தசரதன்
வெயில் தளர்ந்து சூரியன் மேற்கிலிருந்து மெல்லமெல்லக் கீழே இறங்கிய வண்ணமிருந்தது. மக்கி வரும் பொழுதில் நடராஜர் கோலத்தில் இருந்த தலைமுடியை ஒழுங்குப் பண்ணி, கோதி முடித்துக் கொண்டே தன் குடிசைக்கு வந்த ஆவுடை, பெருமூச்சு விட்டப்படியே இடுப்பில் இருந்த கூடையைத் திண்ணையில் வைத்து உட்கார்ந்தாள்.
குடிசை வாசலில் உட்கார்ந்து நோட்டுகளையும் புத்தகங்களையும் பரப்பி வைத்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாள் சின்ன மகள் மீனா. வெளிவாசலில் உட்கார்ந்து மல்லிப்பூவை நூலில் கோர்த்துக் கொண்டிருந்தாள் பெரிய மகள் வடிவு.
தம்முடைய இரு மகள்களை பார்த்தவுடன் ஆவுடைக்கு உடல் அசதியும், சோர்வும் எங்கோ போய் மறைந்துக் கொண்டன.
“மீனு கண்ணு…. அம்மாவுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டா…” ஆவுடை குரல் கொடுத்தாள். மீனா எழுந்து குடிசைக்குள் போய் பானையில் இருந்த தண்ணீரை சொம்பில் எடுத்து வந்து தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்துக் கொண்டாள். ஆவுடை சொம்புத் தண்ணீரைக் குடித்து விட்டு வாசல் கொம்பில் தலை வைத்து சாய்ந்துக் கொண்டாள். மின்மினிப் பூச்சிகளாய் சில எண்ணங்கள் அவள் மனதிரையில் ஓடியது.
தன்னுடைய அம்மா வழி உறவில் தூரத்து சொந்தத்தில் டவுனில் இருந்த சுப்புடு என்றவனை கல்யாணம் செய்துக் கொண்டாள் ஆவுடை. வடிவு பிறந்து நடக்கின்ற வரையிலும் தனக்கு அமைந்த வாழ்வை எண்ணி எந்தவொரு கஷ்டங்களையும் அவள் படவில்லை. பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான வாழ்வுதான் அவள் வாழ்ந்து வந்தாள்.
டவுன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்தப் பூக்கடையில் எடுபிடியாக வேலைப் பார்த்து வந்த அவளின் கணவன் சுப்புடு பூ மாலைகள் கட்ட கற்றுக் கொண்டு குறுகிய காலத்திலேயே தன் திறமையால் முன்னேறிவிட்டான். மார்க்கெட்டில் மாலைகள் கட்டுவதில் அவனைப் போல் வேறு யாருமில்லை என்ற பெயருக்குச் சொந்தக்காரனாகினான். ஆளுயரமாலை, யானைக்கால் மாலை, வாசக்கால் மாலை, மூகூர்த்த மாலை என பெரிய பெரிய மாலைகள் கட்டி அனைவரையும் தன் வசமாய் ஈர்த்து வைத்துக் கொண்டிருந்தான். அவனின் பூமாலை கட்டும் தொழிலின் நேர்த்தியும், திறமையும் ஆங்காங்கு வெளிப்பட்டு நகரில் எங்கே அரசியல் மீட்டிங் நடந்தாலும் அங்கே வருகைதரும் பிரபல அரசியல்வாதிகளுக்கு எல்லாம் சுப்புடுவிடம் தான் பூமாலைகளுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆவுடை மிக சந்தோஷமாக தன் கணவனின் பெருமையில் தானும் பங்கெடுத்துக் கொண்டாள்.
டவுன் மார்க்கெட் பூக்கடைகளில் மிகப் பிரபலமாக தெரிய வந்த சுப்புடு ஒருநாள் இரண்டு வயதான குழந்தையையும் புள்ளத்தாச்சியான ஆவுடையையும் விட்டு விட்டு ஆப்பிள் கடை வைத்திருந்த ஒருத்தியுடன் ஊரை விட்டே ஓடிப் போனான்.
