அத்தியாயம்-15
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
அத்தியாயம்-9
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
மதன் அவரது வார்த்தைகளில் துவண்டடு போய் விட்டான் என்பது அவன் சோபாவில் அமர்ந்திருந்த நிலை பார்த்தே விக்கிக்கு புரிந்து கொண்டான்.
“என்ன மூர்த்தி சார். கல்யாணமே பண்ணிக்க மாட்டேனேனு இருந்தவன் இப்ப உங்க பொண்ணை பார்த்ததும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே சொல்லியிருக்கான். நீங்க இப்படி சொன்னா எப்படி?”
“என் நிலைமை இப்படி இருக்கே . நான் என்ன பண்ணட்டும்?”
“நீங்களா ஒரு வட்டத்தை போட்டுகிட்டு அதிலேருந்து வர மாட்டேன்னு அடம் பிடிக்கிற மாதிரி எனக்குத் தோணுது”
“வட்டம் நான் போடல தம்பி. காலம் போட்டது.”
“டேய் அவரை தொந்தரவு பண்ணாதே விட்டுடு . நீங்க கிளம்புங்க “
மதன் சொல்லவும் அவர் தலையாட்டியபடியே அகன்றார்.
“தம்பி நீங்க இன்னும் டிபன் சாப்பிடல”
“இப்ப பசியியில்லே. அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.”
ஆனால் அன்று இரவு முழுக்க சாப்பிடவில்லை. தூங்கவில்லை. அதிகமான சிந்தனையிலிருந்தான். நடுநடுவே எழுந்து ஸ்கிரிப்ட் எழுதுவதில் நேரம்.தை செலவழித்தான். அன்றிரவு கொஞ்சம் அதிகமாகவே டிரிங்க்ஸ் எடுத்து கொண்டான். விக்கி அதிகாலையில் எழுந்த போது மதன் லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்ததை கவனித்து ‘என்னடா தூங்கலையா..?’ என்றான்.
“தூக்கம் வரலியே”
“எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிற நீ இந்த விசயத்துக்கு ஏன் இவ்வளவு பீல் பண்றே. உனக்கு வேற பொண்ணா கிடைக்காது.”
“எல்லாரும் தான் நடிக்கிறாங்க. சூப்பர் ஸ்டார் ஆகிட முடியுதா”
“நான் வேண்ணா பிரியாக்கிட்ட பேசி பார்க்கவா..? “
“வேணாம்டா. நல்லாருக்காது”
கொட்டாவி விட்டபடி வந்து படுக்கையில் வீழ்ந்தான்.
காலை எட்டு மணி இருக்கும். செல்போன் அடித்தது. கண்களின் எரிச்சலுடன் பார்த்தான்… அம்மாதான்.
“சொல்லும்மா.”
“பத்திரிகைகாரங்க கிட்ட ஏன்பா சண்டையெல்லாம் போடறே”
“நான் எங்க சண்டை போட்டேன். ஆர்க்யூமெண்ட் தான் பண்ணேன்”
“எப்படியெல்லாம் அது திசை திரும்பியிருக்கு தெரியுமா”
“செலிபிரிட்டி ஆகிட்டா நாம கொடுக்கிற விலை அது. விட்டு தள்ளு.”
“போனை வச்சிடாத. உங்கப்பா பேசணுமாம்.”
“பத்திரிகையாளர் கிட்ட எல்லாம் சண்டை போடாதே. அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லே”
“ஓகே. நான் பார்த்துக்கிறேன்”
“இப்படி தான் சொல்றே. ஆனா பிரச்னைல மாட்டிக்கிறே.”
“எனக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு டாடி.”
“அதான் பார்த்தேனே. ஒரு பங்சன்ல கலந்துக்கிறதுக்கு பணம் வாங்குவாங்க கேள்விபட்டிருக்கேன். இப்படி டொனேசன் கொடுத்திட்டு வர்றத இப்பத்தான் பார்க்கிறேன்.”
கடு்ப்பாகி விட்டது மதனுக்கு.
“இதுக்காக உங்க கிட்ட பணம் கேட்க மாட்டேன். டாடி. நான் சம்பாதிக்கிற பணத்திலருந்து கொடுத்திடறேன்.”
செல்போனை ஆஃப் செய்து பெட்டில் வீசி எறிந்தான்.
“என்னடா.”
