தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 4

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3

“நான் நினைச்சது சரிதான். நீ கர்ப்பமா இருக்கே சுப்ரியா”, ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு டாக்டர் உறுதிப்படுத்த, எதிரே அமர்ந்திருந்த சுப்ரியாவிற்குள் இனம்புரியாத உணர்ச்சிகள். என்னவென்று விளக்கிவிட முடியாத உணர்வுகள்.

ஒரு பக்கம் சந்தோஷமும், மறுபக்கம் துயரமுமாக அவள் இதயம் இழுபட்டது. கிழிபட்டது.

கண்கள் கரித்தன. நினைவுகள் அஷோக்கைப் பற்றித் தாவத்தான் எங்கிருக்கிறோம் என்பதே ஒரு கணம் மறந்து போனது சுப்ரியாவுக்கு.

“சுப்ரியா..! ஆர் யூ ஆல்ரைட்?” முகத்துக்கு முன்னால் டாக்டர் சொடுக்கு போட்டதில் தன்னிலைக்கு மீண்டாள் சுப்ரியா.

“டாக்டர், நான் நிஜமாவே கர்ப்பமா இருக்கேனா?”

“100% சுப்ரியா. இதுக்காக நீ சந்தோஷம்தான் படணும். ஆனா நீ என் இப்டி அதிர்ச்சியாகிறே?”

“இல்லை டாக்டர், அது வந்து..” என்று தயக்கமாக இழுத்த சுப்ரியா, “இந்தக் கருவை கலைச்சிடுங்க டாக்டர்” என்றாள் சடாரென்று.

இந்த தடவை அதிர்ச்சியடைவது டாக்டர் என்றாகிப் போனது.

“வாட்? என்ன பேசறே சுப்ரியா நீ? நீயே ஒரு தடவை எங்கிட்ட சொல்லியிருக்கே. திட்டமிடுதல், தள்ளிப்போடல் எதுவும் இல்லேன்னு. இப்ப என்னடான்னா திடீர்னு அபார்ஷன் அது இதுங்கறே? அது சரி, உன் கணவர் எங்கே? உங்கூட வரலியா? இந்த மாதிரி சமயத்துல அவர் உங்கூட இருக்கிறதுதான் நல்லது. ஆனா அஷோக் உம்மேல ரொம்ப பாசமானவராச்சே? ஏன் வரலை?”

“வந்து.. அது.. ஊருக்குப் போயிருக்கார்.”

“ஊர்லேருந்து வந்ததும் எங்கிட்ட கூட்டிட்டு வா. அபார்ஷன் வேண்டாம்னு நான் அவர்கிட்டப் பேசறேன்.”

“இல்லை டாக்டர். இது என் முடிவுதான். என்னோட சூழ்நிலை அப்டி. தயவு செஞ்சு உதவி பண்ணுங்க.”

“என்ன பெரிய புடலங்காய் சூழ் நிலை? குழந்தை வேணும்னு தானே நீயும் அஷோக்கும் இருந்தீங்க? கர்ப்பத்தடை மாத்திரை எதுவும் நீ எடுத்துக்கக் கூட இல்லியே?  அப்ப இருந்த குழந்தை ஆசை இப்ப எங்கே போச்சு?”

தன் நிலைமையை டாக்டரிடம் எப்படி விவரிப்பது என்று வார்த்தைகளை தேடினாள் சுப்ரியா.

பிறகு, “நானும் அஷோக்கும் விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருக்கோம்” என்றாள் பொட்டென்று.

“விவாகரத்தா? நீயும் அஷோக்குமா? என்னால நம்பவே முடியலை. அப்டி ஒரு அன்பான ஜோடி நீங்க. திடீர்னு என்ன ஆச்சு?”

