அழகு ராஜா
மதுரை நகர் உள்ளேயும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் நாம் நிறைய நடுகற்களைக் காண முடியும்.
சில இடங்களில் குலசாமிக்குச் சமமாக நடுகற்களை வணங்கி வருகிறார்கள், ஆனால் சில இடங்களிலோ கேட்பாரற்று குப்பைக்குள்ளும், மண்டிக்கிடக்கும் புதர்களுக்குள்ளும் நடுகற்களைப் பார்த்து உள்ளேன்.
நடுகல் என்றால் என்ன..?
இதன் வரலாறு என்ன..?
அப்படின்னு ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு யோசனை ஓடிக்கிட்டே இருந்துச்சு. இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ படத்தின் மூலம் அதை ஓரளவுக்கு என்னால் தெரிந்து கொள்ளவும் முடிந்தது என்றாலும் சில இடங்களில் இடுப்பில் வளரி, குதிரையில் அமர்ந்த நிலை, கழுத்தில் கத்தி வைத்த மாதிரி ,வீரருடன் பெண்ணும் நிற்பது போன்ற நடுகற்களைக் காணும் போது இவர்கள் எல்லாம் யாராக இருக்கும்..? முன்னோரா..? சிறு தெய்வங்களா..? வரலாற்று நாயகர்களா..? என்ற யோசனை என்னை ஆட்கொள்ளும்.
இவற்றைப் பற்றிய முழு வரலாறையும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அதற்கான தேடலைத் தீவிரமாக்கினேன்.
‘பாண்டியர்கள் தேடி பயணம்’ என்னும் முகநூல் பக்கத்தின் மூலம் நடுகற்கள் ஆய்வாளர் திருமதி.ப.தேவி அறிவுசெல்வம் அவர்களின் நூலைப் பற்றி அறிந்து, அவரின் முகநூல் பக்கம் வழி இந்நூலை வாங்கினேன்.
நூலை பற்றி காணும் முன் ஆசிரியரின் அறிமுகத்தைப் பார்த்துவிடலாம்.
மருந்தாக்கியல் துறையில் பேராசிரியை பணி. இந்து சமய அறநிலையத்துறை அளித்த சிற்ப சாஸ்திரம் ஐம்பொன் சிற்பம் செய்யும் பயிற்சியினையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கோயில் கட்டடக்கலை பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார். கோயில் அர்ச்சகர்களுக்கு சிற்ப சாஸ்திர வகுப்பும் எடுத்துக் கொண்டிருக்கிறார். கள ஆய்வின் வழியாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிற்பங்கள், பழமையான கோயில்கள், கல்வெட்டுகள், தொல்லியல் எச்சங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பாண்டியர்களின் கல்வெட்டுகள், கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பங்கள் பற்றிய ஆய்வினையும் செய்து கொண்டிருக்கிறார். அது தொடர்பான செய்திகளைக் கட்டுரைகளாக 50க்கும் மேல் எழுதி மின் இதழ்களிலும் கருத்தரங்களிலும் வெளியிட்டுள்ளார்.
இந்நூலை வாசித்து முடித்தவுடன் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் மதுரையில் உள்ள 23 நடுகற்கள் பற்றிய விரிவான தகவலுடன் படங்களும் இருந்தன.
இதில் பாதி நடுகற்களை நான் பார்த்து உள்ளேன். மீதி உள்ள நடுகற்களையும் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்து ஆசையாக மாறியது. ஆசைக்குக் காரணம், நான் அடிக்கடி பார்த்த நடுகல்லின் பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிந்துக் கொள்ள முடிந்ததுபோல் மற்ற கற்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டதுடன் அக்கற்களையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
ஆசிரியருக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.
ஆமா, நடுகல் என்றால் என்ன..?
போரில் வீர மரணம் எய்திய வீரர்களின் நினைவாகவோ, செயற்கறிய செயல் செய்த சான்றோர்களின் நினைவாகவோ கல் நட்டு அதில் அவர் பெயரையும் பெருமைகளையும் செதுக்கி வைப்பது பண்டைய காலத்து வழக்கம்.
கொற்றவை என்னும் போர்த் தெய்வத்திற்கு தனது வேண்டுதலாக தனது உடலையும் உயிரையும் பலி கொடுத்து உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும நினைவுக் கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. இக்கற்களைத்தான் நாம் நடுகல் என்று கூறுகிறோம்.
