அத்தியாயம் 34
பிரஜாபதி சிரித்துக்கொண்டே அனந்தனைப் பார்க்கத் திரும்பினார். “கடவுள். அந்தக் கருத்தாக்கத்தை ஒழிக்க எவ்வளவு பாடுபட்டோம் தெரியுமா?”
அனந்தன்,”பல கடவுள்களை அழித்து, அந்தக்கடவுளாகவே பாரத் ஆகிவிட்டார். வாழ்க பாரத்.”மரணம் நிச்சயம் என்னும் சூழலிலும் அவர் மகிழ்ச்சி விநோதமாக இருந்தது.
பிரவீண்,”அந்தக் கடவுளாக என்னையே ஆக்கிவிட்டார். வாழ்க பாரத்.”
பிரஜாபதி கவனிக்காமல், “ஆக்குவதும் அழிப்பதும் கடவுள் வேலை என்றால் இன்று அந்த வேலையைச் செய்வது நாங்கள்தான். எங்களுக்குத் தேவை என்றால் கடவுளைக் கும்பிடவைப்போம், கலவரங்கள் நிகழ்த்தவைப்போம். அதே நேரத்தில் கடவுள் தேவையில்லை என்றால் மறக்கவும் வைப்போம். புதியதோர் கடவுள் செய்வோம். ”
”குறுக்கே வந்தவர்களை, கேள்வி கேட்பவர்களைக் கொலையும் செய்வீர்கள், இல்லையா? திவ்யா போல?” அனந்தன் கோபத்தைக் காட்டவில்லை.
”திவ்யா! அவள்மேல் எனக்கென்ன குடும்பப்பகையா? ஒரு குடும்பம் வாழ ஒருவரைப் பலி கொடுக்கலாம், ஒரு கிராமம் வாழ ஒரு குடும்பத்தைப் பலி கொடுக்கலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. ஒரு நாடே வாழ அவளைப் பலி கொடுத்தோம். தேவையற்ற நேரத்தில் தேவையற்ற கேள்விகள். சொன்னாலும் புரியாத ஆட்கள் எங்களுக்குத் தேவையில்லை.”பிரஜாபதி பேசுவதற்குப் பயப்படவில்லை. அவர் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் என்ற இறுமாப்புதான் தெரிந்தது.
“அவளை மட்டுமா பலி கொடுத்தீர்கள்? எத்தனை லட்சம் உயிர்கள்? வெளிநாட்டில் இருப்பதாக மக்களை எண்ணவைத்து..”
’தேவைப்படாமல் ஒரு உயிரையும் எடுக்கவில்லை. பிரவீணின் பாரதக்கனவு நிறைவேறத் தேவையானதை மட்டும்தான் செய்தோம்”பிரஜாபதிதான் பேசிக்கொண்டிருந்தார். பிரவீண் அமைதியாகக் கவனித்துக்கொண்டு சாலைவளைவுகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
”பாரதக் கனவு! கேள்வி கேட்காத அடிமைகள் நிறைந்த தேசத்தைக் காலங்கள் கடந்தும் ஆட்டுவிப்பது கனவு. அது நிறைவேற அறிவாளிகளை அடக்குவது தேவை. இதைத்தானே சொல்கிறாய்?”
“கேள்விகள். உன் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா என்பது போன்ற கேள்விகள். பயனற்ற கேள்விகள். எதைச் செய்தாலும் கேள்விகள். எதற்கெடுத்தாலும் கேள்விகள்! அதைத்தானே நம் நாடு பல ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டுவந்தது? அதனால் ஏற்பட்ட நிகர பலன் என்ன? ”பிரஜாபதிக்கு மூச்சு இரைத்தது. இருந்தாலும் தொடர்ந்தார்.
