ஆர்.வி.சரவணன்
முன்கதை :
நண்பனின் திருமணத்திற்கு சென்ற போது தான் காதலித்துப் பிரிந்த மீராவின் குடும்பத்தைப் பார்க்கிறான் மாதவன். அவளுக்கும் அவனுக்கும் அங்கங்கே முட்டிக் கொள்ள, திருமணத்துக்கு முதல்நாளிரவு நண்பனும் மணப்பெண்ணும் சந்திக்கத் துணையாகச் சென்ற இடத்தில் மீராவுடன் மோதல் ஏற்படுகிறது.
இனி…
மாதவன் செல்போனைத் தரையில் சிதறு தேங்காய்போல் அடித்து உடைத்ததை கண்டு ஒரு கணம் திகைத்துத்தான் போனாள் மீரா, ஆனால் அடுத்த நிமிடமே அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் – அப்படி எடுத்துக் கொண்டதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் – தனது முகத்தை வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.
அவளது அந்தச் செய்கை மாதவனுக்கு கிரேட் இன்சல்ட் ஆக தோன்றியது.
அது கொடுத்த தாக்கத்தில் இன்னும் கோபாவேசமானான்.
கோபத்தை எப்படிக் கண்ட்ரோல் செய்வது என்று தெரியாமல் வலது கையால் இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டு அங்குமிங்கும் வேகமாக நடந்தான். வாய்க்குள் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான்.
சில விநாடிகள் இப்படியே நகர –
“செல்போனைத் தரையில உடைச்சுக் கோபத்தை காண்பிச்சிட்டா நீங்க செஞ்சது குத்தமில்லனு ஆயிடுமா என்ன…?” தனது கேள்வியால் அந்தச் சூழலை, அவனின் கோபநடையை உடைத்த மீரா, அவனைப் பார்த்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு மாடியின் கட்டைச் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.
அந்தக் கேள்வி எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலானது மாதவனுக்கு.
அதைக் கேட்ட மாத்திரத்தில் கோபமாய் பாய்ந்து சென்று அவள் கன்னத்தில் வேகமாய் அறைந்தான் மாதவன்.
“நான் எடுக்கலேன்னு சொல்லிகிட்டிருக்கேன். நீ என்னடான்னா திரும்பத் திரும்ப என்னையவே பலிகடா ஆக்கிட்டிருக்கே..?” கோபத்தில் வார்த்தைகள் மூசுமூசென்ற சப்தத்துடன் வெளிவந்து மீராவைத் தாக்கின.
அவன் பக்கமிருந்த கொள்ளி இப்போது அவள் பக்கமாய்…
மாதவன் எண்ணெய் ஊற்றியிருந்தான், மீரா தகித்துக் கொண்டிருந்தாள்.
அடி வாங்கிய அடுத்த நொடி மாதவனின் சட்டையை கொத்தாக பிடித்தாள் மீரா.
பெரும் கலவரத்தின் ஆரம்பப்புள்ளியாய் அது அமைந்துவிடும் அபாயம் தெரிந்தது.
மாதவன் வெடிக்கலாம் அல்லது மீரா அவனை எரிக்கலாம்.
அவளின் பிடி இறுகத்தான் செய்ததேயொழிய அவள் விடுவதாய் இல்லை.
மாதவன் அவள் முகத்தையும் தன் சட்டையைப் பிடித்திருந்த அவளது கையையும் மாறிமாறிப் பார்த்தான்.
மீரா பக்கமிருந்த நெருப்பின் ஜுவாலை மெல்லக் குறைய-
மாதவனின் பார்வையை எதிர் கொள்ள இயலாமல் அவன் சட்டையிலிருந்து கைகளை எடுத்தாள்.
அவனை விட்டு விலகி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் ஒரு கட்டையாய் அமர்ந்தாள் என்பதைவிட விழுந்தாள்.
