இன்றைய இளமை நாளைய முதுமை என்பதை நாம் யாருமே நினைவில் கொள்வதில்லை. பெற்றோராக இருக்கட்டும்… உறவினராக இருக்கட்டும்… பழகியவராக இருக்கட்டும்… ஏனோ முதுமையை மதிக்க நாம் மறுக்கிறோம்.
அவர்கள் என்ன சொன்னாலும் ‘பெருசுக்கு வேற வேலையில்லை’ ‘கிழடு அப்படித்தான் கத்தும்’, ‘வயசாயிட்டாலே நையி நையின்னு’ என்று பலவாறு அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி அவர்களுடன் சேர்த்து அவர்களின் கருத்துக்களையும் மூலையில் கிடாசுகிறோம் .
இளம் பிராயத்தில் அவர்களும் நம்மைப்போல்தான் இருந்திருப்பார்கள். நாம் செய்யும் சேட்டைகளையும் உதாசீனங்களையும் அவர்களும் செய்திருப்பார்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் வயதுக்கு ஏற்ற மரியாதையை அவர்கள் கொடுத்திருப்பார்களா என்று யோசிப்பதைவிட அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் உரிய மரியாதைய நாம் கொடுக்கலாமே.
பேருந்துப் பயணத்தின் போது நாம் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகே ஒரு தள்ளாத வயதுடைய பெரியவர் வந்து நின்றால் அவருக்கு இடம்தர வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது. கைப்பிள்ளையுடன் வந்து நிற்கும் பெண்ணையே கண்டு கொள்ளாத நாம் பெரியவருக்கா இடமளிக்கப் போகிறோம்?
இதற்கும் மேலாக அழுக்கடைந்த உடையுடன் யாராவது பெரியவர் நம் அருகே வந்தமர்ந்தால் ‘பெரியவரே… அந்தப் பக்கமெல்லாம் இடமிருக்குல்ல… அப்படி உக்கார்ரது… இங்க ஆள் வருது’ என்று சொல்லி இடம்தர மறுப்பதுதான் நம் இயல்பு. ஒரு சில நேரங்களில் அவர் ஏறுமுன் படியில் வைத்து அவரை மறித்து ‘வேற வண்டி பாரு… இதுல ஏறக்கூடாது’ என்று கண்டக்டரே மறுப்பதும் உண்டு.
எத்தனை வீட்டில் பெற்றோர்கள் கவனிப்பில்லாமல் காலத்தை தள்ளுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இன்றைய காலகட்டத்தில் வேலை நிமித்தமாக வெளி ஊரிலோ, வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ தங்கும் நாம் குடும்பத்துடன் இடம் பெயரும் போது சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கும் அவர்கள் அதன்பின் தனிமையில் சந்தோஷத்தை இழக்கிறார்கள் என்பதே உண்மை. பலர் பெற்றோருக்கு வேண்டிய எல்லாம் செய்து கொடுத்தாலும் முதுமையில் தனிமை கொடியதல்லவா?
எத்தனை பெரியவர்கள் சந்ததியிருந்தும் கவனிக்காத நிலையில் பிச்சைக்காரர்களாக தெருவில் திரிந்து மரிக்கிறார்கள். நம் குழந்தைகளை நாம் சீராட்டுவது போல்தானே அவர்களும் நம்மை சீராட்டி இருப்பார்கள். இன்று நாம் செய்வதை நாளை நம் பிள்ளை செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்.
எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் நல்ல நிலையில் இருந்தும் தாயாரின் கடைசிக் காலத்தில் கவனிக்கவில்லை. ஆனால் அந்தத் தாய் இறந்தபோது தாரை தப்பட்டை என்று தடபுடலாக வழி அனுப்பினார். இந்த படாடோபம் எதற்கு? இருக்கும்போது அனுசரணையாக இருந்திருந்தால் அந்த தாயுள்ளம் சந்தோஷமாய் இருந்திருக்கும் அல்லவா?
இன்னொரு வீட்டில் நடந்தது கொடுமையான சம்பவம்… அந்தத் தாய்க்கு ஒரே மகன்… நல்ல குடும்பத்தில் பெண் எடுத்தார்கள். பையன் மாமனார் வீட்டுப்பக்கம் சாய்ந்துவிட அந்தத்தாய் தனித்துவிடப்பட்டாள். யாரும் கவனிக்காமல் தள்ளாத வயதில் தானே சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அந்த அம்மாவின் நடமாட்டமும் இல்லை… வீடும் உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்க… சந்தேகப்பட்ட ஊரார் கதவை உடைத்துப்பார்க்க அங்கே அவர் பிணமாகக் கிடந்துள்ளார். எப்ப இறந்தார்…? எப்படி இறந்தார்…? என்பது யாருக்கும் தெரியாது… இறக்கும் தருவாயில் அந்த வயதான தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
முதுமை வரமா…? சாபமா…? என்று சிந்திப்பதை விடுத்து அதை சாபமாக மாற்றாமல் சந்தோஷ மாற்ற வேண்டுமெனில் முதுமைக்கு அன்பும் அரவணைப்பும் மிக அவசியம்… ஆனால் அந்த அரவணைப்பைக் கொடுக்க ஏனோ நமக்கு மனம் இடம் தருவதில்லை. அவர்களை உதாசீனப்படுத்தும் நம்மை பார்த்து வளரும் நம் வாரிசு நாளை அதைத்தானே நமக்கும் செய்யும்… அப்ப ‘நான் அப்படி வளர்த்தேன்… இப்படி வளர்த்தேன்னு புலம்பி என்ன லாபம் அடைய முடியும் சொல்லுங்கள்…
முதியவர்களை கேவலமாக பார்க்கும் நம் எண்ணத்தை கைவிட்டு அவர்களை அரவணைப்போம்… நாளைய உலகில் நாமும் அரவணைக்கப்படுவோம்.
நன்றி : படம் இணையத்திலிருந்து