மோகன் ஜி
அமராங்கன லதே- (அன்னமாச்சார்யர் கீர்ததனங்கள்)
இராகம்: மாண்டு
பல்லவி
அமராங்கன லதெ யாடேரு
ப்ரமதம்புன நதே பாடேரு
சரணம் -1
கருட வாஹனுடு கனகரதமு பெ
யிரவுக வீதுல நேகீனி
ஸுரலுனு முனுவுலு ஸொம்புக மோகுலு
தெரலிசி தெரலிசி தீஸேரு
சரணம் -2
இலதருட திவோ இந்த்ர ரதமுபை
கெலயுக திக்குலு கெலிசீனி
பலு சேஷாதுலு ப்ரம்ஹ சிவாதுலு
செலகி ஸேவலுடு ஸேஸேரு
சரணம் -3
அலமேலுமங்கதோ அடு ஶ்ரீவேங்கட
நிலய ட ரதமுன நெகடீனி
நலுகட முக்குலு நாரதா துலுனு
பொலுபு மிகுல கடு பொகடேரு
கீர்த்தனையின் பொருள் :
பல்லவி
தேவ கன்னிகைகள் ஆடுகிறார்கள்.
தூய ஆனந்தத்தோடும் கூடவே பாடுகிறார்கள்.
சரணம் – 1
கருட வாஹனன் தங்க ரதத்தின் மேலமர்ந்தே வீதிகளில் ஊர்வலம் வருகின்றான்.
தேவர்களும் முனிவர்களும் அந்தத் தேரின் வடம் பிடித்து ஒத்திசைவோடு இழுக்கின்றார்கள்.
சரணம் – 2
திக்கெட்டும் வெற்றி கொண்ட இந்த பூலோகத்தின் நாயகன் ஶ்ரீவேங்கடவன், மிளிரும் தேஜஸுடன் இந்திர ரதத்தில் உலா வருகிறான். ஆதி சேஷன் முதலானோரும், நான்முகன், சிவன் போன்ற கடவுளரும் வேங்கடவனுக்கு சேவை செய்தே மகிழ்கிறார்கள்.
சரணம் – 3
அலர்மேல் மங்கை சகிதனாய் ஶ்ரீவேங்கடவனும் வேங்கட நிலையம் நோக்கிச் செல்லும் பவனியில் ஆனந்தமாய் அமர்ந்திருக்கிறான். பற்றற்ற யோகிகளும் நாரதாதி முனிவர்களும் மிகுந்த விருப்புடனே வேங்கடவன்பால் பயபக்தியோடு இடைவிடாமல் போற்றித் துதிக்கிறார்கள்.
சில விளக்கங்கள் :-
அன்னமாச்சாரியார் திருவேங்கடவனை சதா சர்வ காலமும் சிந்தித்து , தான் அடைந்த பேரானந்தத்தை தன் கீர்த்தனங்களின் மூலம் விதவிதமாய் காட்சிப்படுத்துகிறார்.
இந்தப் பாடலில், தேரில் பவனி வரும் ஶ்ரீனிவாச பெருமாள் பற்றிய அவருடைய அகக்காட்சி நெஞ்சம் நிறைக்கும்படியாக விரிகின்றது. அந்த சுகானுபவத்தை நமக்கும் கடத்தி நெகிழச் செய்கிறார்.
தேரோட்டம் பற்றிய ஒரு பார்வை :
நமது கோயில் வழிபாட்டு முறைகளில் கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம், பிரம்மோற்சவம் முதலான பெரும் விழாக்களும், தேரோட்டம், உறியடி, சப்பரம், வழுக்கு மரம் மற்றும் சேஷ வாகனம் கருட வாகனம் போன்ற பலவித வாகனங்களில் மூர்த்தத்தை எழுந்தருளைச் செய்தல் ஆகியவை விசேஷமானவை.
குறிப்பாக, பொன்னாலும் வெள்ளியாலும் அமைக்கப்பட்ட பெரும் தேர்களை மலர்களாலும் மணிகளாலும் அலங்கரித்து, இறைவனின் உற்சவ மூர்த்திக்கு ஆபரணங்களையும் மாலைகளையும் சார்த்தி,வீதிகளில் உலாவரச் செய்தலில் ஒரு தாத்பரியம் உண்டு. இது, கோயிலில் உறையும் இறைவனே நம்மை நாடி வீதிக்கு வருவதான ஏற்பாடு ஆகும்.
அன்னமாச்சாரியார் இந்தப் பாடலில் குறிப்பிடும் இந்திர ரதத்தின் வடம் பிடித்து இழுப்பவர்கள் சாமானியர்கள் அல்ல. பெரிய முனிசிரேஷ்டர்களும் தேவர்களும் ஆவர்.
