தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 2

**************

“வாட் நெக்ஸ்ட் ஹீரோ?” – தீப்தி கேட்டாள்.

“நம்ம லவ்வை நம்மள பெத்தவங்ககிட்ட சொல்லணும்.”

“ஸ்வீட்டா? சுனாமியா? எது முதல்ல?” – தீப்தி.

“அதென்ன ஸ்வீட்? அதென்ன சுனாமி?” – சரண்.

“ஸ்வீட் உன்னைப் பெத்தவங்க. சுனாமி என்னைப் பெத்தவங்க”

அவன் புன்னகைத்தான். “முதல்ல ஸ்வீட் எடு. கொண்டாடு!”

கடற்கரையின் உற்சாகத்தை கையோடு எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப் பறந்தது பைக். சரணையும் தீப்தியையும் ஏற்றிக்கொண்டு.

அது வரை அவர்கள் இருவரையும் நண்பர்களாக மட்டுமே சுமந்து சென்றிருந்த அந்த இரு சக்கர வாகனத்துக்கு, அன்று முதல் முறையாக சரணையும், தீப்தியையும் காதலர்களாக பயணிக்க செய்வதில் ஏக உற்சாகம். சும்மா றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

“பைக் என்ன இன்னிக்கு ஸ்பீட் பிரேக்கரா தேடித் தேடிப் போகுது?” – பில்லியலினிலிருந்து விசாரித்தாள் தீப்தி.

“உன் கை கூடத்தான். எப்பவும் என் தோள் மேல இருக்கும். இன்னிக்கு என் இடுப்பை பிடிச்சிக்கிட்டு இருக்கு. நான் கேட்டேனா?”

சரணின் கேள்வியில் சட்டென புன்னகைத்த தீப்தி, அவன் முதுகில் இன்னும் வாகாக சாய்ந்து கொண்டாள். “சமத்து சரணுக்குளேயும் ரொமாண்டிக் சரணா?” சரண் காதருகில் கிசுகிசுத்தாள்.

இப்போது புன்னகைப்பது சரணின் முறையாயிற்று.

இருவரது பார்வைகளையும் புன்னகைகளையும் இருவருக்கும் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது ரியர் வ்யூ மிர்ரர்!

பைக்கை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு, “நீ போ. நான் வர்றேன்” என்றான் சரண்.

“உன் வீட்டுக்குள்ள நீ வர ஏண்டா இப்டி பயந்து சாகிற?” பைக்கிலிருந்து குத்தித்திறங்கிய தீப்தி தைரியமாக முன்னே நடந்தாள்.

“பயமா? எனக்கா? நெவர்” காலரைத் தூக்கிக்கொண்டானே ஒழிய, அம்மா, அப்பாவிடம் தன் காதலை எப்படி அறிவிப்பது என ஒரு தயக்கம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது சரணிடம்.

தீப்தியோ, தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவனைப் பிடித்து, “லவ்தானே பாண்றே? கொலையா பண்ணிட்டே? பக்கத்துல வாடா”, முன்னே இழுத்தாள்.

“ஏய்.. ஏய்.. விடு. விடு”, சரண் உதற முற்பட, தீப்தி இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொள்ள என, இருவரும் கோர்த்தக் கைகளோடு சரணின் அம்மா, அப்பா முன்னால் சென்று நின்றார்கள்.

முதலில் சுதாரித்துக் கொண்டவள் சரணின் அம்மாதான்.

“என்னம்மா தீப்தி? இன்னிக்கு எங்க வீட்டு விஜயம்?”

“சரணுக்கு உங்ககிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணுமாம்” என்ற தீப்தி, “சொல்லுடா” என்று முழங்கையால் சரணின் இடுப்பில் இடித்தாள்.

சரண், “வந்து, அது அப்பா, அம்மா..” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி தடுமாறினான்.