”எந்த ஆட்சிக்கும் சக்தி கிடையாது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்தியற்ற மக்களிடம் கெஞ்சிக் கெஞ்சி, பொய் சொல்லி, பேரம் பேசி ஓட்டுவாங்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டுக்கு அதை எப்படித் தக்கவைப்பது என்பதைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருக்க வேண்டும். எந்நேரமும் தீயணைத்துக் கொண்டே இருந்தால் எப்போது விவசாயம் செய்வது?”
“விவசாயமா, களையெடுப்பா? உன் திட்டத்துக்கு ஒத்துவராதவர்களை நீக்குவதுதான் விவசாயமா?”அனந்தன் குரலில் சற்றே கோபம் எட்டிப்பார்த்தது.
பிரஜாபதி அதைக் கவனியாமல், “ஆமாம். நீக்கினோம்தான். யாரை நீக்கினோம்? நல்லதைச் செய்ய நினைப்பவனையும் செய்யவிடாத அறிவுஜீவிகள். முக்கியமானதை விடுத்துத் தேவையில்லாததைப் பெரிதுசெய்யும் ஊடகங்கள். இவர்கள் தொந்தரவில்லாமல் ஆட்சி நடத்தினால் என்ன நடக்கும் என்று பார்க்கிறாய் அல்லவா? உலகமே நம்மிடம் அடக்கம். நல்லவன் கைச் சர்வாதிகாரம் நல்லதைத்தான் செய்யும்!”
“நல்லவன் கை! யார் நல்லவன் இங்கே? இந்த பிரவீணா? எப்படியோ கிடைத்த மிருகபலப் பெரும்பான்மையை, அறிவியல் வளர்ச்சியை வைத்து வளைத்து ஆட்சி அமைப்புச் சட்ட மாற்றம் செய்வது நல்லவன் வேலையா? எதிர்க்கட்சி, எதிராக இருந்த ஊடகம், ஏன், உன்னைத் தொந்தரவுகூடச் செய்யாமல் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த அறிவியலாளர்கள் – எல்லாருக்கும் மூளைச் சலவை செய்து கேள்விகளை அகற்றுவது நல்லவன் செய்யும் வேலையா? இந்தக் குறுகிய பார்வையால் உலகமே புதிய ஆராய்ச்சிகள் இல்லாமல், முன்னேற முடியாமல் தத்தளிப்பது தெரியுமா உனக்கு?” இப்போது அனந்தன் குரலில் இருந்த கோபத்தை பிரஜாபதி அடையாளம் கண்டுவிட்டார்.
“பாருங்கள் அனந்தன் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது? பல ஆண்டுகளாக இந்த உணர்வுகள் இல்லாமல் மகிழ்ச்சியோடு மட்டும் இருந்தீர்கள். என்ன கெட்டுப்போய்விட்டது?”
”போதைக்கு அடிமையானவன் வலியை மறப்பது மகிழ்ச்சியா? கோபமும் வலியும் இல்லாதது நன்மையா? பாரம் இழுக்கும் வலியை அனுபவித்தவன்தான் சக்கரத்தைக் கண்டுபிடித்தான்.தாய் இறந்த வருத்தம் பார்த்தவன்தான் அந்த வியாதிக்கு மருந்து தயாரித்தான். நீ தந்த போதையும் கலையும். பாவ்னாவின் ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்தாய் அல்லவா?”
பிரஜாபதிக்குத் திடீர் என எதோ புரிந்தது போல் இருந்தது. குழப்பமாகவும் இருந்தது. “பாவ்னா.. அவளைப்பற்றி உனக்கெப்படி தெரியும்? அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பிரவீண், “இன்னும்கூடவா புரியவில்லை? உன்னை அறிவாளி என்று நினைத்தேனே? பாவ்னா, திவ்யா வயிற்றில் இருந்த கரு. அனந்தன் மகள்.” என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”நீங்கள் செல்லவேண்டிய வழி B என்று குறிப்பிடப்பட்டுள்ள வழி. அந்த வழியாகச் சென்று விருது வாங்குபவர்களின் இருக்கைகளில் உங்கள் பெயரிடப்பட்ட இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்” வாகனத்தில் தானியங்கி ஒலி கேட்டது.