அவளைப் பார்க்கப் பிரியப்படாத மாதவன், தன் சட்டையில் அவளின் பிடி ஏற்படுத்தியிருந்த சுருக்கங்களைச் சரி செய்து கொண்டு, சிதறிக் கிடந்த செல்போனின் பாகங்களைக் குனிந்து தேடி எடுத்துச் சேகரிக்க ஆரம்பித்தான்.
மீராவின் கால்களுக்கருகே கிடந்த செல்போன் கவரை எடுக்கும் போதுதான் அவளது வலது காலில் கொலுசுக்கு மேல் இருந்த தழும்பைப் பார்த்தான்.
அவள் முகத்தைப் பார்க்க கூடாதென நினைத்தவனுக்கு அவளின் கால் தழும்பைப் பார்த்ததும் சற்றே மனம் வலித்தது. அந்தத் தழும்பில் அவனுக்கும் பங்கிருந்தது.
அந்த நினைப்பு அவனைக் கொல்ல, அவளை அடித்ததை நினைத்து வெட்கப்பட்டான்.
அந்தத் தழும்பு பழைய நினைவுகளை அவனுள் மெல்லக் கிளறி விட்டது.
மாலை நேரம்…
அந்தப் பார்க்கில் அங்குமிங்கும் ஆட்கள் நடைபயின்று கொண்டிருக்க,
‘எனக்கொரு சிறுகதை நீ… இனிமையில் தொடத்தொட தொடர்கதை நீ… உருகி உருகி உனை படித்திட வா வா வா …. அன்பே வா….’ என மீராவின் தோளில் கை போட்டுக் கொண்டு பாடியபடி மகிழ்வாக நடந்து வந்தான் மாதவன்.
“அதென்ன… எப்பப் பாத்தாலும் இந்த பாட்டையே பாடிக்கிட்டு இருக்கே… என்னையவிட பாட்டுத்தான் இப்பல்லாம் முக்கியமாப் போச்சு” சிணுங்கினாள் மீரா.
“ஏய்… உன்னை மீட் பண்றப்பல்லாம் இந்த பாட்டைத்தான் ஹம்மிங் பண்ண தோணுது… இந்தப் பாட்டெல்லாம் நீதான் இருக்கே”
“ம். தோணும்… தோணும். இங்க நடக்கிறவங்கள்ல தெரிஞ்ச யாராவது நம்மை பார்த்திட போறாங்க”
“பார்த்தா என்ன…” என்ற மாதவன் ‘காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்….’ எனத் தொடர்ந்து பாடியபடி நடந்தான்.
காளிதாசனோ கம்பனோ அவர்களைக் காண வரவில்லை. அவர்களை எதிரே கண்டது என்னவோ மீராவின் அப்பாவும் அம்மாவும் தான்.
அவர்கள் இருவரையும் பார்த்த அதிர்ச்சியில் இவர்களும், இவர்களை அப்படியொரு கோலத்தில் பார்த்த அதிர்ச்சியில் அவர்களும் நிற்க, நொடிகள் கடுமையாய் நகர்ந்தன.
மாதவன் பயந்துபோய் தனது கையை அவள் தோளிலிருந்து எடுக்க,
சுதாரித்த மீரா சற்றே பதட்டமாய் கொஞ்சம் தள்ளி நிற்க,
அவளது அப்பா எரிப்பது போல் முறைக்க,
இப்படியான களேபரத்தில் அவள் அம்மா மட்டும் பல்லைக் கடித்தபடி, ‘வீட்டுக்கு வாடி உனக்கிருக்கு’ என்று சொல்லி புருசனை இழுத்து கொண்டு அவர்களிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தாள்.
அவர்கள் போனபின்னும் இவர்கள் அந்த இடத்திலேயே அசையாமல் நின்றார்கள்.
“என்ன ஆக போகுதோ..?” பதட்டத்துடன் மீராவிடம் மெல்லச் சொன்னான் மாதவன்.
