நினைக்க ‘மன்னிக்கவும். வேறு வழியில்லை. கோபிக்கு அலுவலக அனுமதி இன்னும் கிடைக்கவில்லை மற்றவர்கள் காரில் செல்கிறார்கள். நான் அனைவருக்கும் தூண்டுதல் அளிக்கவேண்டும்.. உங்களை வைத்துப் பரிசோதனை செய்வது என் நோக்கமல்ல..’அனந்தன் பதிலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.
‘நான் இங்கே என்ன செய்ய வேண்டும்’
‘உங்கள் மாணவர்கள் டெல்லியில் சுரங்க அதிகாரிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் மூலமாக வெடிமருந்து ஏதாவது டெல்லிக்கு வந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து’
அஷோக் விடுதி முகப்பிற்கு வந்துவிட்டார். சீருடை திரும்பிவிட, அறைக்குச் செல்லும் வழியில் நடக்கும்போது ‘அடுத்து’ என்றார்.
’நீங்கள் அந்த விருது வழங்கும் விழா மேடைக்குச் செல்லவேண்டும். அங்கே ஏதேனும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.’
நான் வகுப்பறை ஆள். நிஜமான வெடிமருந்தை அதிகம் பார்த்ததுகூட இல்லை. அஷோக் நினைத்துக்கொண்டார். ஆனால் அனந்தனின் பதில் வந்தது. ‘நம்மிடம் இருக்கும் ஒரே ஆள் நீங்கள்தான். உங்களை விட்டால் வேறு வழியில்லை’
அறைக்குள் நுழைந்து முகம் கழுவும்போது அழைப்பு மணி ஒலித்தது. திறந்தார்.
“மீண்டும் சந்திக்கிறோம். நினைவிருக்கிறதா? என் பெயர் ஹூபர்ட்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”காட்பொலே” பாவ்னா அழுத்தம் திருத்தமாக தனித்தனியாக எழுத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். தானியங்கி வாகனம் சீரான வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது. முன்னிருக்கையில் அஸ்வினி அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் பாவ்னா பேசிக்கொண்டிருக்க பின் இருக்கையில் கௌஷிக் எதோ கணக்குப் போட்டுக்கொண்டிருந்தான்.
“ஆமாம். தேதி சரிதான்” பாவ்னா தீவிரமாக அழைப்பில் மூழ்கி இருக்க அஸ்வினி,”இதை நானும் கேட்க விரும்புகிறேன். சத்தத்தைக் கூட்டுகிறீர்களா?” என்றாள் சன்னமாக.
“காட்பொலே.. தேவகி காட்பொலே என்னும் பெண்ணுக்கு நீங்கள் சொன்ன தேதியில் நாக்பூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கிலோ எடை.” அதுவா முக்கியம்?
”அந்த தேவகியின் தற்போதைய முகவரி கிடைக்குமா?”
எதிர்முனையில் சரசரப்புக் கேட்டது. எந்தச் சத்தமும் இல்லை. “இல்லை. அந்த தேவகி ஒரு வாடகைத் தாய். அந்தப் பெண் குழந்தை அரசாங்க விடுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டார்.” அஸ்வினி பாவ்னாவைக் கரிசனமாகப் பார்த்தாள். எந்த வீட்டில் வளர்ந்திருக்க வேண்டிய குழந்தை.
கௌஷிக் பின் இருக்கையில் இருந்து “தேவகி கிடைத்துவிட்டாள்.”
“என்ன சொல்கிறாய்? எப்படி?”
“நண்பர்கள். எனக்கு ஆயிரம் நண்பர்கள், அரசாங்கத்தின் கை நுழைய முடியாத இடத்தில் எல்லாம் நுழைவார்கள். அந்த தேவகி என்னும் பெண்ணுக்கு செயற்கைக் கருவூட்டல் நடந்த தேதியைக் கண்டுபிடித்துவிட்டான் ஒருத்தன்.” அஸ்வினி பொறுமையிழந்து “தேதியைச் சொல்லித் தொலையேன்” என்றாள்.
“திவ்யா இறந்த தேதியுடன் ஒத்துப் போகிறது. அனாமதேய உடலில் இருந்த கருவை எடுத்துத் தேவகியின் கருவறையில் வைத்திருக்கிறார்கள். அனாமதேய உடல் இருந்த இடம் சென்னை லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலை.”
“அப்புறம் எப்படி புனேவுக்குப் போனாள்?”
