வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
————————————————–
‘ஏற்றத் தாழ்வுகளை ஒரு போதும் அனுமடிக்க முடியாது’ என்பதில் உறுதியாக இருந்த நபி அவர்கள் சிறிது காலத்திலேயே இனவெறி, நிறவெறி, மொழிவெறிக் கொள்கைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்தார்.
அங்கிருந்த அடிமைகளில் மிக முக்கியமான ஒரு மனிதர் பிலால் (ரலி). அவர் உமையா என்னும் ஒரு முதலாளியின் அடிமையாக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்ததும் அவரை வெற்றுடலுடன் சுடு மணலில் கிடத்தி நெஞ்சின் மீது பெரும் கல்லைத் தூக்கி வைத்து கொடுமைச் செய்தார்கள். இதை அறிந்து கொண்ட, இஸ்லாமிய வரலாற்றின் முதல் கலீபா என்றுக் கூறக்கூடிய அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் பணம் கொடுத்து பிலாலை வாங்கி விடுதலைச் செய்தார்கள்.
இப்படியாக நாளும் தினமும் அணி அணியாக இஸ்லாத்திற்குள் நுழையும் மக்கள் அதிகமாகவே, எதிரிகளின் அடக்குமுறைகளும் அதிகமாகியது. மறைந்து மறைந்து இஸ்லாத்தை போதித்து கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் வெளியே வந்து போதனை செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த காலகட்டத்தில் நபியவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்களும் மரணித்து விட்டார்கள். எதிரிகள் கோபம் அதிகமாகவே முகமது நபி அவர்களையும் அவர்களின் கூட்டத்தார்களையும் ஒழித்து விட வேண்டும் என்று நினைத்தார்கள்.
அதன் விளைவால் நபிகளாரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட யாசர், சுமையா மற்றும் இவர்களின் மகன் அம்மார் – இவர்கள் வெளியூரிலிருந்து வந்து மக்காவிலே தொழில் செய்பவர்கள் – ஆகியோரைக் கடத்திச் சென்று யாரும் இல்லாத பகுதியிலே வைத்துக் கொடுமை செய்து யாசர் (ரலி) சுமையா (ரலி) ஆகியோரைக் கொலை செய்தார்கள். பெண்ணென்றும் பாராமல் கொடுமை செய்து கொலை செய்தார்கள். ஆம் இஸ்லாத்திற்காக முதல் பலி நடந்தது.
செய்தி கேள்விப்பட்ட முஸ்லிம்கள் ஓடி வந்து பார்த்த பொழுது குற்றுயிராக கிடந்த மகன் அம்மாரை மட்டும் காப்பாற்ற முடிந்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு எதிரிகளின் அடக்குமுறை அதிகமானது. ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவை விட்டு வெளியேறினார்கள். முஹம்மது நபியும் அவர்களின் தோழருமாகிய அபூபக்கர் சித்தீக்கும் வெளியேற நேரம் பார்த்து இருந்தார்கள். ஊருக்கு வெளியே சென்றால் கண்டிப்பாகக் கொன்று விடுவார்கள்.
அதற்குள் குறைஷிகள் ஒன்று கூடி ‘முகமதைக் கொல்ல வேண்டும்’ என்று திட்டம் தீட்டினார்கள். ஒரு கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்தால் தான் அவரை பலிக்குப் பலி வாங்க முடியும். ஆகவே மக்காவில் இருக்கக்கூடிய அனைத்து கூட்டத்திலிருந்தும் ஒவ்வொருத்தரைத் தேர்ந்தெடுத்தார்கள் நபி அவர்களை கொல்வதற்கு.
முகமது நபி அவர்களும் திட்டம் தீட்டினார்கள் அவர்கள் வசிக்கக்கூடிய வீட்டிலே நபியவர்களின் தம்பி (சித்தப்பா மகன்) அலி(ரலி) அவர்களைத் தங்கச் செய்துவிட்டு முகமது நபி அவர்களும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் அங்கிருந்து தப்பினார்கள்.
எதிரிகள் நபியவர்களின் தம்பியை பார்த்துவிட்டு ‘முகமது உள்ளே தான் இருக்கிறார்’ என்று நினைத்திருந்தார்கள். ஆனால் நபியவர்களோ மதினாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
இரவானதும் கொலை செய்வதற்காக வந்த கூட்டங்கள் உள்ளேச் சென்று பார்த்த பொழுது அங்கே நபியவர்கள் இல்லை என்பதை அறிந்து கொண்டார்கள். ‘நடந்து செல்பவர்களைச் சீக்கிரம் பிடித்து விடலாம்’ என்று விரட்டிச் சென்றார்கள்.
எதிரிகள் வருவதைக் கண்டுகொண்ட நபி அவர்களும் அங்கிருந்த ஒரு சிறிய குகையில் பதுங்கினார்கள். எதிரிகளும் அந்த குகையின் அருகிலே வந்து தேடினார்கள். இவர்கள் இருக்கும் அந்த குகையை சற்று குனிந்து பார்த்திருந்தாலே கண்டுபிடித்து இருப்பார்கள்.
