தசரதன்
எழுத்தாளர், பதிப்பாளர், தீவிர வாசகர் என்ற பன்முகம் கொண்டவர் தசரதன். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். புத்தகங்கள் மீதான தீவிரக் காதலால் தானே ஒரு பதிப்பாளராய் மாறி கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தின் மூலமாகப் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கி வருகிறார். அசோலா, செல்லம்மா, மனோசக்தி என்ற மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார்.
*********
முருகம்மாள் எழுபது வயது நிரம்பியவள் என்றாலும் உடம்பில் எந்தவொரு தளர்வுமில்லை. முகத்தில் கூட ஒரு சுருக்கமும் விழவில்லை. பற்கள் இன்னும் உறுதியாக தான் இருக்கின்றன.
முருகம்மாளைப் பார்க்கிறவர்கள் அவளுக்கு எழுபது வயது என்றால் நம்பவே மாட்டார்கள். வேலை பார்த்து இறுகிப் போன உடம்பு அது.
அந்த காலத்து உணவு, கலப்படமில்லாத காய்கறிகள், கம்மங்கூழ், களி சாப்பிட்ட உடல்வாகு. விடிந்ததிலிருந்து பொழுது போகும் வரை உடலுழைப்பு என்று முருகம்மாள் பாட்டி வாழ்ந்ததினால் தான் இந்த வயதிலும் எந்தவொரு வியாதியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்று அவளை அறிந்தவர்கள் ஊரில் சொல்லிக் கொள்வார்கள்.
அவளின் வயதை ஒத்த, ஊரில் இருக்கின்ற பாட்டிகளில் பலர் கண் தெரியாமல், நடக்க முடியாமல் எப்போதும் படுக்கையாகவே இருப்பதும் உண்டு. பொக்கை வாய் பாட்டிகள் ஊரில் ஏராளம். சில பாட்டிகள் கணவனை இழந்தவுடன் கொஞ்ச காலம் பெற்ற பிள்ளைகளுக்காக, பேத்தி, பேரன்களுக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து முடிந்து போனவர்களும் உண்டு.
இப்போது கூட முருகம்மாள் செய்யாத வேலையே இல்லை. விடிந்ததும் வாசலில் சாணியை தெளித்து பெருக்கி வைத்து கோலம் போடுவாள். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பாள்.
அவளின் கணவன் ரயில்வேயில் வேலை செய்ய, அவளோ ரெட்டியார்களின் கழனிக்காடுகளில் வேலை செய்தாள். அவளுக்கு ஒரு மகன், மகள் இருந்தனர். மகள் சரசு எவ்வளவு சொல்லியும் காதில் வாங்காமல் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள் முருகம்மாள்.
அந்தக் காலத்தில் ஆட்கள் இல்லாத ரயில் ட்ராக் போட ரயில்வே துறையிலிருந்து அதிகாரிகள் கிராம, கிராமாக வந்து நிறைய இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். அப்படி வேலைக்கு போனவர் தான் முருகம்மாளின் கணவர் வேலாயுதம். ரயில்வே டிபார்மெண்டில் ரயில் டிராக் போட கூலியாட்களாக போனவர்கள் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டனர். அப்படித்தான் வேலாயுதம் ரயில்வே ஊழியரானார்.
முருகம்மாள் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கும் போது கணவருக்கு நாற்பது வயது. அப்போதுதான் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு போய்க் கொண்டிருந்தனர். ஒருநாள் முருகம்மாளின் கணவர் ரயில் விபத்தில் ஒன்றில் இறந்தும் போய்விட்டார். கணவன் இறந்துப் போன துக்கத்தில் உடைந்து போயிருந்த முருகம்மாளுக்கு மற்றொரு இடியும் வந்து தாக்கியது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவளின் மகன், பசங்களுடன் ஏரிக்கு குளிக்கச் சென்றபோது சேற்றில் மாட்டிக் கொண்டு செத்துப் போனான்.
வீட்டில் சம்பவித்த இரண்டு மரணங்கள், முருகம்மாளை நொறுக்கிப் போட்டு விட்டாலும் தன்னுடைய மகளுக்காக புது ஜென்மம் எடுத்துக் கொண்டு வேதனைகள் எல்லாம் உதறி போட்டுவிட்டு பழையபடியே வயல் காடுகளுக்கு வேலைக்கு போனாள்.
