ஆர்.வி.சரவணன்.
சக்க போடு போடு ராஜா பாடலில் சிவாஜி தன் மனசாட்சியோடு மல்லுக்கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா. நம் சுந்தரமூர்த்தியின் நிலையும் அது போல் தான். அவனை கிண்டலடித்து கவுண்ட்டர் கொடுக்க வேறு மனிதர் யாரும் தேவையில்லை. அவன் மனசாட்சியே போதும். இதோ, மானேஜர் உன்னை கூப்பிடுகிறார் என்று கிளார்க் பாலு வந்து சொன்னது தான் தாமதம் ‘போடா போய் கை கட்டி வாய் பொத்தி நில்லு’ கேலி பேசியது மூர்த்தியின் மனசாட்சி.
“நீ கொஞ்சம் வாயை மூடு” அதட்டிய மூர்த்தி உடனே அதிர்ந்தான்
அவன் சொன்னதை தனக்கென்று எடுத்து கொண்டு விட்ட பாலு “இத அப்படியே போய் மேனேஜரிடம் சொல்லி விடவா”என்றான் கோபமாக.
“யோவ். உன்னை சொல்லலய்யா” சலித்து கொண்ட மூர்த்தி “எதுக்கு கூப்பிடறார்”
ரகசியமாய் கேட்டான்.
இல்லாத மீசையை முறுக்கி விட்ட படி, ” இன்க்ரீமெண்ட் கொடுக்கவா கூப்பிட போறாரு. கழுவி ஊத்தறதுக்காதான் இருக்கும். ” என்றான் செல்போனிலிருந்து நிமிர்ந்த தேசிகன்.
“பயமுறுத்தாதீங்கடா” என்ற படி மேனேஜர் ரூம் சென்று, கதவில் டொக் டொக் செய்தான்.
“எஸ் கமிங்” குரல் கேட்கவும் உள்ளே நுழைந்தான் மூர்த்தி.
கண்ணாடியை உயர்த்தி பிடித்து கொண்டு கம்ப்யூட்டரை மேய்ந்து கொண்டிருந்த மானேஜர் D .ராஜசேகர் ( டேபிளில் இருந்த நேம் போர்டு ) கேலியாய் பார்த்தவாறே சேரில் நன்றாக சாய்ந்து கொண்டார். தன் அரிசி மூட்டை தொப்பையுடன்…
ஒரு பைலை எடுத்து அவன் முன்னே போட்டார்.
“தப்பு பண்றதுக்குன்னே வேலைக்கு வரியா நீ..?”
‘திட்டறதுக்குன்னே வேலைக்கு வரியா நீ அப்படினு கேளு…’ மனசாட்சி.
மூர்த்தி பதட்டத்துடன் பைலை புரட்டி பார்க்க ஆரம்பித்து முடித்தவன் நிமிர்ந்தான்.
” மிஸ்டேக்கை பார்த்தியா..?”
“இல்ல சார். எல்லாமே கரெக்டா இருக்கு”
“அத நான் சொல்லணும்”
‘தப்பு கண்டுபிடிக்ணும்னே அலையற உன் கிட்டே அத எதிர் பார்க்க முடியாதே’ மனசாட்சி
” மிஸ்டேக் எங்கன்னு எனக்கு தெரியல”
“ஒண்ணாம் தேதி வந்தா கை நீட்டி சம்பளம் வாங்க தெரியுமா..?”
தலை குனிந்தான்.
‘ஏன்யா. நீ மட்டும் ஒண்ணாம் தேதி கை நீட்டி சம்பளம் வாங்காம பாக்கெட்டை நீட்டியா வாங்கறே’ – மனசாட்சி.
“எங்க தப்புனு சொல்லுங்க சார்”
“சொன்னா வேலையை விட்டிட்டு போயிடறியா..?” ராஜசேகர் விஷ(ம) புன்னகையுடன் கேட்டார்.
தன் உறவுக்கார பையனுக்கு கம்பெனியில் வேலை வாங்கி கொடுக்க மேனேஜர் முயற்சித்து கொண்டிருக்கிறார் என்று காத்து வாக்கில் வந்த செய்தி உண்மை தான் போலிருக்கிறது.
பைலை வேகமாய் எடுத்து பிரித்து கத்தினார்.
“டோட்டல் மிஸ்டேக் பண்ணி வச்சிருக்கே பாரு மேன் “
வாங்கி பார்த்தான்.
கால்குலேட்டரில் கணக்கு போட்டான்.
மனசில் கூட்டி பார்த்தான்.
சரியாக தான் இருந்தது.
எப்படி தப்புனு சொல்றாரு யோசித்த படி நிமிர்ந்தான்.
ராஜசேகர் சுகமாக காது குடைந்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து பியூன் காபி கொண்டு வந்து பயபக்தியாக டேபிளை ஒரு முறை துடைத்து விட்டு வைத்தான். அவர் எடுத்து கொண்டே, “என்னடா நேத்து தலைவலின்னியே. இப்ப எப்படி இருக்கு..?”
