அத்தியாயம் 35
வெடி வெடித்த அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எந்தப்பக்கம் ஓடினால் பிழைக்கலாம், இன்னும் அடுத்தடுத்த வெடி வெடிக்குமா, எதாவது அடிபட்டிருக்கிறதா, நாம் உயிரோடுதான் இருக்கிறோமா எதுவும் புரியாமல் யோசிக்க நேரமில்லாமல் எல்லாப்பக்கமும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
நுழைவாயில்கள் அனைத்தும் தானாக மூடிக்கொண்டிருக்க கதவை உடைத்துக்கொண்டிருந்த கூட்டம், அவர்களைக் கட்டுப்படுத்துவதா, தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதா என்று புரியாமல் அவர்களை அரைமனதாகத் தடுத்துக்கொண்டிருந்த காவலர்கள், உடைந்த மேடையின் இடிபாடுகளுக்கு இடையே ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த ஆட்கள், திடீரென்று வானத்தில் வந்த ஹெலிகாப்டரின் சத்தம்.
மைதானத்தைச் சுற்றி இருந்த திரை திடீரென உயிர்பெற்றது.
ஓடிக்கொண்டிருந்தவர்கள் நின்று திரையைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
“நான் பிரவீண் குமார் பாரத் பேசுகிறேன்”
%%%%%%%%%%
பிரஜாபதி ட்ரக்கின் திரைக்கு உயிர் கொடுத்தார். “உங்கள் சக அறிவாளிகளின் கதியைப் பார்க்கலாமா?”
எங்கிருந்து வந்தது என்று தெரியாத அடியில் கீழே விழுந்தார் பிரஜாபதி. பிரவீண் எழுந்து நின்றார். “என்னைக் கட்டிப்போடக் கூடத் தோன்றவில்லை, அல்லவா?”சந்தேகத்துக்கு இன்னொருமுறை அடித்தார்.
அனந்தன் கட்டை விடுவித்து அதே கயிற்றில் இருவரும் பிரஜாபதியைக் கட்டினார்கள்.
“அங்கே திரை தயாராக இருக்கும் அல்லவா?” பிரவீண் கேட்டார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%
வெடித்துச் சிதறிய மேடையின் பின்புறம் இருந்த ஒலி ஒளிக்கட்டுப்பாட்டு அறையில் பாவ்னாவும் கௌஷிக்கும் வயர்களை இணைத்துக்கொண்டிருந்தார்கள்.
பிரவீணின் முகமும் குரலும் துல்லியமாகவே வந்தன. “இங்கே நடந்திருக்கும் கொடூரம் எப்போதும் யாராலும் ஏற்க முடியாத கொடூரம். ஆனால், உங்களுக்குச் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதே இருக்கையில் அமருங்கள். பயப்படாதீர்கள், இந்த வெடிகுண்டின் தாக்கம் மேடை தாண்டி வேறெங்கும் வரவில்லை. மேலே வேறெந்த குண்டும் இல்லை.”
“நிஜமாகவே வேறெங்கும் குண்டு இல்லையா கௌஷிக்?”
ஹூபர்ட்டின் குரல் பதில் சொன்னது.’இல்லை. கவலைப்படாதே பாவ்னா.’
“நல்ல எண்ணங்களோடுதான் என் ஆட்சி தொடங்கியது. ஆனால் நல்ல எண்ணங்கள் மட்டுமே போதாது, நல்ல நண்பர்களும் வேண்டும். எனக்குக் கிடைத்த ஆலோசகரின் பதவி வெறியால் உலகமே நாசமாகிப் போய்க்கொண்டிருக்கிறது” இப்போது பிரவீணின் முகமும் ஒரு பிரம்மாண்டத்திரையில் தெரிந்தது. வழக்கமான அலங்கரிக்கப்பட்ட முகம் இல்லை. நெற்றியில் இருந்து ஒரு ரத்தக்கோடு மூக்கு நோக்கி வழிந்துகொண்டிருந்தது. சாலையில் இன்னும் யமுனை நதி பாதி நிரம்பி மணலும் நீருமாகப் பின்னணியின் தெரிந்தன.
மைதானத்தின் விருந்தினர் பகுதியில் டைசனுக்குக் கைவிலங்கு அணிவித்துத் தரையில் படுக்க வைத்திருந்தான் கோபி. “என்னால் அந்தக் குண்டு வெடிப்பைத் தடுத்திருக்க முடியாது. என்னதான் நடந்தது?”
