அத்தியாயம் – 10
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
அத்தியாயம்-9
அழகாக விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமை.
மாலை நாலரை மணிக்காக இரு இள இதயங்கள் ஆசையோடு காத்திருந்தன.
ஒன்று அஷோக்கினுடையது. இன்னொன்று சுப்ரியாவினுடையது.
இனிதாக வந்து சேர்ந்தது மாலை.
கடற்கரைப் பிரதேசம் அதற்கே உரிய பிரத்யேக வசீகரத்துடன் கிடந்தது.
அலைகள் கரையை ஊடியும் கூடியும் காதலித்துக் கொண்டிருந்தன.
“தாங்க் யூ சுப்ரியா.”
மௌனம் கலைத்தான் அஷோக்.
“எதுக்கு?”
“என்னை மீட் பண்ண, எங்கூடப் பேச ஒத்துக்கிட்டதுக்கு.”
“சரி.சொல்லுங்க. என்னப் பேசணும்?”
“நிறைய, நிறையப் பேசணும் சுப்ரியா. எங்க எப்டி ஆரம்பிக்கிறதுன்னுதான் தெரியல.”
சுப்ரியா மெலிதாக புன்முறுவல் பூத்தாள். முகத்தில் விழுந்த கூந்தலை அழகாக ஒதுக்கிக் கொண்டாள்.
அவளையே ரசனையோடு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக்.
சற்று நேர மௌனத்திற்குப் பிறகு மெல்லப் பேசினான்.
“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் சுப்ரியா. நிஜமாவே எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.”
“இப்டி தடக்குன்னு கல்யாணம்னா எப்டி?”
“ஆமாம் சுப்ரியா. வாழ்க்கையை உங்கூட ஷேர் பண்ணிக்கணும்னுங்கிறது என்னோட ஆசை. உனக்கு விருப்பமில்லேன்னா சொல்லிடு. நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்.”
“விருப்பமில்லாம இல்லை.”
“அப்ப விருப்பம் இருக்கு?” – அஷோக்கிடம் குறும்புப் புன்னகை.
அதன் வசீகரத்தில் சொக்கிப்போனாள் சுப்ரியா. உடனயே சுதாரித்துக்கொண்டவள், “ஆனாலும் பயமாயிருக்கு. இது சரிப்பட்டு வருமா?”
“எது?”
“அதான்.. நாம்… நமக்கிடையே இந்தப் பரஸ்பரப் பிரியம்..”
“ஏன் சரிப்பட்டு வராது? ஜாதிப் பத்தி யோசிக்கிறியா?”
“நான் அவ்வளவு சின்னப் புத்திக்காரி இல்லை.”
“பின்னே? எதுக்கு தயக்கம்?”
“பாருங்க அஷோக். எனக்கு அப்பா கிடையாது.”
சுப்ரியா தொடர்ந்து பேசும் முன், “அதனாலென்ன? எனக்கு கூடத்தான் அம்மா இல்லை.”
இடைவெட்டினான் அஷோக்.
“அதில்லை அஷோக். நான் என்ன சொல்ல வரேன்னா எனக்கு எல்லாமே என் அம்மாதான். அவங்க சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்.”
“எனக்குப் புரியுது சுப்ரியா. நான் என் அப்பாவோட வந்து உங்கம்மாகிட்ட பேசறேன்.”
“ம். சரி.”
“அதான் கல்யாணம் பத்தி வீட்டுக்கு வந்து பேசறேன்னு சொல்லிட்டேன்ல? இப்பவாவது கொஞ்சம் கிட்ட வந்து உக்காரேன்.”
“அடக் கடவுளே. நான் நினைச்சது தப்பாப் போசே?”
“என்ன நினைச்சே? என்ன தப்பாச்சு?”
“உங்களை நல்ல பையன்னு இல்லை நினைச்சேன்.”
“போச்சு போ. என் இமேஜை நானே டேமேஜ் பண்ணிட்டேனா?”
“கொஞ்சம்.” – முறுவலித்தாள் சுப்ரியா.
“சரி விடு. இப்ப என்ன? பௌர்ணமிக்கு இன்னும் கொஞ்ச நாள்தானே?” – கண்ணடித்தான்
வானத்தில் அரை நிலா சிரித்துக் கொண்டிருந்தது.
