தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 6

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5

ஷோக், சுப்ரியா இருவரையும் மறுபடியும் சந்திக்க வைக்க இயற்கை காரணங்களைக் கண்டுபிடித்தது… நிகழ்வுகளை அரங்கேற்றியது.

‘That’s all about the benefits of cloud computing. Next class we will discuss about big data management.’

வகுப்பை முடித்துவிட்டு தன் இருக்கைக்கு வந்தாள் சுப்ரியா. உடன் பணி புரியும் நிஷா அவளுக்காகக் காத்திருந்தாள்.

“கிளாஸ் முடிஞ்சிருச்சா சுப்ரியா?” சுப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினாள் நிஷா.

“ம்.. இன்னைக்கு கோட்டா முடிஞ்சிருச்சு. இனிமே நாளைக்குதான். உனக்கு எப்படி?”

“ஆஃப்டர் நூன் கிளாஸ் இருக்கு..”

“ப்ரிப்பேர் பண்ணிட்டியா?”

“இன்னும் இல்லை. இனிமேதான்..”

“அப்புறம்? எங்கிட்ட வந்து கதை அளக்கிறதுக்காக இங்க எதுக்கு காத்துக்கிட்டு இருக்கே?”

“உன்னைப் பாக்க வந்தேன் பாரு. என்னைய…”

“சரி… சரி… கோச்சிக்காதே. என்ன விஷயம்..?”

“லேப்டாப் ரிப்பேராயிடுச்சுப்பா. உனக்கு தெரிஞ்ச நல்ல சர்வீஸ் ஷாப் இருந்தா சொல்லேன் உன்னோட லேப்டாப் கூட இப்பதானே சரி பண்ணே..? எந்தக் கடை..?”

பளிச்சென்று பல்பு எரிந்தது சுப்ரியாவுக்குள்.

அந்தப் புன்னகை இளைஞனை சந்திக்க இன்னொரு வாய்ப்பு. படாரென்று பற்றிக்கொண்டாள்.

“நானே உன்னை கூட்டிக்கிட்டுப் போறேன் நிஷா.”

அடுத்த நாள் மாலையே சுப்ரியாவும், நிஷாவும், நிஷாவின் லேப்டாப்போடு அஷோக்கின் முன்னால் போய் நின்றார்கள்.

“என் ஃப்ரெண்ட் இவங்க. லேப்டாப் ரிப்பேர். நீங்க நல்லா சர்வீஸ் செய்வீங்கன்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன்” சுப்ரியா அறிமுகப்படுத்தினாள்.

“செஞ்சிடலாம் மேடம்.”

அஷோக்கிடம் அவனின் வழக்கமான வசீகரமான புன்னகை.

சுப்ரியாவை மறுபடி பார்த்ததில் அவனைச் சுற்றிலும் உற்சாகக் காற்று.

தன் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு நிஷாவின் லேப்டாப்பை பரிசோதித்தான்.

நிஷா கொஞ்சம் ஜோவியல் பேர்வழி. அவளால் கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியாது.

அஷோக்கிடம் பேச்சை வளர்த்தாள்.

“என்ன சொல்லுது என் லேப்டாப்..?”

“உங்க வீடு பீச்சுப் பக்கமா..?”

தாடாலென்று கேட்டான் அஷோக்.

அசரவில்லை நிஷா.

“ஆமாம். ஏன் கேக்கறீங்க..? நாம ரெண்டு பேரும் ஒரு நாள் போலாம்னுதானே..?”

“அய்யய்யோ மேடம். அதில்லை…”

“மேடம் வேண்டாம். நிஷா என் பேரு. ஸ்வீட் நேமில்லை?”

“அ.. ஆமாம்…”

“சொல்லுங்க. எதுக்கு என் வீடு பீச் பக்கமான்னு கேட்டீங்க..?”

“இல்லை நிஷா. உங்க லேப்டாப் ஒரே ரஸ்ட்டா இருக்கு. போர்டு… காம்பொனெண்ட்ஸ் எல்லாம் துருப் பிடிச்சிருக்கு. உப்புக் காத்தா இருக்கணும். அதான் கேட்டேன்..”

