அத்தியாயம் 31
அரங்கத்தின் பெரிய திரையில் படத்தில் பிரவீண் ஒரு நபருக்குப் பொன்னாடை அணிவித்துக்கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு குரல் “நீங்கள் இந்த இடத்துக்கு வந்ததும் பொன்னாடையை ஏற்க வேண்டும். கைகள் இரண்டையும் நேராக வைத்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவரைத் தொடவோ கைகளைக் குலுக்கவோ முனையக்கூடாது. கை குலுக்கல் பட்டயம் வழங்கிய பிறகுதான் நடைபெறும்.” என்று ஆணைகளை உதிர்த்துக்கொண்டிருந்தது.
அரங்கத்தில் பெரிய பெரிய வட்ட மேஜைகளில் ஆறு ஆறு பேராகப் பலரும் அமர்ந்திருந்தனர். யாரும் அந்தத் திரையை மதித்தது போலத் தெரியவில்லை. அவரவர் கையில் கோப்பைகளில் பழரசம், மேஜையில் உணவு, பக்கத்தில் இருப்பவருடன் பேச்சு என்றுதான் இருந்தனர்.
“மீண்டும் ஒரு முறை இந்த விழாவின் நெறிமுறைகளைப் பார்த்ததற்கு நன்றி. இந்தத் தேசத்தின் உன்னத விருதை நீங்கள் பெறுவதற்கு தேசத்தின் நன்றி” என்றது திரை இசை உச்சம் பெற்று. ஒரு நொடி அமைதிக்குப் பின் “விழாவின் நெறிமுறைகளை இப்போது காணலாம்” என்று முதலில் இருந்து தொடங்கியது.
“இதையே எத்தனை முறைதான் பார்ப்பது? காலையில் அறையில்கூட இதுவேதான் திரும்பத் திரும்ப. மனப்பாடமே ஆகிவிட்டது.” என்றார் ஒருவர் சத்தமாக. “டாக்டர் பேரி ஜோன்ஸ்?” அடையாளம் கண்டுகொண்ட ஹூபர்ட் ஆரவாரமாக அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்.
“டாக்டர் ப்ரையன் ஹூபர்ட்? நீங்கள் எப்போது வந்தீர்கள்? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.” என்றார் அந்த ஜோன்ஸ் கையைத் துடைத்துகொண்டு.
“சாப்பிட்டு விட்டீர்களா? கொஞ்சம் வெளியே போகலாமா?” வெளியே வந்தார்கள். ஹூபர்ட் நடையில் வேகம் காட்ட முயன்றார். ஜோன்ஸ் ஏறத்தாழ ஓடவேண்டியிருந்தது.
“எப்படி இருக்கிறீர்கள் ஹூபர்ட்?”
“அட்டகாசம். நீங்கள்?” ஹூபர்ட் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருக்குள் ஒரு குரல் ‘நல விசாரணைக்கெல்லாம் நேரமில்லை. அடுத்த கட்டடம் தாண்டியவுடன் ஒரு மரம் இருக்கிறது. அது கொஞ்சம் காமரா மறைவுப் பிரதேசம்’ என்றது.
மரத்தடியில் சென்ற ஹூபர்ட் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ஜோன்ஸ், ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும். இந்த விழா உங்களுக்குப் பழக்கப்பட்ட விருதுவழங்கும் விழாக்கள் போல இல்லை.”
“ஆமாம். காசெல்லாம் கிடையாது. போக்குவரத்து மட்டும்தான் இலவசம்.” சிரித்தார் ஜோன்ஸ்.
“இல்லை. விஷயம் கொஞ்சம் விபரீதம். ஒரு கேள்வி கேட்கட்டுமா?”
ஜோன்ஸின் அமைதியைத் தொடர்ந்து,”அனந்தனை நினைவிருக்கிறதா?”
“என்ன கேள்வி இது ஹூபர்ட்? அவர் கண்டுபிடித்த நினைவுத் தரவிறக்கமும் என் முப்பரிமாண உயிரணு அச்சடிப்பும் இணைந்துதானே இன்று டெலிபோர்ட்டிங்கே சாத்தியமாகி இருக்கிறது? நீங்களும்தானே சால்மர்ஸில் இரண்டு வருடம் என்னுடன் உழன்றீர்கள்? அதெல்லாம் எப்படி மறக்கும்?” ஜோன்ஸ் படபடப்பாகப் பேசினார்.