கணவன் ஓடிப்போன துக்கமும் ஒருபுறம், பிரசவத்தில் இரண்டாவதாய் பெற்றெடுத்த பெண் குழந்தையை நினைத்து வருத்தம் மறுபுறமென அவள் வாடிப் போனாள். அவளது மன உறுதி அற்றுப் போகாமல் தனக்குப் பிறந்த பெண் குழந்தையின் அற்புதமான சிரிப்பினைக் கண்டவுடன் வாழ்வின் அபாயகரமான நிலைகளைக் கடந்து எல்லா வேதனையையும் புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையை வாழலானாள். தன் இரண்டு பெண் குழந்தைகளும்தான் தனக்கான உலகம் என்ற எண்ணம் அவளுள் மலர்ந்தபோது அவர்களின் சிரிப்பில் உள்ளம் பூரித்துப் போனாள்..
சில நாட்களிலேயே சுப்புடு தன்னை விட்டு ஓடிப்போன விசயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் அதை ஒரு கனவெனக் கடந்து பயணிக்க ஆரம்பித்தாள். எப்படியும் வாழ்ந்து தான் தீர வேண்டும் என்ற யாதர்த்தமான நிலையை புரிந்துக் கொண்டு தன்னோட இரண்டு பெண் பிள்ளைகளின் அழகியலான பேச்சிலும், சிரிப்பிலும் தன்னோட மனப்பாரங்களை இறக்கி வைத்துவிட்டு பம்பரமாய் சுழல ஆரம்பித்தாள்.
பெரிய பெண்பிள்ளையை பள்ளியில் சேர்த்துவிட்டு, பிறந்த தன் பச்சைக் குழந்தையைத் தன் மடியில் கட்டிக்கொண்டு ஒரு கோணிப்பையைத் தோளில் போட்டுக்கொண்டு மார்க்கெட் சாலை, ப்ளாட்பார்ம், பஸ் ஸ்டாண்ட் என எங்கெங்கோ அலைந்து திரிந்து கீழே கிடக்கின்ற காலி தண்ணீர் பாக்கெட், பாட்டில், ப்ளாஸ்டிக் டம்பளர், பாலிதீன் கவர்கள், அட்டைகள் எனக் கிடைத்தவற்றை எல்லாம் கோணிப் பையில் நிரப்பிக் கொண்டு, பழைய இரும்புக் கடைக்குப் போய் கிலோக் கணக்கில் கொடுத்து, தினம் இருநூறு ரூபாய்க்கு அதிகமாகச் சம்பாதிக்கலானாள். வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியின் பக்கமாய் நகர்வதாய் உணர ஆரம்பித்தாள்.
ஒரு வாரமாக இடைவிடாத மழை பிடித்துக் கொண்டது. எங்கும் தண்ணீர்க்காடு. டவுனில் கூட ஜன நாடமாட்டம் அற்றுப் போனது. இந்தச் சூழலில் அவள் குப்பைகளை எங்கே தேடிப் போவாள்? தின வருமானம் கிடைக்காத நிலையில் வீட்டுக்குள் அமர்ந்து வானத்தைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
மழையின் காரணமாக பள்ளி விடுமுறை விட்டிருந்தனர். தன்னோட இரண்டு வயது மகளை, பெரியவளிடம் விட்டுவிட்டு ‘”‘நாளை எப்படி அடுப்பெரியும்?'”‘ என்ற மனக் கலக்கத்தில் ஒரு ஆவேசத்துடன் கோணிப்பையை தோளில் போட்டுக் கொண்டு லேசான தூறல் இருக்கும்போதே குப்பையெடுக்க கிளம்பிவிட்டாள்.
சாலைகள் எங்கும் தண்ணீர்…
தண்ணீர் இல்லாத இடமே இல்லை என்பது போல் வெள்ளம் நிறைந்திருந்தது.
நாய்படாத பாடாக தண்ணீரிலும் குப்பைக் கழிவுகள் நிறைந்த சகதிகளிலும் அலைந்து திரிந்தாள்.