தேருக்கும் திருமாலுக்கும் சம்பந்தம் உண்டு.
திருமால் ஆமருவியப்பனாக உறையும் வைணவ தலம் தேரழுந்தூர் ஆகும். இந்த ஊர் கம்பர் பிறந்த ஊர் என்ற பெருமையையும் உடையது.
ஒருமுறை உபரிசரவசு என்ற சக்கரவர்த்தி, வானத்திலேயே பறந்து செல்லக்கூடிய தன்னுடைய தேரில் ககன மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் பாதையில் நேர்கீழே இருந்த மாலவன் கோவிலை கவனிக்காமல் அவர் கடந்து போனார்.
இதனால் கருடாழ்வாரும் கோபமுற்று, அந்தத் தேரினை பூமிக்காக இழுத்துவந்து, மண்ணில் அழுத்தி விட்டதால் அந்த தலத்தின் பெயர் தேழுந்தூர் ஆனது.
சுவாமியும் உபரிசரவசுவின் அபராதம் பொறுத்து அவருக்கு அருள் செய்ததாக தலபுராணம் சொல்லும்.
உலகப்பிரஸித்தி பெற்றதல்லவா பூரி ஜகன்னாதரின் ரதோத்ஸவம்?!
ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமலையில் உலாவரும் சுவர்ண ரதோத்ஸவம் காண வேண்டிய ஒன்றாகும்.
தமிழகத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர், குடந்தை சாரங்கபாணி கோயில் தேர் ஆகியவனவும் பிரசித்தி பெற்றவை.
பெருமாளாக தான் தேரில் பவனி வந்தது மட்டுமன்றி, குருசேட்த்திரப் போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாகவே அமர்ந்து வெற்றியைத் தேடித் தந்தவரும் ஶ்ரீகிருஷ்ணனான திருமால் தானே?
பொன்னால் கட்டினால் தான் ரதமா என்ன? சொல்லாலும் கட்டலாமே என்று ‘ரதபந்தம்’ என்ற பா வகைமையில் திருமங்கையாழ்வார் திருவெழுகூற்றிருக்கை பாசுரம் கட்டினார். ரதம் போன்ற அமைப்பில் சிறு கட்டங்கள் போட்டு, ரதத்தின் மேற்பகுதி கீழ்ப்பகுதி எனப் பிரித்து, கட்டங்கள் தோறும் சொற்கள் பொருந்தி வர அமைத்துக் கவிபுனைவது ரத பந்தம். வரிசைகளின் கட்டங்களுக்கான நெறிமுறைகள் உள்ள கடினமான புனைவு இந்த ரதபந்தம் ஆகும்.
பரமசிவன் வேங்கடவனுக்கு சேவை புரிதல் :
நமது பக்தி மார்க்கத்திலே தனக்கு இஷ்டமான தெய்வத்தைப் புகழவேண்டி, ஏனைய தெய்வங்கள் அவருக்கு பணிவிடை செய்வதாகவும் வணங்கி துதிப்பதாகவும் சொல்வது பழக்கத்தில் இருப்பது தான்.
இந்தத் தொடரில், முன்பே சொன்னபடி ‘ஹரன் உயர்ந்தவன் ஹரி தான் உயர்ந்தவன்’ இன்று பேதப்படுத்திப் பார்ப்பதில் பொருளேதும் இல்லை.
‘அரியும் சிவனும் ஒண்ணு ; இதை அறியாதவர் வாயில் மண்ணு!’ என்பது பாமரரும் புரிந்து கொண்ட சொலவடை.
மேலும், ஹரியின் தங்கையின் கணவராக சிவன் ஆனதால் இருவரும் நெருக்கமான சொந்தமும்கூட அல்லவா? அத்தானும் மைத்துனனும் ஒருவரை ஒருவர் உயர்த்திப்பிடிப்பதும் சேவை புரிவதும் இயற்கை தானே?
சிவனுக்கும் தான் மைத்துனனை மிஞ்சிய உறவுமில்லை!
மாலவனுக்கு மிஞ்சிய கருப்புமில்லை!
அலர்மேல் மங்கை :
பிருகு முனிவரின் கதையையும், திருமாலை அவர் மார்பில் உதைத்ததால், லட்சுமி கோபம் கொண்டு திருமாலை விட்டு நீங்கியதையும் முன்பே பார்த்தோம்.
கலியுகத்தில் ஶ்ரீனிவாசனாக வந்தார் பெருமாள்.