இறந்து போன கணவனின் பென்ஷன் பணம் ஆறாயிரத்துக்கு மேல் வந்தது. முருகம்மாளின் மகள் சரசு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்த போது தானும் தன் தாயாருடன் வயல் வேலைக்குச் சென்றாள். அங்கே ஒருவருடன் காதல் ஏற்பட்டு காதலித்தவனையே கல்யாணமும் செய்து கொண்டு விட்டாள். முருகம்மாளுக்கு மகளின் கல்யாணம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. தன் மகளுக்கு நல்ல வேலையில் இருக்கின்ற மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்ய எண்ணியிருந்தாள். ஆனால் அவளின் எண்ணத்தில் சரசு மண்ணை வாரிப் போட்டுவிட்டாள்.
ஒரு கூலியாளைக் கட்டிக்கொண்டு சரசு மிகவும் சிரமப்பட்டாள். மகளின் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத முருகம்மாள், வீட்டில் ஒருத்தியாகக் கிடந்து வெறுத்துபோன வாழ்க்கைக்கு மருந்தாகத் தன் மகளை மன்னித்து அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொண்டாள்.
சரசுவின் கணவன் ராமநாதனுக்கு வேலை இல்லை. ஊரில் யார் அழைத்தால் போய் வேலை செய்துவிட்டு, கொடுக்கும் கூலியை வாங்கிக் கொண்டு வருவான். அவன் வாங்கும் கூலி பீடிக்கும், டீ குடிப்பதற்கும் சரியாக இருந்தது. அதையெல்லாம் அறிந்துதான் முருகம்மாள் தன் மகளை அரவணைத்துக் கொண்டாள்.
சரசு இரண்டு குழந்தைக்கு தாயானாள். முருகம்மாளின் பென்ஷன் பணத்தினால் தான் குடும்ப வண்டி சிரமமில்லாது ஓடிக் கொண்டிருந்தது. அவளின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற துளசியம்மாள் பாட்டியும் பெஞ்சன் பணம் வாங்குகிறாள். ஆனால் அவளுக்கு கொஞ்சமும் நிம்மதியில்லை. வாங்கும் பென்ஷன் பணத்தை மூன்று பிள்ளைகள் வந்து பங்கு போட்டுக் கொண்டு போய் அம்மாவை வைத்து கஞ்சி ஊற்ற மனம் இல்லாமல் இருக்கின்றனர்.
அவளும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்வார்களே அதுபோல் இருந்துக் கொண்டாள். எப்போதும் உடல் நலமற்று நடக்க தெம்பில்லாமல் கிடந்து வந்தாள்.
இத்தனைக்கும் முருகம்மாள் விட ஐந்து வயது குறைந்தவள் தான் துளசியம்மாள். அவளின் மகன்கள் மூவரும் நல்ல உத்தியோகம் பார்க்கிறார்கள் என்றாலும் பென்ஷன் பணத்தை அம்மாவை வைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்ததில்லை. மாதம் ஒன்றாம் தேதி வந்ததும் மாலை வீட்டுக்கு வந்து அவளிடமிருந்து பென்ஷன் பணத்தை வாங்கி மூவரும் பங்கு போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். எந்தவொரு பிள்ளையும் அம்மாவின் உடல் நலத்தின் மீது அக்கறை கொள்வதில்லை. இதனால் மனம் வெறுத்துப் போனவள், ‘நான் கஷ்டப்பட்டு உயிர் சுமந்து உங்களுக்கு ஏன் பென்ஷன் பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்…?’ என்று வெறுத்துப் போய் ஒருநாள் சுடுகாட்டை நோக்கி போய் சேர்ந்தது விட்டாள். பிள்ளைகளின் பாசம் அற்றுப் போன பிறகு சாவது குறித்து எந்தவொரு தாய்க்கு மனக்கவலை இருக்க முடியும்?
மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை பிழைக்கத் தெரியாதவனாக இருந்திருந்தால் அந்த பிள்ளைக்காவது பென்ஷன் பணத்தை பெற்று தர வேண்டி எப்பேர்பட்டாவது உயிரோடு இன்னும் கொஞ்ச காலம் இருக்க முயற்சித்திருப்பாள். மனம், வாழ்வை உள்ளப்பூர்வமாக வெறுக்கத் தொடங்கும் போது தான் உடலில் இருக்கும் உயிர் நலியத் தொடங்குகிறது.
உயிரை விட்டு விடவும், அதை இறுக்கி பிடித்துக் கொள்ளவும் மனோ சக்திக்கு நிச்சயமாக ஒரு பலமுண்டு. மரணம் எங்கிருந்தோ வருவதில்லை. ஒவ்வொரு மனிதருக்குள்ளே இருந்து தான் அவர்களின் ஆத்மா விருப்பத்தோடு தான் வந்து சேர்கிறது. இந்த ரகசியத்தை எந்த ஒரு மனிதனும் மரணத்திற்கு காட்டுவதில்லை என்பதுதான் உண்மை.
