உழன்று சுழலும் இயந்திர வாழ்க்கையில் உடலுக்கான புத்துணர்வு உடற்பயிற்சியால் கிடைப்பதைப்போல், மனத்திற்கான புத்துணர்வு புத்தக வாசிப்பால் மட்டுமே வசப்படும். “வாசிப்பு” மனதை இலகுவாக்குவதோடு, வாழ்வில் எதிர்வரும் பிரச்சனைகளைப் பற்றிய விசாலமானப் பார்வையை வாசகனுக்கு கடத்துகிறது.
ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நல்ல நண்பர்களுக்கு ஈடானது என்கிறார்கள். வரலாற்றில் சாதித்த அனைத்து மனிதர்களுக்கும் புத்தகம் ஒரு நல்ல நண்பனாக இருந்திருக்கிறது. ஒருமித்த சிந்தனை, தார்மீக எண்ணங்கள், தனிமனித புரட்சி உட்பட்ட அனைத்து அகண்ட உணர்வுகளும் வாசிப்பதால் வலுப்பெறுவதை நம்மால் உணர முடியும்.
வாசிப்பின் மற்றுமொரு அதிசயம் அது தனிமனிதனின் பகுப்பாய்வு சிந்தனையை அதிசயக்க வகையில் உயர்த்துகிறது என்பதாகும்.ஒரு நாவலை வாசிக்கும்போது அது தொடர்பான நினைவுகள் சார்ந்த நினைவகங்களை உங்கள் மூளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும். ஆச்சர்யபடும் விதமாக உருவான ஒவ்வொரு நினைவகமும் உங்கள் மூளை சார்ந்த நினைவாற்றலை மென்மேலும் அதிகரிக்கும் என்பது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே வாசிப்பை நேசிப்போம். நல்ல புத்தகங்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வோம். வானமும், காலமும் வசப்படுமோ என்னவோ, வாசிப்பினால் கண்டிப்பாக வாழ்க்கை வசப்படும்.
– தெரிசை சிவா