“தேவகியின் ஊர் புனே. அவள் வாழ்க்கையில் பல ஆச்சரியங்கள். அந்தக்காலப் பத்திரிகைகளில் அவள் படம் வந்திருக்கிறது.”கௌஷிக் காட்டினான். ‘பிரதமர் என் கணவர்– புனே பெண் அதிரடி’ என்றது ஒரு பத்திரிகைச் செய்தி.
“இதெல்லாம் டார்க் வெப்பில் எப்படியோ கிடைக்கிறது உனக்கு!” பாவ்னா படித்துக்கொண்டே சொன்னாள்.
“இது வதந்தி மாதிரி தெரியவில்லை. தேவகியின் மருத்துவமனைச் செலவுகள், பாவ்னாவின் ஆரம்பகாலப் படிப்புச் செலவு – எல்லாவற்றையும் தந்தது டெல்லியில் ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பின்னணியைக் கொஞ்சம் நோண்டினால்..”
’அது பிரவீணின் பினாமி நிறுவனம். சரிதானே?’ அனந்தன் குரல் கேட்து. ‘அவனுக்கும் கொஞ்சம் ஈவு இரக்கம் இருந்திருக்கிறது.’
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசன் சைக்கிளை மரத்தின் ஓரத்தில் சாய்த்து நிறுத்தினான். ’ இன்னும் இரண்டு நிமிடத்தில் கார் வந்துவிடும்’ அனந்தன் சொன்னார். இந்த வேலைக்கு ஒத்துக்கொண்டிருக்கக்கூடாது. காசை இன்னும் கண்ணில் காட்டவில்லை, ஆயிரம் சில்லறை வேலைகள் வாங்குகிறார்கள்.
கார் நின்றது. ஒரு ஆள் இறங்கிக் கை குலுக்கினான். ’கௌஷிக்தானே?’ என்று நினைத்ததற்கு ‘ஆமாம்’ என்று பதில் வந்தது.
“ஹூபர்ட்டிடமோ அஷோக்கிடமோ கொடுத்துவிடுங்கள்” குளிர்பதனப்பெட்டியைக் கொடுத்தான். கௌஷிக் வண்டி கிளம்பிவிட்டது.
‘அடுத்து நீ செல்லவேண்டியது, நீ இருந்த ஜெயிலுக்கு’ என்றது டைசனுக்குள் ஒரு குரல்.
வேகமாக சைக்கிளை மிதித்து வந்த டைசன் ஜெயில் சுவரைப் பார்த்தான். ’இந்த இடம்தானா?’ இங்குதான் நானும் இருந்திருக்க வேண்டும். ஆனால் வெளியே பார்க்கவில்லையே. ஞாபகம் திரும்பியபோது ஒரிஸ்ஸாவில் இருந்தேன்.
அனந்தன் குரல் கேட்டது. ‘ஆம். சரிதான். சடகோபன் இன்னும் இங்கேதான் இருக்கிறார். எந்த நேரம் வேண்டுமானாலும் அவரை இடம் மாற்ற ட்ரக் வரலாம்.’
சுவரைத் தாண்டவெல்லாம் முடியாது. விரோதமாக கண்ணாடிச்சில்லுகள் பதித்திருந்தன. மூன்று கம்பி வேலிகள் உயரமான ’அந்தப் பெட்டியில் ஒரு லொகேட்டர் இருக்கிறது’ என்றது உள்ளே குரல். அதைத் தேடி எடுத்தான்.
பக்கத்தில் உயரமாக ஒரு மரம் இருந்தது. சரசரவென்று ஏறினான். வாசல் திறப்பதற்காகக் காத்திருந்த ட்ரக் தெரிந்தது. பின்புறம் திறந்து மெல்லிய துணியால் மூடப்பட்ட கூண்டுகள். மிருகங்களைக் கொண்டு செல்லும் ட்ரக். இதில்தான் தன்னையும் அடைத்திருந்தார்கள். ’சடகோபனை இதில்தான் கொண்டுபோவார்கள் என்று நினைக்கிறேன்’
லொகேட்டரைக் குறிபார்த்து ட்ரக்கின் மேல் எறிந்தான். ட்ரக்கின் அசைவையும் தன் திரையில் திசைகாட்டியின் அசைவையும் ஒப்பிட்டுப்பார்த்து ’ஒட்டிக்கொண்டுவிட்டது’ என்றான்.
ட்ரக்கில் இருந்து ஒரு நபர் இறங்குவதைப் பார்த்தான். இந்த ஆளை எங்கோ பார்த்திருக்கிறோமே..
ஞாபகம் வந்துவிட்டது. இண்டெலிஜென்ஸ் அதிகாரி பல்வீர் சிங்.
தொடரும்…