முருகம்மாள் தன் உயிரை இந்த வயதிலும் உறுதியாக வைத்திருப்பதற்கு காரணம் பென்ஷன் பணத்தை தன் மகளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டி தான். தனது பென்ஷன் பணம் போய்விட்டால் தனது மகளின் கதி என்னாகும்? துப்பில்லாதவனைக் கணவனாக கொண்டு அவள் எப்படியெல்லாம் தனது இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வாழ்வில் கஷ்டப்படுவாளோ என்று ஒவ்வொரு நாளும் நினைத்து வருந்தினாள். அந்த நினைப்பின் துடிப்பில் தான் எங்கெங்கோ போய் வேலை செய்கிறாள்.
மழை பொய்த்துப் போய் விவசாயமும் ஊரில் அற்றுப் போய் வந்தன. இந்நிலையில் தான் பயிர் விளையும் கழினிகாடுகள் எல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாறிக் கொண்டு வந்தது.
நடுகை, அறுவடை போன்ற வேலைகளுக்கெல்லாம் பங்கம் வந்துவிட்டது. முருகம்மாள் வேதனையில் தவித்து போனாள். ஆனாலும் ஒரு இரவு தூங்காமல் ஏதேதோ வருமானத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தவள் விடிந்ததும் ரத்தினசாமி ரெட்டியார் வீட்டுக்கு நடந்தாள்.
ரெட்டியாரோ தன் வீட்டு பக்கத்தில் இருந்த ஐந்து-ஆறு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய், அவரை, கத்திரிக்காய், தக்காளி என காய்கறி வகைகளை விவசாயம் செய்து வந்தார். முட்டை மூட்டையாக டவுனில் இருந்த மார்க்கெட்டுகளுக்கு டிராக்டரில் ஏற்றி வியாபாரம் செய்து நல்ல வருமானத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறு வியாபாரமெல்லாம் அவர் செய்வதில்லை. அது தெரிந்திருந்தும் ஒரு நம்பிக்கையில் முருகம்மாள், ரெட்டியார் வீட்டுக்கு போய் சிறுதொகைக்கு கத்திரிக்காய், வெண்டக்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகளை கேட்டு நின்றாள்.
அவளின் மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருந்த ரெட்டியார், வயதுக்கு மரியாதை கொடுத்து வியாபாரத்திற்கு காய்கறிகள் கொடுத்தனுப்பினார். செட்டியார் காலில் விழுந்து நன்றிக் கூறாத குறையாக கண்கள் கலங்க கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு தனது தொழிலை ஆரம்பித்தாள். அன்று முதல் காய்கறிக் கூடையை தலையில் சுமந்து தெருத்தெருவாக, ஊர் ஊராக வியாபாரத்திற்கு கிளம்பிவிட்டாள் முருகம்மாள்.
விடியற்காலையில் வீட்டிலிருந்து சென்று விட்டால் ரெட்டியார் வீட்டுக்குப் போய் காய்கறிகளை வாங்கி கூடையில் அடுக்கிக் கொண்டு அப்படியே வியாபாரத்திற்குச் சென்று அதோடு மதியம் மேற்பட்டு வீடு வந்து சேர்வதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.
“முருகம்மா…. ஒடம்ப பார்த்துக்கோ… இந்த வயசில இப்படி கஷ்டப்படறீயே…. நீ வாங்குற பென்ஷன் பணத்துக்கு ராணி மாதிரி நீ உட்கார்ந்து சாப்பிடலாம்…” என்று அவளுக்குத் தெரிந்த, சொந்தக்காரப் பெண்களெல்லாம் அடிக்கடி சொல்வார்கள்.
“என் மக ஆம்பளைப் பசங்களையா பெத்திருக்கா…. இரண்டும் பொட்ட புள்ளைங்க… வர்ற பென்ஷன் பணத்தைச் சாப்பிட்டுகிட்டு இருந்தா, நாளைக்கு அதுங்களுக்கு ஒரு நல்ல காரியம் செய்ய வேணாமா…?” என்று தன் மன வருத்ததை அவர்களிடம் தெரிவித்துக் கொள்வாள் முருகம்மாள்.