“அப்பா படுத்தறார்டா”
“Boycot madan movies னு வலைத் தளங்கள்ல ட்ரெண்ட் ஆகிட்டிருக்கு. பிரதீப் ரசிகர்கள் வெறித்தனமா பண்ணிட்டிருக்காங்க”
“பண்ணிட்டு போறாங்க போடா” சலிப்புடன் சொன்னபடி மதன் பால்கனிக்குச் சென்றான்.
பிரியா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் மதன் முகத்தில் மலர்ச்சி வந்தது. மதன் அவளையே பார்க்க, உள்ளுணர்வு அவளுக்கு சொல்லியிருக்க வேண்டும். பிரியா திரும்பி பார்த்தாள். மதனை பார்த்ததும் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். அவ்வளவுதான். வேலையில் ஆழ்ந்து விட்டாள். ஆனாலும் அவளது ஒவ்வொரு அசைவிலும் அவன் தன்னை பார்த்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்புடனே அவள் செயல்படுவது போல் தோன்றியது.
செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டே விக்கி பால்கனிக்கு வந்தான்.
“பிரியாக்கிட்ட மூர்த்தி நான் கேட்டதச் சொல்லியிருப்பாராடா”
“மாட்டார்னுதான் தோணுது”
“எனக்குள் புயலை கிளப்பி விட்டுட்டு அவள் மட்டும் அமைதியா இருக்கா பாரேன்”
” இதன் பெயர் காதல்” விக்கி சிரித்தான்.
அப்போது ‘ இதயமே இதயமே….உன் மௌனம் என்னை கொல்லுதே ……’ பாடல் விக்கி பார்த்து கொண்டிருந்த ரீல்சில் ஓட ஆரம்பித்தது.
‘அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்கும். உன்நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா………’
சில விநாடிகள் தொடர்ந்து பாடலை கேட்ட மதன் சொன்னான்.
“சினிமால ஒரு சிச்சுவேசனுக்கு இளையராஜா பாட்டு போட்டிருக்கார். சரி. ஆனா அது நம்ம வாழ்க்கையோட பிரச்னைகளுக்கு தகுந்த மாதிரி ஒத்து போகுது பாரேன். வாட் எ கிரேட் மேன் இளையராஜா.”
விக்கி தலையாட்டினான்.
போர்டிகோ வாசலில் கார் ஒன்று வர வாட்ச்மேன் விசாரித்து கேட் திறந்து விட, கார் உள்ளே நுழைந்தது.
விக்கியும் மதனும் ஒருவரையொருவர் குழப்பமாய் பார்த்து கொண்டே போர்டிகோவுக்கு வரும் காரை கவனித்தனர்.
கார் போர்டிகோவில் வந்து நிற்க , அதிலிருந்து இறங்கினார் மதன் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ரங்கராஜன்.
இவர் ஏன் இங்க வந்தார் என்றபடி இருவரும் பால்கனியிலிருந்து உள்ளே வந்து கீழே இறங்கி வர ஆரம்பித்தனர். மூர்த்தி அவரை அமர வைத்து உபசரித்து கொண்டிருக்க, மதனும் விக்கியும் ஹாலுக்குள் நுழைய, அவர்களை பார்த்ததும் ரங்கராஜன் எழுந்து கை கூப்பினார். பதிலுக்கு கை கூப்பி அமர சொன்ன மதன் தானும் அமர்ந்தான்.
“என்ன விசயமா இங்க வந்திருக்கீங்க. எதுனா பங்சனா? “
“இல்ல ,உங்களை தான் பார்க்க வந்தேன்.”
“எதுக்கு?”
“நம்ம இண்டஸ்டரில என் காது படவே பேச ஆரம்பிச்சிட்டாங்க. பிரதீப்பையும் அவர் ரசிகர்களையும் பகைச்சுகிட்டு எப்படி இவர் படம் எடுத்துட முடியும்னு”
“பேசறவங்க பேசிகிட்டு தான் இருப்பாங்க.”
“தியேட்டர்காரங்க கூட எதுக்குங்க பிரதீப் கூட மோதிகிட்டு. இதனால உங்க படத்துக்கு தான் பாதிப்பு வரும்னு சொல்றாங்க.”
“என்னை வச்சு படம் எடுக்க வேணாம்னு சொல்றாங்களா?”
“இல்ல. பிரதீப்பை பார்த்து ஒரு சாரி சொல்லிட்டா அத்தோடு பிரச்னை தீர்ந்திடும்னு சொல்றாங்க.”
“நான் மனசறிஞ்சு பண்ணாத தப்புக்கு ,ஏன் சாரி கேட்கணும்.”