“பிரிவைத் தவிர வேற எதுவாக இருந்தாலும் எதிர்க் கொள்ளத் தயாராவோம்”
மாதவனை சமாதானப்படுத்திய மீரா, அவன் தலை கோதி சகஜநிலைக்கு மாற்ற முயற்சித்தாள்.
*****
அடுத்த நாள்…
கல்லூரி வளாகம்.
தனது வலது காலை விந்தியபடியே நடந்து வந்தாள் மீரா. அவளது முகத்தில் எப்பவும் இருக்கும் மகிழ்ச்சி கொஞ்சம் கூட இல்லை.
அதைப் பார்த்ததும் ஓடிப்போய் அவள் கைகளைப் பிடித்து “ஏய் என்னாச்சுடா..?” என்றான் மாதவன்.
“ப்ச்… காதலின் வடுக்கள்…” வறட்சியாய் சிரித்தாள்.
“அடிச்சாங்களா..?” ஆதரவாய் அவள் தலை வருடிக் கேட்டான்.
“அடிக்கல… பட் நம்மளைப் பார்த்துச் சூடாயிப்போன அம்மா கால்ல சூடு வச்சிட்டாங்க.”
தனது சூடு போடப்பட்ட காலை அங்கிருந்த கல்லின் மேல் வைத்து புடவையை இலேசாக உயர்த்தினாள்.
கொலுசுக்கு கொஞ்சம் மேலே பட்டையாக கருத்திருந்தது.
“உங்கம்மாக்கு இரக்கமே இல்லயே… அவனைப் பார்க்காதே, பேசாதே, காலேசுக்கு அனுப்பமாட்டேன் இப்படியெல்லாம் எதுவும் சொல்லாம, சூடு வக்கிறாங்கன்னா என்ன மனுசங்கப்பா…” பல்லை கடித்தான் மாதவன்.
“சூடுதானே… வடுவாகும், சில நாள் வலியிருக்கும் அம்புட்டுத்தானே… என்ன கேட்டே இரக்கம் இல்லையான்னா… அதெல்லாம் இருக்கு நிறைய. அதனால தான் நீ சொன்னமாதிரி பார்க்க, பேச எல்லாத்துக்கும் லாக் டவுன் போட்டாங்க. முடிஞ்சா கல்யாணம் பண்ணி வைங்க. இல்லாட்டி ஓடிடுவோம்னு முகத்துக்கு நேராச் சொன்னேன். அது அவங்களை உக்கிரமாக்கிருச்சு… கால்ல சூடு வச்சிட்டாங்க… தட்ஸ் ஆல்” உணர்ச்சியில்லாத புன்னகை அவள் இதழில் பூத்தது.
“சாரி” கைகளைப் பற்றிக் கொண்டான்.
“இதுக்கு ஏம்ப்பா நீ இம்புட்டுப் பீல் பண்றே. சண்டையில கிழியாத சட்டை எது இருக்கு. காதல்ல இதெல்லாம் சகஜம்”
“இதையெல்லாம் பார்க்கும்போது ஏன்டா காதலிச்சோம்னு இருக்கு”
“இதுக்காக நீ என்னை விட்டுட்டு போனேன்னு வச்சிக்க, நான் உடம்பு முழுக்க சூடு போட்டுக்குவேன்” அவனை பொய்யாய் எச்சரித்து சிரித்தாள்.
மாதவன் கண் கலங்கி அவளைத் தோள் பிடித்து தன்னோடு சேர்த்து கொண்டான்.
மீராவின் விசும்பல் சத்தத்தில் நினைவுகளிலிருந்து மீண்டான் மாதவன்.
அவளின் கோபத்தில் இருக்கும் நியாயம் அவனுக்குப் புரிந்தது.
நடந்த விசயங்கள் அவளுக்கு வேறுவிதமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டான்.
உண்மையில் நடந்தது என்ன என்பதைச் சொல்லி அவளைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.
அதுவரை அவனிடமிருந்த தயக்கத்தைப் புறம் தள்ளி மீராவின் மிக அருகே வந்தமர்ந்தான் மாதவன்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.