கெழவி இந்த வயதிலும் சாமர்த்தியாக ரெட்டியாரிடம் பேசி வியாபாரத்திற்காக காய்கறிகள் வாங்கி நல்ல லாபத்திற்கு விற்று பணம் சம்பாதிப்பதைப் பார்த்து ஊரில் பலருக்கும் பொறாமையாக இருந்தது.
அதேநேரம் அவளின் மீது அக்கறைக் கொண்டு பேசுபவர்களும் இருந்தார்கள். பக்கத்து வீட்டுச் சரஸ்வதி பெரும்பாலான இரவு நேரங்களில் முருகம்மாளிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள்.
ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது “முருகம்மா… வேகாத வெயில்ல தெருத் தெருவா கூடையை சுமந்துட்டு திரிஞ்சா ஒடம்பு என்னாகுறது.? நீ இப்படி குடும்பத்தை தாங்கறதினால தான் உன் பொண்ணோட வீட்டுக்காரன் எந்தவொரு அக்கறையுமில்லாம எரும மாடு மாதிரி சுத்திகிட்டு வர்றான். உனக்கு ஏன் இந்த தலையெழுத்து இந்த வயசிலேயும் குடும்பத்த தாங்கனும்னு…” என்றாள் முருகம்மாள் உடல் இளைத்துப் போயிருப்பதைப் பார்த்து வருத்தத்துடன் சொன்னாள் சரஸ்வதி.
“வூட்ல வெட்டு வெட்டுனு குந்திட்டுருக்க முடியல சரஸ்வதி. நடுகை, அறுவடைன்னு வெவசாய வேலை இருந்தா நான் எதுக்கு வேகாத வெயில்ல காய்கறி வியாபாரம் செய்யப் போறேன். என் மகளோட தலையெழுத்து கையால ஆகாதவனை நம்பி மோசம் போயிட்டா. புருஷன் பொண்டாட்டிங்கிற உறவை விட அம்மா பொண்ணுங்கிற உறவு தானே முதல்ல. என் பொண்ணு பின்னால கஷ்டப்படக்கூடாது. என் உசுரு இருக்குற வரைக்கும் என்னால முடிஞ்சளவுக்குப் பாடுபடனும்னு நினைக்கிறேன் …” என்று பதில் சொன்னாள் முருகம்மா.
ஒருநாள் மதியம் காய்கறி வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஊரை நோக்கி வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது ரப்பர் செருப்பில் ஏறிய ஆணி பாதத்தைப் பதம் பார்த்து விட்டது. தேள் கொட்டியது போல் இருந்த அந்த வலியில் துடித்துப்போனவள் அப்படியே கூடையை கீழே போட்டு விட்டு உட்கார்ந்து விட்டாள்.
பாதத்திலிருந்து ரத்தம் கசிந்து ஒழுகியது. தலைக்கு வைத்திருந்த சிம்போடு துணியைப் பிரித்து கொஞ்சம் கிழித்து காலில் கட்டிக் கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல வீடு வந்து சேர்ந்தாள்.
தன் அம்மாவின் நிலையைப் பார்த்து தவித்துப் போனாள் சரசு. வெந்நீர் வைத்து காலை கழுவி விட்டு தேங்காய் எண்ணெய்யை ரணத்தின் மீது தடவி விட்டாள். வலி கொஞ்சம் அடங்கியது என்றாலும் அன்றிரவு முருகம்மாளுக்கு கடும் காய்ச்சல் வந்து விட்டது. தூக்கமில்லாமல் குளிரில் முனகிக் கொண்டு படுக்கையில் புரள ஆரம்பித்தாள்.
விடிந்ததும் சரசு, ஒரு ஆட்டோவைப் பிடித்துக் அவளைத் தர்மாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டி மருந்து மாத்திரை வாங்கி வந்தாள். ஆனாலும் காய்ச்சல் விட்ட பாடில்லை. குளிரும், காய்ச்சலும் உடம்பைத் தூக்கிப் போட்டது. வாயில் ஏதும் இறங்கவில்லை. தண்ணீர் குடித்தால் கூட குமட்டிக் கொண்டு வந்தது.
சரசுவின் கணவன் பதறிப்போய் விட்டான். சந்தையில் காய்கறி மூட்டையை தூக்கி போட்டுவிட்டு அதில் கிடைத்த கூலியில் முருகம்மாளுக்கு பழங்களை வாங்கி வந்து கொடுத்தான். எதையும் சாப்பிட முடியாமல் காய்ச்சலில் கண்களை மூடி ஜடமாய் படுத்தப் படுக்கையாக கிடந்தாள்.