“நீங்க கொடுத்த மாத்திரையாச்சே. சரியாகாம இருக்குமா சார்.” பியூன் வார்த்தைகள் முழுக்க ஐஸ்.
‘மாத்திரை யார் கொடுத்தாலும் குணமாகும்டா’ – மூர்த்தியின் மனசாட்சி அங்கலாய்த்து கொண்டது.
“சார் என்னோட இன்க்ரிமெண்ட் பத்தி முதலாளி கிட்டே பேசினீங்களா ?”
“பேசிட்டண்டா.வேலை வாங்கறது நீ. இன்க்ரீமெண்ட் எவ்வளவு போடணும்னு தோணுதோ போடுனு சொல்லிட்டார். எல்லாருக்கும் நான் தான் இன்கரிமெண்ட். போட போறேன். சொல்லு. உனக்கு எவ்வளவு போடட்டும்”
பியூன் வார்த்தைகளில் மீண்டும் ஐஸ், “சார் எனக்கு நல்லது செய்ய நீங்க இருக்கும் போது நான் ஏன் சார். தனியா வேற மூளையை கசக்கி அலட்டிக்கணும். நீங்க போடறதை போடுங்க”
‘இதெல்லாம் ரொம்ப ஓவர்டா’ மனசாட்சி
” இத தான் ஒவ்வொரு ஸ்டாப் கிட்டேயும் நான் எதிர்பார்க்கிறேன். ஆனா இதோ இவரு இருக்காரே இவர் இன்க்ரீமெண்ட் மட்டும் இவர் தான் டிசைட் பண்ணுவாரு” பியூன் அவனை பார்த்து நக்கலாய் சிரித்து கொண்டே வெளியேறினான்.
“சார் என் வேலைக்கு தகுதியானது தான் கேக்குறேன் “
“ஆமாமாம். எல்லா நியூஸ் சேனல்லையும் சொன்னாங்க. கணக்கு என்னாச்சு மேன்”
சிடுசிடுத்தார்.
“நீங்க செக் பண்ணிக்குங்க” பைலை நீட்டினான்.
சரியாக தான் இருந்தது. அவரது கால்குலேஷன் தான் தப்பு,. இருந்தாலும் அதை எப்படி வெளி காட்டி கொள்வது என்பதால் “அடிச்சி திருத்தி எழுதினா மத்தவங்களுக்கு எப்படி தெரியும்?” கடுகடுத்தார்.
“சார் அடிச்சி திருத்தி எழுதியிருக்கிறதே நீங்க தான்” முணுமுணுப்பாக பதில் சொன்னான்.
“பதிலுக்கு பதில் பேசாதே.”
‘அதிகார வர்க்கம் இந்த வார்த்தையை யூஸ் பண்ணி தானே மத்தவங்களை அடக்குவீங்க’ – மனசாட்சி.
“சரி கிளம்பு”
அங்கிருந்து நகர முற்பட்டவனை மனசாட்சி தடுத்து ‘டேய் இன்க்ரிமெண்ட் கேட்டுட்டு போடா’ அதட்டியது.
நின்றான்.
“என்ன?”
” என் இன்க்ரிமெண்ட்……..”
“புத்திய அதுலயே வச்சிகிட்டிருக்கியா..?”
தொடர்ந்து மனசாட்சி உசுப்பி விட்டதாலேயோ என்னவோ துணிந்து பேசும் எண்ணம் வந்து விட்டது.
“பியூனுக்கு பொறுப்பா பதில் சொல்றீங்க. நான் கேட்டா மட்டும் இப்படி பேசறீங்க”
“அவன் சொல்பேச்சு கேட்கிறான்”
‘ஆமாமா. உங்களுக்கு முறை வாசல் வேலை செஞ்சு கொடுக்கிறான் இல்ல’ மனசாட்சி ஏற்றி விடுகிறது.
“சார். முதலாளிக்கோ இல்ல வேலைக்கோ தான் விசுவாசமா இருக்க முடியும்”
“அதனால தான் முதலாளி கிட்டயே இன்க்ரிமெண்டுக்கு போயிட்டியா”
” முதலாளி தான் நீ எவ்வளவு வருஷமா வேலை பார்க்கிறே. எவ்வளவு சம்பளம் வாங்கறேனுலாம் கேட்டாரு. “
“அப்ப அவர் கிட்டயே இன்க்ரிமெண்ட் வாங்கிக்க” என்று ராஜசேகர் சொல்லும் போது தான் செல்போன் எஸ் எம் எஸ் வந்திருப்பதை சத்தமிட்டு சொன்னது. எடுத்து பார்த்தார்.
‘டேய் நீ என்ன தான் முன்றாம் பிறை கமல் கணக்கா கம்பெனிக்கு உழைச்சதை எத்தனை விதமா சொன்னாலும் மேனேஜ்மெண்ட் ஸ்ரீ தேவி பன்னை தூக்கி போடற மாதிரி தான் போட போறாங்க’ என்ற மனசாட்சியை உள்ளூர அதட்டினான்.
“முதலாளி உனக்கு பத்தாயிரம் ரூபா இன்க்ரீமென்ட் போட்ருக்காருப்பா” மேனேஜரின் முகம் அஷ்ட கோணலானது.
பத்தாயிரம் என்றவுடன் மூர்த்திக்கு முகம் பிரகாசமானது.
“நீ மட்டும் தான் இங்க வேலை பார்க்கிறே. நாங்க எல்லாம் சீட்டை தேய்ச்சுட்டு போறோம் இல்லே.”
‘உண்மையை ஒத்துகிறதுக்கும் ஒரு மனசு வேணும். அது உங்க கிட்ட இருக்கு’ மனசாட்சி கவுண்டர் கொடுத்தது.
“முதலாளி கை காலை பிடிச்சு நீ வாங்கிட்டே. மத்தவங்க எல்லாம் உன் இன்க்ரீமெண்ட் பார்த்து என் கிட்டே கேட்பாங்களே நான் என்ன சொல்றது?” ஆவேசமாய் கத்தினார்.
‘எதையாவது உளறு. எனக்கென்ன’ – மனசாட்சி
இண்டர்காம் எடுத்து பேசுகிறார்.
“இங்க பாருங்கப்பா உங்க எல்லாருக்கும் பத்து பர்செண்ட் தான் இன்க்ரிமெண்ட். போட்டிருக்காரு முதலாளி இந்த உழைப்பாளிக்கு (மூர்த்தியை கை காட்டுகிறார் ) மட்டும் 25 பர்செண்ட்.
“—————–“
“நோ நோ. என்கிட்டே கேள்வி கேட்காதீங்க முடிஞ்சா முதலாளிக்கு சொம்படிச்சு இன்க்ரிமெண்ட் வாங்கறது எப்படினு இவரை கிளாஸ் எடுக்க சொல்லுங்க” போனை வேகமாக அதன் இடத்தில் விட்டெறிந்தார்.
கூடவே, ” பைலை எடுத்துட்டு போ” மூர்த்தி முகத்தில் வீசி எறிந்தார். அது அவன் முகத்தில் மோதி காலடியில் விழுந்தது.
தன் மேல் அக்கறை கொண்ட ஒருவர் துணைக்கு உள்ளாரென்றால் யாருக்கும் தெம்பு வரும். முதலாளியே தனக்கு பின் இருக்கிறாரென்றால் கேட்கவா வேண்டும். மூர்த்திக்கு அந்த நேரத்தில் அசாத்திய துணிச்சல் வந்தது.
பைலை எடுப்பவன், “நல்லா வேலை பார்த்து முதலாளி கிட்டே பேர் வாங்கறத கூட இங்க சொம்படிக்கிறதுனு தான் சொல்வீங்களா..?”
“இத்தனை வருசமா நீ கேட்டிகிட்டிருந்த பிச்சைக்கு இன்னிக்கு கை நிறைய கிடைச்சுடுச்சுல்ல. மூடிட்டு கிளம்பு”
இந்த வார்த்தைகள் அவனது கோபத்தை அநியாயத்துக்கு எகிற வைத்தது.
“சார் அளவுக்கு மீறி பேசறீங்க ” மூர்த்தி கோபமாய் கத்தினான்.
‘டேய் பேசாம கிளம்புடா’ மனசாட்சி அவனிடம் இப்போது மன்றாட ஆரம்பித்தது.
“என்னடா ரொம்ப சவுண்ட விடறே..?”
“விடாம. நீ சொல்றதலாம் இது நாள் வரைக்கும் காதுல ரத்தம் வழியற அளவுக்கு கேட்டுகிட்டே இருக்கேனே. இன்னிக்கு உனக்கு வரட்டும்”
‘டேய் வேண்டாம். உனக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சுடுச்சு கிளம்பு’ மனசாட்சி வார்த்தைகளால் அவன் கோபத்தை கட்டி இழுக்க முயற்சித்தது.
“நீ சும்மாருடா” அதட்டினான் மனசாட்சியை.
“யாரை சொல்றே” மானேஜர் அதிர்ந்து போய் எழுந்தார்.
“உன்னை தான். என்ன பண்ணுவே நீ” கத்தியவாறு பைலை தூக்கி மேஜையில் அடித்து அவரை நோக்கி பாய்ந்தான்.
(குங்குமம் 27-1-2023 இதழில் வெளியான சிறுகதை)
நன்றி : குங்குமம் இதழுக்கும் படத்துக்கும்
Leave a reply
You must be logged in to post a comment.