“இந்தக் காலத்தில் எது யாருக்கு நினைவில் இருக்கும் எது மறக்கும் என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. அந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வேறு எந்த ஆராய்ச்சியாவது செய்தீர்களா?” விடை தெரிந்தே கேட்டார்.
“இல்லை. என் வாழ்வின் உச்சம் அது. அந்த வெற்றிக்குப் பிறகு புகழும் பணமும் கொட்டோ கொட்டென்று கொட்டியது. வாழ்க்கையை வாழத் தொடங்கினேன். ஸ்பெயினில் கடற்கரை ஓரமாக ஒரு அரண்மனை மாதிரி வீட்டை வாங்கி, அங்கேதான் வாழ்கிறேன். கவலை இல்லை, வருத்தம் இல்லை. இங்கு அழைத்ததும் ஒரு மாறுதலுக்காக வந்திருக்கிறேன்.”
‘கவலை இல்லை வருத்தம் இல்லை.’ உள்ளே ஒரு குரல் இருவருக்கும் கேட்டது. ஜோன்ஸ் திடுக்கிட்டு “யார் குரல் அது? கேட்ட குரல் போலவே இருக்கிறது?”
’ஜோன்ஸ்.. இது அனந்தன். ஆறு மாதங்கள் முன்வரை நானும் கவலை வருத்தம் இல்லாமல்தான் இருந்தேன். ’ஜோன்ஸ் நான்குபுறமும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்.
“அவர் இங்கில்லை. ஆனால் நம் மூளைகளை வலைப்பின்னலில் இணைத்துவிட்டார். அவருடன் நாம், நம்முடன் அவர் எந்த வெளிக்கருவியும் இல்லாமல் உரையாட முடியும்” ஹூபர்ட் விளக்கினார்.
“இது சாத்தியமா?”
‘சாத்தியம்தான். மூளையின் தகவல்களைக் கணினிக்கோப்பாக்குவது சாத்தியம் இல்லை என்றார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தியப்படவில்லையா? கணினித் தொடர்புகள் கம்பித்தொடர்பின்றி நடப்பது போல் மூளைத் தகவல்கள் செயல்பட முடியுமா என்று ஆராயத் தொடங்கினேன். சாத்தியப்பட்டது.’
“நான் உங்களுடன் கைகுலுக்கும்போது ஒரு சிறு ஊசியில் குத்தும்போது ஒரு நானோ கணினியை உங்கள் உடலுக்குள் அனுப்பிவிட்டேன். அது இந்தத் தொடர்பைச் சாத்தியப்படுத்துகிறது” என்றார் ஹூபர்ட்.
ஜோன்ஸ்க்கு திடீரென்று வந்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. அங்கே ஒரு மரபெஞ்சு இருக்க அதில் உட்கார்ந்துகொண்டார். “சரி, இந்தக் கண்டுபிடிப்பை ஏன் பிரபலப்படுத்தவில்லை? இது அடுத்த கட்டப் பாய்ச்சல் அல்லவா?”
ஹூபர்ட் சொன்னார். “இதற்கு நான் பதில் சொல்கிறேன். ஜோன்ஸ். நீங்கள் மட்டுமல்ல.. பல ஆண்டுகளாகவே அறிவியலில் பெரிய புது கண்டுபிடிப்புகள் – ப்ரேக்த்ரூ– எதுவும் நடக்கவில்லை – என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?”
“எப்போதும் இப்படி நடப்பது சகஜம்தானே. ப்ரேக்த்ரூ எல்லாம் தினம் தினமா நடந்துகொண்டிருக்கும்?”
“தினம் தினம் ப்ரேக்த்ரூ நடக்காது. ஆனால் ஆராய்ச்சிகள் தினம் தினம் நடக்கும். ஆனால் ஆராய்ச்சிகளே பெரிதாக நடப்பதில்லை – அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”
“இதைப்பற்றி நான் யோசிக்கவில்லை. இது ஒரு யோசிக்கவேண்டிய விஷயம் என்றே நான் நினைத்திருக்கவில்லை” ஜோன்ஸ் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது அவர் வார்த்தைகள் வந்த வேகத்தில் தெரிந்தது.