ஆகாச ராஜன் என்ற சக்கரவர்த்தியின் திருமகளான பத்மாவதி எனும் பெண்ணைக் கண்டவுடன், தான் ராமாவதாரத்தின்போது, ஒரு பெண்ணுக்குக் கொடுத்த வாக்கு அவருக்கு நினைவுக்கு வந்தது.
ஒரு முறை வேதவதி என்ற பருவமங்கை, ஶ்ரீராமரைத் திருமணம் செய்ய வேண்டி தவம் புரிந்தாள். தான் ஏகபத்னி விரதம் கொண்டிருப்பதால் வேறொரு பிறவியில் பார்க்கலாம் என ஸ்ரீராமரும் வாக்கு கொடுத்தாராம்.
அந்த வேதவதியே இந்த பத்மாவதி என்று உணர்ந்து, அவளைப் பெண் கேட்டு பர்வத ராஜனிடம் சென்றார் ஶ்ரீனிவாசன்.
திருமண செலவுக்கு குபேரனிடம் கடன் வாங்கி, இலட்சுமிக்கும் இந்தத் திருமணம் தெரிய வந்து கோபம் கொள்ள, திருவிண்ணகர் கோயிலில் ஒரு பள்ளத்தில் பாதாள ஶ்ரீனிவாசனாக ஒளிந்துறைய, மீண்டும் சமாதானமாகி இரு தாரங்களையும் மார்பில் பக்கத்துக்கு ஒருவராய் இருத்திக் கொள்ள… என்ன பாடு பட்டீரோ ஸ்வாமி?!
பத்மாவதி தாயாரின் இன்னொரு பெயரே ‘அலர்மேல் மங்கை’. கீழ்த்திருப்பதியில் திருச்சானுரில் பத்மாவதி தாயார் அமர்ந்து அருள் பாலிக்கிறார். அலர்மேல் மங்கை தாயாரை நினைவுகூறும் நம்மாழ்வாரின் அழகான திருமலை பாசுரத்தைப் பார்ப்போம்.
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
இந்தப் பாசுரத்தின் பொருள் :
‘கணநேரமும் உன்னைப் பிரியேன்’ என்றே அலர்மேல்மங்கை உறைந்திருக்கும் திருமார்பனே!
இணையற்ற பெருமை வாய்ந்தவனே!
மூவுலகிற்கும் அதிபதியே!
அடியேனை தாசனாய் ஏற்றவனே!
நிகரில்லா அமரர்களும் முனிவர்களும் விரும்பித் தொழும்
திருவேங்கட நாதனே!
வேறொரு புகல் இல்லாத நானும் உன் பதமலர்களின் கீழ் சரண் புகுந்தேனே!
பாகவதோத்தமர்கள் போற்றும் பரமகுரு :
இந்தப் பாடலில் தேவர், முனிவர் ஶ்ரீனிவாசனின் தேர் வடம் பற்றி இழுப்பதையும் , யோகிகளும் நாரதாதி முனிவர்களும் பயபக்தியோடு இடைவிடாமல் போற்றித் துதிப்பதையும் குறிப்பிடுகிறார். இந்த முனி சிரேஷ்டர்கள் தம் இதயங்களில் பெருமாளை இருத்தி, பக்திசெய்வதால் மகிழ்ந்து அவர்கள் விரும்புவதைக் கொடுக்கிறார்.
ஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம கராவலம்பத் தோத்திரத்தில் காணப்படும் கீழ்கண்ட ஒரு போற்றுதலைப் பார்ப்போம் :
ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் II
‘பிரஹ்லாதன், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாஸர் போன்ற
பாகவதோத்தமர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் ஸ்வாமியே! உன் பக்தர்களுக்கும் விரும்பியனவற்றை அக்கணமே தரும் பாரிஜாத விருட்சம் போல ஆதரித்து அருள்வீர்! என்கிறார் பகவத்பாதர்.
தேவலோகத்தில் பாரிஜாதமெனும் மரம் உண்டாம். அதனடியில் நின்று கேட்பனவற்றை அக்கணமே தருமாம். அந்த பாரிஜாத மரம் போல அருள்வதாகப் பெருமாளுக்கு உவமை செய்தது அழகு!
நாமும் நம் மனத்தில் ஶ்ரீவேங்கடேசனை இருத்தி வழிபட்டு அருளைப்பெற, நமக்கு மட்டும் ஏதும் தடை உண்டா என்ன?
சித்திரம் பாடலுக்கும் நண்பன் தேவாவுக்கு நன்றி
Leave a reply
You must be logged in to post a comment.