ஆனால் அவர்கள் பார்க்கவில்லை சுற்றியும் தேடிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டார்கள். முகமது நபியும் அவர்களின் தோழரும் ஒருவழியாக மதினாவை வந்தடைந்தார்கள். இவர்கள் வருவதை கண்ட மதினா வாசிகளும் ஏற்கனவே சென்று சேர்ந்திருந்த முஸ்லிம்களும் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்கள்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் மக்காவிலே போதனை செய்திருந்தார்கள். மது, மாது, சூது, வட்டி, என்று சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய அனைத்தையும் கூடாது என்று போதித்தார்கள். ஒரே கடவுள் என்ற கொள்கையையும் மனிதர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக அந்த மக்களிடத்திலே கூறினார்கள். அந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட மக்கள், காலம் காலமாக அடிமைப்பட்டு இருந்த தங்களை விடுதலை செய்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடினார்கள்.
மக்காவிலிருந்து நபிகளாரைப் பின்பற்றிய அனைவரும் மதினாவில் தஞ்சம் புகுந்தனர். மதினா ஒரு விவசாயக் கிராமம் ஒரு ஊரே அங்கே தஞ்சம் புகும் பொழுது அங்கு இருப்பவர்கள் தங்களிடம் இருந்தவற்றைச் சமமாக பிரித்து வந்தவர்களுக்கு கொடுத்தார்கள். ஆனாலும் அங்கே பசியும் பஞ்சமும் தலை விரித்தாடியது. இங்கிருந்து சென்ற நபிகளார் உட்பட சிலர் பள்ளிவாசலிலே தங்கி இருந்தார்கள்.
சரியான உணவு இல்லை ஆடை இல்லை இப்படிப்பட்ட சூழலில் மக்காவாசிகள் சிரியாவுக்கு செல்லும் வழியாக மதினா இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மோதல்கள் நிகழ்ந்தது. மக்காவிலிருந்து செல்பவர்கள் மதினாவாசிகளின் மேய்ச்சல் நிலங்களைச் சேதப்படுத்தியும் கால்நடைகளைத் திருடிச் செல்வதுமாக இருந்தார்கள்.
மிகவும் துயரத்தில் இருந்த மக்களுக்கு மக்கா குறைஷிகளின் தலைவர் அபூசூபியான் என்பவர் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியாவுக்கு செல்கிறது என்ற செய்தி கிடைக்கிறது. இவர்கள் விட்டு வந்த பொருட்களை தான் அவர்கள் சுமந்து சென்று கொண்டிருப்பார்கள்.
அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் வேகமாகச் சென்றும் பலனில்லை. இவர்கள் போகும் முன்பாகவே அவர்கள் அந்த இடத்தை கடந்து விட்டார்கள். ‘ திரும்பி வரும் வழியில் அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும்’ என்று எத்தனித்தார்கள்.
‘சிரியாவில் இருந்து திரும்பும் பொழுது நம்மை பிடிக்க முஹம்மது இருக்கிறார்’ என்பதை அறிந்து கொண்ட அபூ சுபியானோ, தனது பாதையை மாற்றிக் கொண்டதோடல்லாமல் மக்காவில் இருக்கும் மற்ற தலைவர்களுக்கும் செய்தியை எட்ட வைத்தார்.
இந்தச் செய்திக் கிடைத்த மக்கா குறைஷிகளுக்கு கடும் கோபம் வந்தது.
‘நம்மிடமிருந்து தப்பித்துப் போனவர்கள் நம்மையே திரும்பி அடிக்க நினைப்பதா?’ என்று சினம் கொண்டு பெரும் படையை திரட்டினர்.
குதிரையிலும் ஒட்டகத்திலும் சுமார் ஆயிரம் பேர் கொண்ட படையினர் மதினாவை நோக்கி வந்தனர். அவர்களுடைய எண்ணமோ ‘இன்றோடு அவர்களை ஒழித்து விட வேண்டும்’ என்பதாக இருந்தது. அந்த உறுதியோடு வெகு வேகமாக வந்தார்கள்.
மக்காவிலிருந்து ஒரு பெரும் படை மதினாவை நோக்கி வருகிறது என்பதை அறிந்து கொண்ட நபிகளார் ‘அவர்கள் வரும் வேகத்தில் மதினாவிற்குள் புகுந்தால் மிகப்பெரிய சேதாரங்கள் ஊர் மக்களுக்கு ஏற்படும். ஆகவே அவர்கள் வரும் பாதையில் மதினாவிற்கு வெளியே அவர்களைத் தடுக்க வேண்டும்’ என்றார்கள்.
இது எந்த செய்தியும் மதினா மக்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.
வெறும் 313 பேர்களைக் கொண்ட அந்த இஸ்லாமியப் படை மதினாவிற்கு வெளியே பத்ரு என்னும் இடத்தில் காத்திருந்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.