அழகு ராஜா
‘மதுரை மண்ணின் மைந்தர்கள்’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் எழுதி வரும் அழகுராஜா அவர்கள் சமூக சிந்தனையுடன் செயல்படுபவர். சமூக சேவகராக மனைவி, மகனுடன் சேர்ந்து நிறையச் செய்து வருகிறார். நிறைய மரக்கன்றுகளையும் பனைமரங்களையும் நட்டு வருகிறார்கள். மரக்கன்றுகள், துணிப்பை, விதைப்பென்சிலை மதுரைப் பகுதியில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கி வருவதுடன் குறைந்த விலையில் துணிப்பைகள் விற்பனையும் செய்கிறார். எட்டு வயதில் இருந்து வாசிக்க ஆரம்பித்த தீவிர வாசிப்பாளர். புத்தக விமர்சனங்களை எழுதி முகநூல், வாட்சப் குழுமங்களில் பல பரிசுகளை வென்றிருக்கிறார்.
********************************
சில மாதங்களாக எனக்கு மனது அளவில் சிறு பிரச்சனை அதனால் எந்த புத்தகம் வாசிக்க முடியல. கடந்த சில வாரமாக தான் மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சேன்’
சரி நம்ம மண் சார்ந்த கதை வாசிக்கலாம்னு சலங்கை சத்தம் கையில் எடுத்தேன். இது வரை பிரபலமான எழுத்தாளர்களின் 300 பக்கம் உள்ள புத்தகத்தை கூட நான் முழுசா வாசித்தது இல்ல.
இரவு வாசிக்கலாம் என எடுத்து. 349 பக்கம் கொண்ட புத்தகத்தைக் கீழே வைக்காமல் கிட்டதட்ட 5 மணி நேரம் இடை வெளி விடாமல் வாசித்து முடித்தேன். இப்படி நான் வாசித்த முதல் புத்தகம் இது.
‘சலங்கை சத்தம்’ கிரைம் நாவல்.
வாசித்து முடித்ததும் என்னிடம் சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லாமல் உடம்பு புல்லரிச்சு உக்காந்து இருந்தேன்.எந்த இடத்திலும் தொய்வு இல்லை என்பதைச் சொல்லி ஆகவேண்டும். புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்கக் காரணம் அவ்வளவு விறு விறுப்பாய் நகர்ந்த கதைக்களம்.
ஆசிரியர் சேடபட்டியான் லபி (லட்சபிரபு) -யின் இரண்டாவது புத்தகம் இது. அவரின் முதல் புத்தகம் சாஸ்தா வனதேவி. 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை உசிலம்பட்டி வட்டார மாெழியில் சிறப்பாக எழுதி இருந்தார்.
கதைக்களம் 90களின் காலகட்டம், உசிலம்பட்டி அருகில் இருக்கும் சின்ன கிராமம் மேட்டுப்பட்டி. ஊரில் வயதானவர்கள் இறப்பு நடக்கும் போது எல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை நடக்கிறது. கொலையான ஆண்களின் மர்ம உறுப்பைச் சிதைத்து, கழுத்தை இறுக்கி மர்மமான முறையில் மரணம் நிகழ்கிறது.
இந்த மர்மக் கொலைகளின் பின்னால் இருக்கும் கொலையாளி யார்? கொலையான பிணங்களின் கழுத்தை இறுக்கிய கயிற்றில் இருக்கும் ஒற்றைச் சலங்கையை வைத்து விசாரணை துவங்குகிறார் சப்இன்ஸ்பெக்டர் சீமராசா.
இதற்கு இடையில் பிள்ளை தின்னி ராக்காச்சிதான் கொலை செய்கிறாள்னு ஒரு கதையும் ஊரில் பேசப்படுகிறது.
கொலைகள் நடந்த இடத்தில் ஜிகினா இருந்ததாக தடயவியல் மூலம் செய்தி ஒன்னு வருது, அதை ஆதாரமாக வைத்து விசாரிக்க தொடங்கினால் ஆட்டக்காரி கனகா தான் கொலைகளைச் செய்தவள் என்பது ஊர்ஜிதமாகிறது.
கனகா -ம் பெண் அல்ல, அவள் ஒரு ஆண் என்பதும் அவளின் பெயர் பழனி என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் அவாள் திருநங்கையாக மாறிய பின் தன் பெயரைக் கனகா என்று மாற்றிக் கொண்டவள் என்பதும் தெரிகிறது.