அங்கே ஒரு இறுக்கமான அமைதி கவிந்திருந்தது.
பயத்தில் சுப்ரியா.
சற்றே கவலையுடன் அஷோக்.
“காபி ஆறுது. சாப்டுங்க.” என்றாள் சாவித்ரி.
“இருக்கட்டும்”, என்றார் சுந்தரேசன் அமர்த்தலாக.
சுந்தரேசன் – அஷோக்கின் அப்பா.
பெரியவர்கள் இருக்கும்போது தான் பேசலாமா எனத் தெரியவில்லை அஷோக்கிற்கு.
நிசப்தம் இன்னும் சற்று நேரம் நீண்டது.
தொண்டையை செருமிக்கொண்டார் சுந்தரேசன்.
“என் பையன் வந்து சொன்னான்.”
“என் பொண்ணும் விஷயத்தை சொன்னா.”
சுந்தரேசன் தொடங்கிய பேச்சை தன் சார்பாக தொடரவிட்டாள் சாவித்ரி.
“என்னத்தை சொல்றது இந்தக் காலப் போண்ணுங்களை. வயசுப் பசங்களை எப்டியாவது கவுத்துடுறாங்க.“
தடக்கென்று நிமிர்ந்தாள் சுப்ரியா.
பேச்சின் ஆரம்ப கட்டமே தடம் புரள்கிறதே.
அஷோக்கிடம் அதிர்ச்சி. சங்கடத்தில் தவித்தான்.
சாவித்ரிக்கோ முகமே இருண்டு போனது.
ஆனாலும் பதில் பேசாமலிருக்க முடியவில்லை அவளால்.
“ஆம்பளைங்க மட்டும் என்ன? கொஞ்சம் அழகான ஒரு பொண்ணைப் பாத்துட்டாப் போதும். வாலை ஆட்டிகிட்டு நாக்கைத் தொங்கப்போட்டுகிட்டு வந்துடறாங்க” என்றாள்.
களம் சூடானது.
மேலும் அனல் பறக்கும் முன்பாக குறுக்கிட்டான் அஷோக்.
“மத்த ஆம்பள பொண்ணுங்க பத்தி நமக்கென்னம்மா வீண் பேச்சு? இப்ப நாங்க வந்திருக்கிறது… உங்க வீட்டுக்கு வந்திருக்கிற விஷயம் என்னன்னா… அப்பா சொல்லுங்க..” எடுத்துக் கொடுத்தான்.
“என்னத்தை சொல்ல சொல்றே? பெரிய பெரிய இடத்துலேருந்து எல்லாம் காரு தர்றேன், பங்ளா எழுதி வைக்கிறேன்னு வரன் வருது. நீ என்னடான்னா இந்த தட்டுகெட்ட குடும்பத்துலதான் தலையைக் கொடுப்பேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறே.”
“யார் குடும்பம் தட்டுகெட்டது? வார்த்தைய அளந்து பேசுங்க. இல்லேன்னா மரியாதை கெட்ரும்.”
“இப்ப மட்டும் மரியாதை ரொம்ப வாழுதாக்கும்? பொண்ணுக்கு எங்ககேருந்துடா இந்த புத்தின்னு நினைச்சேன். இப்பதானே தெரியுது. ஆத்தாக்காரிகிட்டேருந்துதான் வந்துருக்கு இந்த தறிகெட்டத்தனம்.”
“யாரு தறிகெட்டுப் போயிட்டா? என்னப் பேச்சுப் பேசறீங்க? யாரும் இங்க உங்களை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கலை. என்னடி சுப்ரியா இதெல்லாம்? முதல்ல உன் மாமாவுக்கு போன் போடு. அவர் மகன் பாலாவோட உனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு கல்யாணம்.”
“மாமன் மகனோட வேற தொடுசலா? கேட்டுக்க அசோக்கு. என்னவோ நல்லப் பொண்ணு அது இதுன்னு பாராட்டுப் பத்திரம் எல்லாம் படிச்சே?”
“அப்பா..” என்ன சொல்வதென்று புரியாமல் வார்த்தைகளைத் தேடினான் அஷோக்.