“கரெக்ட் தான். நிலைமை வேற மாதிரி இருக்கே. உங்கப்பா கூட சொன்னாரு. பிரதீப்பை பார்த்து பேசிட்டீங்கன்னா எல்லாம் சரியாகிடும்னு”
“நான் என் திறமை மேல நம்பிக்கை வச்சிருக்கேன்.அதனால் எனக்கு பயமில்லே. உங்களுக்கு பயமாயிருக்குனு நான் சாரி கேட்க முடியுமா?”
“தம்பி உங்க வயசு என்னோட அனுபவம். நல்லாருந்தா எப்படிடா அவன் நல்லாருக்கான்னு அங்கலாய்ப்பாங்க. தனக்கு எதுனா அதில் ஆதாயம் கிடைக்குதானு பார்ப்பாங்க. நல்லாயில்லேன்னா அப்படி நாசமா போயிட்டான்னு நிம்மதி ஆவாங்க. தப்பி தவறி கூட கை தூக்கி விடணும்னு நினைக்க மாட்டாங்க. உங்களை மாதிரி கொஞ்சம் பேரு இருக்கிறதினால தான் எங்களை மாதிரி கஷ்டப்படறவங்களை காப்பாத்த முடியுது”
விக்கியை திரும்பி பார்த்தான்.
“மனசு புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிச்சுக்கறேன்னு ஒரு அறிக்கை கொடுத்துட்டா போதும்.”
“அதெல்லாம் வேண்டாம். நான் டைரக்டா பிரதீப் சார் கிட்டயே பேசிடறேன். நம்பர் இருக்கா?”
|இருக்கு.” என்றபடி அவசரமாக தன் செல் போன் எடுத்து ரங்கராஜன் போன் செய்தார்.
பேசி முடித்து விட்டுச் சொன்னார்.” பிரதீப் பி்ஏ தான் பேசினார். அவர் இப்ப நார்த் இண்டியால ராஜஸ்தான் சூட்டிங்ல இருக்காராம். சண்டை காட்சி எடுத்திட்டிருக்காங்களாம். இன்னும் ஒன் அவர்ல பிரேக் வரும். அப்ப போன் பண்றேன்னு சொன்னாரு. உங்க செல் நம்பரை அனுப்பிச்சிருக்கேன்.”
“சரி வெயிட் பண்ணுங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன். நாம இங்கயே டிபன் சாப்பிடலாம் என்று சொல்லி குளித்து உடை மாற்றி டைனிங் ஹாலில் வந்தமர்ந்த போது மதன் செல் ஒலித்தது. ஸ்பீக்கரை ஆன் செய்தான். சினிமாக்களில் கேட்ட குரல் போனில் ஒலித்தது.
“ஹலோ நான் பிரதீப் பேசறேன்”
“சார் வணக்கம். நான் மதன் பேசறேன்”
“சாரி மதன். உங்க படம் வசூல்ல பட்டைய கிளப்பிட்டிருக்கறதா சொன்னாங்க. பட் நான் ஷூட்டிங்ல இருக்கிறதால இன்னும் படத்தப் பார்க்கல. சென்னை திரும்பியதும் பார்த்திடுவேன். தமிழ் இண்டஸ்டரிக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைச்சிருக்காரு. வாழ்த்துகள்.”
“தேங்க்யூ சார்” பிரதீப்பின் பாராட்டுகளில் திணறி போயிருப்பதை அவன். குரல் உறுதிப்படுத்தியது.
“என் படத்துல ஒரு சீன்ல உங்களை அவமதிச்சதா உங்க ரசிகர்கள் கோபப்படறாங்க. நான் அந்த சீன் வேணும்னு வைக்கல. தற்செயலா அமைஞ்சது அது. அது விசயமா உங்க கிட்ட விளக்கம் கொடுக்கலாம்னு தான் போன் பண்ணேன்.”
” நானும் கேள்விபட்டேன். டோண்ட் ஒர்ரி மதன். நான் அதை சாதாரணமாத்தான் எடுத்துகிட்டேன்.”
“ஆனா மீடியால என்னென்னவோ பேசறாங்க சார்”
“பேசட்டும் உங்க படத்துக்கு கிடைச்ச பப்ளிசிட்டியா அதை எடுத்துக்குங்க.” ஹா…..ஹா சிரித்தார்.
“நீங்க தப்பா எடுத்துக்கலங்கிறதே பெரிய ரிலீப் கிடைச்ச மாதிரி இருக்கு. மீடியாவுக்கு நான் சொல்லிடறேன்.”