கேள்வியைக் கேட்ட டாக்டர் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஒரு சமயம் உனக்கு உடல் நல சிக்கல்கள் இருந்தப்ப, அது குழந்தை உருவாவதை பாதிக்கலைன்னு நான் சொன்னப்ப, உன் ஹஸ்பெண்ட் அஷோக் என்ன சொன்னார் தெரியுமா? குழந்தையை விட எனக்கு என் சுப்ரியாதான் முக்கியம் அப்டின்னு சொன்னார். அப்படி ஒரு நல்ல கணவர், நல்ல மனுஷர், அவர் ஏதும் தப்பா டிசைட் பண்ணமாட்டார். நீதான் தப்பா ஏதோ முடிவு பண்றேன்னு தோணுது. நல்லா யோசிம்மா.”

டாக்டரின் வார்த்தைகள் சுப்ரியாவின் பழைய ஞாபகங்களைக் கிளறியது. லேசாக அசைத்தும் பார்த்தது அவளை. உள்ளமும் கொஞ்சம் தடுமாறியது.

ஆனாலும் அஷோக் என்னவெல்லாம் பேசிவிட்டான்?

கேடு கெட்டவள். நடத்தை கெட்டவள். ஒழுக்கம் கெட்டவள் என்று அவளை முழுக்க முழுக்க கெட்டவளாகவே தாழ்த்திவிட்டானே?

அவன் குழந்தையை நான் ஏன் வயிற்றில் சுமக்க வேண்டும்?

முடியாது. மாட்டேன்.

கொஞ்சம் அசைந்த மனதில் மீண்டும் பிடிவாதம் வந்து உட்கார்ந்து கொண்டது.

“இல்லை டாக்டர். எனக்கிந்த குழந்தை வேணாம். கலைச்சிடுங்க டாக்டர்.”

டாக்டர் சற்று கூர்மையாக சுப்ரியாவையே ஏறிட்டார். பின்பு, “சரிம்மா. நாளைக்கு வாம்மா”, என்றார் அமைதியாக.

கிளினிக்கை விட்டு வெளியேறியதும் அம்மாவுக்கு போன் செய்தாள் சுப்ரியா.

“அம்மா..”

“சொல்லு சுப்ரியா. டாக்டர் என்ன சொன்னாங்க?”

“கர்ப்பம்தான்னு உறுதியா சொன்னாங்க. எல்லா ரிசல்ட்டும் பாஸிட்டிவ்.”

“அடக் கடவுளே. அப்புறம் நீ என்ன சொன்னே? நான் சொன்னதை யோசிச்சியா?”

“ம்.”

“டாக்டர்கிட்ட பேசினியா?”

“ம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்க.”

சுப்ரியாவின் பேச்சால் எக்கச்சக்கமான மகிழ்ச்சிக்குப் போனாள் சாவித்ரி.

மகிழ்ச்சி குறையாமலே மகளிடம், “நீ ஒண்ணும் கவலைப்படாதே சுப்ரியா. சனியனைக் கழுவி துடைச்சிட்டு நம்ம வழியைப் பாத்துக்கலாம்.” என்றாள் உற்சாகமாக.

“ம்.. சரி.”

மனதிற்குள் ஏதோ பிசைய, சட்டென்று போனை முறித்தாள் சுப்ரியா.

நேரமாகிவிட்டிருந்தது.

இன்றைக்கு கல்லூரிக்கு தாமதமாகத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணமிட்டபடியே, அன்று தான் நடத்த வேண்டிய க்ளவுட் கம்ப்யூட்டிங் பாடம் பற்றிய சிந்தனைகளோடு,

“ஆட்டோ..”

வந்துகொண்டிருந்த ஆட்டோவை மறித்து ஏறி, “நேஷனல் காலேஜ். “ என்றாள்

ஆட்டோ விரைந்தது.

0 Comments

  1. rajaram

    சிறப்பான நகர்வு, அருமை அடுத்தடுத்த அத்தியாயங்கள் விறுவிறுப்பாக இருக்கும்போல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *