தற்போதும் சமூகத்தின் கவனம் பெறாத சாலையோரங்களில் வாழும் மக்களின் அன்றாடங்களின் சில துளிகளை கருவாகக் கொண்டு, ‘மழை நின்ற பொழுது’ எனும் தலைப்பில் ஒரு குறுநாவலைப் படைத்து, நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலைகளாக இருப்பினும், நாம் அறிந்திராத அல்லது நமது கவனம் பெற்றிடாத சாலையின் ஓரத்தில் வாழும் எளிய மக்களிடம் நம்மை அழைத்துச் சென்று அவர்களின் பாடுகளை நம்மிடம் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் நிழலி. சாலையோர ஏதிலிகளின் பாடுகளை நுணுக்கமாகப் பதிவு செய்து காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தப் படைப்பு.
உயிரோட்டமான படைப்பான இக்குறுநாவல், கேலக்ஸி நிறுவனம் நடத்திய ‘அப்துல் அஹத் முதலாம் ஆண்டு நினைவு உலகளாவிய குறுநாவல் பரிசுப்போட்டி’யில் இரண்டாம் பரிசுக்குரிய படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