“சரண் நீ சொல்ல வந்த விஷயத்தை பொறுமையா சொல்லு. அதுக்கு முன்னாடி எனக்கொரு கேள்வி இருக்கு. முதல்ல அதுக்கு பதிலை சொல்லு” தடக்கென்று குறுக்கிட்டுப் பேசிய சரணின் அப்பாவின் குரலில் ஏக கண்டிப்பு.

சரண், ஏன் தீப்தியும் கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை. மெலிதாக அதிர்ந்தார்கள் இருவரும்.

சரண் மட்டும், “என்ன கேள்விப்பா?” என்றான் மெதுவாக.

“கல்யாணத்தை எங்க வச்சிக்கலாம்? கோவில்லயா? இல்லை மண்டபத்துலியா?”

“யாரு கல்யாணத்தப்பா?” என்றான் சரண் இன்னும் மெதுவாக.

“உங்க ரெண்டு பேர் கல்யாணத்தைதான்” சொல்லிவிட்டு உரக்க சிரித்தார் சரண் அப்பா.

தீப்தி சட்டென ஒரு வெட்கத்துக்கு போக, சரண் அம்மா அவளை நெருங்கி, அவள் தலையை வருடினாள்.

“எப்படா சொல்வீங்கன்னு நானும் உன் அப்பாவும் காத்துக்கிட்டு இருந்தோம் சரண்”, என்றாள் மகனை நோக்கி.

சரணிடம் ஒரு நிம்மதியான பளீர் சிரிப்பு. தீப்திக்கு மிகவும் பிடித்த மின்னல் சிரிப்பு.

“உன் கல்யாண ரிசப்ஷன்ல வேற ஆர்கெஸ்ட்ராவே வேணாம். நீயே பாடிடுவே. செலவு மிச்சம்.” சரண் அப்பா கிண்டலடிக்க, அந்தப் பிரதேசம் பரஸ்பர கேலிகளாலும், கிண்டல்களாலும், கூடவே எக்கச்சக்க மகிழ்ச்சியாலும் நிரம்பியது.

உற்சாக சிரிப்புகள் கொஞ்சம் வடிந்ததும்,

“தீப்தி வீட்ல விஷயத்தை சொல்லிட்டீங்களா?” அம்மா கேட்டாள்.

சரணும் தீப்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“இனிமேதான்” சரண் சொல்ல,

“டோண்ட் வொரி மை சன்” நானும் அம்மாவும் வந்து தீப்தி பேரண்ட்ஸ்கிட்ட பேசுறோம்.”

அப்பா சொல்ல, தன்னைப் பார்த்தாலே கொஞ்சம் அளவாகவே சிரிக்கிற தீப்தி அம்மாவின் முகமும், கொஞ்சம் அதிகமாகவே முறைக்கிற தீப்தி அப்பாவின் முகமும் சரணின் முன் நிழலாடின.

*   *   *

ரவு முடிவது எப்போது என்று காத்திருந்தால் அவர்கள் கடமை வீரர்கள். ஆனால் இரவு முடியாமலே இருக்காதா என வேண்டிக் கொண்டால் அவர்கள் காதல் ஜோடிகள்.

அந்தப் பிரதேசத்தில் எல்லா வீடுகளிலும் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்க, அடுத்தடுத்த வீடுகளில் இருந்த சரணின் அறையிலும், தீப்தியின் அறையிலும் மட்டும் மங்கிய வெளிச்சத்தின் விளக்குகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன.

இருவரது காதுகளிலும் அவரவர் மொபைல்கள். சரணிடம் தன் காதலை சொல்லிவிட்ட சந்தோஷத்தில் தீப்தியும், தன் வீடு தீப்தியுடனான தன் காதலை அங்கீகரித்து வரவேற்கிற மகிழ்ச்சியில் சரணும் நனைந்து கொண்டிருந்தார்கள்.

“தீப்தி..”

“ம்..?”

“இவ்ளோ கொஞ்சலா கூட உன்னால ‘ம்’ சொல்ல முடியுமா?”