ஒரு வாரம் கழித்து மருந்து, மாத்திரைகள் தீர்ந்துவிட்ட பிறகு மறுபடியும் தன் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள் சரசு.
ஒரு வாரம் எதுவும் சாப்பிடாமல் இருந்ததனால் அவளின் உடல் பலவீனத்தால் ஆட்டம் கண்டு விட்டது. ஆட்டோவில் கூட ஏறி உட்கார முடியவில்லை. சரசும் அவளின் கணவனும் தான் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்து ஏற்றி, ஆட்டோவில் கிடத்திக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய் வந்தார்கள்.
முருகம்மாளின் நிலமையைப் பார்த்துச் சிலர் ‘காலமெல்லாம் கஷ்டப்பட்டவ போகும்போதாச்சும் கஷ்டமில்லாமப் போகக்கூடாதா..?’ என வேதனைப்பட்டார்கள்.
வேறு சிலரோ, “ம்… கெழவி பணம், பணம்னு ஒடம்ப பார்த்துக்காம அலைஞ்சா…. அதான் காலமே பொறுக்க முடியாம கெழவிய கிடத்திடுச்சு… இனி எங்கிட்டு எந்திரிச்சி… கெடயாக் கெடந்து அனுபவிச்சிப் போவேண்டியதுதான்” என்று வன்மத்தைக் கக்கினர்.
இன்னும் சிலரோ “வர்ற அமாவாசைக்கு கிழவி தாங்கவாளான்னு தெரியல… எப்புடியும் தூக்கிரும்ன்னுதான் தோணுது…” என்றும் கிசுகிசுத்துக் கொண்டனர்.
பேத்திகள் இருவரும் பள்ளிக்குப் போகாமல் தன் பாட்டியின் பக்கத்திலேயே உட்கார்ந்துக் கொண்டு காலையும், கைகளையும் அமுக்கிக் கொண்டிருந்தனர்.
பேத்திகள் முகத்தை பார்க்கப் பார்க்க… வேதனையிலும் ஏதோ ஒரு வேகம் அவளின் மனசுக்குள்… ஒரு உத்வேகம் வந்தது போல உடம்பு எழுந்து உட்காரத் துடித்தது. மெல்ல எழுந்து உட்கார்ந்து குடிக்கத் தண்ணீர் கேட்டாள். சரசு ஓடிப்போய் ஒரு சொம்பு நிறைய புழிந்து வைத்திருந்த சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கி மூச்சு விடாமல் மடக்கு… மடக்கு… என்று குடித்து பெருமூச்சுவிட்டு சாய்ந்து அமர்ந்து பேத்திகளை இழுத்து அணைத்துக் கொண்டாள். புதுத் தெம்பு வந்தது போல இருந்தது.
இரவு சுடக்கஞ்சி வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்தாள். இரண்டாவது வாரத்தில் எப்பவும் போல் சாப்பிடத் தொடங்கினாள். அமாவாசை முடியும் வரையிலும் பீடித்துக் கொண்டிருந்த உடல் அசதி மறுநாள் தான் அவளை விட்டு விலகியது.
இரண்டு நாட்கள் வேளா வேளைக்கு சுருக்குன்னு, நாக்குக்கு ருசியா கருவாட்டு குழம்பு வைக்கச் சொல்லி சாப்பிட்டு வந்தாள்.
அவள் காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருந்தாள் என்பதைவிட போக இருந்த தன் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளத் தவமிருந்தாள் என்று தான் சொல்வது சரியாக இருக்கும்.
அமாவாசை முடிந்த மூன்றாவது நாளில் விடியப் போகும் நேரத்தில் ரத்தினசாமி ரெட்டியார் தோட்டம் இருந்த திசைப்பக்கம் பறவைகளின் கூக்குரல் கேட்டதும் படுக்கையில் இருந்து வேகமாய் எழுந்து, முகம், கால், கைகளைக் கழுவி, விளக்கேற்றி ‘நான் நடைபொடையா இருக்கவரைக்கும்தான் பென்சன் பணம் எம் மகளுக்குக் கிடைக்கும். என்னைய இன்னும் கொஞ்சக் காலத்துக்கு ஓடவிடு’ என்று வேண்டி, சாமி கும்பிட்டு நெற்றி நிறைய விபூதியைப் பூசிக் கொண்டு தன்னுடைய காய்கறி கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு வியாபாரத்திற்கான காய்கறிகளை வாங்கி வர ரெட்டியார் வீட்டை நோக்கி முன்னை விட வேகமாக நடந்தாள் முருகம்மாள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.