அஷோக் வேகமாக கோபியை நெருங்கினார். “உன் பார்வையில் இருந்து டைசன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். நான் அருகில் இருந்ததால் வேகமாக அவனை அடைய முடிந்தது. அவனைத் தூண்டிவிட்டதில் அவனும் நெட்வொர்க்கில் இணைந்துவிட்டான். பிறகெல்லாம் ஹூபர்ட்தான்” இருவரும் திரையைப் பார்த்தார்கள்.
“மனித வரலாற்றின் நெடுக அறிவியலின் துணை இருந்திருக்கிறது. யார் ஆள்கிறார்கள் என்பதை எப்போதும் அறிவியல்தான் நிர்ணயித்திருக்கிறது. துப்பாக்கி கண்டுபிடித்ததில் இருந்து வெடிகுண்டு அணுசக்தி என்று வலுவான ஆயுதம் கண்டுபிடித்தவனின் கூட்டம்தாம் பூமியாண்டு கொண்டிருக்கிறது. ஆனால் அவை நேரடி ஆயுதங்கள். அனந்தனுக்கு ஆயுதமெல்லாம் கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை.”
இப்போது திரை அனந்தனைக் காட்டியது.
“எதை வேண்டுமானாலும் ஆயுதமாக்கும் குரூர சிந்தனை கொண்ட அறிவாளிகளும் அதே மனித வரலாற்றில் இருக்கிறார்கள்”அனந்தன் இப்போது பேசினார். “அணுசக்தி ஒரு கண்டுபிடிப்பு. அந்தச் சக்தியை அழிவுக்குத்தானே முதலில் பயன்படுத்தினோம்? ஏன் தகவல் தொடர்பு, சமூக ஊடகங்கள் போன்றவை கூடத்தான் மேல்பார்வைக்குத் தொந்தரவு தராத தொழில்நுட்பங்கள்தான். அவற்றை வைத்து மனிதனைப் பொம்மையாக்கி வேண்டியதைச் செய்துகொள்ளவில்லையா?”
கோபி அஷோக்கைப் பார்த்துத் திரும்பினான். “டைசனை நெட்வொர்க்கில் சேர்த்துவிட்டீர்கள், சரி. வெடியை ஏன் வெடிக்க வைக்க வேண்டும்?”
அஷோக் பதில் சொல்லவில்லை. ஹூபர்ட்தான் சொன்னார். ‘இது அனந்தனின் ஏற்பாடு. மேடையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் உள்வட்ட ஆலோசனைக் குழு. எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர்கள்தான் காரணம். அவர்களைக் கைது செய்வது, வழக்கு எல்லாம் நீண்ட காலமாகும், மாற்ற முடியாத விளைவுகளை உண்டாக்கும் என்றார்.’
திரையில் காட்சி பிரஜாபதிக்கு மாறியது. முன்னிருக்கையில் மயங்கிக் கிடந்தார். பிரவீண் பேசினார்.
“இந்த நபரை உங்களுக்கு ஒரு தொழில்நுட்ப, பாதுகாப்பு ஆலோசகனாகத்தான் தெரிந்திருக்கும். ஆனால் கடந்த இருபது வருடங்களாக என்னைப் பொம்மையாக்கி ஆட்சி நடத்திய குடியரசுத்தலைவரே இவன்தான். இவனும் இந்த மேடையில் இருந்தார்களே, இப்போது இறந்தார்களே – அந்த உள்வட்டக்குழுவும் என்னை வைத்து ஆடிய விளையாட்டுகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் வெள்ளை அறிக்கையாக வெளிவரும்.”
பிரவீண் முன்னிருக்கைக்கு வந்தார்.
“ஆனால் இவன் செயல்களுக்கு நானும் பொறுப்பு. நாடே கைக்கு வருகிறது என்று மகிழ்ந்தேன். கலவரங்கள் அடங்குகின்றன என்பதனால் எதையும் கண்டுகொள்ளவில்லை. முன்னேற்றம் என்பதற்கு என்ன விலை கொடுக்கிறேன் என்று தெரியாமல் இருந்தேன். நாட்டு மக்கள் ஒவ்வொரு அழைப்பிலும் வாழ்க பாரத் என்று என்னைப் புகழ்கிறார்கள் என்ற போதையில் இருந்தேன். அவர்களைக் காட்டி என்னை விடுவிக்க நான் முனையவில்லை. முனையப்போவதில்லை.”