“அய்யய்யோ. அப்ப என் லேப்டாப் தேறாதா..?” எனப் பதறிய நிஷாவிடம் “கொஞ்சம் கஷ்டம்தான். பட் சரி பண்ணிடலாம்” என்று சொல்லி விட்டு, “எங்க கஸ்டமரோட ஃப்ரெண்ட் நீங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ணாமலா?” சுப்ரியாவைப் பார்த்து புன்னகைத்தான். 

“தாங்க்யூ மிஸ்டர்….” – நிஷா இழுக்க,

“அஷோக்”

“ நைஸ் நேம். ஐயாம் நிஷா. ஆமாம், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?”

தேங்காயை உடைத்தது போன்ற நிஷாவின் பட்டென்ற கேள்வியில் அஷோக் அதிர்ந்தான்.

ஆனாலும் சமாளித்துகொண்டவன் “ஏன் கேக்குறீங்க..?”

“இல்லை. என் பெயரை சொன்னேன். ஆனா என் அழகான பிரெண்டு பேரை என்னன்னு நீங்க கேக்கவே இல்லியே..?”

“அதனால..?”

“அதனால… ஒண்ணு உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கணும்.  இல்ல நீங்க ரொம்ப சமத்துப் பையனா இருக்கணும்.”

அஷோக் சிரித்துவிட்டான்.

“ரெண்டுமே இல்லை நிஷா.”

”அப்டியா?”

“ஆமாம். எனக்கு கல்யாணமும் ஆகலை. நான் ரொம்ப சமத்துப் பையனும் இல்லை…”

“அப்புறம்… எப்டி…”

“ஆனா எனக்கு உங்க அழகான பிரெண்டின் பெயர் தெரியும். பேரென்ன? அட்ரஸ் போன் நமபர் கூட தெரியும்.”

“தெரியுமா..? எப்படி..?”

“என்ன நிஷா… உங்க ப்ரெய்ன் இவ்ளோ கம்மியா வேலை செய்யுது. உங்க ஃபிரெண்ட் லேப்டாப்பை நான்தானே சரி செய்தேன்? அவங்க டீடெயில்ஸ் எல்லாம்தான் எங்க பில் புக்கில் இருக்கே..?”

“அட ஆமால்ல…?” என்ற நிஷா, கூடவே, “By the way மிஸ்டர் அஷோக்..! எங்க ரெண்டு பேருக்கும் கூட இன்னும் கல்யாணம் ஆகலை…” கண்ணடித்தாள் நிஷா.

சுப்ரியாவுக்கோ முகம் சிவந்து போனது. கோபத்தில் கொஞ்சம். வெட்கத்தில் கொஞ்சம்.

இரண்டையும் மறைக்க, “லேப்டாப் எப்ப ரெடியாகும்..?” என்றாள் அஷோக்கைப் பார்த்து.

“கொடுத்துட்டுப் போங்க. ரெண்டு நாள்ல ரெடி பண்ணி தந்துடுறேன்.”

“கொடுத்துட்டு வா நிஷா. கிளம்பலாம்” சுப்ரியா பரபரக்க,

“பொறு தோழியே. ரசீது வாங்க வேணாம்?” – வாங்கிக்கொண்டு,

“அஷோக், உங்க போன் நம்பர்..?”

“ரசீப்ட்லியே இருக்கு நிஷா.”

“சீ யூ யங் மேன்..” நிஷா மறுபடி கண்ணடிக்க, அவளின் கையைப் பிடித்து, “வாடி போலாம்” தரதரவென்று இழுத்துகொண்டு வெளியேறினாள் சுப்ரியா.

அஷோக்கின் ஆர்வப் பார்வை அவளைத் தொடர்ந்தது. அவளின் பின்னாலேயே சென்று அவளின் முதுகை வருடியது.

0 Comments

  1. rajaram

    சிறப்பு, இனிமேல்தான் காதல் திருவிழா தொடங்கும்போல, அருமை!

    1. Kalpana Sanyasi

      தங்களின் கருத்து, இந்த தொடர்கதைக்கு சிறப்பு சார். நன்றிகள். அன்புடன் – கல்பனா சன்யாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *