அத்தியாயம் – 11
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
அத்தியாயம்-1 அத்தியாயம்-2
அத்தியாயம்-3 அத்தியாயம்-4
அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8
அத்தியாயம்-9 அத்தியாயம்-10
மாலையும் கழுத்துமாக வந்து நின்ற அஷோக் – சுப்ரியாவைப் பார்த்ததும் சாவித்ரியின் இதயம் நின்றே விட்டது எனலாம்.
“அய்யோ… அய்யோ.. அய்யோ.. என்னடி இது கோலம்?” – தலையில் அடித்துக்கொண்டாள்.
பதில் ஏதுமற்ற அமைதி சுப்ரியாவிடம்.
அஷோக்தான் பேசினான்.
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை.”
“யாரு யாருக்கு அத்தை? ஒண்ணும் தெரியாத எம் பொண்ணை மயக்கி இப்டி ஒரு காரியத்தை பண்ணிகிட்டு வந்திருக்கியே? நீ நல்லா இருப்பியா?”
“அவரை சபிக்காதேம்மா. அவர் நல்லா இருந்தாதான் உம் பொண்ணு நல்லா இருக்க முடியும். அவர் உன் பொண்ணோட புருஷன். உன் மருமகன். “
நிதானம் தெறித்தது சுப்ரியாவின் வார்த்தைகளில்.
“என் தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.” சாவித்ரியின் கண்களில் கரகரவென்று கண்ணீர் வழிந்தது.
“அம்மா, நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் இதுதான் நிஜம். எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி. எங்க புது வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க.”
காலில் விழுந்தவர்களை எப்படி வெறுப்பது?
அதிலும் ஒரே மகள். அவளை எப்படி தன் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிட முடியும்?
தொப்புள் கொடி உறவை எப்படி சட்டென்று ஒரேயடியாக வெட்டி விட முடியும்?
கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, “நல்லாருங்க” என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் சாவித்ரி.
சுப்ரியாவின் அம்மா இப்படி என்றால், அஷோக்கின் அப்பா அதகளப்படுத்திவிட்டார்.
அவரின் ஆவேசக் கூச்சலில் சுப்ரியாவிடம் மித மிஞ்சிய அச்சம்.
“அப்பா. நீங்க எங்க கல்யாணத்தை ஒத்துக்கலேன்னா இப்பவே சொல்லிடுங்க. நான் வீட்டை விட்டு வெளியே போயிடுறேன்.”
அஷோக்கின் தீர்மானமான பேச்சில் திடுக்கிட்டார் சுந்தரேசன்.
ஒரே மகனை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டு தான் நாதியத்துக் கிடப்பதா?
பெற்ற மகனின் அனுசரணையும் அக்கறையும் இல்லாமல் எப்படி வயோதிகத்தை கடத்துவது?
சுந்தரேசனின் விசிறாப்பும் வீறாப்பும் அஷோக்கின் உறுதியான முடிவின் முன்னால் எடுபடவில்லை.
அம்மி மிதிக்காமல் அருந்ததி பார்க்காமல் பதிவுத் திருமணம் முடிந்துவிட, ஆரத்தி எடுக்கவும் எவரும் இன்றி தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் சுப்ரியா.
***
முதல் இரவு.
“என் மேல கோபமா?” கேட்டான் அஷோக்.
“எதுக்கு?”
“இல்லை. நாள் பார்த்து நட்சத்திரம் பாத்து ஊரை அழைச்சு தாம் தூமென்று நடக்க வேண்டிய நம் கல்யாணம் இப்டி தடாலடியா நடந்து முடிஞ்சிடுச்சேன்னு உனக்கு வருத்தமா இருக்கா?”
“வருத்தத்தை விட பயம்தான் அதிகமா இருக்கு.”
“பயமா? ஏன்?”
“உங்க அப்பாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கலேன்னு வெளிப்படையாவே சொல்லிட்டார். அப்டி இருக்க நான் எப்படி புகுந்த வீட்டில் நல்லபடியா வாழ முடியும்? அதுதான் ரொம்ப பயமா கவலையா இருக்கு.”
சுப்ரியாவின் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டான் அஷோக்.
“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல?”
“உங்க மேல நம்பிக்கை இருக்கு அஷோக். ஆனா சூழ்நிலை..”
“என்ன சூழ்நிலையா இருந்தாலும் நான் உன் பக்கம் இருப்பேன் சுப்ரியா. உன் மேல உள்ள என் காதல் என்னைக்கும் மாறாது. எந்த சங்கடம் வந்தாலும் நான் உன்னை விட்டுப் பிரியமாட்டேன். இந்த உறுதியை நீயும் எனக்குத் தரணும்.”
காதருகே கிசுகிசுத்த அஷோக்கின் மென்மையான குரலில் நெகிழ்ந்து உருகினாள் சுப்ரியா.
“நிச்சயமா அஷோக். நானும் என் வாழ்க்கையும் ஆயுசு பூரா உங்க கூடத்தான். என்னைக்குமே நான் உங்களை விட்டுப் பிரியவே மாட்டேன்.”
சுப்ரியாவின் வார்த்தைகள் அஷோக்கின் செவிகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
பாவி… பாவி…
“பிரியவே மாட்டேன்” என்று சொல்லியவள் கடைசியில் பிரிந்தே போய் விட்டாளே..
அன்பு… காதல்… எல்லாம்… நாடகம்…
என்னைப் பிரிந்ததற்காக அவள் வருத்தப்பட்டே ஆக வேண்டும்.
அஷோகிடம் ஆத்திரம் கிளப்பிய எண்ண அலைகள்.
“சார்… கடையைப் பூட்டலையா?” என்ற வாட்ச்மேனின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.
“இதோ ஆச்சுப்பா…” ஆயாசமாக நிமிர்ந்தவனை அறைந்தது தொலைபேசி அழைப்பொலி…
இந்த நேரத்தில் யாராக இருக்கும்?
“ஹலோ..” மொபைலை காதுக்கு கொடுத்தான் அஷோக்.
மீனாட்சி அத்தை.
“அசோக்கு, எப்ப பொண்ணு பாக்கப் போலாம்?”
ஒரு கணம் மௌனம் காத்தான் அஷோக்.
“என்ன அசோக்கு, பதிலையே காணோம்? இந்த ஞாயித்துக் கிழமை போயிட்டு வந்துடலாமா?” சுப்ரியாவின் மேல் அவனுக்கிருந்த கோபம் அவனிடமிருந்து “சரி..” என்ற ஒற்றைச் சொல்லை உருவிப் போட, விதி கெக்கலித்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
சனிக்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்.
One comment on “தொடர்கதை: காதல் திருவிழா”
rajaram
என்ன இப்படி பொசுக்குனு மாலையும் கழுத்துமா வந்து நின்னுட்டாங்க...!