ஆங்காங்கே உள்ள குப்பைத் தொட்டிகளைக் கிளறிச் சேறும், சாக்கடையுமாக இருந்த குப்பைகளில் வேண்டியதைத் தேடி எடுக்கும் போது புடை நாற்றமடித்தன. சில இடங்களில் வராத வாந்திக்காக அடிவயிற்றில் இருந்து ஓங்காரமிட்டாள். முடிந்தவரை சகித்துக் கொண்டு ஓரளவுக்கு, இன்றைய வயித்துப் பாட்டுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குப்பையில் பொறுக்கிய பொருட்கள் நிரம்பிய கோணிப்பையைத் தூக்கிக் கொண்டு பழைய சாமான் கடைக்கு விரைந்தாள்.
மழை காரணமாக யாரும் வரமாட்டார்கள் என்பதால் பூட்டியிருந்த கடை அவளை வரவேற்றது.
அதைப் பார்த்தும் நெஞ்சம் கொதித்துப் போனாள். கஞ்சி காய்ச்சிக் குடிக்காவது ஐம்பது ரூபாயோ, அறுபது ரூபாயோ கிடைக்கும் என்று எண்ணி முயற்சி எடுத்தவளுக்கு மிகவும் ஏமாற்றமாய் போய்விட்டது. தலைச்சுற்றலுடன் அப்படியே அந்தப் பழைய இரும்புச் சாமான் கடை வாசலில் உட்கார்ந்துவிட்டாள்.
சற்றே விட்டிருந்த வானம் இருண்டு மீண்டும் தூறல் போட ஆரம்பித்து விட்டது.
ரொம்ப நேரமாக மரச்சிற்பம் போல் உட்கார்ந்திருந்தவள் தன்னோட இருமகள்களின் நினைவு வந்து விருட்டென்று அங்கிருந்து எழுந்து குடிசை நோக்கி நடக்கலானாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் ‘ஜோ’வென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது. மழையில் நனைந்தபடியே போகும் போது இருந்த உற்சாகம் குறைந்து மெல்ல நடந்து வந்து வீட்டில் விழுந்த ஆவுடை அதன் பின் மூன்று நாட்களாக எழுந்திருக்கவே இல்லை. கடும் காய்ச்சலில் படுத்த படுக்கையாக பேச்சு, மூச்சில்லாமல் கிடந்தாள்.
வடிவு தனது அம்மாவின் நிலையைக் கண்டு தவித்துப் போனாள். மறுநாள் பள்ளிக்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். தன் குடும்பம் இருக்கும் நிலைக்கு தனக்கு படிப்பு தேவை தானா என்ற எண்ணம் அவளுக்குள் துடிப்பாய் எழுந்த வண்ணமிருந்தன.
விடிந்ததும் மார்க்கெட்டுக்குப் போய் தன் அப்பா வேலை செய்த பூக்கடையில் தன் குடும்ப பிரச்சினைகளை சொல்லி வேலை கேட்டாள் வடிவு.
சுப்புடுவின் மகள் என்பதை அறிந்தவுடன் கடைக்காரர் முத்து, அந்த சின்னஞ்சிறு முகத்தில் வெடித்திருக்கும் பரிதாபத்தை உணர்ந்து மல்லிப் பூக்கட்டும் தொழிலை கற்றுக் கொள்ள மார்க்கெட்டில் இருந்த ஒரு பாட்டியிடம் அனுப்பி வைத்தார். இரண்டே நாளில் அந்த பாட்டியுடன் இருந்து மல்லிப்பூ கட்டக் கற்றுக் கொண்ட வடிவு, மார்க்கெட்டில் தினமும் மல்லிப்பூ கட்டி முந்நூறு ரூபாய் சம்பாதித்து வந்தாள்.
படிக்க வேண்டிய வயதில் தன் மகள் குடும்பப் பாரத்தைத் தாங்க தலையைக் கொடுத்திருப்பதை எண்ணி ஆவுடைக்கு வருத்தம் மேலிட்டாலும் தற்போதைய சூழலில் அவளின் இந்த முடிவே சரி என்றும் கஞ்சிக்கு இல்லாத கழுதக்கி என்ன படிப்பு என தான் சார்ந்த பகுதி மக்கள் சொல்வதும் உண்மைதானோ என்றும் நினைத்து ஆயாசமான பெருமூச்சொன்றை விட்டாள், அது சொன்னது அவளின் மன வேதனையையும் வலியையும். மகள் சம்பாதித்தாலும் அவள் குப்பை எடுக்கும் தனது தொழிலை விடாமல் செய்து வந்தாள்.