விவகாரம் கைமீறிப் போவதில் மனம் நைந்தான் அவன்.
விசுக்கென நிமிர்ந்தாள் சுப்ரியா.
“அஷோக், நீங்க எங்க வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். இப்ப புறப்படறீங்களா?”
“பாத்தியா? பாத்தியா? வெளியே போங்கடான்னு சொல்லாம சொல்றா. இனிமே நான் இங்க ஒரு நிமிஷம் நிக்க மாட்டேன். வந்தா வா. இல்லாட்டி இங்கியே கிட” சுந்தரேசன் விசிறாப்புடன் வெளியே நடந்தார்.
அஷோக் மௌனமாகப் பின் தொடர்ந்தான்.
நடந்தவை எதையும் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை சுப்ரியா.
“இதுக்குதான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். காதல் கத்திரிக்காய் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு கேட்டாதானே?”
சாவித்ரியின் புலம்பல் வேறு சுப்ரியாவை இன்னும் அதிகமாகவே தளர்வடையச் செய்தது.
மறு நாள் அஷோக்கிடமிருந்து போன் வந்தது. சுப்ரியா எதிர்பார்த்துதான்.
“சொல்லுங்க. என்ன விஷயம்?”
“எம் மேல கோபமா சுப்ரியா?”
“கொஞ்ச நஞ்ச கோபமில்லை. பயங்கர கோபத்துல இருக்கேன்.”
“ஸாரி சுப்ரியா.”
“குப்பைத் தொட்டியில் கொண்டு போய் கொட்டுங்க உங்க ஸாரியை. இனிமே நமக்குள்ள ஒண்ணும் சரிப்படாது. பேசிப் பிரயோஜனமில்லை. நான் போனை வைக்கிறேன்.”
“இப்டி பேசுனா எப்டிம்மா?”
“பின்னே எப்டி பேச சொல்றீங்க?”
“என் அப்பாவும் உன் அம்மாவும் இப்டி தாறுமாறா பேசுறாங்கங்கிறதுக்காக நாம நம்ம காதலை தியாகம் பண்ணாணுமா சொல்லு?”
“பின்னே என்னப் பண்ண சொல்றீங்க?”
“கல்யாணம் பண்ணிக்குவோம் சுப்ரியா.”
சுப்ரியாவிடம் மௌனம் கவிந்தது.
“பாரு சுப்ரியா. யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை இழக்க நான் தயாரில்லை. நம்ம வாழ்க்கையை நாம அமைச்சிக்குவோம். கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுல சொல்லுவோம். ஒத்துக்கிட்டா பாப்போம். இல்லேன்னாலும் சரிதான். நீ என்ன சொல்றே?”
“அம்மா அப்பாகிட்ட சொல்லாம எப்டி அஷோக்?”
“நாமதான் சொன்னோமே சுப்ரியா? நம்மளை அவங்க புரிஞ்சிசிக்கலைன்னா நாம என்ன பண்ண முடியும்? காலம் பூரா நீ என்னை நினைச்சிக்கிட்டு… நான் உன்னையே நினைச்சிக்கிட்டு… கண்ணீர் வடிக்க சொல்றியா?”
“அதில்லை அஷோக்..”
“கொஞ்சம் யோசி சுப்ரியா. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூடப் பாக்க முடியலை. உன்னால முடியுமா என்னை மறக்க?”
“ஹூகும்.”
“தென்? லெட்ஸ் கெட் மேரீட் சுப்ரியா.”
நன்றி : படம் இணையத்திலிருந்து
புதங்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்.
4 comments on “தொடர்கதை: காதல் திருவிழா”
rajaram
இது அத்தியாயம் 10தானே, காதல் திருவிழா, கலகத் திருவிழாவுல ஆரம்பிச்சிருக்கு. பாப்போம்.
rajaram
மற்ற அத்தியாயங்களின் இணைப்புகள் இதில் இல்லாமல் இருக்கிறது.
kumar
இணையப் பிரச்சினை இருந்ததால் இந்தக் குழப்பம்.
எல்லாவற்றையும் மாற்றியாச்சு. இப்பச் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி.
கேலக்ஸி பதிப்பகம்
rajaram
நன்றிங்கணே