’யோசிக்காததும் ஒரு காரணம்தான். Necessity is the mother of invention என்பது பாலபாடம். நமக்குத் தேவைகளே இல்லாமல் போய்விட்டன, இல்லையா?’ அனந்தன் குரலாகத் தொடர்ந்தார்.
‘பொருளாதார சுபிட்சம். கவலைகள் இல்லை. வலிகள் இல்லை. கோபம் இல்லை, வருத்தம் இல்லை. வெற்றிக்கான தேடல் இல்லாததால் தோல்வி பயம் இல்லை. விளைவு – நாகரிகம் ஸ்தம்பித்துப்போய் இருக்கிறது’
”இங்கேதான் ஆரம்பித்திருக்கிறது ஜோன்ஸ் இந்த மாற்றம். நம்மிடம்தான் ஆரம்பித்திருக்கிறது. நம் கண்டுபிடிப்பு வெளிப்பார்வைக்குச் சாதாரண மின்வழிப்பயணம். ஆனால் அதை உபயோகித்தவன் சுயநலம் மனிதனின் பயணத்தையே திசை திருப்பிவிட்டது.” ஹூபர்ட் குரல் தழுதழுத்தது. “நம் கண்டுபிடிப்பை அவர்களுடைய ஆயுதமாக்கிக் கொண்டார்கள் அரசியல்வாதிகள்.”
“என்ன செய்தார்கள்?” ஜோன்ஸ் திடுக்கிடுதலின் உச்ச அளவைத் தாண்டிவிட்டார்.
’கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதமாக்கினார்கள். இந்தத் தொழில்நுட்பம் வருவதற்கு முன் நாட்டில் ஆயிரம் கலவரங்கள் நடந்தன. எதற்கெடுத்தாலும் கோபம், என்னைக் கீழிறக்கிவிட்டான், அவன் மேலேறுகிறான் என்று வருத்தம், அதைக் கிளற பொது, தனி ஊடகங்கள். அவை எல்லாம் இப்போது எங்கே?”
“தொழில்நுட்பம் கிடைத்தது. நாட்டைச் சீராக்க என்று ஆரம்பித்தார்கள். பயணத்தின்போது மூளை தரவிறக்கம் ஆகும். சென்று சேரும் இடத்தில் அப்படியேதான் போகும். ஆனால் கோபம் வருத்தம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் ட்ரிக்கர்களை வலிமை இழக்கச் செய்தார்கள். அதில் மாட்டிய மக்களுக்குக் கேள்விகள் இல்லை.வலி இல்லை, கோபம் இல்லை.. ஏன், வளர்ச்சியும் இல்லை. சொன்னதைச் செய்யும் அடிமைகளாக மக்கள் மாறத் தொடங்கினார்கள்.’
ஜோன்ஸ் சிந்தித்தார். “இதை என்னால் ஏற்க முடியவில்லை. மக்களுக்கு இதைச் செய்தார்கள் என்பதை ஒத்துக்கொண்டாலும், வேறு நாடுகள்? அங்கிருக்கும் அரசியல்வாதிகள்? அங்கிருக்கும் அறிவியலாளர்கள்? ஊடகங்கள்?”
அனந்தன்,”இப்போது நீங்கள் வந்தீர்களே, ஒரு பயணம். டெலிபோர்ட்டிங்தானே? அதைக் கட்டுப்படுத்தியது எந்த நாட்டு நிரல்?”
ஜோன்ஸுக்குப் புரியத் தொடங்கியது.
ஹூபர்ட் விட்ட இடத்தை அனந்தன் பற்றிக்கொண்டு,”முழுக் கட்டுப்பாடு, உலக அளவில் கேள்வி கேட்க முடியாத சக்தியை இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு வழங்கிவிட்டது. உலகுக்கே அவர்கள் சொல்வதுதான் வேத வாக்கு.”
அனந்தன் தொடர்ந்தார். ‘நல்ல வேளையாக, இவர்கள் செய்த திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் இழக்கத் தொடங்கியிருக்கின்றன. எனக்கு ஆறுமாதம் முன்னர் ஒரு தூண்டுதல் ஏற்பட்டதால் இவை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். எத்தனையோ விஷயங்கள் மறந்துவிட்டிருந்தன. அவற்றைச் சரிசெய்ய வேலைகள் செய்தேன். எனக்கு ஏற்பட்ட மாறுதல்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் என் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன். காய் நகர்த்தி பிரஜாபதி வரை சென்று என்ன நடந்திருக்கிறது என்று தெளிவாக்கிக் கொள்ள முயன்றேன்..’