ஒருநாள் இரவு ஆவுடைக்கு தூக்கமே வரவில்லை. குடிசை வாசலில் படுத்துக் கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்து தெருவைப் பார்த்து விடியலை எதிர்பார்த்தப்படியே காத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் மனம் அவசரக்கதியில் துடித்தவண்ணம் இருந்தது. எதற்கா இந்த மனப்படபடப்பு என்பதை அப்போது அவளாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. குப்பைப் பொறுக்குவதிலும் போட்டி வந்து விட்டன. நன்றாக விடிந்த பிறகு போனால் அவ்வளவாக குப்பைகள் கிடைப்பதில்லை. அந்த எண்ணம் தானோ என்னவோ அவள் உறக்கமில்லாமல் பதைபதைப்புடன் விடியலுக்குக் காத்துக் கொண்டிருப்பதற்கான காரணம்.
எங்கோ சேவல் கூவும் சத்தத்தை கேட்டவுடன் இடத்தை விட்டு எழுந்துக் கொண்டாள். முகத்தை கழுவிக் கொண்டு திண்ணையில் போட்டு வைத்திருந்த கோணிப்பையை தோளில் போட்டுக் கொண்டு தொழிலுக்குக் கிளம்பிவிட்டாள்.
இன்னும் வெளிச்சம் வரவில்லை… ஆனாலும் அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வேகவேகமாகச் சாலையில் நடக்க ஆரம்பித்துவிட்டாள். இரண்டு மூன்று தெருக்களில் இருந்த குப்பை தொட்டிகளைக் கிளறி அதிலிருந்து தனக்கு வேண்டிய குப்பைகளை எடுத்து கோணியில் போட்டுக் கொண்டே நடந்தாள்.
பாரதி தெருவில் இருந்த குப்பைத் தொட்டிக்கு போய் ஆவுடை நின்றபோது, ‘குவா… குவா….” என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டாள். குனிந்து குப்பைத் தொட்டியை பார்த்த போது ஒரு லுங்கியில் சுருட்டி குழந்தையை குப்பைத் தொட்டியில் யாரோ போட்டுவிட்டு போயிருந்தனர். குழந்தை பிறந்து ஒரு நாள் தான் ஆகியிருக்கும். இரத்த பிசுபிசுப்பு இன்னும் போகவில்லை. குழந்தையை பார்த்து ஸ்தம்பித்து நின்றாள். அது அழுவதைக் கண்டு நெஞ்சுப் பொறுக்க முடியாமல் யோசிக்காமல் வாரியெடுத்தாள்.
‘இந்தப் பிஞ்சுக் குழந்தையைக் குப்பையில் போட எப்படி மனசு வந்துச்சு ‘என நினைத்துக் கொண்டே உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்த்தாள். சோடையில்லாத அழகான பெண் குழந்தை. அவள் கையில் அது லேசாய் சிரித்தது. அப்போது கன்னத்தில் விழுந்த குழி அவளை வசீகரித்தது. பேரழகி எனச் சிரித்துக் கொண்டாள்.
அந்த இடத்தில் கொசுக்கள் மொய்த்தன. அவை குழந்தையையும் சுற்றிச் சுற்றி வந்தன. தன்னிடமிருந்த துண்டால் குழந்தையைச் சுற்றி, தன் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு குப்பையெடுக்க மனமில்லாமல் நடந்தாள். தெரு வெறிச்சோடி போயிருந்தது. வெளிச்சம் மெல்ல பரவிக் கொண்டு வந்தது.
வேகவேகமாக நடந்து குடிசையை அடைந்தாள்.