நடுகல் சரி… சதிகல் என்று ஒன்று இருக்கிறதை அறிவீர்களா..?
ஆமா, சதிகல் என்றால் என்ன..?
வீரர்கள் இறக்கும் பொழுது அவர்களுடன் அவ்வீரர்களின் மனைவியும் உடன் கட்டை ஏறுவார்கள். அவர்களின் நினைவாகச் சதிகல் நட்டிருக்கிறார்கள்.
மேலும் இதில் யாருக்காக நடுகல் எழுப்பப்பட்டது..?
நடுகற்கள் இருக்கும் இடங்கள் எவை..?
எந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் நடுகற்கள் நடப்பட்டன..?
இவை எந்தக் காலத்தில் நம்மால் கண்டுபிடிக்கப்பட்டது..?
நடுகற்கள், சதிகற்களின் அமைப்பு எப்படிப்பட்டது..?
நடுகல்லிற்கு எவ்வாறு வழிபாடு நடந்தது..?
போன்ற கேள்விகளை எல்லாம் ஆசிரியர் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு தேடலைத் தொடங்கியிருப்பார் போல, தன் ஆய்வின் வழி அத்தனை கேள்விக்குமான பதிலை மிக விரிவாக எழுதி உள்ளார்.
இதனுடன் சங்ககால மதுரை, இதிகாசங்களில் மதுரை, வெளிமாநில மற்றும் வெளிநாட்டில் மதுரை போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார். மேலும் மதுரையில் எங்கெல்லாம் பாறை ஓவியங்கள் இருக்கின்றன என்பதையும் பதிவு செய்துள்ளது சிறப்பு.
புத்தகத்தைக் கையில் எடுத்ததும் என்னடா இது 38 பக்கமே இருக்கும் இச்சிறு புத்தகத்தில் இவ்வளவு தகவலா இருக்கு. ‘மதுரை மண்ணின் மைந்தர்கள்’ அழகுராசா கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதியிருந்தாரோ என்று நீங்கள் நினைக்கலாம். நிறைய, நிறைவான செய்திகளைத் தாங்கியிருக்கும் புத்தகத்தில் எழுத்துரு ரொம்ப, ரொம்பச் சிறியதாய் இருக்கிறது. இதுதான் இந்தப் புத்தகத்தின் குறை என்றாலும் செய்திகளில் நிறைவு. இந்த எழுத்துப் பிரச்சினையை தனது அடுத்த பதிப்பில் திருத்தம் செய்ய இருப்பதாக நூலாசிரியர் என்னிடம் சொன்னார்.
‘மதுரையை மாற்றிய நேரு’ – இந்திய சுதந்திரத்திற்கு முன்பு மதுரை என்பது ஆங்கிலத்தில் ‘Madura’ என்று எழுதப்பட்டு ‘மெஜூரா’ என்று நீண்ட காலமாக உச்சரிக்கப்பட்டது. இதனால் மதுரைக்கு வரும் தபால்கள் வட இந்தியாவில் உள்ள மதுரா நகருக்கு தவறாக அனுப்பப்பட்டன. இப்பிரச்சனை அப்போதைய பாரதப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து நகரசபை தலைவராக இருந்த திருமதி.டி.கே.ரமாவுக்கு நேரு ஒரு கடிதம் எழுதி, இப்பெயரை மாற்றும்படி சொன்னார். அதன் பின்புதான் ‘Madura’ என்பது மதுரை (Madurai) என்று மாற்றப்பட்டது என்ற கூடுதல் வரலாற்றுத் தகவலையும் அறிந்து கொண்டேன்.
தகவல்: புகைப்படத்தில் நான் அமர்ந்து இருப்பது மதுரை சட்டக்கல்லூரி நுழைவு வாயிலின் எதிர்புற நடைபாதை மீது வெட்டவெளியில் உள்ள சதிகல். வழிபாட்டில் இருக்கும் பெயர் : மடை கருப்பசாமி
—————————————————————-
நூலின் பெயர் : மதுரை நடுகற்கள்
ஆசிரியர் : பேரா.ப.தேவி அறிவுசெல்வம்
வெளியீடு : மதுரை தொல்லியல் ஆய்வுச் சங்கம்
பக்கம் : 38 , விலை ரூ.70/-
—————————————————————-
நன்றி : படம் இணையத்திலிருந்து