ஹூபர்ட் “ஆனால் கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. திருத்தங்கள் வீரியம் இழப்பதை பிரஜாபதியும் புரிந்துகொண்டுவிட்டார். அதனால்தான் புதிய மருத்துவக் கொள்கை வரவிருக்கிறது – திருத்தங்களை நிரந்தரமாக்க. இது அறிவுக்கு எதிரான ஆயுதம். அதை நிறுத்தியே ஆகவேண்டும்.” என்றார் ஆவேசமாக.
ஜோன்ஸுக்கு வந்த கோபம் அவருக்கே ஆச்சரியம் அளித்தது. “என்ன செய்யலாம் சொல்லுங்கள் இவர்களை?”
“அறிவின் சக்தியை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு முதலாவதாக..”
‘நீங்கள் பலநபர்களுடன் கைகுலுக்கவேண்டும்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசன் கைத்திரையைப் பார்த்துக்கொண்டான். இன்னும் இரண்டு நிமிடத்தில் அவன் இருக்கும் மரத்துக்குக் கீழாக தானியங்கி வண்டி வந்துவிடும் எனக் கணக்கு சொன்னது.
மரக்கிளை பாதிக்கு மேல் வெட்டப்பட்டிருந்தது. டைசன் கையை கோணம் பார்த்து வைத்துக்கொண்டான். இப்போது வண்டி கண்ணுக்குத் தெரிந்தது. ஓங்கிக் கிளையை அடித்தான். கிளை முறிந்து கீழே விழுந்தது.
வண்டியின் சென்ஸார் பாதையில் எதிர்பாராமல் ஏதோ விழுந்ததால் வேகம் குறைத்தது. டைசன் சரியாக வண்டியின் பின்புறக் கூண்டுகளுக்குள் குதித்தான். உருண்டு எழுந்து சரிசெய்துகொண்டான்.
கூண்டுகள் துணிபோட்டு மூடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தான்.
மூன்றாவது கூண்டில் சடகோபன் மயக்கமாக இருந்தார். தோள்பட்டைப் பையில் இருந்து தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் அடித்தான்.
சடகோபன் விழித்து “டைசன்?” என்றார் பலவீனமாக. டைசன் பையில் இருந்து சாதனங்களை எடுத்து அந்தக் கூண்டை உடைத்து அவரை வெளியே கொண்டு வந்தான். இப்போது வண்டியில் இருந்து இறங்குவதற்கு வழி பார்க்கவேண்டும்.
அதற்குத் தேவையே இல்லாமல் வண்டி அதுவாகவே நின்றது. ஏன் நிற்கிறது?
வெளியே பார்த்த டைசன் அதிர்ந்தான். நான்குபுறமும் காவல் வண்டிகள். எப்போது வந்தன?
”டைசன்.. மீண்டும் சந்திக்கிறோம். இப்போது உங்களைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை.” பல்பீர் சிரித்தார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மாஸ்மைண்டர்ஸ் அலுவலகத்தின் மாநாட்டு அறையில் ரிச்சர்ட் அமர்ந்திருக்க, ஒரு திரையில் பாவ்னாவின் கணினி ஓர் அறிக்கையைக் காட்டிக்கொண்டிருந்தது. ”பதினைந்து நாட்கள். இவ்வளவு குறைவான நேரத்தில் எப்படி நீங்கள் சொல்வதைச் செய்ய முடியும்?” இன்னொரு திரையில் இருந்த பிரவீண் சந்தேகமாகக் கேட்டார்.
“மன்னிக்கவும் திரு.ஜனாதிபதி. இவரை அறிமுகப் படுத்தத் தவறிவிட்டோம். இவர் திருமதி அஸ்வினி. இவர் மூளை வழி மருத்துவத்தில் விற்பன்னர்.” ரிச்சர்ட் சொன்னதும் அஸ்வினி பவ்யமாகக் கும்பிட, பிரவீண் அதைக் கண்டுகொள்ளவில்லை.