‘என்னம்மா சீக்கிரம் வந்துட்டே’ என ஓடிவந்த வடிவு, அவளின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்து ஒரு கணம் திகைப்புடன் நின்று, உடனே சுதாரித்துக் கண்ணை குமுட்டிக் குமுட்டிப் பார்த்தாள்… தொட்டாள்… சிரித்தாள். அதுவும் புன்முறுவல பூக்க கன்னக்குழியில் விழுந்தாள். கால் பாதங்களை விரலால் வருடினாள்.
“வடிவு… குப்பையைப் பொறுக்க போனப்போ பாரதி தெரு குப்பைத் தொட்டியில் இந்தக் குழந்தை கிடந்து அழுதிட்டிருந்துச்சு. மனசு பொறுக்கல அவ்வளவு அழகான குழந்தைடி. அதோட பொக்கைவாய் சிரிப்பை பாரு. கன்னத்துல குழி விழுந்தா அதிர்ஷ்டம்ன்னு சொல்லுவாங்க. இது பொறந்த நேரம் அதிர்ஷ்டமில்ல போல அதான் தூக்கிப் போட்டுட்டாங்க. அதிஷ்டமோ இல்லயோ பச்சக் குழந்தை, அத்தன அழகு… போட்டுட்டு வர எனக்கு மனசில்ல. நாய்க புள்ளய எதாச்சும் பண்ணிட்டா… அதான் நம்ம வீட்டுக்கு எடுத்திட்டு வந்துட்டேன்”.
“ம்ம்ம்வோவ்… குழந்தை அழகா இருக்கு. நாமே இதை வளர்த்துக்கலாம்….” உற்சாகப் பூரிப்பில் விழிகள் விரியச் சொன்னாள் வடிவு.
“மூணு பொட்டச்சிங்க இருக்குற வீட்ல இப்போ நாலாவதா ஒரு பொட்டச்சியா? நம்மால சமாளிக்க முடியுமா வடிவு?”
“ம்மாவோவ். எதுக்கும் கவலைப்படாத. இந்த குழந்தையை உன் கடைசிப் பொண்ணா நினைச்சிக்கோ. நான் என் தங்கச்சியா நினைச்சிக்கிறேன். நாம வச்சிக்கலாம்மா… நம்ம கஷ்டத்துல அவளயும் சேத்துப்போமே… என்னம்மா சொல்றே?’ என்று வடிவு சொல்லிக் கொண்டிருக்க, ” அய்ய்….ய்…பாப்பா… குட்டிப் பாப்பா…” என்று மகிழ்ச்சியுடன் மீனுக்குட்டியும் வந்து குழந்தையின் பிஞ்சுக் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
“மீனா. இது உன் தங்கச்சி பாப்பா… உனக்கு பிடிச்சிருக்கா?” என்றாள் ஆவுடை.
“ரொம்ப பிடிச்சிருக்கும்மா… இந்த தங்கச்சி பாப்பா எப்படி வந்தது.?”
“எப்படியோ நம்மள தேடி வந்திருக்கும்மா…” என்று ஆவுடை சொல்லிக் கொண்டாள். குழந்தை பீறிட்டு அழ ஆரம்பித்தது.
“வடிவு, குழந்தைக்குப் பசிக்கு போல… பாவி மக்க பால் கொடுத்துப் போட்டாளுவளோ இல்ல அப்படியே தூக்கிக் கொண்டாந்து போட்டாளுவளோ தெரியல. முதல்ல் நீ போய் பால் வாங்கிட்டு வா…. இந்தா” என்று முந்தானையில் முடித்து வைத்திருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். வடிவு கடைக்கு ஓடினாள். குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதுக் கொண்டே இருந்தது.
ஆவுடை, குழந்தையை தன் மடியில் கிடத்திக் கொண்டு ஆட்டினாள்.
“ஆராரோ… ஆரிராரோ… என் செல்லக்குட்டிக்கு ஆராரோ…. என் மகாராணிக்கு ஆரிராரோ …. ” என ஆவுடை தாலாட்டுப் பாட, குழந்தை அமைதியானது.
‘அம்மா பாப்பாவோட பேர் என்னம்மா…?’ என்று மீனுக்குட்டி கேட்டாள்.
‘அழகி… பொன்னழகி’ என்றாள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.