”என்னவோ திட்டம் என்று தெரிகிறது, வெடிகுண்டு என்றும் தெரிகிறது. நாம் அந்த அரங்குக்குப் போய்தான் ஆக வேண்டுமா?” ஒரு குரல் கேட்டது.
’கவலைப் படாதீர்கள். நம் நெட்வொர்க் வலுவாகிக்கொண்டே வருகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் காப்பாற்றிவிடுவோம், காப்பாற்றிவிடுவீர்கள் இல்லையா மிஸ்டர் மேத்தா?’ ஜோன்ஸ் குரல் கேட்டது. ’திரு மேத்தா சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரி. இப்போதுதான் நம்முடன் இணைந்திருக்கிறார்.’
‘இப்போதைக்கு நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமருங்கள். என்னுடைய கருஞ்சீருடை ஆட்களை நீங்கள் நம்பலாம். என்ன பிரச்சினை வந்தாலும் உங்களை உடனடியாக பஸ்களில் ஏற்ற அவர்களுக்கு ஆணை கொடுத்திருக்கிறேன். ’
”வெடிகுண்டு எங்கிருந்து வரும் என்றே தெரியவில்லை. அப்புறம் எப்படிக் காப்பாற்ற முடியும்?” பஸ்ஸில் சலசலப்பு குறையவில்லை.
அஷோக்கின் குரல் கேட்டது. ‘என்னுடைய மாணவன் மூலம் அந்த வெடிகுண்டின் தன்மையைக் கேட்டறிந்துவிட்டேன். இன்னொரு பேராசிரியர், அந்தத் தனிமங்களின் இடத்தைக் கண்டறிய ஒரு ட்ராக்கிங் நிரல் எழுதிவிட்டார். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். பயப்படாதீர்கள்.’
ஹூபர்ட்’அந்த நிரலை மேத்தாவுக்கு அனுப்புங்கள். அவர் குழு பார்த்து உள்ளே வரவிடாமல் தடுக்கட்டும்’என்றார்.
மாலை எட்டு மணி நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே ஏன் கிளம்பினார்கள் என்று அரங்கத்தை நெருங்கியபின் தான் புரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பஸ்கள் நின்றிருந்தன. வரிசைகள் மெதுவாக ஊர்ந்து ஒவ்வொருவராகச் சரிபார்க்கப் பட்ட பின் இருக்கைகளுக்குச் சென்றார்கள்.
“ஒருத்தரும் டெலிபோர்ட்டிங்குக்கு குவாலிஃபை ஆக மாட்டோம். ஹார்ட்பீட் அப்படி எகிறுது” என்று சத்தமாகவே சொன்னார் ஒருவர்,
மேத்தாவின் குரல் கேட்டது’ஒருவேளை திட்டத்தை மாற்றிவிட்டார்களோ? இன்னும் நிகழ்ச்சிக்கு ஒருமணிநேரம்கூட இல்லை, இன்னும் வெடிமருந்து இந்தப் பிராந்தியத்துக்கே வரவில்லையே?’
கோபி மேடையில் இருந்து ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். விருது வாங்கும் உள்வட்டத்தைப் பார்த்தான். கூடிய விரைவில் எல்லாரும் வந்துவிடுவார்கள். பின்னால் இருந்த விருந்தினர் வட்டம் நூறு மீட்டர் வேலிக்கு அந்தப்புறம் நிரம்பி வழிந்தது. முதலிலேயே வந்துவிட்டதால் நீண்டநேரமாக உட்கார்ந்திருந்ததில் பொறுமையிழந்து காணப்பட்டார்கள். வெயில் கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து விசிறிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யார்?
டைசனா?