சரி கனகாக்கும் நடந்த கொலைகளுக்கும் என்ன சம்மந்தம் என விசாரிக்க ஆரம்பிக்கும் போது அதிலிருந்து விழுதுகளாய் விரியும் கிளைக் கதைகள் மூலம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது.
கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரோடு இருக்கும் ஒருவனால் கனகாவுக்கு நடந்த கொடுமை என்ன?
கனகா கொலை செய்யவில்லை என்றால் இக்கொலைகளை யார் செய்தது? என விசாரணை நகர, ஒரு கட்டத்தில் கொலையாளி மாட்டிக் கொள்ள, கொலையாளிக்குச் சிறை தண்டனை கிடைக்கிறது.
இன்ஸ்பெக்டர் சீமராசா சிறையில் கொலையாளியை சந்திக்கும் போது ‘என்னால தானே உன்னோட தொடர்கொலையில் அடுத்த நபரைக் கொல்ல முடியாமல் போயிருச்சு. அதனால எம்மேல் உனக்குக் கோபம் வருமே..?’ என்று கேட்க்கும் போது ‘இல்ல ஐயா அவனும் இறந்துட்டான்’னு சொல்லும் போது இறுதி முடிச்சி அவிழ்கிறது.
‘தெய்வம் நின்று கொல்லும்’ என்ற இறுதி வரியை வாசிக்கிறப்ப இந்த புத்தகத்தின் ஆசிரியர்க்கு அந்த இரவிலும் சபாஷ்னு சொல்லிக் கையை தட்டினேன்.
அது தான் எழுத்தாளருக்குக் கிடைத்த வெற்றி.
வாசித்து இரண்டு வாரம் ஆச்சு என்றாலும் இன்றுவரை இரவில் கனகா என் கண்முன்னால் வந்து நிற்கிறாள்.
ஏன்னா திருநங்கையாகப் பம்பாய் செல்லும் கனகா சந்திக்கும் அனுபவங்கள், அவளுக்கு இருக்கும் காதல், கயவர்களால் அவள் துடிதுடித்து கதறியது என கனகாவின் வாழ்க்கை என் கண்ணுக்குள் இன்னும் காட்சிகளாகவும் காதில் இன்னும் அவளின் வலி நிறைந்த கதறலுமாய்.
இதில் கனகா, சீமராசா தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் பெயரை எழுதாததற்குக் காரணம் புத்தகத்தை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்கிறப்ப சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான திரில்லிங் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதால்தான்.
இந்த நாவல் குறித்து இன்னும் எழுத நிறைய இருக்கு. சிலவற்றை மட்டும் கீழே சொல்லியிருக்கிறேன்.
- ஒரு வீட்டில் எளவு விழுந்தா கொட்டகை போட்டு, ரேடியாக் கட்டி, ஆட்டக்காரர்கள் ஆட்டம் ஆடி பிணத்தை சுடுகாட்டில் எரிக்கிற வரைக்கும் நடக்கும் நிகழ்வுகள் கண்முன்னால் நடப்பது போல் இருக்கு.
- ஆணாக இருந்து திருநங்கையாக மாறினால் இந்த ஊர் ஒதுக்குனாலும் நம்ம பெத்த பிள்ளை பெண்ணாக மாறினால் என்ன இப்போ அவ நம்ம புள்ளதானே எனச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்.
- ராக்காச்சி கதை, அழிந்த ஜமீன்தார் வம்சம், நர்த்தகன் நர்த்தகி ஆன கதை வாசிக்கிறப்ப பிரம்மாண்டமான வரலாற்று படம் பார்த்த மாதிரி இருந்தது.
- கனகா பம்பாய் செல்லும் போது அவளிடம் தனது நீண்ட கால காதலைச் காதலன் சொல்லும் பகுதி வாசிக்கும் போது ரசனையாய் இருந்தது.
இறுதியாக எல்லாருக்கும் நான் வைக்கும் முக்கியமான அன்பு வேண்டுகோள்… ஒருமுறையாவது வளரும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள். எத்தனை அற்புதமாய் எழுதினாலும் அவர்களுக்கான இடம் கிடைக்காமல் இருப்பது வேதனையே.
—————————————————-
நூலின் பெயர்: சலங்கை சத்தம்
ஆசிரியர் : சேடபட்டியான் லபி
வெளியீடு : உலகத்தமிழன் பதிப்பகம்
பக்கம் : 349
விலை : ரூ. 375
—————————————————-