பிரவீண் மூச்சிழுத்து விட்டுக்கொண்டார். ”எத்தனையோ விபரீதங்கள் நடந்திருக்கின்றன. என் பெயரால் நடந்திருக்கின்றன. அவற்றை முழுமையாகத் திருப்பிச் சரிசெய்ய என்னால் முடியாது. நான் பொறுப்பேற்கிறேன். நாட்டை நல்லவர்கள் ஆளட்டும். இப்போது உண்மையாகவே விடைபெறுகிறேன். நன்றி. வாழ்க பாரத்.. இந்த முறை இது நாட்டைக் குறிக்கட்டும். இனி என்றும் இது நாட்டை மட்டுமே குறிக்கட்டும். நன்றி!”
திரை அடங்கியது. ஒலிபெருக்கிச் சத்தம் மட்டும் கேட்டது.
“பதட்டப்படாதீர்கள். குண்டுவெடிப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இப்போது எல்லாக் கதவுகளும் திறக்கும். எல்லாரும் அவரவர் இங்கே வந்த அதே பேருந்துகளில் ஏறிக்கொண்டு திரும்பலாம். ஓடவேண்டாம்..”
%%%%%%%
பாவ்னா கோபியை அழைத்தாள். “நீங்கள் அந்த ட்ரக்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறீர்களா?”
கோபி,”இல்லை. எல்லா விஞ்ஞானிகளையும் பத்திரமாக வீடு சேர்க்கும் வேலையில் இருக்கிறேன்.”
ஹூபர்ட் குரல் எல்லாருக்கும் கேட்டது. “எல்லாரும் கொஞ்சம் அதைக் கவனியுங்கள். அனந்தனின் ஆசை அதுதான்.”
அனந்தன் சொல்லிக்கொண்டிருந்தார்.“பிரவீண் பொறுப்பேற்கிறார். ஆனால் பொறுப்பென்று பார்த்தால் என்னுடையதும்தான். அடைக்கத் தெரியாத பூதத்தை அவிழ்த்து விடும் அறிவியலும் பூதம் போடும் ஆட்டத்துக்குப் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.”
பிரவீண் “இல்லை அனந்தன். வண்டியை நிறுத்துகிறேன். நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்கள் சேவைதான் நாட்டுக்குத் தேவை. நாங்கள்..”பிரஜாபதியைச் சுட்டிக்காட்டி, “நாட்டுக்குப் பாரம்தான்.” என்றார்.
என்ன நடக்கிறது? கோபி அதிர்ச்சியுடன் திரையைப் பார்த்தான்.
“உங்களுக்குப் புரியவில்லை. இன்னொரு பூதத்தைத் திறந்திருக்கிறேன். சில நாட்களாக எத்தனையோ பேரை என் வலைப்பின்னலில் சேர்த்திருக்கிறேன், கட்டுப்படுத்தியிருக்கிறேன். இந்தத் தொழில்நுட்பம் இன்னொரு பிரஜாபதியிடம் கிடைத்தால் என்னாகும் என்று சொல்ல முடியாது. என்னோடு மண்ணாகட்டும்.”
“நீங்கள் இல்லையென்றால் வேறொருவர் கண்டுபிடிக்கமாட்டாரா? இப்போதே அந்தத் தொழில்நுட்பம் எத்தனையோ அறிவாளிகளின் மூளைக்குச் சென்றிருக்கிறது.”
”கண்டுபிடிக்கும் வாய்ப்புள்ள சிந்தனையாளர்கள் எல்லாரும் இந்த நெட்வொர்க்கில் இணைந்து இந்த உரையாடலைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” அனந்தன் காமரா நோக்கி முகத்தைத் திருப்பினார். ”உங்களுக்கு நான் சொல்லும் சேதி ஒன்றே ஒன்றுதான். அறிவியல் ஒரு அக்கினிக்குஞ்சு. அந்த அக்கினிக்குஞ்சை விளக்கேற்றப் பயன்படுத்துவதும் காட்டை வெந்து தணிய வைக்கப் பயன்படுத்துவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.”
அனந்தன் வண்டியின் முன்புறத்தைப் பார்த்தார். புதுடெல்லி லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலை என்றது தூரத்தில் தெரிந்த கம்பிக்கதவு. “இப்போது..” என்றார்.
பிரவீண் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார். வண்டியின் விசையை தானியங்கியில் இருந்து மேனுவலுக்கு மாற்றினார்.வண்டியின் வேகம் அதிகமானது. கோபி கத்தினான் “அப்பா!”