அந்த இடத்தின் வழியைத் தேடி வேகமாக ஓடினான். ‘டைசன் தான் ட்ரிக்கராக இருக்கவேண்டும்’
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பிரஜாபதி இருக்கைக்கு முன்னாலிருந்த தண்ணீர்க் குடுவையை எடுத்துக் குடித்தார். ஒரு கை நீரைப் பிடித்து முகத்தில் தடவிக்கொண்டார். பிறகு நிதானமாக அனந்தனைப் பார்த்துக் கேட்டார்.
“உங்களை டெலிபோர்ட்டிங் மூலம்தானே இங்கே கொண்டுவந்தோம்.. எப்படி உங்களுக்கு இன்னும் கோபம் இருக்கிறது? டைசனை நாட்டுக்குள் கொண்டுவந்தது சடகோபன் என்பதற்கு எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால் அவன் ஏன் உங்களைக் கைகாட்டினான்?”
“நல்ல கேள்விகள். ஆனால் உன்னிடம் நான் கேட்கவேண்டிய கேள்விகள் சில பாக்கி இருக்கின்றன” பிரஜாபதி கேள்வி வந்த திசையை எதிர்பார்க்கவில்லை. பிரவீண் பிரஜாபதியைக் கோபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் மாட்சிமை பொருந்திய ஜனாதிபதி அவர்களே. ஆனால் இப்போது விசாரிக்கப்படவேண்டியவர் இவர்.” பிரஜாபதியின் குரலில் அதீத அடக்கம் தெரிந்தது.
“இல்லை. எனக்கு இவரிடம் எந்தக் கேள்வியும் இல்லை. உன்னைத்தான் கேட்க வேண்டும். எத்தனை கொலைகள் செய்தாய்?”
பிரஜாபதி பதிலளிக்கத் திணறினார்.
“திவ்யா ஒரு கொலை என்றாய், சம்மதித்தேன். இவர் சொல்வதைப் பார்த்தால் பல லட்சம் கொலைகள் செய்திருக்கிறாய்.. இல்லையா?” பிரவீணின் கண்கள் சிவப்பேறின.
”புதிய மருத்துவக் கொள்கை. நான் முழுதாகப் படிக்கக்கூட இல்லை. அதில் என்ன இருக்கிறது? என்னை முழுமையாக நீக்கிவிட்டு உன்னையே ஆட்சியாளனாக அறிவித்துக்கொள்ளப் போகிறாயா?”
பிரஜாபதி துணிச்சலை வரவழைத்துக்கொண்டார். “படித்தால் மட்டும்? புரிந்திருக்குமா? எத்தனை விஷயங்கள் உங்கள் காதுக்கு வருகின்றன? இந்தத் தேசத்தை நிர்வகிக்க எத்தனை புரட்டுகள், நினைவுமாற்றங்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? வாழ்க பாரத் என்னும்போது மட்டும் உங்கள் காதில் தேன் வந்து பாய்கின்றது. அதற்காக நாங்கள் செய்திருக்கும் பின்வேலைகளின் பரிமாணத்தை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?”
“உன் ஆட்சிக்கு என் பெயர். உன் அநியாயங்களுக்கு நான் முகம். இனியும் அது நடக்காது.”
பிரஜாபதி மிகவேகமாக எழுந்தார். பிரவீண் எதிர்பார்க்கும் முன் அவர் தலையில் ஓங்கி அடித்தார். பிரவீண் அடியின் வலியை விட அதன் எதிர்பாராத தன்மையினால் அதிர்ந்துபோய் இருக்கையில் விழுந்தார்.
பிரவீண் மயங்கிவிட்டதை உறுதிசெய்துகொண்ட பிரஜாபதி, ”உங்களுக்கு எந்தச் சந்தேகம் வரக்கூடாது என்று பாடுபட்டேனோ அந்தச் சந்தேகம் வந்தே விட்டது.”பிரஜாபதியும் எழுந்தார். “ஆனால், இந்தக் கேள்வி திடீரென்று வந்த காரணம்தான் புரியவில்லை.”