“நோ. இப்ப நாம பேசினத மீடியாவுக்கு என் பிஆர்ஓ மூலமா சொல்லிடறேன்”
“தேங்க்யூ சார்”
“பை தி பை அப்பாவை விசாரிச்சதா சொல்லுங்க ரெண்டு வருசம் முன்னாடி உங்கப்பா கால்சீட் கேட்டாரு கொடுக்க முடியல. பியூச்சர்ல நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்.”
“ஷ்யூர் சார்”
செல் போனை ஆஃப் செய்தான். ரங்கராஜனை பார்த்தான்.
“ரொம்ப நன்றி தம்பி ” தயாரிப்பாளர் கை கூப்பினார்.
“சரி. சாப்பிடுங்க.”
சில நிமிடங்களில் சேனல்களில் நியூஸ் வந்தது.
“பிரதீப்புடன் மதன் சமாதான உடன்படிக்கை”
பிரதீப்பிடம் மதன் பகிரங்க மன்னிப்பு”
“மன்னிப்பு கேட்ட மதன்.”
மூவரும் சிரித்த படி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
சாப்பிட்டு முடித்து அவர் கிளம்ப வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தான். மூர்த்தி அருகே வந்தார். ” தம்பி ஒரு உதவி”
” சொல்லுங்க”
” மாப்பிள்ளை வீட்டுக்கு என் பெண்ணோட போட்டோ அனுப்பி வச்சிருந்தேன். மாப்பிள்ளைக்கு சமீபத்துல எடுத்த போட்டோ அனுப்ப சொல்றாரு. நீங்க செல் போன்ல ஒரு போட்டோ எடுத்து தர்றீங்களா”
‘நான் ஆசைப்பட்ட பொண்ணை அவளை கட்டிக்க போற மாப்பிள்ளை ரசிக்கிறதுக்கு நானே போட்டோ எடுத்து தரணுமா என்னய்யா நியாயம் இது’ மைண்ட் வாய்ஸ் இப்படி சொன்னாலும் மதன் சொன்னான்.
“ம் கொடுங்க”
விக்கி ஏதோ சொல்ல வர மதன் கண்களால் தடுத்தான்.
கௌரி “பிரியா” என்று அழைத்ததும் பிரியா வந்தாள். அவளிடம் கௌரி மெல்லிய குரலில் சொல்லவே பிரியா கோபமானாள்.
“அப்பா. இதெல்லாம் டூமச்.”
“இல்லம்மா. நான் என்ன சொல்றேன்னா…….”
” ஏற்கனவே ஒரு போட்டோ அனுப்பி வச்சுட்டீங்க. அப்புறம் என்ன புதுசா ஒரு போட்டோ எடுக்கிறது. அதான் பொண்ணு பார்க்க வர்றார்ல. அப்ப என்னை பார்த்துக்கட்டும்.”
” பிரியா. மாப்பிள்ளை ஆசைப்படறார்.”
” அவர் ஆசைப்படறத எல்லாம் செய்ய முடியாது. அப்பா உங்க மேல இருக்கிற பாசத்துல நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் பண்ணிக்கிறதா சொல்லியிருக்கேன். அதனால தான் மாப்பிள்ளை போட்டோவை கூட இன்னும் நான் பார்க்கல” சொல்லி விட்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் செல்ல ஆரம்பித்தாள்.
மூர்த்தியும் கௌரியும் பின்னே சென்றார்கள்.
உள்ளே வந்து சோபாவில் அமர்ந்த விக்கி சொன்னான்.
“இந்த பொண்ணு கோபத்துக்கு பின்னாடி ரெண்டு விசயம் இருக்கிற மாதிரி எனக்கு தோணுது”
“என்ன?”
“ஒண்ணு நம்மளை போட்டோ எடுக்க இவர் யாருன்னு உன்னை நினைக்கலாம். இரண்டு இவரே நம்மளை ஆசைப்பட்டிருக்காரு. அவருகிட்டயே போய் போட்டோ எடுத்து கொடுக்க சொல்லி அப்பா கஷ்டப்படுத்தறாரேனும் நினைச்சிருக்கலாம்”
“ரெண்டாவது விசயம் ஓகேனு தோணுது. பட் மூணாவது விசயம் ஒண்ணு நான் சொல்லவா.”
விக்கி யோசனையாய் மதனை பார்த்தான்.
“ஏதோ அப்பாவுக்காக எவனோ ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டறதுனு முடிவாகிடுச்சு. கடமைக்கு கல்யாணம் பண்றோம். இதுல மாப்பிள்ளைக்கு போட்டோ வேற அனுப்பணுமா..? என்ற கேள்விதான் அது”
நன்றி : படம் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.