பாவ்னா,”நாங்கள் சென்னைக்கு அவசரமாகச் சென்றது இவரைச் சந்திக்கத்தான். இவருடன் சேர்ந்து ஒரு வரைவுத்திட்டம் தயாரித்திருக்கிறோம். அதைப்பற்றி உங்களுடன் பேச விரும்புகிறோம்”
”எவ்வளவு நேரம் ஆகும்?”
“இருபது நிமிடங்கள் போதும்:
பிரவீண் எதோ திரையைப் பார்த்தார். “இப்போது நேரமில்லை. நாளை மாலை எட்டு மணிக்கு விருது விழா இருக்கிறது. அதற்கு முன்னால்.. காலை ஒன்பது மணிக்கு வந்துவிடுகிறாயா?”
‘மிகக் குறைவான நேரம்தான். ஆனால் வேறு வழியில்லை. ஒப்புக்கொள்’ என்றது அனந்தனின் குரல்.
%%%%%%%%%%%%
’டைசன் தப்பிச்சது எப்படி தெரியும்னு நிச்சயமாக் கேப்பான் பல்பீர். அவன் முட்டாளில்லை.’ கோபி டெல்லியின் மொட்டை மாடியில் இறங்கும்போது அனந்தன் அவனிடம் உள் உரையாடிக்கொண்டிருந்தார்.
‘தெரியும்ப்பா. சமாளிக்கிறேன். மத்தபடி ப்ளான் எல்லாம் ஒழுங்காப் போகுதா?’ இதைச் சொல்வதைவிட, தன்னைத் தூண்டுவதற்காகத்தான் அனந்தன் பேசினார் என்பதைப் புரிந்துகொண்டவனாக கோபி பதில் சொன்னான்.
‘என்ன ப்ளான். முதல்ல அவங்க என்ன நினைக்கறாங்கன்றது தெரியணும்.’
கோபி லிஃப்டை விட்டு வெளியே வந்தான். ‘அது தெரியும். ஆனா நெட்வொர்க்கிங் விஷயம் நினைச்சபடி நடக்குதா?’
‘அந்த வேலையை ஹூபர்ட்டும் ஜோன்ஸும் பார்த்துப்பாங்க. இப்ப நீ லெஃப்ட் எடுக்கணும்.’
இடதுபக்கம் திரும்பினான். அஷோக் காத்துக்கொண்டிருந்தார்.
பதட்டமாக, ”எதாவது தெரிந்ததா?” என்றார்.
“ஆமாம். குஷ்முண்டா தெரியுமா?”
“அதெப்படித் தெரியாமல் இருக்கும். சத்திஸ்கரின் பிரம்மாண்ட நிலக்கரிச்சுரங்கம்.”
“அங்கிருந்து ஒரு நபர். வெடிமருந்து நிபுணர். இந்த விழாவுக்காக அழைக்கப்பட்டிருக்கிறார். பெயர் அபினவ் சிந்தாமணி”
அஷோக் தலையைத் தேய்த்துக்கொண்டார். ஞாபகம் வந்துவிட்டது. “2074 பேட்ச். நல்ல மாணவன்.”
கோபி “அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கொஞ்ச தூரம் நடை, போகலாமா? அவனைப்பிடித்து என்ன நடக்கிறது என்று விசாரிப்போம்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே பல்வீரின் அழைப்பு வந்தது.
“டெல்லி வந்துவிட்டாயா? ஒரு விஷயம் கேக்கணும்னு இருந்தேன்.” அவர் சொல்லி முடிப்பதற்கு முன் “டைசன் தப்பிச்சது எப்படித் தெரியும்னுதானே கேக்கவரீங்க.. இன்ஃபர்மேஷன் இல்லை.. கட் ஃபீலிங்தான். உங்களுக்கு திடீர் குபீர் ப்ரொமோஷன் கிடைக்கற அளவுக்கு வேற என்ன நடக்குது இங்கே.. லாஜிகலா யோசிச்சதுதான்.”
”நான் கேக்க வந்தது அதை இல்லை. சடகோபனுக்கு பனிஷ்மெண்ட் தரப்போறாங்க. உங்கப்பா ஃப்ரெண்டு இல்லையா? கடைசியா ஒருதரம் பார்க்கணுமா?”
தொடரும்…