அனந்தன் சிரித்தார். “பிரவீண் கடந்த நான்கு மணிநேரமாக எங்கள் நெட்வொர்க்கில் இணைந்திருக்கிறார். பாவ்னாவிடம் கைகுலுக்கினார் அல்லவா?” பிரஜாபதியின் குழப்பத்தைப் பார்த்து “நான் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். ஒரு நானோ கம்ப்யூட்டரை உடலுக்குள் செலுத்தி, மனித நினைவுகளை நெட்வொர்க் ஆக்கிவிட்டேன். சடகோபனை நான்தான் இயக்கினேன்.”
தொடர்ந்தார். “ஆனால் என்னை டெலிபோர்ட்டில் கொண்டுவருவீர்கள் என்பதால், ஹூபர்ட் இந்த விளையாட்டை டெல்லியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார். என் நினைவுகளை என்க்ரிப்ட் செய்து வைத்திருந்தேன். அதைத் தூண்டியதே, இப்போது பிரவீண் தான். தொட்டு எழுப்பினாரே.”
பிரஜாபதி அதிர்ச்சியடைந்தாலும் சமாளித்துக்கொண்டார். “என்ன செய்து என்ன பிரயோஜனம்? அங்கே டைசன் பிரவீணை வெடிக்க வைத்திருப்பான்.”
%%%%%%%%%%%%%%%%%
கோபி டைசனைப் பார்த்துவிட்டான். அரங்கத்தில் இருந்து வெளியேறி, ஏறத்தாழ முழு மைதானத்தையும் சுற்றி, மூடிவிட்டிருந்த விருந்தினர் வழியைத் திறக்கவைத்து உள்ளே வர பத்து நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன.
மாடியேறி மைதானத்தைப் பார்த்தான். டைசன் டைசன் டைசன் என்று எல்லா முகங்களையும் வேகமாகச் சரி பார்த்தான். மேடையில் இருந்தபோது பார்த்த இடத்தில் இல்லை. ஆயிரம் பேரில் இவனைத் தேடிக் கண்டுபிடிக்கமுடியுமா? நேரம் இருக்கிறதா?அவனைத் தொட்டுவிட்டால்கூடப் போதும். ஹூபர்ட் அவனைக் கட்டுப்படுத்திவிடுவார்.
மேடையைப் பார்த்தான். அனைவரும் வந்துவிட்டிருந்தார்கள். உள்வட்ட ஆலோசனைக்குழு மக்கள். சக்சேனா, சைனிக், தேப் எல்லாரும் ஆரவாரமாகச் சிரித்துக்கொண்டிருந்தது பெரிய திரையிலும் தெரிந்தது. ”ஜனாதிபதி வந்துகொண்டே இருக்கிறார்.” அறிவிப்பைத் தொடர்ந்து ராணுவத்தின் இசை ஒலிக்கத் தொடங்கியது. மேடையில் இருந்தவர்கள், உள் வட்டம் வெளிவட்டம் எல்லாம் எழுந்து நின்றார்கள்.
நேரம் நழுவிக்கொண்டே போகிறது. கோபி எல்லா முகங்களையும் பார்த்துக்கொண்டே நடந்தான். இந்தப்பதட்டத்தில் அவனைப் பார்த்தாலும் அடையாளம் தெரியாதோ? கோபிக்கு இதயத்துடிப்பு வேகமானது.
அதோ.. அந்த நீலச்சட்டை டைசன்தானே? இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்காட்டி ஓடியதில் வழியில் நின்றவர்கள் பயந்து ஒதுங்கினார்கள்.
டைசனை அடைய இன்னும் பத்தடிதான் தூரம் இருக்கும்போது..
வெடி வெடித்தது.
தொடரும்…