“இவ்ளோ ஆசையோட கூட உன்னால என் பேரைக் கூப்பிட முடியுமா?”

சட்டென சிரித்த சரணிடம் மறுபடியும் ஒரு “தீப்தி..”

அவளிடம் மறுபடியும் ஒரு ‘ம்”

“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடு..”

“மதிலேறி குதிச்சு என் ரூமுக்கு வா. தர்றேன்.”

“அடிப்பாவி! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்னு வசனம் பேசுவேன்னு பாத்தா, இப்பவே வாங்கிற?”

“கண்ணா சரண். எனக்கு உங்கூட கல்யாணம் நடந்து பிள்ளையும் பத்து பெத்தாச்சு.”

“இது எப்போ? எனக்குத் தெரியாம?”

“கனவுல” தீப்தி கிசுகிசுக்க,

“கனவு மெய்ப்பட வேண்டும்.” அவளை விட அதிகமாக கிசுகிசுத்தான் சரண்.

“உன் அர்த்த ராத்திரி ஆசைக்கு பாரதியார் சப்போர்ட்டா?”

“கண்டிப்பா. அதோட என் காதலுக்கு என்னைப் பெத்தவங்க சப்போர்ட்டும் கிடைச்சாச்சு.”

“உன்னைப் பெத்தவங்க ஓகே சொல்லிட்டாங்க. சரிதான். என்னைப் பெத்தவங்க இன்னும் சொல்லலியே?”

“அதுக்குதான் நானும் என் பேரண்ட்ஸும் உங்க வீட்டுக்கு வந்து பேசப் போறோமே?”

“என்னைக்கு வர்றீங்க?”

“சஸ்பென்ஸ்.”

“மண்ணாங்கட்டி.”

“ஏம்மா?”

“நீங்க என்னைக்கு வர்றீங்கன்னு சொன்னாதானே நான் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு வீட்ல இருக்க முடியும்?”

“அம்மா, தாயே, வேணவே வேணாம்.”

“என்ன வேணாம்?”

“நீ லீவு போடவும் வேணாம். வீட்ல இருக்கவும் வேணாம்.”

“ஏண்டா?”

“உனக்கு கோபம் இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன்ன்னு மூக்கு நுனில வெயிட் பண்ணிக்கிட்டே இருக்கும். பேரண்ட்ஸ் பேசுறப்போ நீ இருந்தீன்னா கண்டிப்பா சிக்கல்தான்.”

“அதனால?”

“அதனால, நீ ஆபீசுக்கு போ. ஆபீஸ் இல்லன்னா எங்கியாவது போ. நானும் என் பேரண்ட்ஸும் உன் வீட்டுக்கு வர்றப்ப நீ ஸ்பாட்லியே இருக்காதே.”

சரண் பேசியதைக் கேட்டதும், தீப்தி சற்று நேரம் பதில் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

“ஹலோ தீப்தி? லைன்ல இருக்கியா?”

“ம். இருக்கேன். சரி. நீங்க எப்ப வீட்டுக்கு வர்றீங்க?”

“அதான் சஸ்பென்ஸுன்னு சொன்னேனே?”

“முட்டாள். சஸ்பென்ஸுன்னா, நீங்க எப்ப வர்றிங்கன்னு தெரியாம நான் அந்த சமயம் எப்படி ஆப்ஸெண்ட் ஆகிறது?”

“ஓ. அதுவும் சரிதான்.”

“சொல்லு. எப்ப வர்றீங்க?”

“நாளைக்கே.”

“ஓகே. போனை வைக்கட்டுமா?”

“அந்த இறுக்கி அணைச்சு உம்மா மேட்டர்.”

“போடா” மொபைலை நிறுத்தினாள் தீப்தி.

புன்னகைத்துக் கொண்டான் சரண். மொபைலை உதறிவிட்டு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டான். கட்டிலில் சரிந்தவனின் கண்களை வந்து ஒட்டிக்கொண்ட அந்தக் கனவு…

தீப்தி காண்ட அதே கனவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *