பாலாஜி பாஸ்கரன்
பிள்ளையார் சதுர்த்தி அன்று வெள்ளன எந்திரிச்சதும், அந்த மனைப்பலகையை நல்லா கழுவி எடுத்துட்டு வாடாம்பார் தாத்தா. அப்புறமா சைக்கிள எடுத்துக்கிட்டு, தெற்குவாசல் பக்கம் கூட்டிட்டுப் போவார்.
அங்கே முளைத்திருக்கும் திடீர் கடைகளில் அரை அடி, முக்கால் அடி, மிஞ்சிப் போனா ஒரு அடி வடிவத்தில் பிள்ளையார் அச்சும், நிறைய களிமண்ணும் வைத்திருப்பார்கள். அந்த அச்சை மல்லாக்க வைத்து களிமண்ணை அழுத்தி நிரப்பி, பின்பு குப்புற போட்டு அச்சைப் பைய்ய உருவி எடுத்தால் அழகான பிள்ளையார் சிலை கிடைக்கும். பின்பு குண்டுமணிகளை எடுத்து, களிமண் சிலையின் கண்ணில் சொருகியதும் பிள்ளையாருக்கு உயிர் வந்த மாதிரி இருக்கும். அப்படியே அந்தப் பிள்ளையார மெல்லத் தூக்கி மனைப்பலகையில படுக்க வச்சு வீட்டுக்குக் கொண்டு வருவோம்.
வீட்டுக்குத் திரும்பும் போது கொஞ்சம் எருக்கம் பூ, கதம்பம், தேங்காய், வாழைப்பழம், பொறி, கடலை, சின்ன வாழை மரம், அருகம்புல், ஒரு புதுத் துண்டு அப்புறம் முக்கியமா பேரிக்காய், விளாம்பழம் எல்லாம் வாங்கியாந்திருவோம். இந்த இரண்டையும் பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்குத்தான் பார்க்கவோ சாப்பிடவோ முடியும்.
வீட்டுக்கு வந்ததும், படுத்திருக்கும் பிள்ளையார பைய்ய பதறாம பொத்துனாப்புல நிமுத்து அதே மனைப்பலகையில நிக்க வச்சு, அடிப்பகுதியில் இருக்கும் களிமண்ணை கொஞ்சம் கொஞ்சமா இளக்கி மனைப்பலகையோடு பூசி விட்டால், நல்லா பலகையோட ஒட்டி உறுதியா நிப்பார்.
பின்பு தலைல தண்ணிய தெளிச்சு (குளிப்பாட்டிட்டோம்னு பிள்ளையார நம்ப வைக்கிறதுக்காக) நெத்தில விபூதிப் பட்டைய போட்டு, சந்தனம் குங்குமம் வச்சு, புதுத்துண்டை தொப்புளுக்கு கீழ சுத்தி பலகை தெரியமா மறைச்சுட்டு, பூ, மாலைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் சின்ன வாழைக்கன்றை நிற்க வைத்து, அலங்காரம் பண்ணிட்டா அம்சமா இருப்பார் பிள்ளையார்… இதெல்லாம் முடித்து இறுதி அலங்காரமாக – அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது – பிள்ளையார் தொந்தில நாலணாவ ஒட்டி வைப்பாங்க.
பின்பு பிள்ளையாருக்கு முன்னாடி வாழை இலையில பால், தேன், அரிசி மாவு, மண்டை வெல்லம், தேங்காய், வாழைப்பழம், விளாம்பழம், பேரிக்காய், பொறி, கடலை, கொழுக்கட்டை என எல்லத்தையும் வச்சு நீர் விளாவி, இறுதியா சூடம் காமிச்சுட்டு, விபூதிய பூசிக்கிட்டு, எல்லாரும் குடும்பத்தோட உக்காந்து, பிள்ளையாருக்கு கொஞ்சம் கொஞ்சமா வச்சதெல்லாம் நம்ம இலைல நிறைய வச்சு, கூடவே இட்லி சாம்பாரை ஊத்தி சாப்பிட்டா பிள்ளையார் சதுர்த்தி பூஜை முடிந்தது.
விளாம்பழத்தை மட்டும் மண்ட வெல்லம் கலந்து சாப்பிடணும், அப்பத்தான் நல்லா இருக்கும்.
மூன்று நாள் கழித்து ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நிகழ்வு நடக்கும், அதாவது பிள்ளையார் ஆத்துல கரைக்கிறது.
பிள்ளையாரத் தூக்கிக்கிட்டுச் செல்ல, வைகை ஆறு தொலைவென்பதால், அதன் கிளையான கிருதுமால் ஆற்றில் போய் கரைச்சுட்டு வாங்கடானு சொல்லிடுவாங்க. மூனு நாளுல களிமண் ஓரளவு காஞ்சு போயிருப்பதால், வயித்துல ஒட்டுன காசு கீழ விழுந்திராம – விழுந்துச்சுன்னா பிள்ளையார் கோவிச்சுக்கிருவார் – வலுக்கவனமா பிள்ளையாரத் தூக்கிக்கிட்டு கிருதுமால் நதிக்குப் போவோம்.
போற வழில ஆங்காங்கே அவரவர் வீட்டிலிருந்து பிள்ளையாரைத் தூக்கிட்டு வரும் சிறுவர்கள் இணைந்து கொள்வார்கள். கிருதுமால் நதியில் பிள்ளையாரைக் கிடத்தி, தொந்தியில் ஒட்டியிருக்கும் நாலணாவைக் கைப்பற்றியதும்தான் பிள்ளையார் சதுர்த்தியின் மகிழ்ச்சி முழுமையாகக் கிடைக்கும்.
கடைசியாகக் கரைத்த காசில் பிக் ஃபன் என்ற பப்பிள் கம்மை முக்குக் கடையில் வாங்கித் தின்றதாக ஞாபகம்.
அப்போது பிள்ளையார் சதுர்த்தி இவ்வளவாகத்தான் இருந்தது… இன்பமாக இருந்தது.
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
Leave a reply
You must be logged in to post a comment.