மோகன் ஜி
சபரிமலையின் பெருவழி நடக்கையிலே பெருமழை பெய்தால், நடப்பதும் ஏறுவதும் மிகவும் கடினமாகி விடும்.
கெட்டிப்பட்டுப்போன பாதை இளகி வழுக்கும். பிடிமானம் இருக்காது.
நாம் எவ்வளவு கவனமாக அடியெடுத்து வைத்தாலும், பக்கலிலோ முன்போ செல்பவர் வழுக்கிச் சரிந்தால், நாமும் நிலைதடுமாற வேண்டியது தான்.
1976அல்லது 1977ஆம் வருடம்… அழுதை மலை ஏற்றத்தின்போது அடைமழை. அருவிபோல் பாதையில் மழைநீர் இறங்குகிறது. ஏறிச் செல்லும் ஐயப்பமார் வழுக்கலில் நிலைதடுமாறி அடுக்கிய சீட்டுக்கட்டு போல் சரிகிறார்கள்.
நானும் என் வயதொத்த இளைஞர்கள் சிலரும் அவர்களையெல்லாம் கைத்தாங்கலாக ஓரத்திற்கு அழைத்துவந்து அமர வைத்து உதவவும் செய்தோம்.
எங்களுடன் வந்த அமரர் கோபால் அண்ணா என்னிடம் ‘சாஸ்தா விடுதி’களிலுள்ள சில மழைப் பற்றிய கண்ணிகளைப் பாடுமாறு பணித்தார். நானும் பெருங்குரலெடுத்துப் பாடினேன்.
ஒவ்வொரு கண்ணிக்கும் ‘சரணமய்யப்பா’ என்று கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் முழங்க, அது புதுஅனுபவமாக அமைந்தது. மழையோ விட்டபாடில்லை.
நான் மேலும் வேறுவேறு கண்ணிகளைத் தொடர்ந்தேன். சரணகோஷம் ஓங்கி ஒலித்தது. மெல்லமெல்ல மழை ஓய்ந்தது. பாதையோ கொழகொழத்துக் கிடந்தது.
அகிலபாரத ஐயப்பா சங்கத்தார் தேர்வடம் போல், பிடித்துக்கொண்டு ஏறுவதற்கு ஏதுவாக, நெடுக கயிறுகளை இறக்கினர். பிடித்துக் கொண்டு மெல்ல ஏற ஆரம்பித்தோம்.
‘இந்தப் பிள்ளை தான் பாடினான்’என்று நின்றிருந்த ஒரு ஐயப்பன் உடன்வந்த மாதரசிக்கு என்னைச் சுட்டினார். ‘சரணம் ஐயப்பா’ என்று கும்பிட்டார். அவர்களையும் கைப்பிடித்து ஏற்றிச் சென்றோம்.
எந்தப் பிடிமானமும் இல்லாமல் பாதையின் நடுவாக எங்கள் குருசாமி ஏறிப் போனார். என்னைத் தாண்டுகையில்,
‘மொள்ள வா மோகா. நான் இஞ்சிப்பாறைக் கோட்டையிலே உங்களையெல்லாம் பிடிச்சுக்குறேன்!’ என்றார்.
மேலும், ‘அங்கங்கே கச்சேரி பண்ணிகிட்டு நிக்காதே மயிலு!’ என்றபடி சென்றார். சிரித்துக் கொண்டேன். காவடியாட்டம் முறையாக ஆடுவதால், ‘மயிலு’ என்றெனக்குப் பட்டப் பெயர்.
பல மழைகளை சபரியாத்திரையில் பார்த்தாயிற்று. மழையில் நனைவதற்கென்றே ஏற்பாடுகளுடன் ஜூலை மாதத்திலும் பம்பை வழி ஒருமுறை போய்வருவேன். ஒவ்வொரு மழையிலும் மேற்சொன்ன சம்பவமே நினைவுக்கு வரும்.
தமிழகத்தின் மழைச்சீற்றம் ஓய்வதற்கு பிரார்த்தனையாக, சில சாஸ்தாவிடுதிகளை இங்குமங்குமாய் தொகுத்துக் கீழே தந்திருக்கிறேன். சரணம் ஐயப்பா! இனி சில விடுதிகள்:
பலமரங்கள் கிடுகிடுவென
மலையருவி திடுதிடுவென
இரவுபகல் பாராமல்
பெருமாரி பொழிக்காலம்
பாராய் பராபரனே!
பரதேசிக் காவலனே!
வரங்கள் தருவோனே!
வாழ் குளத்தூராதிபனே!
எதிர்காற்றும் பெருமழையும்
எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரைதனிலே
நான் பரிதவிக்கும் அந்நேரம்,
அலைக்காமல் தோணிகட்டி
அக்கரைக்கே கடத்தி விடும்
பலம் உமக்கு சாஸ்தாவே !
பரதேசிக் காவலனே!
பாரமாம் சுமடெடுத்துப்
பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து நான்
இளைப்பாறும் அந்நேரம்,
பொல்லாத மழைபெய்ய
புனலாறு பெருகி வர
கல் ஆனை மிதந்து வர
காட்டெருமை மிரண்டு ஓட,
மெய்யாகும் கன்னியர்கள்
மேதினியிற் குரவையிட
என் அய்யனின் திரு உள்ளமே!
திரு ஆரியங்கா அய்யாவே !
மேகங்கள் இருண்டுவர
விடுதிகளும் காணாமல்
காகங்கள் போல் உமது அடியார்
கலங்குவதும் காணீரோ
அஞ்சிக் கொண்டார் எல்லாம்
ஆராதிக்கும் இத் தருணம்
மிஞ்சிக் கொண்டிங்கே
வெளிச்சம் தர வேண்டாமோ
வருந்தியே யுமை அழைத்தோம்
நீர் வராமல் இருந்துவிட்டால்
பெரும் கனலில் நெய்போலே
எந்தன் மனம் உருகிடுமே!
அண்ணன் இல்லை தம்பி இல்லை
எம்மை ஆதரிப்பார் யாரும் இல்லை
கன்று அதை இழந்த பசு போலே
நான் கலங்குவதும் காணீரோ!
நாடி வந்தேன் சன்னதிக்கு
நன்மை தர வேண்டும் என்றே
பாடி வந்தேன் உன் புகழை
பாக்யம் மிகத் தந்தருள்வாய்
பெற்றோரைப் போலேயென்
பிழைப் பொறுத்தஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா!
வெள்ளைக் கல்லாதிபனே!
நன்றி : படமும் பகிர்வும் திரு.மோகன்ஜி
Leave a reply
You must be logged in to post a comment.