ட்ரக் கம்பிக்கதவை உடைத்து உள்ளே பாய்ந்தது. வேகம் குறையாமல் நேராகச் சென்றுகொண்டே இருந்தது. எரிகிணற்றின் பிழம்புகள் செக்கச்செவேலென்று தெரிந்தன. பிரவீண் தீர்மானமாக எரிகிணற்றை நோக்கி வண்டியைச் செலுத்தினார். முன் சக்கரங்கள் கிணற்றுள் பாய பிரவீண் ஆவேசமாக “வாழ்க பாரத்” என்று கத்தினது அரைகுறையாகக் கேட்டது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
புதுடெல்லி விமான நிலையம் பரபரப்பாக இருந்து. சிவப்பு அங்கி போட்ட சாண்டா க்ளாஸ் கடைகளின் நடுவே இருந்த கிருஸ்துமஸ் மர அலங்காரங்களுக்கு நடுவே குழந்தைகளை மடியில் அமர்த்திக்கொண்டிருந்தார்.
“விமானத்தில்தான் போகவேண்டுமா? டெலிபோர்ட்டிங்கில் என்றால் நொடியில் ஊர்போய்விடலாமே?” கோபி ஹூபர்ட்டைப் பார்த்துக் கேட்டான்.
”நொடியில் போய் என்ன சாதிக்கப் போகிறேன்? டெலிபோர்ட்டிங் பயணம் செய்வதில் ஒரு வழியாக இருக்கவேண்டும். அது மட்டுமே வழி என்று ஆனதுதான் எல்லா அனர்த்தங்களுக்கும் ஆரம்பம்.”
ஜோன்ஸ் உள்ளிருந்து ஆரவாரமாக் கையசைத்துக்கொண்டு வந்தார். “மெர்ரி கிருஸ்துமஸ் ஹூபர்ட். நீங்களும் விமானம்தானா?”
பாவ்னா ஒரு மின்வண்டியில் பதட்டமாக வந்து இறங்கினாள். “நல்லவேளை நீங்கள் கிளம்புமுன் வந்துவிட்டேன்.”
ஹூபர்ட் சிரித்தார். “நீ எதற்காக வரவேண்டும்? உனக்கெல்லாம் நிறைய வேலை இருக்கிறது. அரசியல் சட்டத்தை பழையபடி மாற்றி அமைக்க வேண்டும். தேர்தலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எவ்வளவு வேலை உன் குழுவுக்கு இருக்கிறது?”
“அதெல்லாம் ஏறத்தாழ முடியும் தருவாயில் இருக்கிறது.” பாவ்னா கோபியைச் சுட்டிக் காட்டினாள். ”இண்டெலிஜன்ஸ் டீமும் வேலை செய்கிறது. ஜனவரி இறுதியில் தேர்தல். அதுவரை தற்காலிகமாக அதிகாரிகள் ஆட்சி. மாஸ்மைண்டர்ஸ் போன்றவற்றையெல்லாம் தடை செய்யச் சொல்லி பெரும்பான்மை அதிகாரிகள் முடிவெடுத்து விட்டார்கள். கவலை வேண்டாம்.” போலி வருத்தத்துடன் தொடர்ந்தாள். “கன்சர்வேடிவ் கட்சிக்கு பிரச்சார ஏற்பாடு செய்ய நிறுவனம் தேவையாம். நானும் அடுத்த மாதம் உங்களூருக்கு வருகிறேன்.”
”பொங்கல் நம்மூரில். இந்த வருஷம் களைகட்டும். இருபது வருஷமாக இல்லாமல் இருந்த ஜல்லிக்கட்டும் உண்டாம். தெரியுமா?”
ஜோன்ஸ் சிரித்தார். “பழைய உலகத்துக்குப் போகிறேன் என்று பழைய பிரச்சினைகளையும் சேர்த்துக் கொண்டு வந்துவிடாதீர்கள்.”
ஹூபர்ட் தன் திரையைத் தடவினார். “அனந்தன் கடைசியாகப் பேசியது நினைவிருக்கிறதில்லையா?” திரையில் ட்ரக்கின் உள்புறம் தெரிந்து. தீச்சுவாலை மறைக்கும்போதும் அனந்தன் திரையைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
”புதுமை படைப்பது அறிவியலின் கடமை. எல்லாப் புதுமைகளையும் ஆயுதம் ஆக்குவதும் மனிதனின் குயுக்தி. வேகத்தைத் தரும் அறிவு விவேகத்தையும் தரவேண்டும். வேகத்தை ஆராயும் அறிவு வேகத்தடையையும் சேர்த்தே ஆராயட்டும். அறிவும் இந்தத் தீ போலத்தான். கட்டுப்பாட்டில் இருக்கும்வரை நடனம். கட்டுப்பாட்டை மீறினால் ஊழித் தாண்டவம். ஆக்க மட்டும் செய்யட்டும் உங்கள் அறிவென்னும் சிவம்.”
முடிந்தது.
Leave a reply
You must be logged in to post a comment.